Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“வெள்ளைக்காரனின் வடிகால் திட்டம் ஒன்றே வெள்ளத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி!” நடிகர் நாசர்

சென்னையில் பெருமழை என்றால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாதிப்பை உண்டாக்கும் பகுதிகளில் முடிச்சூர், வேளச்சேரி உள்ளிட்டவை குறிப்பிட்டு சொல்லக்கூடியவை. இந்தளவுக்கு இல்லையென்றாலும் வளசரவாக்கம் குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்து மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டு தீவுபோல் காட்சியளிக்கும். வளசரவாக்கம், விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் சினிமாத் துறையினர் அதிகளவில் குடியிருக்கின்றனர். இந்த மழைக்கு ஷூட்டிங் வருவது, போவது என்று கடுமையாகச் சிரமப்படுவார்கள். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரின் வீடு அமைந்துள்ள காமகோடி நகரும் ஒவ்வொரு கன மழையிலும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த மழை குறித்து அவரிடம் பேசினோம். “கடந்த 2015-ம் ஆண்டு மழையில் ஏரிகள் உடைப்பெடுத்தபோது நாம் கதிகலங்கிப் போனோம். ஆனால், அந்த மழையிலிருந்து நாம் பாடம் கற்கவில்லை என்பதையே இந்த மழை நாள்கள் உணர்த்துகின்றன” என்கிறார் நாசர். அவர் மேலும் கூறியதாவது...

நாசர்

'' மழைநீர், ‘இவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள்’ என்று வியந்து நடிகர்கள் வீட்டை மட்டும் விட்டுவிடுவதும் இல்லை. ‘அன்றாடங்காய்ச்சி’ என்று நயந்து பாமரன் வீட்டை பதம்பார்க்காமல் விடுவதும் இல்லை. அது தண்ணீர். அது பாய்ந்தோடும் பகுதியில் என்ன இருந்தாலும் அதைத் தனதாக்கிக்கொள்ளும் குணம் கொண்டது. அப்படித்தான் 2015 ம் ஆண்டு ஏரிகள் உடைந்து கூவத்தில் பாய்ந்தோடிய வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தபோது எல்லோரும் பாதிக்கப்பட்டோம். அப்போது, அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காமல் நாமே களத்தில் இறங்கி முதியவர்களையும், குழந்தைகளையும் காப்பாற்றினோம். அதன்பின் அந்தத் துயரச் சம்பவத்தையே ஏனோ மறந்து போனோம். மீண்டும் வெள்ளம் வந்தால் என்ன செய்வது என்கிற சிந்தனையில்லை. இதோ இப்போது  நான்கு நாள்கள் பெய்த மழையிலேயே அல்லாடிக்கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தில் உள்ள ஒருவர், 'சென்னையில் இருக்கும் ஏரிகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இல்லை’ 'என்கிறார். பிறகு அவரே, 'சென்னையில் ஏரிகள் உடையும் கெடுபிடி ஏற்பட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்' என்று சொல்கிறார். ஏன் இந்த முரண்பாடு. 

நாசர்

சென்னைப் பள்ளிக்கரணையில் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் முதியவர் ஒருவர் ஒரு டிவி சேனலில், 'நான் 1993ல் வீடுகட்டி இங்கே குடிவந்தேன். 2015 வரை வெள்ளம் என்ற ஒன்று வந்ததே இல்லை. கடந்த 2015-ம் ஆண்டும் இப்போதும்தான் மழை பெய்யும்போது   வெள்ளம் வந்திருக்கிறது. இது எல்லாவற்றுக்குமே முக்கியக் காரணம் அருகில் இருந்த கால்வாயை அடைத்து விட்டனர், அதனால் மழை தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தங்கி வீட்டுக்குள் நுழைந்து விட்டது” என்று கதறுவதைப் பார்த்து நான் கலங்கிப்போனேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் என்பதையே சென்னை பார்த்தது இல்லை. எப்போதாவது அதிகமாக மழை பெய்யும், பின்னர் வடிந்துவிடும். வருடா வருடம் புயல் மையம் கொள்ளும். அதுவும் எப்போதாவதுதான் சென்னையைத் தாக்கும். பலமுறை கரை கடந்து ஆந்திரா சென்றுவிடும். இதுதான் இங்கு வழக்கமாக நடந்திருக்கிறது. எப்போது வெள்ளைக்காரன் வடிவமைத்துக்கொடுத்த வடிகால் திட்டத்தைக் கடைபிடிக்காமல் கைவிட்டோமோ அப்போதே நம்மை இந்த அரசு மழைக்குத் தத்துக்கொடுத்துவிட்டது. அந்த வடிகால் வாய்க்காலை முறையாகப் பராமரித்திருந்தால் இந்தப் பிரச்னையே இருந்திருக்காது. 

அரசுதான் இப்படி என்றால் ஒவ்வொரு தனி மனிதனும், நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கால்வாய்களில் பாலித்தீன் குப்பைகளை அசால்ட்டாக அள்ளிவீசுகிறோம். அந்தக் குப்பைகள் கால்வாய் ஓட்டையை அடைத்துக்கொண்டு மழை நீரை வடியவிடாமல் நம் வீட்டுக்கே திரும்பி வருகிறது. நிலங்கள் வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காகத் தண்ணீர் வடிந்து செல்லமுடியாத அளவுக்குப் புதிது புதிதாக நகர்களை உருவாக்கி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலும் ஒரு முக்கியமான காரணமாகும். 

நாசர்

நான் வளசரவாக்கத்தில் வீடுகட்ட ஆரம்பித்தபோது என்வீட்டை, சாலையிலிருந்து நான்கு அடிகள் தூக்கி உயரமாகக் கட்டினேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே உயரமான என் வீட்டைப் பார்த்து விதவிதமாகப் பேசினார்கள். இப்போது பெய்த மழை நீர் என் வீட்டு வாசலைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது. வெள்ள நீர் வீட்டுக்குள் நுழையவில்லை. அப்போது முன் யோசனை செய்து கட்டியது இப்போது உதவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்குப் பருவமழை கண்டிப்பாகப் பெய்யும் என்பதை உணர்ந்து வருமுன் காக்கும் செயலில் அரசும் மக்களும் இறங்க வேண்டும். ஏற்கெனவே 2015-ம் ஆண்டு ஒருமுறை அனுபவித்து விட்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்