Published:Updated:

’’அனன்யாவுக்குப் பதில் அமலா பால்… சார்லிக்குப் பதில் தம்பி ராமையா..!’’ - 'மைனா' மேக்கிங் பகிரும் பிரபு சாலமன் #7YearsOfMynaa

’’அனன்யாவுக்குப் பதில் அமலா பால்… சார்லிக்குப் பதில் தம்பி ராமையா..!’’ - 'மைனா' மேக்கிங் பகிரும் பிரபு சாலமன் #7YearsOfMynaa
’’அனன்யாவுக்குப் பதில் அமலா பால்… சார்லிக்குப் பதில் தம்பி ராமையா..!’’ - 'மைனா' மேக்கிங் பகிரும் பிரபு சாலமன் #7YearsOfMynaa

'மைனா'... பரிசுத்த காதலோடு பயணிக்கும் ஒரு காதல் ஜோடியின் கதை. பெரிய பட்ஜெட் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த தருணத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அற்புத முத்து 'மைனா'. இந்தப் படத்திற்கு முன், பிரபு சாலமன் சில படங்கள் இயக்கியிருந்தாலும் அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்த ஆற்றல்மிகு படைப்பு இது. காதல் கதையை மையமாக வைத்து படத்தை இப்படியும் எடுக்கலாமா என்ற ஆச்சர்யத்துடனும் சுருளி - மைனா காதலுக்கு ஏற்படும் துன்பங்களை எண்ணி கண்ணின் விளிம்பில் ததும்பி நிற்கும் நீரோடு கனத்த மனதுடனும் வெளியே வந்தவர்கள்தான் 'மைனா'விற்கு சாட்சி. இந்தப் படைப்பு வெளியாகி இன்றுடன் ஏழு வருடங்கள் நிறைவடைந்தாலும் படத்தின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களையும், படப்பிடிப்பின் போது சந்தித்த சவால்களையும் பற்றி அறிந்துகொள்ள இயக்குநர் பிரபு சாலமனை தொடர்புகொண்டு பேசினோம். 
 

'மைனா' உருவான கதை பத்தி சொல்லுங்க?

" சைதாப்பேட்டை  துணை நீதிமன்றம் பக்கத்துல இருக்க ஒரு பஸ் ஸ்டாப்ல நான் நின்னுட்டு இருந்தேன். அப்போ, ஒரு கைதியை போலீஸ் விலங்கு மாட்டி கோர்ட்ல ஆஜர்படுத்த அழைத்து வந்தார். அப்போ, அவங்க போலீஸ் கைதி என்பதைத் தாண்டி அவ்வளவு நெருக்கமா பேசி ஜாலியா சிரிச்சுட்டு வந்தாங்க. போலீஸ், கைதிக்கு டீ வாங்கித் தந்து சகஜமா பேசிட்டே கோர்ட்டுக்குள்ள கூட்டிட்டு போனார். அன்பு என்னும் விலங்குதான் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருந்தது. இதைப் பார்க்கும்போதுதான், இது சாத்தியாமானால் எப்படி இருக்கும், அவன் உண்மை குற்றவாளியா, அவங்க பின்னாடியே ஒரு பொண்ணும் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சததுதான் 'மைனா' படத்தோட கதை. இதை மையமா வெச்சு கதை பண்ண ஆரம்பிச்ச போது, ராஜேந்திரன்னு ஒருத்தரை புழல் சிறையில சந்திச்சு பேசினேன். அப்போ அவர் 'இப்படிதாங்க தென்காசியில நான் வேலை பார்க்கும்போது ஒருத்தன் ஜெயில்லை இருந்து தப்பிச்சுட்டான். அடுத்த நாள் தீபாவளி வேற. நாங்களும் அலைஞ்சு திரிஞ்சு தேடி கடைசியா பார்த்தா குற்றாலத்துல எண்ணேய் தேச்சு குளிச்சுட்டு இருந்தான். ஏன்டா இப்படி பண்ணனு கேட்டா, 'சார் இன்னைக்கு தீபாவளி மட்டுமல்ல என் ஆளுக்குப் பொறந்த நாள் சார். அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன். சரி உட்காருங்க நம்ம வீட்ல கறி சோறு தின்னுட்டு ஜெயிலுக்குப் போலாம்'னு சொன்னவன்கூட உட்காந்து கறி சோறு தின்னுட்டு அவனை கூட்டிட்டு வந்தோம். பாத்தீங்களா எப்படிலா இருக்காய்ங்க'னு அந்த அதிகாரி சொன்ன அனுபவம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்துச்சு. அதைத்தான் அப்படியே படத்துல வெச்சிருந்தேன். "

நடிகர், நடிகைகளை எப்படித் தேர்வு செய்தீர்கள்..?

