Published:Updated:

எம்.ஜி.ஆர் - ஜானகி காதல் வளர்ந்த கதை..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-16

எம்.ஜி.ஆர் - ஜானகி காதல் வளர்ந்த கதை..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-16
News
எம்.ஜி.ஆர் - ஜானகி காதல் வளர்ந்த கதை..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-16

எம்.ஜி.ஆர் - ஜானகி காதல் வளர்ந்த கதை..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-16

திமுக பிரமுகர்களின் முக்கியஸ்தர்களின் பெயர்களும் அவர்களது மனைவிமார்களின் பெயர்களும் வெகு பொருத்தமாக இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. அண்ணாதுரை - ராணி அம்மையார் அடுத்ததாக கருணாநிதி - தயாளு அம்மாள், பின்பு நெடுஞ்செழியன் - விசாலாட்சி (இது முரண் வகையைச் சேர்ந்தது) என்ற  பெயர்களின் வரிசையில் ஜானகி - ராமச்சந்திரனும் இயற்கையிலேயே பொருத்தமான பெயராக அமைந்தது. கருணாநிதியும் (தட்சணாமூர்த்தி) நெடுஞ்செழியனும் தம் இயற்பெயரை, கட்சிக்கு வந்ததும் மாற்றிக்கொண்டனர். ஆனால் ஜானகி - ராமச்சந்திரன் என்ற பெயர்கள் பெற்றோரால் அவர்களுக்குச் சூட்டப்பட்ட இயற்பெயர்கள் ஆகும்.

ஜானகி அறிமுகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வி.என். ஜானகி கேரளாவில் உள்ள வைக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர். நாராயணனின் மகள். பிராமண குலத்தில் பிறந்தவர். இவரது தந்தையின் சகோதரரான (சித்தப்பா) பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத நிபுணர். பல பாடல்களை எழுதி இசையமைத்தவர். இவர் சில காலம் பாபநாசத்தில் வசித்ததால் அந்த ஊர்ப்பெயர் அவர் பேயரோடு ஒட்டிக்கொண்டது. கலைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜானகி தோழிப்பெண் வேடத்தில் நடிக்கத் தொடங்கி ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்.ஜி.ஆர் திரையுலகில் வாய்ப்புத்தேடிக்கொண்டிருந்த போது ஜானகி பெரிய ஸ்டாராக விளங்கினார்.  இவர் 1950ல் மருதநாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அப்போது இருவரது சந்திப்பும் தொடங்கியது.

எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால சினிமா பயணம்

1936-ல் சதிலீலாவதி படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர் அறிமுகமானார். இந்தப் படம் காப்புரிமை மீறலைப் பற்றிய படம். 28-3-1936இல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து சிறு வேடங்களை ஆனால் முக்கியமான துணைக் கதாபாத்திரங்களை ஏற்று எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். 1947ல் ராஜகுமாரியில் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. ஆனால்,அதன் பிறகும் அவர் அபிமன்யூவில் (1948) அர்ச்சுனன் வேடம், ராஜமுக்தியில் தளபதி வேடம் ரதன்குமாரில் (1949) பாலதேவன் என்ற துணை கதாபாத்திரங்களில்தான் நடித்தார்.

முதல் ஜோடிப் படம்

ராஜகுமாரிக்கு அடுத்து அவர் கதாநாயகனாக நடித்த படம் மோகினி. இதில் வி.என்.ஜானகி இவருக்கு ஜோடியாக நடித்தார்.  டி.எஸ்.பாலையா வில்லனாக நடித்தார். படம் திட்டமிடப்பட்ட போது எம்.ஜி.ஆர் வில்லனாகவும் பாலையா கதாநாயகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர் மனதை மாற்றி ஜானகியை ஜோடியாக ஏற்றார். அப்போதே அவருக்கு ஜானகியை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவருடன் பேச முடியாதபடி அவருக்குக் காவல் பலமாக இருந்தது. அவருடைய தாய்மாமா ஜானகியைக் கைதி போல நடத்தினார். ஜானகிக்கு ஓர் ஆண் குழந்தையும் இருந்தது.

