‘‘புராணங்கள் எப்போதுமே அரசியல் கருவிகள்தான்!’’ - பாகுபலி ட்ரைலாஜி ஆசிரியர் ஆனந்த் நீலகண்டன் | Bahubali trilogy author Anand Neelakantan interview

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (06/11/2017)

கடைசி தொடர்பு:20:47 (06/11/2017)

‘‘புராணங்கள் எப்போதுமே அரசியல் கருவிகள்தான்!’’ - பாகுபலி ட்ரைலாஜி ஆசிரியர் ஆனந்த் நீலகண்டன்

இந்தியத் திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றது  `பாகுபலி'. உலகளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தென்னிந்திய திரைப்படம் இது. படப்பிடிப்பு நடத்தப்பட்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட 60 கோடி ரூபாய் மதிப்பிலான மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் செட், திரைப்படக் காதலர்களின் சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது. இயக்குநர் ராஜமெளலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் அளித்த கதைக்கரு எனச் சொல்லப்பட்டாலும், இயக்குநரின் பலமான திரைக்கதையுடன் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி கண்ட `பாகுபலி'யின் கதாபாத்திரங்களைக்கொண்டு, நாவல்களை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன்.

பாகுபலி

`பாகுபலி ட்ரைலாஜி' - பாகுபலி கதாபாத்திரங்களை அடிப்படையாகவைத்து மூன்று நூல்களை பிரபல நாவலாசிரியர் ஆனந்த் நீலகண்டன் எழுதவிருப்பதாக, ராஜமெளலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தார். அதன் முதல் பகுதியான `The Rise of Sivagami' கடந்த மார்ச் மாதம் வெளியாகி, இந்தியாவின் பெரும் இலக்கிய விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்தது. 

ஆனந்த் நீலகண்டன், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்துவரும் அவர், மலையாள இதழ்களில் சிலவற்றுள் தொடர்ச்சியாக கேலிச்சித்திரங்கள் வழங்குபவரும்கூட. பள்ளி நாள்களிலேயே கதைச்சொல்லியாக இருப்பதை விரும்பியவர்.  `அசுரா’ என்னும் இவரது முதல் நாவல், ராவணனின் பார்வையிலிருந்து Anand Neelakantanஎழுதப்பட்டது. இதுவரை எழுதப்பட்ட ராமாயணக் கதைகளிலிருந்து வேறுபட்டதாக, மாற்றுப் பார்வையிலிருந்து எழுதப்பட்டவிதத்தினால், 2013-ம் ஆண்டின் `க்ராஸ் பாப்புலர்’ விருதை வென்றதுடன், இந்த நாவல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது இரண்டாவது, மூன்றாவது நாவல்கள், மகாபாரதத்தை அடிப்படையாகவைத்து, துரியோதனனின் பார்வையில், அதில் மாற்றுக் கோணங்களை வெளிப்படுத்தியுள்ளன.

கேரளத்தில் இருக்கும் துரியோதனன் கோயில் ஒன்றைப் பற்றியும், அந்தக் கோயிலுக்கான நிலம் துரியோதனனால் வழங்கப்பட்டதாகவும், கோயிலின் அர்ச்சகர்களாக தாழ்த்தப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும் என்பது அவன் உத்தரவாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று வரை அந்தக் கோயிலில் வழிவழியாக அதே குறவரின் சந்ததிகளே அர்ச்சகர்களாக இருப்பதாகக் கூறும் ஆனந்த் நீலகண்டன், அந்தக் கோயிலுக்கு தான் சென்ற பிறகு துரியோதனன் குறித்த தொடர்ச்சியான சிந்தனைகளின் வழியாக, மகாபாரதத்தில் தமது நியாயத்துக்காக நேர்மையாகப் போராடி மடிந்த எதிர் நாயகர்களின் கதையாகத்தான் `அஜயா'வை (தமிழில் கௌரவன்) எழுதியதாகக் குறிப்பிடுகிறார். பூமிஜா என்னும் நாவல், சீதையின் நிலையிலிருந்தும், ராமாயணத்தில் ராமனின் தங்கையான ஷாந்தாவின் பார்வையிலிருந்தும் தனித்தனி நாவல்கள் வெளியாகியுள்ளன.

``நமது புராணங்கள்தான் அரசியல் கருவிகள். மக்களைப் பிரிக்கவும் சேர்க்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பது இன்றைய அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கிறது” - கடந்த மாதம் அக்டோபர் 29-ம் தேதி ஒடிசாவில் நடந்த இலக்கியத் திருவிழாவில், `நமது புராணங்களும் வரலாறும் முரண்படுகின்றனவா?' என்னும் மூத்த அரசியல் கட்டுரையாளரான ரவிசங்கர் எட்டெத்தின் கேள்விக்கு இந்தப் பதிலைக் கொடுத்திருக்கிறார் ஆனந்த் நீலகண்டன். வீழ்த்தப்பட்டவர்களை நாயகர்களாக்கி வாசகர்களை ஈர்த்துவருவதுடன், வெற்றிகளை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும் ஆனந்த் நீலகண்டனிடம் வைத்த சில கேள்விகள் இவை...

``புராணங்களில் வீழ்த்தப்பட்டவர்களின் கோணத்தில் எழுதுகிறீர்கள். இந்த மாற்றுக் கோணத்தின் பின்னணி என்ன?''