"படத்துக்கு யாரை ஹீரோவா போடலாம்னு நிறைய குழப்பங்கள் இருந்துச்சு. அந்த நேரத்துல என் ஆஃபிஸுக்கு விதார்த் வந்திருந்தான். ஏற்கெனவே சின்னச்சின்ன ரோல்கள்ல நடிச்சிருந்தான். உடனே, தலைமுடியை கலைச்சு, லுங்கியை கட்டச்சொல்லி போன்ல போட்டோ எடுத்துப் பாத்தேன். அப்போவே முடிவாகிடுச்சு என் படத்துக்கு ஹீரோ விதார்த்தான்னு. இதை அவன்கிட்ட சொன்னவுடனே அவன் கிண்டல் பண்றீங்களானு நம்பவே இல்லை. அப்படிதான் விதார்த் ஹீரோ ஆனார். ஹீரோயினா முதல்ல ப்ளான் பண்ணது அனன்யாதான். அவங்க பிஸியா இருந்தனால அமலா பால் ஃபிக்ஸ் பண்ணோம். அதே போல, தம்பி ராமையா கேரக்டர் பண்ண வேண்டியது சார்லி. அவருக்கு அப்போ டேட் இல்லாத காரணத்தினால் அவர் நடிக்கலை. அப்புறம் ஒரு நிகழ்ச்சியிலதான் தம்பி ராமையா சாரை பாத்தேன். பாத்தவுடனே இவர்தான்னு க்ளிக் ஆகிடுச்சு. அப்புறம் அவர்கிட்ட கதை சொன்னவுடனே ஓகே சொல்லிட்டார். உங்களுக்கு இந்த படத்துக்கு கண்டிப்பா ஒரு பெரிய அங்கீகாரம் கிடைக்கும்னு படம் பண்ணும்போதே நான் சொல்லிட்டே இருப்பேன். அதே மாதிரி தேசிய விருது கிடைச்சது. இந்தப் படத்துல காமெடி, எமோஷன், ஆடியன்ஸை அழவெக்கிறதுனு பல பரிணாமங்கள்ல இவரோட நடிப்பு இருக்கும் "
 

கேரளா - தமிழ்நாடு எல்லையில படம் பண்ணிருக்கீங்க. என்ன மாதிரியான சவால்களைச் சந்திச்சீங்க? 

"தேனி - கேரளா பகுதிகள்ல படம் ஷூட் பண்ணோம். குறிப்பா, சுருளியை போலீஸ்காரங்க தேடும்போது காட்டுக்குள்ள தீப்பந்தம் பிடிச்சிட்டு போவாங்க. அந்த சீனுக்கு நிஜமாவே நாங்க ஒரு ஆறேழு பேர் தீப்பந்தம் பிடிச்சு கேமரா பின்னாடியே ஓடுனோம். எக்ஸ்போஷர் இல்லாம அந்தத் தீயோட வெளிச்சத்துலதான் படம் எடுத்தோம். அது ரொம்ப சவாலா இருந்துச்சு. லோகேஷன் பார்க்க போகும்போது காட்டு யானை, சிறுத்தை எல்லாம் நடமாடுறதை பாத்தோம். அந்த விறுவிறுப்புல ஷூட் பண்ணது த்ரில்லாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்துச்சு. நிறைய இடங்கள்ல வெளிச்சம் பெரிய சவாலா இருந்துச்சு. அதை ரொம்ப அழகா சமாளிச்சு ஒளிப்பதிவு செஞ்சு கொடுத்தார் சுகுமார். "

பஸ் மலையில இருந்து விழுற காட்சிகளை எப்படி எடுத்தீங்க?

"என்னைப் பொறுத்தவரை படத்துல அதான் க்ளைமேக்ஸ். அந்த ரெண்டு போலீஸும் சுருளி மேல அவ்வளவு கடுப்பா இருந்தாலும் மைனா சொல்லி அவங்களை இவன் காப்பாத்தும்போதுதான், மனிதநேயம்னா என்னனு தெரிஞ்சுப்பாங்க. அப்படி ரெண்டு பேரும் சுருளி - மைனாவுக்கு உதவி பண்ணணும்னு நினைக்குற அந்தத் தருணம்தான் படத்தில ப்ரேக்கிங் பாயின்ட். அந்த பஸ்ஸை க்ரேனைவெச்சு தூக்கி அதுமேல நின்னுதான் நடிக்கவெச்சேன். அந்த சீனை மூணு நாள் எடுத்தோம். மூணாவது நாள் ஷாட் முடிஞ்சு அந்த பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி கொஞ்ச நேரத்துல பஸ் உண்மையாவே மலையில இருந்து கீழே விழிந்திடுச்சு. ஷூட் போயிட்டு இருக்கும்போது விழிந்திருந்தா என்ன ஆகிருக்கும்னு நினைக்கவே ஒருமாதிரி இருக்கு. அந்த பஸ் கண்ணாடி உடையற சத்தமே த்ரில் கொடுக்கும் படத்தைப் பாக்கும்போது. அந்த சவுண்டுக்கு நாங்களும் என்னென்னவோ பயன்படுத்திப் பாத்தோம். அப்புறம் கடைசியா, கண்ணாடியைச் சூடுபண்ணி தண்ணிக்குள்ள விட்டு ரெக்கார்டு பண்ணோம் அந்த சவுண்ட்தான் படத்துல இருக்கும்.  "
 

படத்தை இப்படித்தான் முடிக்கணும்னு தெளிவா இருந்தீங்களா?

"ஆமா. அதுல ரொம்பத் தெளிவா இருந்தேன். கடைசியா சுருளியும் மைனாவும் சேர்ந்து வாழுறமாதிரி கதை இருந்தா எல்லாப் படங்கள் மாதிரி இருந்திருக்கும். படம் முடிஞ்சு வெளியே போகும்போது மனசுல ஒரு கனத்தை கொடுக்கணும்னுதான் கதையை இப்படி முடிச்சேன். அப்போதான் ஒரு நல்ல பதிவா இருக்க முடியும். ஒரே சீரியஸான மூட்ல இருந்திடக் கூடாதுனுதான் ஒவ்வொரு சீரியசான சீனுக்குப் பிறகு காமெடி வசனங்களை வெச்சிருந்தேன். அதுவும் சரியான சமயத்தில் க்ளிக் ஆச்சு. படத்துக்காக உழைச்ச ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்" என்றபடி விடைபெற்றார் இயக்குநர் பிரபு சாலமன். 

அடுத்த கட்டுரைக்கு