Published:Updated:

ஆம்... தமிழில் ’இதுவரை’ முழுமையான பேய்ப்படம் வந்ததில்லை! - ’அவள்’ விமர்சனம் #Aval

விகடன் விமர்சனக்குழு
ஆம்... தமிழில் ’இதுவரை’ முழுமையான பேய்ப்படம் வந்ததில்லை! - ’அவள்’ விமர்சனம் #Aval
ஆம்... தமிழில் ’இதுவரை’ முழுமையான பேய்ப்படம் வந்ததில்லை! - ’அவள்’ விமர்சனம் #Aval

ஓர் ஊர்ல ஒரு பேய்... என்ற வழக்கமான ஹாரர் கதை ஒன்றை வித்தியாசமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறது 'அவள்'. பேய்ப் படங்களுக்கே உரிய  நிறைய அறைகள் கொண்ட வீடு, பயம் கிளப்பும் மென்மையான இருள், பழி தீர்க்கக் காத்திருக்கும் ஆன்மா. இவ்வளவையும் வைத்துப் பயம் காட்டுகிறாளா 'அவள்'? 

டாக்டர் க்ரிஷ் என்கிற கிருஷ்ணா (சித்தார்த்) தன் மனைவி லஷ்மியுடன் (ஆண்ட்ரியா) இமாச்சல் பிரதேசத்தின் மலை உச்சி வீடு ஒன்றில் செம ரொமான்டிக்காக வாழ்ந்துவருகிறார். அவரின் எதிர்வீட்டுக்குக் குடிவருகிறது சாம் (அதுல் குல்கர்னி) குடும்பம். அவர்கள் அந்த வீட்டுக்குக் குடி வந்ததிலிருந்து குடும்பத்துக்குள் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. கூடவே அதுல் குல்கர்னியின் மகள் ஜெனி (அனிஷா ஏஞ்சலினா விக்டர்) வினோதமாக நடந்துகொள்ள ஆரம்பிக்கிறார். பிரச்னையில் சிக்கியிருக்கும் அந்தக் குடும்பத்துக்கு உதவும் நோக்கத்தில் ஓடி ஓடி உதவிகள் செய்கிறார் சித்தார்த். அந்த வீட்டுக்குள் நிஜமாக என்ன நடக்கிறது, அதன் காரணம் என்ன, பிரச்னைகளில் இருந்து அவர்கள் எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான், 'அவள்' சொல்லும் கதை. 

ஒரு வீடு, அதில் நிகழும் மர்மம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், இருட்டு, திகில் எனப் பேய்ப் படங்களுக்கே உரிய அத்தனையும் இந்தப் படத்தில் உண்டு. ஆனால், முடிந்தவரைதான் அதனை சுவாரஸ்யப்படுத்திக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் மிலந்த் ராவ். சூரி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, கொல்லைப்புறக் கிழவி என வழக்கமான பேய் சினிமாக்களுக்கே உரிய யாரையும் அண்டவிடாமல் செய்ததும், சகிக்க முடியாத காமெடிகளை வலிந்து திணிக்காத கதை நகர்வும் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 

சித்தார்த் வழக்கம்போல தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக செய்து முடிக்கிறார். தொடக்கத்தில் ஜாலியான கதாபாத்திரமாகக் காண்பிக்கப்பட்டாலும், அதன் பிறகு நிறையவே சீரியஸ் காட்டி நடிக்கிறார். ஆனால், அந்த முக்கியமான திருப்பத்துக்குப் பிறகு சித்தார்த் நடிப்பு அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை. ஜெனிஃபராக நடித்திருக்கும் அனிஷா பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் முக்கியமான த்ரில்லர் எலமென்ட் ஜெனிதான். சித்தார்த்தின் மீது உள்ள ஈர்ப்புடன் அவரை சீண்டுவதும், அமானுஷ்ய நிகழ்வுகளுக்குப் பிறகு குழப்பமான மனநிலையிலேயே சுற்றுவதுமாய் அறிமுகப்படத்திலேயே ஆச்சர்யப்படுத்துகிறார். அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும், தான் வரும் காட்சிகளில் நிறைவான நடிப்பை வழங்குகிறார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவுக்கும், சித்தார்த்துக்குமான ரொமான்ஸ் எபிசோட் செம! சித்தார்த்துடன் பொசஸிவாக சண்டை போடுவது, குட்டிக் குட்டி ரொமான்ஸ் ரியாக்‌ஷன்ஸ் என எந்தக் காட்சியாக இருந்தாலும், ஆண்ட்ரியாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருக்கிறது. இந்த மூவரைத் தவிர மற்றவர்கள் 'மற்றும் பலர்' லிஸ்ட்தான் என்றாலும், அதுல் குல்கர்னி, சுரேஷ், பிரகாஷ் பெலவாடி என எல்லோருமே படத்தின் த்ரில் டெம்போவை தங்கள் நடிப்பின் மூலம் தக்க வைக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் தொழிநுட்பக் கலைஞர்களின் உழைப்பு. அதிகபட்சம் இரண்டே வீட்டுக்குள் நிகழும் கதை, எந்த இடத்திலும் ரிப்பீட் ஆகாமல், வெவ்வேறு கோணங்கள், த்ரில்லர் உணர்வைக் கொடுக்க தீவிரமாக மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஷ் கிருஷ்ணா. பின்னணி இசை மூலம் கூடுதலாக திகில் அனுபவம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இசையமைப்பாளர் கிரீஷ். ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்றே படத்தின் ஒலிக்கலவையில் துல்லியம் காட்டியிருக்கிறார்கள் விஷ்ணு கோவிந்த், ஸ்ரீஷங்கர், விஜய் ரத்னம். ஆபரேஷன் தியேட்டர் காட்சி, ஹிப்னாட்டிஸ கருவியின் ஒலி என அனைத்தும் லைவ் உணர்வைக் கொடுக்கிறது. படத்தின் கலை இயக்கத்திலும் பெரிய மெனக்கெடல் காட்டி வேலை செய்திருக்கிறார் சிவஷங்கர். ஃப்ளாஷ்பேக்கில் வரும் சைனீஸ் வீடு, அறுவை சிகிச்சையின் போது காட்டப்படும் மனித மூளை தொடங்கி, வீட்டின் மூலையில் தொங்கும் திரைச்சீலை வரை அத்தனையிலும் நேர்த்தி. சில இடங்களில் பேயைக் காட்டும் காட்சிகளின் கிராஃபிக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதைத் தவிர, கண்டிப்பாக டெக்னிகல் பகுதியில் எந்தக் குறையும் சொல்ல முடியாது.