``வீழ்த்தப்பட்டவர்களின் பார்வையிலிருந்து ஏற்கெனவே பல மொழிகளில், பல புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், அசலான புராணங்களில் வீழ்த்தப்பட்டவர்கள் வில்லன்கள் அல்ல. எதிர் நாயகர்கள்தான். அவர்களை வில்லன்களாக, கொடூரமானவர்களாகவே புனைய வேண்டும் என்பது நியாயமல்ல. அசலான வியாசர் பாரதத்திலும்கூட, கெளரவர்கள் வில்லன்கள் அல்ல; எதிர் நாயகர்கள்தான்.''

``மாற்றுக் கோணத்தில் எழுதப்பட்ட உங்கள் நாவல்களுக்கு எதிர்ப்பு இருக்கிறதா?''

``எதிர்ப்புகள் எனப் பெரிதாக எதுவுமில்லை. `புராணங்களைத் திரித்து எழுதுகிறீர்கள்' எனக் குற்றம்சாட்டி சில கடிதங்கள் வந்தன. `புராணங்களைத் திரித்து எழுதவில்லை. வெவ்வேறு கோணங்களில் பதிவுசெய்யப்பட்டவை’ என அதற்கு பதில் கடிதங்களும் எழுதியிருக்கிறேன். பைபிள்களில் 300 முதல் 400 பதிப்புகள் வரை இருக்கின்றன. கிறிஸ்துவத்தைப் பொறுத்தவரை அதற்கு பொதுவான ஓர் அதிகார மையம் இருப்பதால், பைபிள் ஒன்றுதான் என அவர்களால் அங்கீகரிக்க முடிகிறது. மகாபாரதத்துக்கும் ராமாயணத்துக்கும் அப்படியான கட்டுப்பாடுகள் இல்லை. ராமாயணத்தில் பல பதிப்புகள் இருக்கின்றன. துளதிதாசரின் ராமாயணமும் வால்மீகி ராமாயணமும் வெவ்வேறானவை. ஆகையால், இத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிப்பது இலகுவானதே.''

``டிவி சீரியல்களுக்கும் திரைக்கதை எழுதுகிறீர்கள். பொதுமக்களை அடையும் சீரியல்களில் இத்தகைய மாற்றங்கள் சாத்தியமா?''

``டிவி சீரியல்களுக்குத் திரைக்கதை எழுதும்போது, மாற்றுக் கோணத்தில் அதைத் தருவது சாத்தியமில்லை. சீரியல்களைப் பொறுத்தவரை அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப சிறு மாற்றங்களுடனே அவை தயாரிக்கப்படும்.''

`` `பாகுபலி' ஏன் கொண்டாடப்படுகிறது. அதற்கான உளவியல் காரணம் என்ன?''

``சமகாலத்தில் `பாஜிராவ் மஸ்தானி', `பத்மாவதி' போன்ற திரைப்படங்கள் உள்ளன. இத்தகைய படங்களுக்கு எதிராக வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. `பாகுபலி'யைப் பொறுத்தவரை இது ஓர் எளிமையான வலுவான புனைவுக்கதை. கற்பனை, தொழில்நுட்பம், அசாதாரணமான மனித உழைப்பு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட விஷுவல் ட்ரீட்தான் `பாகுபலி'. இந்தப் புனைவில் யாரும் எதையும் சொந்தம் கொண்டாடிக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. `பாகுபலி'யின் பலமான கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த நடிக, நடிகையர்கள்தான் அதன் பலம். மிகச்சிறந்த தரமான படைப்பு என்னும் ரீதியில், அது கொண்டாடப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.''

பாகுபலி

`` `பாகுபலி'யில் நீங்கள் விரும்பும் கதாபாத்திரங்கள் யார், ஏன்?''

`` `பாகுபலி'யில் நான் விரும்பும் கதாபாத்திரங்கள் ராஜமாதா சிவகாமி, கட்டப்பா, அமரேந்திர பாகுபலி. துணிச்சலான, வியக்கவைக்கும் பெண் கதாபாத்திரமான சிவகாமி எப்படி ராஜமாதாவாக உருவானார் என்பதைக் குறித்தும், ராஜமாதாவின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றியும் `The Rise of Sivagami' நாவலில் பதிவுசெய்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக இது ஓர் ஆணாதிக்கச் சமூகம். என்னுடைய படைப்புகளில் பெண்களின் வலிமையை, மனோதிடத்தைப் பதிவுசெய்வது கடமை என நினைக்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பாகுபலி ட்ரைலாஜியில், அடுத்த இரு நாவல்களுக்கும் பாகுபலி கதை மாந்தர்களின் பெயரையோ அல்லது அது தொடர்பான பெயர்களையோ வைப்பேன்.''

`` `புராணங்கள், அரசியல் கருவிகள்' எனக் குறிப்பிடுகிறீர்களே ஏன்?''

``அதுதானே இங்கு நிலவும் உண்மை. எந்த மதத்தைச் சார்ந்த புராணங்களாக இருந்தாலும் சரி. அவை பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. புராணங்களை, அதிலிருக்கும் நீதியை அல்லது அநீதியை, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பயன்படுத்துவது என்பது இன்றைய அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது.''

புராணங்கள், அரசியல்வாதிகள் சரியாகக் கையாளவேண்டிய கருவிகள் என்றும், எதிர் நாயகர்களின் பார்வையிலிருந்து புராணங்களைப் பேசுவதும் விவாதிப்பதும் முக்கியமானது என்றும் வலியுறுத்துகிறார் கலிங்கா சர்வதேச இலக்கிய விழாவில், `கலிங்கா கருபகி' விருதை ஏற்றிருக்கும் நாவலாசிரியர் ஆனந்த் நீலகண்டன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்