மருத நாட்டு இளவரசி (1950)

காண்டிபன் என்ற சாதாரணக் குடியானவனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். மாறுவேடத்தில் காட்டுக்கு வந்து அவரைக் காதலிக்கும் இளவரசியாக ஜானகி நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதியை திருவாரூரிலிருந்து வரவழைத்த எம்.ஜி.ஆர் இயக்குநர் காசிலிங்கத்திடம் அறிமுகப்படுத்தி அவரையே கதை,வசனம் எழுத வைத்தார்.  இந்தப் படம் ஏறத்தாழ அடிமைப் பெண்ணுக்கு முன்னோடி எனலாம். இதில் ஜானகி எம்.ஜி.ஆருக்கு சண்டைப் பயிற்சி அளித்து அவரை ஒரு வீரராக மாற்றுவார். இந்தப் படத்தின் படப்படிப்பின் போது எம்.ஜி.ஆர் ஜானகி காதல் வளர்த்தார். அவரையும் அவர் மகன் சுரேந்திரனையும் கடைசிவரை கண்கலங்காமல் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஜானகியின் கொடுமைக்கார மாமாவிடமிருந்து வெளியே கொண்டுவர முனைந்தார். பல பிரச்னைகளை, தடைகளைச் சந்தித்தார்.

தேவகி படப்பிடிப்பில் ஜானகி

ஜானகியும் எம்.ஜி.ஆரும் நேரில் சந்தித்துக் காதலை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டனர். ஜானகி தேவகி படத்தில் நடிக்க மைசூர் புறப்பட்டபோது அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இயக்குநர் ஜரூபிடர்சோமுவிடம் ஒப்படைத்தார். சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த நாள்களில் அவர் கவனித்துக்கொண்டார். மைசூருக்கு அவுட்டோர் படப்பிடிப்புக்கு ஜானகியுடன் அவரால் போகஇயலவில்லை.  மைசூரிலிருந்து ஜானகி எம்.ஜி.ஆருக்கு தினமும் கடிதம் எழுதினார். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னாடி படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் குழுவினருடன் சேர்ந்து மறுநாள் சென்னைக்கு வர விரும்பாமல் அன்றே எம்.ஜி.ஆரைப் பார்க்க கிளம்பி வந்து விட்டார்.

திருமணப் பேச்சுவார்த்தை

எம்.ஜி.ஆர் ஜானகியைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருப்பதை அறிந்த அவர் மாமா சில நிபந்தனைகளை விதித்தார். ஜானகி அதிக சம்பளம் பெறும் டாப் ஸ்டார் என்பதால் அவரது வருமானம் முழுக்க எம்.ஜி.ஆர் தனக்கும் தன் அண்ணனின் பெரிய குடும்பத்துக்கும் (சக்கரபாணிக்கு 9 பிள்ளைகள்) செலவழித்து விடுவாரோ என்று பயந்த ஜானகியின் மாமா எம்.ஜி.ஆரோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தார். தனது பயம் நியாயமானது என்பதையும் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தில் ஜானகி தொடர்ந்து திருமணத்துக்குப் பிறகு நடிக்கலாம். பத்து வருடங்கள் வரை மாமா சொல்லும் படங்களில் ஜானகி நடித்துவர வேண்டும். வருமானத்தையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் கொதித்தெழுந்தார். ஜானகி படத்தில் நடிப்பதை அவரோ விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு அவள் படத்தில் நடிக்கமாட்டாள் என்று எம்.ஜி.ஆர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

படப்பிடிப்பில் பேசாத ஜானகி

எம்.ஜி.ஆர் ஜானகியின் மாமாவிடம் கோபித்துக்கொண்டு வந்தபிறகும் இருவரும் இணைந்து நடிக்கும்போதும் ஜானகி எம்.ஜி.ஆரிடம் எதுவும் பேசுவதில்லை. எம்.ஜி.ஆரிடம் பேசுவதில்லை என்று தன் மாமாவிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்தார். ஆனால், வேலைக்காரப் பையனிடம் “அவர் சாப்பிட்டு விட்டாரா" என்று கேட்டபிறகே, தான் சாப்பிடுவார். புதன், சனிக்கிழமைகளில் “எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்" என்று சொல்லி அனுப்புவார். ஜானகியின் மாமா கால தாமதம் செய்து வருவதற்கான காரணம் எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் பலதாரமணத் தடை சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஜானகியைத் திருமணம் செய்வது நடக்காத காரியம். எனவே எம்.ஜி.ஆர் தன்னிடம் பேசாத ஜானகிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டார். இதற்கிடையே ஜானகியின் மாமா ஜானகியின் வங்கியிருப்பு போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றிவிட்டார். எம்.ஜி.ஆர் வக்கீலிடம் ஆலோசித்து எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து போடாதே என்று எச்சரிப்பதற்கு முன்பே மாமா பல பத்திரங்களில் ஜானகியிடம் கையெழுத்து வாங்கிவிட்டார். சொத்தும் பணமும் கைமாறிவிட்டது. பலதாரமண தடைச் சட்டமும் அமலாகிவிட்டது. அதன்பின்பு படப்பிடிப்பின்போது ஜானகியோடு அவரது தந்தை வி. இராசகோபலய்யர் வந்திருக்கிறார். ஜானகியிடம் கால்ஷீட் பெறுவதில் கூட பல பிரச்னைகள் தோன்றின. 

