Published:Updated:

வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்..! என்ன காரணம்..? (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-15

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்..! என்ன காரணம்..? (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-15
வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்..! என்ன காரணம்..? (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-15

‘வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்’ என சென்ற பகுதியில் நாம் பார்த்த விஷயங்களின் தொடர்ச்சிதான் இந்தப் பகுதியும்...
எம்.ஜி.ஆர் வசூல் சக்கரவர்த்தி என்றும் மினிமம் கேரன்ட்டி ராமச்சந்திரன் என்றும் படத்தின் வெற்றியால் பெயர் பெற்றிருந்தாலும் சில படங்கள் நூறு நாள்கள் ஓடவில்லை. வசூலை அள்ளிக் குவிக்கவில்லை அதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய முனைகிறது. 

ஒழுக்கமீறலால் வசூலை இழந்தவை

தாயின் மடியில், பட்டிக்காட்டுப் பொன்னையா, மாடப்புறா போன்றவை மக்கள் எதிர்பார்த்தபடி எம்.ஜி.ஆரின் ஒழுக்கம் அமையாததால் வசூலைப் பெறவில்லை. மாடப்புறாவில் அவர் காதலிப்பது ஒருத்தியாகவும் ஆனால் அவர் சந்தர்ப்ப சூழலால் திருமணம் செய்வது மற்றொருத்தியாகவும் அமைந்துவிடும். கதையின் வேகமும் காட்சியமைப்பும் சுமாராகவே இருந்ததால் படமும் சுமாராகவே ஓடியது.
தாயின் மடியில் படத்தில் இரண்டு முக்கியக் கோளாறுகள் காணப்பட்டன. ஒன்று எம்.ஜி.ஆரின் பிறப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு படத்தின் முக்கியத்திருப்பமாக அவர் தன் தங்கையையே காதலிப்பதாகக் கதையை அமைத்திருந்தது. (கடைசியில் தங்கை இல்லை என்பது தெரியவரும்). யாரோ பெற்று அனாதையாகப் போட்டுவிட்டு போன குழந்தையை (எம்.ஜி.ஆர்) ஒரு பணக்காரர் எடுத்து வளர்ப்பார். அவர்தான் குழந்தையைக் கண்டெடுத்த நாளை குழந்தையின் பிறந்தநாளாகக் கொண்டாடுவார். எம்.ஜி.ஆர் வளர்ந்த பிறகும் இக்கொண்டாட்டம் தொடரும். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர் கடுமையான கேலி கிண்டலுக்கு உள்ளாவார். இதை ரசிகர்கள் விரும்பவில்லை.

எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் வேளையில் இருவரும் ஒரு தகப்பன் வயிற்றுப் பிள்ளைகள் என்ற தகவலறிந்து எம்.ஜி.ஆர் தன் காதலைக் காரணம் சொல்லாமல் முறித்து விடுவார். பின்பு ஒரு நாள்  இந்தக் காரணத்தைச் சொன்னதும் இருவருமே தற்கொலை செய்துகொள்ளத் துணிந்து விடுவர். பின்பு இருவரின் தந்தையும் வெவ்வேறு நபர்கள் என்ற உண்மையை நாகேஷ் இவர்களுக்கு எடுத்துச்சொல்லி தற்கொலையைத் தடுப்பார். இது ரசிகர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. பாடல்கள் அருமையாக இருந்தும் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை இழந்துவிட்டது.

நாடோடி

நாடோடி படத்தில் எம்.ஜி.ஆர் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து பணக்காரரால் வளர்க்கப்பட்டவர். அதனால் அவர் காதலியை மணம் முடித்துத்தர அவளது தந்தை மறுத்துவிடுவார். காதலி தற்கொலை செய்துகொள்வார். இவளது தங்கை அக்காவின் காதலனை சாதிமறுப்புத் திருமணம் செய்யப் போவதாக சபதம் செய்வாள். படத்தில் இவளும் (சரோஜாதேவியும்) எம்.ஜி.ஆரும் பாதிநேரம் குருடாக்கப்பட்டு பிச்சையெடுக்கும் காட்சிகளில் நடித்திருப்பதைப் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பாராட்டவே, எதிரணியினர் இப்படத்தை விரும்பிப் பார்த்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குக் கண் தெரியாத எம்.ஜி.ஆரைப் பார்க்க பிடிக்கவில்லை. மேலும், பிறப்பும் தாழ்ந்ததாகச் சித்திரிக்கப்பட்டதும். திருமணம் மறுக்கப்பட்டதும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.  பாட்டும், படிப்பும் சிறப்பாக இருந்தும் படம் வசூலில் நிமிர்ந்து நிற்கவில்லை.

பட்டிக்காட்டுப் பொன்னையா

பட்டிக்காட்டு விவசாயி, பட்டணத்துக்கல்லூரி வாலிபன் என இரண்டு வேடங்களில் சகோதரர்களாக எம்.ஜி.ஆர் இரட்டைவேடமிட்டு நடித்திருந்தார். படம் உலகம் சுற்றும் வாலிபன் வந்து மூன்றுமாதம் கழித்து (10-8-73) வெளிவந்தது. ஜெயலலிதா மற்றும் ராஜாஸ்ரீ கதாநாயகிகளாக நடித்தனர்.

