Published:Updated:

‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி? #SecretSuperstar

பா.ஜான்ஸன்
‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி? #SecretSuperstar
‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி? #SecretSuperstar

எல்லோருக்குமே ஒரு கனவு இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வலிமை இருக்கிறதா? குறிப்பாகப் பெண்களுக்கு இருக்கிறதா? என்கிற கேள்வியை முன் வைக்கிறது `சீக்ரெட் சூப்பர்ஸ்டார்'.

இன்ஸியா மாலிக்கிற்கு (ஸாய்ரா வாசிம்) பெரிய பாடகியாக ஆசை. இந்த உலகமே தன் குரலைக் கவனிக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என கிடார் இசையுடன் கனவுகள் சூழ வாழ்கிறாள். இது இப்படி ஆரம்பிக்கும் போதே, நிறைய தடைகள் வரும், அதை மீறி எப்படி ஜெயிக்கிறாள் என்பதுதான் கதை எனச் சொல்ல முடியும். ஆம், கதை அதுதான். இருந்தும் படத்துக்குள் இருக்கும் சில சுவாரஸ்யமான தருணங்கள், கதாபாத்திரங்கள் படத்தை உயிர்ப்புடன் கொண்டுசெல்கிறது. ட்யூஷன் டெஸ்டில் தோல்வியடைந்ததற்கே கிட்டாரைச் சிதைக்கும் தந்தை, மகளின் கனவில் சிறு பகுதியையாவது நிறைவேற்றித் தர நினைக்கும் அம்மா, இடையில் வரும் பெரிய வாய்ப்பு என்றபடி நகர்கிறது படம்.

குஜராத்தின் ஒரு பகுதியான வதோராவில் வசிக்கிறது இன்ஸியாவின் குடும்பம். இன்ஸியாவின் வீட்டில் எந்த அளவுக்குக் கட்டுப்பாடு என்பதற்கு ஒரு காட்சி இருக்கும். பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக ஜெயித்துவிடுவேன், ஒரு லேப்டாப்பும், ஒரு வருடத்துக்கான இன்டர்நெட் இணைப்பும் பரிசாகக் கிடைக்கும் என அம்மாவிடம் சொல்கிறாள் இன்ஸியா. ஆனால் கணவருக்கு பயந்து அதை மறுக்கிறாள், கூடவே தன் நகைகளை விற்று, லேப்டாப்பும், இன்டர்நெட் இணைப்பையும் வாங்கி இன்ஸியாவுக்குக் கொடுத்துவிடுவாள் அவளின் அம்மா. கையில் கிட்டார், மனதுக்குள் உலகிலேயே சிறந்த பாடகி என்கிற நம்பிக்கை, எதிரே வெப் கேமுடன் லேப்டாப். இன்ஸியாவுக்கு ஒரு யோசனை, தான் பாடி அதை யூ-ட்யூபில் வெளியிட்டால் அதன் மூலம் வெளிச்சம் பிறக்கும் என. ஆனால், கணவருக்குத் தெரிந்தால் என்ன செய்ய என்கிற பயம் இன்ஸியாவின் அம்மாவுக்கும் ஒரு யோசனையைக் கொடுக்கிறது.

உடனே அலமாரியைத் திறந்து ஒரு புர்காவை எடுத்து மகளிடம் கொடுக்கிறாள். "இந்தா இதைப் போட்டுகிட்டு பாட்டு பாடு... குரலுக்கு முகம் எதற்கு?" என்கிறாள். வெறுப்பிலேயே தன் பெயரைக் கூட சொல்லாமல் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்கிற பெயரில் பாடுகிறாள் இன்ஸியா. பாடல் வைரலாகிறது... இன்ஸியா நினைத்ததைப் போல் அவள் குரல் கவனிக்கப்படுகிறது, ரசிக்கப்படுகிறது. ஆனால் அந்த குரலுக்குப் பின்னால் இருக்கும் இன்ஸியா மட்டும் வெளியே தெரியவில்லை என்ற முரண் படத்தின் இறுதியில் உடையும்.

இன்ஸியாவாக நடித்திருக்கும் ஸாய்ரா வாசிம் முன்பு `தங்கல்' படத்தின் மூலம் ஆச்சர்யப்படுத்தியவர். அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். படத்தின் கதையும் மற்ற கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் எல்லாம் ஸாய்ராவைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பொறுப்பு உணர்ந்து மிக நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து பதறுவது, அம்மாவிடம் விவாகரத்து பற்றி விவரிப்பது, தம்பியோடு கொஞ்சல் எல்லாம் போக பல காட்சிகளில் தனித்துத் தெரியும் முயற்சிகளையும் செய்கிறார்.

