Published:Updated:

“ஸ்பாட்டில் இருந்த ஒரே பெண்..!” - தீரன் அதிகாரம் ஒன்று ஹைலைட்ஸ்

“ஸ்பாட்டில் இருந்த ஒரே பெண்..!” - தீரன் அதிகாரம் ஒன்று ஹைலைட்ஸ்
“ஸ்பாட்டில் இருந்த ஒரே பெண்..!” - தீரன் அதிகாரம் ஒன்று ஹைலைட்ஸ்

“ஸ்பாட்டில் இருந்த ஒரே பெண்..!” - தீரன் அதிகாரம் ஒன்று ஹைலைட்ஸ்

சதுரங்க வேட்டை வினோத் எடுத்திருக்கும் திரைப்படம் “தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் பிரபு, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

“மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு நான் எழுதிய ‘ஆகாயம் தீப்பிடித்தால்’ பாடல் எப்படி அவருக்கு ஹிட் அடித்ததோ அதே போன்று இந்தப் படத்தில் அவருக்கு நான் எழுதியிருக்கும் ஒரு பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்” என்று சொல்லி பேச ஆரம்பித்தார் உமாதேவி. “தீரனை விட வீரன் பேசப்படுவான். வெற்றியடைவான். ஏனென்றால் வீரனுக்கு உடல் பலமிருக்கும். தீரனுக்கு உடல் பலமும் ஞான பலமும் இருக்கும். அதனால், 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப் பெரிய வெற்றி அடையும்.

இந்தப் படத்தின் பாடல்களை எழுத வினோத் என்னை அழைத்தார். இந்தப் படத்தில் என்னையும் தாண்டி தாமரை, ராஜூ முருகன், செளந்தர்ராஜன் எனப் பலர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘ஓ சாத்தியே’ என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். இயக்குநர் வினோத் சார் என்னிடம் வந்து 'சாத்தி'னா என்ன அர்த்தம்''னு கேட்டார். பேரன்பு மிக்க பெண்தான் 'சாத்தி'னு சொன்னேன். அதைப் பற்றி விளக்கமாக இப்போது சொல்றேன்.

‘மணிமேகலை'யை எழுதியவர் பெயர் சீத்தலைச் சாத்தனார். அந்தச் சாத்தன் என்பதற்குப் பொருள் தன்னிடம் இருப்பவை எல்லாவற்றையும் கொடுப்பவன். அதற்கு இணையான பெண்பால் சொல்தான் சாத்தி. இந்தப் பாடலும், ஆல்பமும் வெற்றியடைய வாழ்த்துகள்’’ என்று சொல்லி முடித்துக்கொண்டார் பாடலாசிரியர் உமாதேவி.

அவரைத் தொடர்ந்து பேச வந்த போஸ் வெங்கட், “கவண் படம் எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பிறகு நல்ல படத்துக்காக நான் காத்திருந்த போது, கடவுள் கொடுத்த படம்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று'. அந்தக் கடவுள் யாரென்றால் மேடையில் அமைந்திருக்கும் அனைவரும்தான். ராஜஸ்தானில் ஷூட்டிங் நடந்தபோது தயாரிப்பாளர் பிரபு சாரால் அங்கு அடிக்கடி வரமுடியவில்லை. அந்த நேரங்களில் எல்லாம் கார்த்தி சாரை பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டேன். எனக்கு ஒரு சகோதர் மாதிரியே அவர் அமைந்து விட்டார். அதற்கு படக்குழுவினருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படம் 'கவண்' படம் மாதிரி பெரிய வெற்றியடையும்'' என்ற போஸ் வெங்கட்டைத் தொடர்ந்து கலை இயக்குநர் கதிர் பேசினார்.

“இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. இதுவரை 55 படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால், இந்தப் படத்துக்காக நிறையவே உழைத்தேன். பொதுவாக ஒரு மாநிலத்துக்கு, ஊருக்கு எல்லாம் வேலையின் காரணமாகப் போவேன். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வட மாநிலம், ராஜஸ்தானில் நடந்தது. படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு என் குழுவுடன் போனேன். அங்கே போனால் அதிகமான குளிர். அளவுக்கு மீறிய குளிரை தாங்கவே முடியவில்லை. அங்கு கிராமத்தை செட் செய்யச் சொல்லியிருந்தார்கள். அதுவும் ராஜஸ்தானில் இருக்கிற வீடு போன்றே இருக்க வேண்டும். அது பெரிய அனுபவமாகயிருந்தது. ஏன்னா, நம்ம ஊரில் ஏதாவது செட் போட வேண்டுமென்றால் பசங்ககிட்ட சொன்னாப் போதும். அவர்கள் எல்லாப் பொருள்களையும் வாங்கிட்டு வந்துருவாங்க. 

