Published:Updated:

ஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்! ‘களத்தூர் கிராமம்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்! ‘களத்தூர் கிராமம்’ விமர்சனம்
ஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்! ‘களத்தூர் கிராமம்’ விமர்சனம்

மூவரின் தனிப்பட்ட விரோதத்திற்கு ஒரு கிராமமே பலிகடா ஆகி, அதிலிருந்து மீண்டு வரும் கதையே 'களத்தூர் கிராமம்'. 

போலீஸ் வெறுக்கும், போலீஸை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் கிராமம் களத்தூர். தமிழக எல்லையின் முடிவில், ஆந்திர எல்லையின் தொடக்கத்தில் அமைந்திருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக களவுத் தொழிலைச் செய்யும் அந்தக் கிராமத்து மக்களுக்கு கிஷோரும், அவரது நண்பர் சுலில் குமாரும்தான் எல்லாம். சுலில் குமாரின் சபலத்தால், நண்பர்கள் இருவருக்குள்ளும் பகை மூள்கிறது. துரோகத்திற்காக சுலிலைக் கொலை செய்கிறார் கிஷோர். பாவத்திற்குப் பரிகாரமாக சுலிலின் தாத்தா பாட்டியிடமே தன் குழந்தையைக் கொடுத்து நல்லவிதமாக வளர்க்கச்சொல்லி சிறைக்குச் செல்கிறார். பல வருட சிறைத்தண்டனைக்குப் பிறகு வெளியே வரும் கிஷோருக்கு சுலிலின் தாத்தா பாட்டி மூலமும், போலீஸ் அதிகாரிகள் மூலமும் அடுத்தடுத்த துரோகங்களும், தீர்த்துக்கட்டுவதற்கான சதிகளும் காத்திருக்கின்றன. கிஷோர் என்ன செய்தார், கிஷோரின் குழந்தை எப்படி வளர்ந்து நின்றான், கிஷோர் இருக்கும்வரை ஊருக்குள் வரமுடியாத போலீஸ் களத்தூர் கிராமத்திற்குள் நுழைந்தார்களா இல்லையா... என அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கான பதில்தான், 'களத்தூர் கிராமம்' திரைப்படம்.

'கிடாத்திருக்கை' கேரக்டரில் கிஷோர் நேர்த்தியாக ஒட்டியிருக்கிறார். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிஷோரைச் சுற்றியே கதை நகர்கிறது. அதை உணர்ந்து, இருவேறு கெட்டப்களில் கச்சிதமாக ஒன்றி நடித்திருக்கிறார் கிஷோர். 'மந்திரி வீட்டுல மட்டுமா, எங்க வீட்டுலேயும்தான்டா கல்யாணம்' என டெம்போ வண்டியில் இருக்கும் பொருள்களை மிரட்டிப் பறிப்பதும், ஊர்ப் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸை ஸ்டேஷனுக்குள்ளே புகுந்து வெளுப்பதும், யாக்னாவுடனாக நெருக்கத்தில் காதல் பேசுவதுமாய்... கலக்கியிருக்கிறார், கிஷோர். கிடாத்திருக்கையின் நண்பன் வீரண்ணா கேரக்டரில் சுலில். கிஷோரோடு நட்பு பாராட்டும்படியான காட்சிகள் இல்லையென்றாலும், வன்மமும், துரோகமும் கலந்த மனநிலையோடு திரியும் காட்சிகளில் தனித்துத் தெரிகிறார். 

கிஷோரின் மகன் 'கிட்ணா'வாக நடித்திருக்கும் மிதுன் குமார் நடிப்பும் பாராட்டுபடியாகவே இருக்கிறது. சிறுவயதில் தனக்குள் விதைக்கப்பட்ட வன்மத்தை அனல் குறையாமல் முகத்தில் காட்டுபவர், பால்ய வயது தோழி மீதான காதலையும் கச்சிதமாகக் காட்டுகிறார். க்ளைமாக்ஸில் கிஷோரைப் பழிவாங்க அவர் ஆடும் ஆட்டம் ரசனை. ஊர் கலவரத்தை விசாரிக்கும் நீதிபதியாக அஜய்ரத்னம். போலீஸ் அதிகாரி தலக்காயனாக, அஜய் ரத்னத்தின் மகன் தீரஜ் ரத்னம் இருவரும் கேரக்டருக்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே தான் மெட்டமைத்த பழைய பாடல்களையே மிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார், இளையராஜா. பின்ணனி இசை படத்தைத் தொந்தரவு செய்யவில்லை என்றாலும், இன்னும் அதிக ஈர்ப்பை எதிர்பார்க்கவைக்கிறது. ஒரே லொக்கேஷனில் சுற்றிச் சுழன்றாலும், அதில் முடிந்தளவுக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ். மூன்று கோணங்களில் பயணிக்கும் கதைக்கு சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் கச்சிதமாகக் கை கொடுத்திருந்தாலும், சீரியல் டைப் காட்சிகளுக்குக் கொஞ்சம் 'கட்' சொல்லியிருக்கலாம். 

ஒரு நாவலின் உள்ளடக்கம் அளவுக்குப் பெரிய கதை. அதை இருவேறு காலகட்டங்களில் நடப்பதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். பழிவாங்கும் உணர்ச்சிகள்தான் படத்தின் பிரதானம் என்றாலும், அது எதிர்பாராத இடங்களில் திடீர் திடீரென முளைப்பது மாதிரியான திரைக்கதை அமைத்து, அதை நேர்த்தியாகவும் கையாண்ட விதத்தில் கவனிக்கவைக்கிறார், அறிமுக இயக்குநர் சரண்.கே.அத்வைதன்.

கொஞ்சம் சீரியஸான கேஸ் என்றாலும், அதை 'அனாதைப் பிண'மாக்கி தெருவில் தூக்கிப்போடும் மருத்துவமனைக் காட்சிகள் ரிப்பீட் மோடில் தொடர்வது திணிப்பு. ஏன் போலீஸ் அதிகாரிகளை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பதற்கான வலுவான காட்சிகள் படத்தில் இல்லை. கிஷோரின் மனைவியைத் தன் மனைவியாகச் சித்தரித்துக்கொள்ளும் சுலிலை ஊரில் யாரும் கேள்வியே கேட்கமாட்டார்களா... எனப் படத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும், 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற ஒன்லைனுக்கு கிராமத்து வாழ்வியல், உண்மைச் சம்பவத்தின் பாதிப்பு, காவல்துறையின் கருப்புப் பக்கங்கள், மூன்று கோணத்தில் விரியும் திரைக்கதை அமைப்பு... எனச் செதுக்கி உருவாக்கியிருப்பதால், 'களத்தூர் கிராம'த்திற்கு ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம்.