ஜானகியைக் காதலித்தது ஏன்?

எம்.ஜி.ஆர் ஜானகி காதலுக்கு அவரது வீட்டுச் சூழ்நிலையும் முக்கியக் காரணமாக இருந்தது. ஜானகிக்கு அவரது மாமாவால் நிம்மதி இல்லை. எம்.ஜி.ஆருக்கு வேறு சிக்கல். அவரது மனைவி சதானந்தவதிக்கு கருக்குழாயில் கருத்தங்கி வளர்வதால் கருச்சிதைவு செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகும் நிலை. இதைத் தொடர்ந்து அவருக்குக் காச நோயும் வந்துவிட்டது. அன்பும் அழகும் பொறுமையும் கொண்ட சதானந்தவதிக்கு எம்.ஜி.ஆரால் உடனிருந்து பணிவிடை செய்ய முடியாத சூழல். அந்தச் சமயத்தில் அவருடன் படங்களில் நடித்த ஜானகி போகக்போக அவருடன் நட்பாகிறார். அப்போது சதானந்தவதியை ஜானகி உடனிருந்து கவனிக்கத் தொடங்கினார்.  ஜானகிமீது அவர் காதல் கொண்டதற்கு இதுவும் ஓர் அடிப்படைக் காரணம்.

எம்.ஜி.ஆர் வீட்டில் ஜானகி

எம்.ஜி. சக்கரபாணிக்குத் தன் தம்பி ஜானகியை விரும்புவதும் திருமணம் முடிக்கத் துடிப்பதும் விருப்பமில்லை என்றாலும் தம்பியின் காதலுக்கு அவர் தடை விதிக்கவில்லை. எம்.ஜி.ஆரும் ஜானகியும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிப்பதால் தன் வீட்டுக்கு எதிரே ஒரு வீட்டில் ஜானகியைக் குடியமர்த்தியதை ஏற்றுக்கொண்டார். 1958ல் நாடகமேடையில் எம்.ஜி.ஆர் காலில் அடிப்பட்டதும் எம்.ஜி.ஆர் படுத்த படுக்கையானார். அப்போது அவர்களைப் புரிந்து கொண்ட சக்கரபாணி, எம்.ஜி.ஆர் ஜானகியை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு சம்மதித்தார். ஜானகியும் சதானந்தவதியும் எம்.ஜி.ஆரின் அண்ணன் அண்ணி பிள்ளைகளும் பல வருடங்கள் ஒன்றாகவே வாழ்ந்தனர். 

எம்.ஜி.ஆர் மனைவி மரணம்

சதானந்தவதி காசநோயால் மிகவும் அவதிப்பட்டபோது எம்.ஜி.ஆரின் குடும்ப வைத்தியர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஒரு முரட்டு வைத்தியம் செய்தார். காசநோய் நிபுணர்கள் கைவிட்ட நிலையில் பி.ஆர்.எஸ் போட்ட ஊசிகள் சதானந்தவதியின் ஆயுளைப் பல வருடங்கள் நீடித்தன. கேமராமேன் நாகராஜராவும் எம்.ஜி.ஆரும் தங்கள் மனைவிமாருக்கு ஒரே டாக்டரிடம் காட்டி சிகிச்சையளித்தனர். பிழைத்துக் கொள்வார் என்று சொல்லப்பட்ட நாகராஜராவின் மனைவி மரணம் அடைந்தார். இறந்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட கதானந்தவதி பிழைத்துக் கொண்டார். 1962ல் எம்.ஜி.ஆர் கலைஞருக்காக தஞ்சையில் பிரசாரம் (பரிசுத்த நாடாரை எதிர்த்து) செய்தபோது சதானந்தவதி இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. அவர் காருக்குப் பின்னால் ஒரு காரில் விரட்டி வந்து நள்ளிரவில் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். கலங்கிய எம்.ஜி.ஆர் கலைஞரின் பிரசாரக் கூட்டத்தில் பேசி நண்பருக்குரிய கடமையை முடித்துவிட்டு மனைவிக்குரிய இறுதிக்கடனை நிறைவேற்ற சென்னைக்குப் புறப்பட்டார். 