ஒரே ஒரு பாடலின் மூலம் சித்தார்த் - ஆண்ட்ரியாவின் காதல் டூ கல்யாணக் கதையைச் சொல்லிவிட்டு பிறகு பாட்டு எதுவும் இல்லாமல் திரைக்கதையைக் கொண்டுபோன விதம், படத்தின் உணர்வை எந்த இடத்திலும் சிதைக்காமல் அப்படியே கொடுக்கிறது. படத்தின் தொடக்கத்தில் 1930-களில் வாழ்ந்த ஒரு சைனீஸ் குடும்பத்தைச் சேர்ந்த கருவுற்றிருக்கும் தாயையும், அவரின் மகளையும் காட்டி சின்ன லீட் வைக்கிறார்கள். தொடக்கத்திலேயே இதைச் சொல்லிவிடுவதால் இதற்கும் நிகழ்கால கதைக்கும் என்ன தொடர்பு என்கிற சஸ்பென்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் 'சரி சீக்கிரம் ஃப்ளாஷ்பேக் சொல்லுங்கப்பா'  என்ற அலுப்பு ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. 'அந்தச் சீனா ஃபேமிலிக்கு ஏதோ நடந்திருக்கு!' என்ற பதபதைப்பும், அதன் காரணம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும்தான் படத்தின் மையம். திகில் காட்சிகளும், டுவிஸ்டுகளுமாய்ப் படம் நகர்ந்தாலும், மையக் கதை பலவீனமாக இருக்கிறது. படத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்குக் காரணமாகச் சொல்லப்படும் ஃபிளாஸ்பேக் காட்சியில் அழுத்தத்தையும், சுவாரஸ்யத்தையும் குறைத்திருப்பது, அதுவரை இருந்த சுறுசுறுப்பையும் ஆர்வத்தையும் மொத்தமாகக் குறைத்துவிடுகிறது. 

பேய்ப் படம் என்றாலே, ஒரு வீடு, ஒரு பழி வாங்கும் காரணம், அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி என ஒரு கட்டமைப்பு உண்டு. அதை உடைப்பதோ மாற்றுவதோ படத்தின் கதை சம்பந்தப்பட்டது. ஆனால், படத்திற்குள் ஆடியன்ஸை திகிலுறச் செய்வதற்காகப் பின்னால் குடு குடுவென ஓடும் குழந்தை, திடீரென கண் முன்னே தோன்றி மறையும் கோரமான உருவம் எனப் பல ஹாலிவுட் படங்களில் பார்த்த வழக்கமான விஷயங்களைத் தவிர்த்துப் புதிதாக யோசித்திருந்தால் இன்னும் பயம் கூடியிருக்கும். சில இயல்பான காட்சிகளைத் தாண்டி பேய்ப்படங்களுக்கே உரிய க்ளிஷே ஃபார்முலாக்கள்,  ஐன்ஸ்டீனின் ஆற்றல் விதியை ஆவி - ஆன்மாவோடு தொடர்புபடுத்தும் அபத்தம், 'மெசேஜ்' சொல்கிறேன் என்ற பெயரில் சமகாலம் குறித்த உணர்வோ, சமூகப்பிரச்னை குறித்த புரிதலோ இல்லாத அரைவேக்காட்டுத்தனமான வெளிப்பாடு என நிறைய நெருடல்களும் உறுத்தல்களும் உடையவளே 'அவள்' ஆகிய இவள். படம் வெளியாவதற்கு முன், 'தமிழில் இதுவரை முழுமையான பேய்ப்படம் வந்ததில்லை'  எனச் சொல்லியிருந்தார்கள், இயக்குநரும், நடிகரும். இதையே 'அவள்' படக் குழுவுக்கும் சொல்லிக்கொள்கிறோம். ஆமென்!