ஆனால், அங்கே போய் பார்த்தால் செட் போடுவதற்கு தேவையான எல்லாப் பொருள்களும் வாங்குவதற்குள்ளேயே நான் ஒரு வழியாகிவிட்டேன். ஏன்னா, அங்கேயிருக்குறவங்க யாருக்கும் இங்கிலீஷ் பேசத் தெரியவில்லை. இந்தி மட்டும்தான் தெரிகிறது. அதிலயும் சில பேருக்கு இந்தி மொழியும் பேசத் தெரியவில்லை. ராஜஸ்தான் மொழியில் பேசுகிறார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது இங்கும் ஊருக்கு ஊருக்கு மொழி இருக்கும் போலனு. எப்படியோ அவங்க எல்லாரிடமும் பேசி பொருள் எல்லாம் வாங்கி செட் போடுவதற்குள் ஒரு வழியாகிவிட்டது.  படத்தில் நிறைய பைட் சீன்ஸ் இருக்கு. அது எல்லாத்துலையும் கார்த்தி சார் டூப் போடாமல் நடித்திருந்தார். அவர் பைட் சீன் பார்க்கும்போது எனக்குப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. பஸ் மீது அந்தரத்தில் தாவுகின்ற ஒரு சீன் இருக்கும் அந்த சீன் எல்லாம் டூப் இல்லாமல் ரொம்ப அசால்ட்டாக செய்து கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் நல்ல ஓவியர். அதனாலே என் வேலைகள் பாதியை அவர் எடுத்துக்கொண்டார். டைரக்டர் ஏதாவது சொன்னால் அதை அப்படியே என்னிடம் வரைந்தே காட்டி விடுவார். படத்தின் நாயகி ரகுல் பீர்த் சிங் குடும்பப் பொண்ணாக நடித்திருக்கிறார். அவர் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும்’’ என்று சொல்லி முடித்தார் கலை இயக்குநர் கதிர். 

படத்துக்கு இசையமைத்திருக்கும் ஜிப்ரான் பேசும் போது, ''எப்போதும் என்னைத் தேடி அவார்டு மூவிதான் வரும். அந்த வகையில் இந்தப் படம் எனக்கு வந்தது செம ஹாப்பி. ஏன்னா, படத்தில் ஆறு பாடல்கள் இருக்கு. அதில் நான்கு காதல் பாடல், ஒரு சோகப் பாடல், ஒரு குத்துப் பாடல் என ஃபுல் கமர்ஷியல் படமாகயிருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி சார் படத்துக்கு இசையமைக்க போறேன்னு வீட்டில் சொன்னவுடன், '' நல்லா மியூசிக் போடுங்கள். ஏன்னா, கார்த்தி சார் படத்தின் பாட்டுதான் எப்போதும் டி.வி-யில் ஓடிக் கொண்டிருக்கும்''னு சொன்னார்கள். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருக்காங்க. இப்போதிருக்கும் தலைமுறைக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்'' என்றார் ஜிப்ரான். 

அவரைத் தொடர்ந்து பேச வந்த நாயகி ரகுல் ப்ரீத் சிங், வணக்கத்தை மட்டும் தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். “இந்தப் படம் பண்ணியது ரொம்ப சந்தோஷம். இந்த டீம் ஒரு ஃபேமிலி மாதிரிதான் இருந்தது. நல்ல பாசிட்டிவிட்டி எனக்கு இந்தப் படம் பண்ணும் போது கிடைத்தது. எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்ததற்கு வினோத் சாருக்கு நன்றி. அதே மாதிரி ஒரு சூப்பரான கோ-ஸ்டார் கார்த்தி சார். எனக்குப் பல தமிழ் டயலாக்ஸை அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர் இல்லைனா எனக்கு நடிக்க கஷ்டமாகயிருந்திருக்கும். இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் ரொம்பப் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று சொல்லி முடித்தார்.