12 வருடம் காத்திருந்த காதலர்கள்

1950ல் காதலிக்கத் தொடங்கி 1962ல் சதானந்தவதி மறைந்த பிறகு இயக்குநர் கே.சுப்ரமணியம் (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) தலைமையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் ராமாவரம் தோட்டத்துக்குத் தனிக் குடித்தனம் நடத்தக் கிளம்பினர். 1967க்குப் பிறகு ஜெயலலிதா சிலகாலம் வந்து ராமாவரத்தில் தங்கியிருந்தபோது ஜானகி சக்கரபாணி குடும்பத்துடன் தங்கும்படி அனுப்பி வைக்கப்பட்டார். இப்போதும் சக்கரபாணியால் தன் தம்பியைக் கண்டிக்க முடியவில்லை. ஜெயலலிதா ராமாவரத்தை விட்டு வெளியேறியதும் ஜானகி தான் இனி, தனியாளாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து தன் அண்ணன் பிள்ளைகளைத் தன்னுடன் வீட்டில் வைத்து வளத்தார்.

ராமாவரம் தோட்டத்தில்

ஜானகியின் சகோதரருக்கு லதா, சுதா, கீதா, பானு, ஜானகி என ஐந்து பெண் குழந்தைகள். இவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டை உயில் எழுதி வைத்தார். இவர்களுக்கென்று தனித்தனி பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்து அவற்றை அன்னை சத்யா அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். இவர்களில் சுதாவின் கணவர் விஜயனை பானு ஓர் அடியாள் மூலம் கொலை செய்துவிட்டு இப்போது சிறையில் இருக்கிறார்.

இந்தப் பெண்களுடன் பிறந்த தீபன் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) ஜெயலலிதா (ராணுவ ரேக்கில்) எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு ஏறிய போது கையைப் பிடித்து கீழே இழுத்துவிட்டார். எம்.ஜி.ஆர் உயிலில் சொல்லியிருந்தபடி இப்போது ராமாவரம் தோட்டத்தில் காதுகேளாதோர் வாய்பேச இயலாதோர் பள்ளியை ஜானகியின் அண்ணன் மகள் சுதா ராஜேந்திரன் நடத்தி வருகிறார்.

பெண் முதலமைச்சர் ஜானகி

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி அம்மையார் தமிழகத்தை 28 நாள்கள் ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு முதலமைச்சரான ஜானகிக்கு ராஜீவ்காந்தியும் காங்கிரஸும் சட்டசபையில் ஆதரவு தராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று அவர் பதவியிழந்தார். தன் பேரில் இருந்த (கட்சி அலுவலகமாக) கட்டடத்தை அதிமுக கட்சி பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் சம்மதித்தார். அவர் இறந்ததும் அவர் உடல் ராமாவரம் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் ஜானகிக்கு ஜோடி சிலை

ஜானகியின் சகோதரர் ஜானகி பிறந்த ஊரான வைக்கத்தில் எம்.ஜி.ஆர் - ஜானகி ஜோடியாக நிற்பது போல சிலையமைத்துள்ளார். இதுபோன்ற நடிகர்கள் மற்றும் முதல்வர்கள் சிலை உலகத்திலேயே இது ஒன்று மட்டுமே. “ ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா - தர்மம் வெல்லும் என்று சொன்னவனே ராமச்சந்திரா" என்ற திரைப்பாடல் இப்போது நம் காதுகளில் ஒலிக்கிறது.

ஜானகியின் மகன் சுரேந்திரன்

ஜானகியைத் திருமணம் செய்து எம்.ஜி.ஆர் அழைத்து வந்த போது அவர் மகன் சுரேந்திரனையும் சேர்த்து அழைத்து வந்தார். தன் அண்ணன் சக்கரபாணியின் குழந்தைகளுடன் சுரேந்திரனும் சேர்ந்து படித்து வளர்ந்தார். அவருக்கு ஒளிப்படத்துறையில் அபார அறிவு இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படம் பிடிக்கும்போது கப்பல் அசைவதைக் காட்டுவதற்கான கேமரா உத்தி ஒன்றை சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுரேந்திரன் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவருடைய குழந்தைகளுக்கு செங்குட்டுவன், இளங்கோ, கவிதா என்று எம்.ஜி.ஆர் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். அவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டுப் பெண்ணை மணந்துள்ளார். எம்.ஜி.ஆரை நம்பி வந்த ஜானகியின் மகனும் அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நல்லநிலையில் உள்ளனர். எம்.ஜி.ஆரின் ஆதரவில் சிறப்பான வாழ்வைப் பெற்றனர். அவரை நம்பிக் கெட்டவர் எவரும் இல்லை என்ற தொடர் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரின் சுயசரிதமான நான் ஏன் பிறந்தேன் நூலின் பதிப்புரிமை எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது மனைவி ஜானகிக்கும் அதன் பின்பு ஜானகியின் மகனான சுரேந்திரனுக்கும் சட்டப்படி மாறியுள்ளது. அந்நூலில் சுரேந்திரனின் குடும்பத்தார் படங்களும் இடம் பெற்றுள்ளன.