Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி!’ - முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன் #HBDKamal

Chennai: 

கலை, இலக்கியம், அரசியல், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கருணாநிதியை நடிகவேள் எம்.ஆர்.ராதா 'கலைஞர்' என்ற ஒற்றை வார்த்தையில் அழைத்ததால் அப்படியே அனைவரும் அழைக்கத் தொடங்கினர். அதே கலைஞர் அவரைப்போலவே சகலகலா வல்லவனாக அனைத்துத் தடங்களிலும் முத்திரை பதிக்கும் ஒருவரைப் பார்த்து 'கலைஞானி' என்று அழைத்தார். அந்த கலைஞானியின் பெயர் 'கமல் ஹாசன்'.  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தடாகத்துத் தாமரை இந்தக் கமல்.

கமல்

தமிழ் சினிமாக்களில் முத்தம் தொடங்கி மொத்தத்துக்கும் ரெஃபெரன்ஸாக இருக்கும் கமல்தான்  "எப்போப் பாரு கமல் மாதிரி புரியாமலே பேசிக்கிட்டு" என்று சொல்லும் அளவு குழப்பங்களுக்கும் ரெஃபெரன்ஸாக இருக்கிறார். கமல் பேசுவதும் சரி படமும் சரி எதுவுமே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மையாக இருந்தாலும், அவரது எழுத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவரது எழுத்தின் தனித்துவம். மேடை பேச்சு, பேட்டி, வசனம் என அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி அவர் திரைப்படங்களில் எழுதிய பாடல்கள் ரசனையின் உச்சம். புரிதலின்மையெனும் அறியாமையென சொல்லி உயிரை ஆத்மாவில் இறங்கச்செய்யும் இவரது பாடல் வரிகள். முத்தமிழைப்போல கமலின் மூன்று தமிழில் மூன்று பாடல்கள் அவரது பானைச்சோற்றுக்கு பதம்.

1) நடைமுறைத்தமிழ் 

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹே ராம் 

தமிழ் மொழியில் ஒன்றின் மீதான சார்பு நிலையின் தொடக்கமும் முடிவும் நன்றியென்ற சொல்லில் இருக்கிறது. அப்படி அன்பின் ஆரம்பமும், பிரிவின் இறுதி நொடிகளும் 'நன்றி' என்ற ஒற்றைச் சொல்லில் சூழ்ந்திருந்தால் அது நிச்சயம் மனதை ஒரு சமநிலையில் கேள்விகளின்றி சாந்தப்படுத்தும். அன்யோன்ய வாழ்வின் அங்குலங்களை, அதன் ஞாபகங்களை 'நன்றி' யின் மூலத்தில் கமல், சாகேத் ராமாக எழுதியிருந்ததுதான் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’. 
 
"நான் என்ற சொல் இனி வேண்டாம் 
நீ என்பதே இனி நான் தான் 
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை 
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை" 

வாழ்ந்துகொண்டிருக்கும்போது வாழ்வின் நலனில், அக்கறையில் கடவுளிடம் வரம் கேட்கும் மனிதன், தன் மரணத்துக்குப் பின்னும் அந்த நலம் நீடிக்க வேண்டி சொர்க்கமெனும் வரம் கேட்கிறான். அதுபோல தன் அன்பானவளே சொர்க்கமாய் தான் வாழும் காலத்திலேயே இருந்தால் யாருக்குத்தான் வரம் கேட்கத் தோன்றும். நானென்பது 'நீ', நீயென்பது 'வரம்', வரமென்பது 'சொர்க்கம்', மீண்டும் சொர்க்கமென்பது 'நீ' என்று வாழ்வின் சுழற்சிக்கு சாகேத் ராமின் காலம் கடந்த மீள்பதிவுதான், அந்தக் கண்மூடிய பார்வைக்கும், விடிந்துபோன இரவுக்கும் அவர் சொன்ன நன்றிகள்.

