Published:Updated:

ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல் #HBDKamalHaasan

ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல் #HBDKamalHaasan
ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல் #HBDKamalHaasan

நவம்பர் 7-ம் தேதி வந்துவிட்டால் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சி களைகட்ட ஆரம்பித்துவிடும். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கமலின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டு எகிறிவருகிறது. தமிழ்சினிமாவின் தரத்தை உலக சினிமா உயரத்துக்குக் கொண்டுசென்ற கமலை 'உலக நாயகன்' என்று சொல்வது சாலப்பொருத்தமானது. இந்திய சினிமா உலகில் கமல் புகுத்தியுள்ள நவீன தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் இங்கே...

1986-ம் ஆண்டிலேயே ஏவுகணை குறித்த கதையை எழுத்தாளர் சுஜாதாவிடம் பெற்று அதை திரைக்கதையாக 'விக்ரம்' படத்தில் அமைத்திருந்தார், கமல். ராஜ்கமல் தயாரித்த 'விக்ரம்' படத்தில்தான் கமல் சொந்தக் குரலில் பாடிய  'விக்ரம்... விக்ரம்...' பாடலின் இசையில் முதன்முதலாக  கம்யூட்டரில் கம்போஸ் செய்தார், இளையராஜா. அதன்பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து 'ரோஜா' படத்தின் பாடல்களைக் கம்யூட்டரில் கம்போஸ் செய்தார், ஏ.ஆர்.ரஹ்மான். 

1989- ம் ஆண்டு வெளியான 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்துக்கு வயது 28 ஆண்டுகள். ஆனால், இப்போதும்கூட கமல் அப்பு வேடத்தில் குள்ளமாக எப்படி நடித்தார் என்பது ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 'அபூர்வ சகோதரர்கள்' படப்பிடிப்பின்போது குள்ளமாக எப்படி நடித்தார்? என்கிற தொழில்நுட்பத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஒளிப்பதிவாளர், டெக்னீஷியன்கள், லைட்பாய் உட்பட அனைவரிடமும் சத்தியம் வாங்கிக்கொண்டார், கமல். இன்றுவரை அத்தனைபேரும் கமலிடம் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றி வருகின்றனர். 

1994-ம் ஆண்டு வெளிவந்த 'குருதிப்புனல்' திரைப்படம்தான் இந்தியாவிலேயே டால்பி முறையில் ரிலீஸானது. சென்னையில் உள்ள தேவி தியேட்டரை தனது சொந்த செலவில் டால்பி தியேட்டராக மாற்றி அமைத்தார், கமல். தேவி திரையரங்கத்துக்கு வந்து 'குருதிப்புனல்' படம் பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும் டால்பி சிஸ்டத்தில் கமலும், நாசரும் மோதிக்கொள்ளும் காட்சியைப் பார்த்து பிரமித்துப் போனார்கள்.  

1995-ம் ஆண்டு வெளிவந்த  'மகாநதி'யில் முதன்முதலாக லைவ் சவுண்ட் முறையும், அதிநவீன டிஜிட்டல் எடிட்டிங் முறையும் பயன்படுத்தப்பட்டது. அப்போது ராஜ்கமல் பிலிம்ஸில் நடக்கும் டிஜிட்டல் எடிட்டிங்கைத் தென்னிந்திய திரைப்படப் பிரபலங்கள் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.  பாலிவுட்டில் இருந்து '3 இடியட்ஸ்', 'முன்னாபாய்' படங்களை இயக்கிய விதுவினோ சோப்ரா,  'தேசாத்' டைரக்டர் சுபாஷ் போன்ற வடநாட்டுத் திரைப்பட பிரபலங்கள் டிஜிட்டல் எடிட்டிங் முறையைப் பார்த்து வியந்துபோனார்கள். ராஜ்கமல் அலுவலத்தில் ஊழியராக வேலை பார்த்துக்கொண்டிருந்த காசி விஸ்வநாதனைப் பார்த்து 'இனிமே சினிமாவில் எல்லாமே டிஜிட்டல் எடிட்டிங்காக மாறிவிடும். பேசாமல் டிஜிட்டல் எடிட்டிங் தொழில்நுட்பத்தைக் கத்துக்கோ' என்று கமல் வற்புறுத்தினார். காசி விஸ்வநாதன் டிஜிட்டல் எடிட்டிங் செய்து முதன்முதலாக எடிட்டராக அறிமுகமான திரைப்படம் 2002-ம் ஆண்டு வெளிவந்த 'பம்மல் கே சம்மந்தம்'. அதன்பின் 'மொழி', 'வெண்ணிலா கபடிக்குழு', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' என்று இன்றைக்குப் பிரபல எடிட்டராக உயர்ந்து நிற்கிறார், காசி விஸ்வநாதன். 

1996-ம் ஆண்டு ரிலீஸான  'இந்தியன்'  திரைப்படத்தில் இடம்பெற்று பிரபலமாக பேசப்பட்ட இந்தியன் தாத்தா கேரக்டருக்காக வெளிநாட்டில் இருந்து மேக்கப்மேனை வரவழைத்தார்.  'ப்ராஸ்தட்டிக்' என்கிற அதிநவீன மேக்கப் முறையைப் பயன்படுத்தினார். அதுபோலவே  'அவ்வை சண்முகி'  படத்திலும் 'ப்ராஸ்தட்டிக்' மேக்கப் போட்டுக்கொண்டு பெண் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், கமல்.

2000-ம் ஆண்டு வெளிவந்தது 'ஹேராம்'. இன்றைக்குப் பத்திரிகை உலகில் சி.டி பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. முதன்முதலாக பத்து பத்திரிகையாளர்களை மட்டும் வடபழனியில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குச் சொந்தமாக இருந்த கோதண்டபாணி ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரவழைத்தார், கமல். எல்லாப் பத்திரிகையாளர்களுக்கும் தன் கையாலேயே ஆளுக்கொரு சி.டி கொடுத்தார், கமல். 'என்ன? எதுக்கு?' என்று ஒன்றும் புரியாமல் எல்லோரும் விழித்தனர். 'உங்கள் ஆபீஸில் கம்யூட்டர் இருக்கிறதா? அதில் சி.டியைப் போட்டு ஓப்பன் செய்து பாருங்கள் 'ஹேராம்' படத்தின் படங்கள் பளிச்சென்று தெரியும்' என்று கமல் சொன்னார். ஒருவர்கூட திருப்தியில்லாமல் ஆபீஸுக்குக் கிளம்பிப்போனார்கள். அலுவலகத்தில் சி.டியைப் போட்டுப் படங்களை பார்த்து விய்ந்துவிட்டனர்.

2005-ம் ஆண்டு ரிலீஸானது 'மும்பை எக்ஸ்பிரஸ்'. இப்போது எல்லோரும் ஆளாளுக்கு ரெட் கேமராவை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்குக் கிளம்புகிறார்கள். முதன்முதலாக 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பில் ரெட் கேமராவைப் பயன்படுத்தினார். அதன்பின் 2009-ம் ஆண்டு வெளிவந்த  'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் முழுக்க முழுக்க ரெட் கேமராவைப் பயன்படுத்தி எல்லாக் காட்சிகளையும் படமாக்கினார். ஆக, தமிழ் சினிமாவில் அதிநவீன டெக்னாலஜிகளை முதல் முதலில்  அறிமுகம் செய்தவர், கமல்ஹாசன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல்!