கணவருக்கு பயந்து நடுங்கும் கதாபாத்திரம் மெஹர் விஜிக்கு. அடக்கி வைக்கும் கோபம் எல்லாவற்றையும் ஏர் போர்ட் காட்சியில் மிக நிதானமாக வெளிப்படுத்தும் இடம் சிறப்பு. கொடுமைக்கார கணவனாக, மகளை மிரட்டும் அப்பாவாக அட்டகாசம் செய்கிறார் ராஜ் அர்ஜுன். கிடார் நரம்புகளை அறுத்தெரியும் காட்சி, மனைவியை அத்தனை உக்கிரத்தோடு அடிக்கும் இடம் எல்லாவற்றிலும் ஃபரூக்காகவே வெளிப்பட்டிருக்கிறார். இவர்களோடு சேர்த்து இசையமைப்பாளர் ஷக்தி குமார் வேடத்தில் அமீர்கான். நக்கல், துள்ளல், மனைவியோடு வரும் சண்டை என சீரியஸ் படத்தில் சின்ன ரிலாக்ஸ் தருகிறது அவர் வரும் காட்சிகள். சற்று செயற்கைத் தனம் இருப்பினும் ரசிக்கும்படி இருக்கிறது. 

தந்தை மூலம் வாழ்வின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கும் இன்ஸியா, பின்பு வரும் குட்டு (கபீர் ஷஜித்), சந்தன் (த்ரித் ஷர்மா), ஷக்தி குமார் (அமீர்கான்) கதாபாத்திரங்கள் மூலம் தன்னை மீட்டெடுப்பாள். இன்ஸியாவின் தம்பி குட்டு... விளையாடுவான், சாக்லெட் கேட்பான், எதையுமே எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொடுப்பான். நகையை விற்று லேப்டாப் வந்த விஷயம் தெரிந்ததும், இன்ஸியா கையாலேயே அதை உடைக்கச் சொல்வார் அவளின் தந்தை. பின்னால் ஒரு காட்சியில் அந்த உடைந்த லேப்டாப்பை எடுத்து பார்சல் டேப் போட்டு ஒட்டி இன்ஸியாவுக்குப் பரிசளிக்க மறைத்து வைத்திருப்பான் குட்டு. இன்ஸியா மேல் இருக்கும் ஈர்ப்பில் அவளுக்காக எதையும் செய்யும் சந்தன், பள்ளியின் கடைசி நாளில் பிரியும் முன் கலங்கிப் போவான். இன்ஸியாவின் குரல் கேட்டு கண்கலங்கிப் போய் ஆச்சர்யத்தில் உறையும் ஷக்தி குமார் என மூன்று பாத்திரங்களும் படத்திற்கு வலிமை சேர்க்கிறது.

இயக்குநர் அத்வைத் சந்தன் எடுத்துக் கொண்ட களம், அதை உணர்வுபூர்வமாக கொடுத்த விதம் நன்று. ஆனால், இன்ஸியா தனியாக மேற்கொள்ளும் பயணம், முன் பின் தெரியாத சிறுமிக்காக அமீர் செய்யும் உதவிகள், தடாலடியாக ஏர் போர்டில் நிகழும் விஷயம், நாடகத்தனமான க்ளைமாக்ஸ் என மிக எளிமையாக யூகித்துவிடும் காட்சிகளும், நம்பகத்தன்மை குறைவான கதையமைப்பும் படத்தின் பெரிய குறை. ஆனால், உணர்த்த வேண்டியவற்றைத் திறமையாக வெளிக்காட்டும் நடிகர்களும், பெண் சுதந்திரம் பற்றி இன்னும் பேசவேண்டியதன் அவசியம் எனச் சில நிறைகள் அந்த மைனஸ்களை மறக்கடிக்கின்றன.

நாடகத்தனம், நம்பகத்தன்மை என சில பிரச்னைகள் இருந்தாலும் பேசிய விஷயத்தால் இந்த சீக்ரெட் சூப்பர்ஸ்டாருக்கு, ஸ்டைலாக ஒரு சல்யூட் போடலாம்!