இவரைத் தொடர்ந்து பேச வந்த இயக்குநர் வினோத், ''இது செம கமர்ஷியல் படம். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும் போது  என்டர்டெயின்மென்ட், எஜிகேஷன், என்கேஜ்மென்ட் இந்த மூன்று விஷயத்தை வைத்துத்தான் எழுதினேன். இந்தப் படத்தின் கதையை போலீஸ் ஸ்டோரியாக ஆரம்பிக்கச் சின்னத் தயக்கம் எனக்குள்ளேயிருந்தது. ஏன்னா, முதலில் ஸ்க்ரிப்ட் எழுதும் போது ஒரு ரோடு ஸ்டோரியாக எடுக்கலாம்னு நினைத்தேன். அப்புறம் அது சம்பந்தமாக சில விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாம்னு போலீஸ் ஆபீஸர் சிலரை மீட் பண்ணிப் பேசும்போது, படத்தின் கதை வேறு இடத்துக்குப் போனது. அப்புறம்தான் முழு போலீஸ் கதையாக மாற ஆரம்பித்தது. அப்போது போலீஸ் கதை பண்ண எனக்கு பயமாகயிருந்தது. 

போலீஸ் என்றாலே தவறானவர்கள்தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்குக் காரணம் வாட்ஸ் அப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள்தான். அந்தத் தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில், அரசியலில் , பத்திரிகையாளர்களில்  நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதேபோல்தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள். நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல்தான் இந்தப் படத்திலும் இருப்பார்கள். இது நல்ல போலீஸ் பற்றிய படம். 

இந்தப் படத்தின் ஸ்டோரி எழுதி முடித்தவுடன் எங்களுக்குக் காலம்தான் பெரிய சவாலாக இருந்தது. கதைப்படி 1995 லிருந்து 2005 வரை நடக்கும் கதை. அதனால் படத்தின் லொகேஷன் முழுவதுமாக இப்போதிருக்கும் காலநிலையிலிருந்து மாற்ற வேண்டியதாக இருந்தது. அதைச் சரியாக ப்ளான்பண்ணி, கலை இயக்குநர் கதிர் அண்ணா செய்து கொடுத்தார். இந்தப் படத்தை பெண்கள் கட்டாயம் பார்க்கணும்னு நினைக்கிறேன். பெண்கள் பார்க்க வேண்டிய காரணம் இந்தப் படத்தில் இருக்கு’’ என்று சொல்லி முடித்தார் இயக்குநர் வினோத்.

படத்தின் நாயகன் கார்த்தி, ''என்னுடைய முதல் போலீஸ் படம் 'சிறுத்தை'. அப்போது போலீஸ் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்று சில போலீஸ் ஆபீஸரை மீட் பண்ணிப் பேசினேன். அப்போது அவர்கள் இந்த கேஸை பற்றி என்னிடம் தெளிவாகச் சொன்னார்கள். அதை அப்படியே மறந்து விட்டேன். 

அதன்பிறகு ஓர் ஐந்து, ஆறு வருஷம் கழித்து இயக்குநர் வினோத் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அப்போது, 'அய்யோ, இந்தக் கதை எனக்கு ஏற்கெனவே தெரியும்னு சொன்னேன். என்னைச் சுற்றி இந்தக் கதை அடிக்கடி வந்ததால் மிஸ் பண்ணாமல் பண்ண வேண்டும்னு நினைத்தேன்.

இந்தப் படத்தை நான் பண்ணுவதற்கு 'சதுரங்க வேட்டை' படமும் முக்கியக் காரணம். எனக்கு 'சதுரங்க வேட்டை' ரொம்பப் பிடித்திருந்தது. நம்ம சுத்தியிருக்குவங்க ஏமாந்த கதை நிறையக் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனா, அவங்களை எதுவும் கேட்கமுடியாமல் இருப்போம். அதே மாதிரி ஒருத்தரை ஏமாத்திட்டு வாழ்ந்துற முடியாதுங்கிறதையும் 'சதுரங்க வேட்டை' படம் சொன்னது. அந்த விதத்தில் 'சதுரங்க வேட்டை' ரொம்பப் பிடித்திருந்ததால் வினோத்துடன் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். 

வினோத் பற்றி சொல்லனும்னா, ''காலையில் பரீட்சை எழுத்திட்டு வெளியே வர பையனிடம் எப்படிடா எழுதியிருக்கனு கேட்டால், ''அருமையா எழுதியிருக்கேன். 90 மார்க் எடுத்துருவேன்''னு சொல்வார். கடைசியில் அவன்தான் பெயில் ஆவான். ஆனா, வினோத் கிட்ட கேட்டால், ''இரண்டு மார்க் கேள்வி பத்து எழுதியிருக்கேன். இரண்டு பத்து மார்க் எழுதியிருக்கேன். அதனால், பாஸ் ஆயிருவேன்''னு கரெக்டா சொல்லுவார். ஷூட் முடிச்சிட்டு வந்தால், ''சார் இந்த சீன் நல்லா எடுத்து இருக்கிறோம். இந்த சீன் எதிர்பார்த்த அளவுக்கு வரலை’’னு துல்லியமாகச் சொல்வார். அவர் எடுத்த படமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்துதான் படத்தைப் பார்ப்பார். அது ரொம்ப முக்கியம். சில காட்சிகளை வேண்டுமென்றே படத்தில் திணித்தால் தோல்வியடைந்துவிடும். அதை கரெக்டா தெரிஞ்சியிருக்கார் வினோத். 