கல்லூரி மாணவனாக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு மழையில் காதலியுடன் நனைந்து மகிழ்ந்த வேளையில் அவளிடம் வரம்பு மீறி நடந்துவிடுவார். இதனால் ஊரில் இருக்கும் தந்தைக்குக்கூடத் தெரிவிக்காமல் அவளை அவசரத் திருமணம் செய்து வீட்டு மாப்பிள்ளையாகி அவமானப்பட்டு வெளியேறுவார். இந்த எம்.ஜி.ஆரை பெண்களும் ரசிக்கவில்லை ஆண்களும் ரசிக்கவில்லை.

அரசியல் காரணங்கள்

எம்.ஜி.ஆர் படங்கள் சில வெள்ளிவிழா கொண்டாடாததற்கு சில பல அரசியல் காரணங்களும் உண்டு. கட்சிக்காரர்களின் தொல்லை அதிகமாக இருப்பதைக் கண்ட பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தன் தம்பியிடம் சொல்லி அவர் வகித்துவந்த மேல்சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யச் சொன்னார்.  எம்.ஜி.ஆர் அண்ணனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். மாலைமுரசில் செய்தி வந்தது. என் கடமை படம் அப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் காட்சிக்கு டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற திமுகவினர் பலர் மாலைமுரசு செய்தி கேட்டதும் வரிசையிலிருந்து வெளியே வந்துவிட்டனர். அண்ணா கொடுத்த எம்.எல்.சி பதவியை எம்.ஜி.ஆர் உதறித் தள்ளுவதா? என்ன ஆணவம் என்று விமர்சித்தனர். பின்பு பலரும் வேண்டிக் கொண்டதனால் எம்.ஜி.ஆர் இராஜினாமாவைத் திரும்பப் பெற்றார். அப்போது (1964) தி.மு.க ஆட்சிக்கு வரவில்லை. அண்ணா மிகுந்த செல்வாக்குடன் இருந்த காலம். இளைஞர்கள் அண்ணாவின் தம்பிகளாகத் தங்களை அறிவித்திருந்த காலம். திமுகவா? எம்.ஜி.ஆரா? என்று கேட்டால் தி.மு.க என்று நெஞ்சு நிமிர்த்திய காலம். பின்பு 1972ல் காலம் மாறிவிட்டது. திமுகவா எம்.ஜி.ஆரா? என்றால் இலட்சக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக எம்.ஜி.ஆர் என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் வந்தனர்? இதற்காக எம்.ஜி.ஆர் காத்திருந்தார். மெள்ள மெள்ள காய்களை நகர்த்தினார். “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு’’ என்று பொறுமையாக நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். வாய்ப்பும் வந்தது.

அரசகட்டளை

மறு வெளியீடுகளில் இன்றளவும் வசூலை வாரிக் குவிக்கும் அரசகட்டளை படம் காங்கிரஸ் - திமுக தேர்தல் (1967) காலத்தில் வந்திருந்தால் அது ஒரு வெள்ளிவிழா படமாக அமைந்திருக்கும். ஆனால், அப்படத்தின் காட்சிகளை அண்ணனும் தம்பியும் திரும்பத் திரும்ப எடுத்ததில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணி இயக்கித் தயாரித்த படம். அவர் தன் தாயார் பெயரில் சத்யராஜா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். சரோஜாதேவிக்குத் திருமணம் ஆனதும். ஒரு தடங்கலாகிவிட்டது.
எம்.ஜி.ஆர் குண்டடிபட்டு பிழைத்து திமுக வெற்றிபெற்ற பிறகு படம் ரிலீசாயிற்று. இப்படத்தில் இருந்த புரட்சிப் பாடல்கள், காட்சிகள் ஆகியன இப்போது காலத்துக்குப் பொருந்தாதவை ஆகிவிட்டன. குண்டடிபட்ட பின்பு சரோஜாதேவியின் தாயார் ஒரு பேட்டியில் இனி எம்.ஜி.ஆரோடு என் மகள் நடிக்கமாட்டாள் என்றார். இதுவும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர் தரப்பினரும் மிகவும் ஆத்திரப்பட்டனர். இதனால் அரசகட்டளையின் இறுதிக் காட்சியில் சரோஜா தேவி இறந்துவிடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் காட்சிகள் அதிகமாக்கப்பட்டு முடிவில் அவரைத் திருமணம் செய்வதாகக் காட்டப்பட்டது. கதை முழுக்கப் போராடிய இளவரசியான சரோஜாதேவி இறந்ததும் பொருத்தமான முடிவாக அமையவில்லை. 

நாடோடிமன்னன் படத்தில் சரோஜாதேவியைக் கொண்டுவர பானுமதி எப்படி வெளியேற்றப்பட்டாரோ அதே வழியில் அரசகட்டளையில் சரோஜாதேவியும் வெளியேற்றப்பட்டார். வரலாறு திரும்பியது. தான் வந்த வழியிலேயே அவர் வெளியேறினார். இதன் பின்பு ஜெயலலிதாவின் சீசன் களைகட்டத் தொடங்கியது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

காங்கிரஸிடமிருந்து தமிழ்நாட்டை மீட்கும் கதை அரசகட்டளை திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்கும் கதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். ஆனால், இரண்டுமே அதற்கான போராட்டம் நடக்கும்போது வரவில்லை. போராட்டம் முடிந்தபிறகு வந்ததால் அவை பழங்கதையாய் போயிற்று. வெற்றி பெற்ற பின்பு யாராவது பழைய போராட்டங்களைப் பற்றி பேசுவார்களா? எனவே, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு வந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் பெரிய வெற்றியைப் பெறவில்லை.