 கமலின் தனிவாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் வேறு வேறல்ல. அதனால்தான் ‘கமல் 50’ விழாவில் தன் ரசிகர்களுக்கும் இதே நான்கு வரிகளைச் சொல்லி நன்றி சொல்லியிருப்பார். அந்த நன்றியில் ஒரு நேர்மை இருக்கும். அது அவரின் உண்மையும் கூட.  

2) பேச்சுத்தமிழ் 

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை - விருமாண்டி 

முதல் வரியை இளையராஜா தொடங்கி வைக்க, கமல் முழுவதுமாய் எழுதி முடித்த தேவாமிர்தம் இந்தப் பாடல். ஓர் இரவு நேர தனிமையில் அன்பின் உரையாடல்களை இசையோடு சுமந்துவரும் பாடல் இது.

"உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல  
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாருமில்ல"

காதலன், காதலியிடமோ அல்லது காதலி, காதலனிடமோ மிகச் சாதாரணமாக உதிர்த்துவிடும் வலிமையான வார்த்தைகள் இவை. ஆனால், அது எத்தனை உண்மையென்பது அந்தக் காதலின் நீட்சியில்தான் தெரியும். விருமாண்டியோடு சேர முடியாத அன்னலட்சுமி வேறொருவன் கட்டிய தாலியை அறுத்து வீசிவிட்டு, தூக்கில் தொங்கி துடிதுடித்துச் சாகும்போது காற்றோடு பிரியும் உயிரில் புரிந்திருக்கும் இந்த வரிகளின் வலிமிகு உண்மை.

"உன்கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா
நூறு ஜென்மம் வேணும், கேட்குறேன் சாமிய"

என்று அன்னலட்சுமி கேட்டதும் 'நூறு ஜென்மம் போதுமா' என்று பதில் கேள்வி கேட்பார் விருமாண்டி. 

"நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகாவரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய" 

'கேக்குறதுதான் கேக்குற, ஏன் 100 ஜென்மம்னு கேக்குற, செத்தாதானே ஜென்மம், அதனால சாகாவரம் கேப்போம்' என்ற தொனியில் பதில் சொல்லி காதலில் முந்துவது கமலுக்கு கைவந்த கலை. ‘அந்த சாமி' என்று சொல்லி ஒரு சுட்டலில் ஏதோவொரு சாமியென்று சீண்டல் செய்திருப்பார் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர். 

கமல்

சினிமாவைத் தனது சொந்த வாழ்க்கையோடு கொண்டுசெல்லும் கமல், இந்தப் பாடலிலும் சில வரிகளில் கையாண்டிருப்பார். 2002 முதல் 2005 வரையிலான காலங்களில் சிம்ரனுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டாலும், இந்தக் காலக்கட்டத்தில்தான் கமலுக்கும் கௌதமிக்குமான நட்பும் நெருக்கமானது. "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி" என்று கண்ணதாசன், காமராஜருக்குத் தூது அனுப்பியதுபோல இந்தப் பாடலின் தொடக்கத்தில், "உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை, உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை" என்று கமல்ஹாசன், கௌதமிக்காக எழுதியிருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. 'சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி' என்ற வரியில் சாட்சிக்கு தன் அண்ணன் சந்திரஹாசனை தூக்கி வந்திருப்பார்.

3) ஆழ்வார் தமிழ்  

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே - விஸ்வரூபம் 

கமல்ஹாசன் தன்னை நாத்திகராக இனங்கண்டவர். தமிழுக்கு ஆத்திகம், நாத்திகம் தெரியாது என்பதன் வெளிப்பாடு இந்தப் பாடல். தன்னிலை மறந்து கண்ணனுக்காக ஆண்டாள் என்னும் ஒரு பெண் நிலையிலிருந்து கமல் எழுதிய பாடல் இது. இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் காதலும், பெண்மையும், வெட்கமும், ஏக்கமும் கலப்படமில்லாமல் பெண்ணுக்கே உரியவையாகக் கலந்திருக்கும். ஆண்டாளின் ஒப்பீடுகளைப் பாடல் முழுவதும் தெளித்திருப்பார் கமல். கண்ணம்மா, கோதை அனைவருமே காதலுக்குள் பயணிப்பவர்கள். அப்படிப்பட்டகோதையின் காதலை, முழுநேர கவிஞனில்லாத கமல், காதலோடு எழுதியிருப்பது அவரது தமிழின் அழகு.

"பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா"

'கொலை செய்வதற்காக ஹம்சனால் அனுப்பப்பட்ட 'பூதகி' என்னும் அரக்கியிடம், எப்படிப் பால் குடிப்பது போல அவளது உயிரைக்குடித்து மோட்சம் கிடைக்கச்செய்தாயோ, அப்படி என்னையும் பூதகியாக நினைத்து, என் விரகதாபங்களைப் பருகிக்கொள்வாயா' எனக் கண்ணனிடம் கேட்கும் கமலின் ஆண்டாள்ரூபம் தொடங்கும் வரிகள் இவை. 

"அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்"

இறைவனுக்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை யாருக்கும் தெரியாமல் அணிந்துகொண்டு 'தான் கண்ணனுக்கு ஏற்றவளாக இருக்கிறோமா' என்று கண்ணாடியின் முன்னின்று வெட்கத்துடன் பார்த்துக்கொள்ளும் ஆண்டாளை, அப்படியே பிரதிசெய்துகொள்கிறார் கமல். இப்படி இறைவனுக்கான மலர்களைச் சூடிய பிறகு, இறைவனுக்குக் கொடுத்ததால்தான் ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்ற பெயர்.

அந்த ஆண்டாளைப்போல, இறைவனைக் கண்டால்  "எவ்வாறு வெட்கமடைவேன், வெட்கத்தில் எனது முகம்  எப்படியிருக்கும்'' என்றெல்லாம் கண்ணாடியில் கமல்ஹாசனின் ஆண்டாள் பார்த்துக்கொள்ளும் வரிகள்  இவை.

"பின்னிருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயில் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்"

இந்த வரிகளின் காட்சி மற்றும் காட்சி சார்ந்த கற்பனைகள் ரசிக்கப்பட வேண்டியவை. பின்னிருந்து கட்டியணைக்கும் கண்ணன் உலகுண்ட அவன் வாயோடு தன் வாயைப்  பதித்து முத்தமிடும்போது, இங்கு உலகமென்று ஒரு பொருள் இருப்பதையே மறந்துவிடுவதாக எழுதியிருக்கிறார் கமல்.

அப்படியே காட்சியில் ஓர் ஆணையும் பெண்ணையும் பொருத்திப் பார்த்தால் இதிலுள்ள காதலென்ற அர்த்தம் கண்ணாடியின் முகத்தைப்போல தெரியும். இறுதியில் கோதையை பூங்கோதையாக்கியிருப்பார். 

"ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே"

"சக்கரமும் வெண்சங்கும் தாங்கிய இறைவனுக்கென்று படைக்கப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற பேச்சு காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது" என்ற குணத்தினைக்கொண்ட  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருப்பாவை போல இல்லை இங்கு கமல் எழுதும் திருப்பாவை.

"இது நேராமலே... நான் உன்னை பாராமலே... 
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா"

- என்ற வரிகளில் 'கண்ணனை மூச்சாக்கி சுவாசித்து இந்த காற்றிலேயே வாழ்வேன்' என்று நேர்மறையான நிறைவில் பாடலை நிறைவு செய்வார் கவிஞர் கமல்ஹாசன்.

இந்த மூன்றைப்போல இன்னும் எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. அனைத்திலும் சிறந்ததாகவே நிரூபித்தார்.
கமல் ஒரு சகலகலாவல்லவர். சினிமா, இலக்கியம், இதழியல் தாண்டி அவர் எடுக்கவிருக்கும் அரசியல் அவதாரத்துக்கும் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்துகள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்