ஒரு நிதானம் வினோத்திடம் இருக்கு. பல விஷயங்களைப் பற்றி தெளிவாகச் சொல்வார். அதைப் பற்றி படித்து வைத்திருப்பார். நிறைய இசை கேட்கக்கூடிய ஆள். அதனாலே, படத்துக்கு நல்ல இசையைக் கேட்டு வாங்கியிருக்கிறார். இந்தப் படத்துக்காக வினோத் என்னை அதிகம் மெனக்கெட விடவில்லை. அந்தக் காட்சிக்கு என்ன தேவையோ அதைதான் என்னிடம் கேட்டு வாங்கினார். இந்தப் படத்தில் நிஜ போலீஸ் அதிகாரிகள் நிறையப் பேர் நடித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் உண்மைச் சம்பவத்தை பார்த்தவர்கள். 

அதே மாதிரி இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யாவை என்னிடம் அறிமுகப்படுத்தியது தயாரிப்பாளர் பிரபுதான். சத்யாதான் கரெக்ட்னு சொன்னார். அப்படி என்னதான் சத்யாக்கிட்ட இருக்குனு நானும் பாக்குறேன்னு சொன்னேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப வெறியுடன் சத்யா ஒர்க் செய்தார். ஒரு ஷாட்டுக்கும் இன்னோரு ஷாட்டுக்கும் இடையில் கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் சத்யா. அறுபது நாளில் இவ்வளவு ஷாட் எல்லாம் எடுத்தது பெரிய விஷயம். அதுவும் சத்யா இதுவரை நைட் ஃபிலிம் எல்லாத்துக்கும் வேலை பார்த்ததால் ராஜஸ்தானைக் கண்ணில் காட்டியவுடன் ஒரு வெறியில் நல்ல வேலைப்பார்த்தார். அதுவும் சத்யாவுக்குத் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் ராஜஸ்தான் கூப்பிட்டுப் போயிட்டோம். 

தீரன் அதிகாரம் ஒன்று முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல், காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல், காரை வேகமாக ஒட்டிச் செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல், மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை இந்தப் படத்தில் தந்துள்ளேன். தீரனில் நான் இயக்குநரின் நடிகராகத்தான் இருந்துள்ளேன். 

அடுத்தாக படத்தில் நடித்த போஸ் வெங்கட் பற்றி சொல்லியே ஆகணும். நிறைய விஷயங்கள் நானும் போஸ் வெங்கட்டும் பேசியிருக்கோம். ரஜினி சார் பஸ் கண்டக்டரா இருந்து நடிகராக வந்த மாதிரி, போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவராகயிருந்து நடிகராக வந்திருப்பதை பார்க்கும் போது அவர் வாழ்க்கை எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. பல விஷயங்கள் அவரிடமிருந்து கத்துக்கிட்டேன். 

அப்புறம் படத்தின் நாயகி ரகுல் பற்றி சொல்லுன்னா இந்தப் படத்துக்கு யாரை நாயகியாக கமிட் பண்ணலாம்னு யோசித்தபோது, ரகுல் பேர் அடிப்பட்டது. இவர் குடும்பப் பொண்ணு கேரக்டருக்கு செட் ஆவாரானு முதலில் யோசித்தேன். ஆனால், ரொம்ப அழகாக இந்தப் படத்துக்கு அவங்க செட் ஆனாங்க. இந்தப்படம் ரகுலுக்குத் திருப்புமுனையாகயிருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகுல் ப்ரீத் சிங் இருந்தாலே ரொம்ப ஜாலியாக, சந்தோஷமாக எல்லோரும் இருப்பாங்க. ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒரே பொண்ணு ரகுல்தான். இந்தப் படத்தில் நிறைய பைட் சீக்வென்ஸ் இருக்கு. திலீப் மாஸ்டர் என்னிடம் நிறைய வேலைகள் வாங்கினார். நேர்மையான போலீஸ் ஆபீஸருக்கு இந்தப் படம் பிடிக்கும். இது அவர்களுக்கான படம்'' என்று சொல்லி முடித்தார் கார்த்தி.

அடுத்த கட்டுரைக்கு