Published:Updated:

'தமிழ் சினிமாவுல வியாபாரங்கிறது வெளிப்படையா இல்லை' - 'விழித்திரு' இயக்குநர் ஆதங்கம்

'தமிழ் சினிமாவுல வியாபாரங்கிறது வெளிப்படையா இல்லை' - 'விழித்திரு' இயக்குநர் ஆதங்கம்
'தமிழ் சினிமாவுல வியாபாரங்கிறது வெளிப்படையா இல்லை' - 'விழித்திரு' இயக்குநர் ஆதங்கம்

'அவள் பெயர் தமிழரசி' படத்துக்குப் பிறகு, இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா என ஒரு பட்டாளமே நடித்திருக்கும் இப்படம் நவம்பர் 3-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. திடீரென்று வெளியாக வேண்டிய படம் வெளியாகாமல் போனதால் அதிர்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான மீரா கதிரவன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "கடந்த இரண்டு நாள்களாக நொடி உறக்கம் இல்லை. தற்போதும் ஜெமினி லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கிறேன். துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன். ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. முழுவதுமாக கொல்லப்பட்டிருக்கிறேன். நான் மீண்டும் உயிர்ப்பித்து வருவது நீங்கள் அளிக்கப் போகும் ஆதரவில் இருக்கிறது. நண்பர்களும் மக்களும் ஊடகத்துறையினரும் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சிரமங்களுக்கு மன்னிக்கவும்... விழித்திரு திரையரங்குகளை நோக்கி வந்துகொண்டிருக்கிறது... ஆதரியுங்கள்.." என பதிவிட்டிருந்தார். 

என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள இயக்குநரைத் தொடர்புகொண்டபோது, "படத்தை வாங்குனவங்க திடீர்னு நேத்து பணம் இல்லைனு சொல்லிட்டாங்க. அதுதான் படம் வெளியாகலை. படப்பிடிப்பு 2013-ல் ஆரம்பிச்சு 2015-ல் முடிஞ்சுது. சென்சார் போர்ட்ல சில காட்சிகளை எடுக்கச் சொன்னாங்க, அதுக்காக அவங்ககிட்ட கொஞ்சம் சண்டையெல்லாம் போட்டு மூணு முறை ரிவைசிங் பண்ணி படம் ஓகே ஆகுறதுக்கே ஆறு மாசம் ஆகிருச்சு.  ஒரு தேதி முடிவு பண்ணினோம். அப்போ ஒரு பெரிய நடிகரோட படம் வெளியாகுதுனு தேதியை மாத்தினோம். அந்த படத்தோட தேதியும் மாறிடுச்சு. அப்புறம் ரிலீஸ் பண்ணலாம்னா, ஸ்ட்ரைக் அறிவிச்சுட்டாங்க. எங்களுக்கு பொருளாதார ரீதியாகவும் நிறைய இழப்பு ஏற்படுது. அதுக்குத்தான் விஷாலை சந்திச்சு பேசி நிலைமையை சொன்னேன். அப்போ அவர்தான் நம்பிக்கை கொடுத்தாரு. இப்போ இந்தமாதிரியான பிரச்னை வந்துடுச்சு. அதுதான் அப்படி பதிவிட்டிருந்தேன். ஒரு படத்தை எடுக்கறதை விட ரிலீஸ் பண்ணும்போதுதான் ரொம்ப கவனமா இருக்கணும். இப்போ 6 மணிக்கு மேலதான் படம் ரிலீஸ் ஆச்சு. அதுக்கு விஷாலுக்கு தான் நன்றி சொல்லணும். இப்போ தியேட்டர் ஃபுல்லாகிருச்சுனு போன் வந்துச்சு. காலையிலேயே ரிலீஸ் ஆகிருந்தா 25 முதல் 30 லட்சம் எடுத்திருக்கலாம். இப்போ எனக்கு நஷ்டம்தான். இன்னமும் படம் ரிலீஸ் ஆகலைனு நினைச்சு நிறைய பேர் திரும்ப போயிட்டாங்கன்னு சொல்லும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. தமிழ் சினிமாவுல வியாபாரங்கிறது வெளிப்படையா இல்லை. சினிமாங்கிறது ஒரு உணர்வு, ஒரு வாழ்வாதாரம்னு எல்லாரும் நினைச்சா இது மாதிரியான பிரச்னைகள் வராதுனு நினைக்கிறேன்" என்றார் உருக்கமாக...