Published:Updated:

ரஜினி, விஜய் மிஸ் பண்ணாலும்... சொல்லியடிச்ச முதல்வன்! #18YearsOfMudhalvan

ரஜினி, விஜய் மிஸ் பண்ணாலும்... சொல்லியடிச்ச முதல்வன்! #18YearsOfMudhalvan
ரஜினி, விஜய் மிஸ் பண்ணாலும்... சொல்லியடிச்ச முதல்வன்! #18YearsOfMudhalvan

சில திரைப்படங்களை எப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற பிரம்மிப்பையும் ஆச்சர்யத்தையும் நம்முள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் அத்திரைப்படத்தின் கதைக்களமாகவும் இருக்கலாம், அப்படத்தின் பிரமாண்டத்திற்காகவும் இருக்கலாம், படத்தின் தனித்தன்மை வாய்ந்த திரைக்கதைக்காகவும் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் சேர்த்து பார்க்க முடியுமானால் அது இயக்குநர் ஷங்கரின் முதல்வன் திரைப்படம்தான். திரைப்படம் வெளியாகி இன்றோடு பதினெட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எதற்காக முதல்வன் திரைப்படம் இன்றளவும் நமக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாகவும் மனதிற்கு நெருக்கமான திரைப்படமாகவும் இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

முதல்வன் திரைப்படத்தை இன்றளவும் நாம் அதிகமாக ரசிக்க காரணம் திரைப்படத்தின் கதை தான். “ஒரு நாள் முதல்வர்” என தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிதான கதையை கொடுத்ததன் மூலமாகவே திரைப்படத்தின் வெற்றியை முன்கூட்டியே பதிவு செய்து விட்டனர். அதற்கு பக்கபலமாக அமைந்தது எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

“அட ஒரு சி.எம்-னா இப்படி இருக்கணும்பா” என்று நம் அனைவரையும் அசத்திய அளவிற்கு புகழேந்தி கதாபாத்திரத்திற்கு அர்ஜூன் உயிரூட்டியிருப்பார். கலவரத்தை படம்பிடித்துக் காண்பிக்கும் போது ஒரு உண்மையான ஊடகவியலாளராகவும், அடிபட்டு தரையில் வீழ்ந்துகிடக்கும் மாணவனை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் போது மனிதாபிமானம் மிக்க மனிதரகாவும், மனிஷா கொய்ராலாவின் தந்தையாக வரும் விஜயகுமாரிடம் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்யும் காட்சிகளிலும், குண்டு வெடிப்பில் உயிரிழந்த தாய், தந்தையரின் உடலை பார்த்து “நீ வச்சிவிட்ட மருதாணியின் ஈரம் கூட இன்னும் இருக்குதம்மா” என கதறி அழும் காட்சியாகட்டும் அர்ஜூனின் நடிப்பு அற்புதம். இப்படி ஒரே திரைப்படத்தில் பல அவதாரங்களை காட்டியிருப்பார். பல திரைப்படங்களில் காக்கி உடையில் பார்த்து பழகிய action hero-வை ஒரு நாள் முதல்வராக பதவி உயர்வு கொடுத்து பார்த்ததில் சிறப்பாகவே இருந்தது. முதல்வன் படத்தில் நடிக்க வைக்க முதலில் ரஜினியையும் பிறகு விஜய்யையும் தொடர்பு கொண்டார் ஷங்கர். ரஜினி, விஜய் இந்தப் படத்தை மிஸ் செய்தாலும் முதல்வன் புகழேந்தி கதாபாத்திரத்திற்கு அர்ஜூன் பொருத்தமாக இருந்தார்.

“சித்தார்த் அபிமன்யுவிற்கே சீனியர்டா நான்” என பஞ்ச டயலாக் பேசும் முழு தகுதியும் உரிமையும் தமிழ் சினிமாவில் அரங்கநாதனுக்கு மட்டுமே உண்டு. “தீக்குள்ள விரல் விட்டா சுடும்னு சொல்றேன், உனக்கு அது புரிய மாட்டிக்கிது” என நேரலை நேர்காணலிலேயே மிரட்டல் விடுக்கும் தொனியில் வில்லத்தனத்தை காட்டிய ரகுவரன், விட்டுவிட்டு சென்ற இடம் இன்னும் தமிழ் சினிமாவில் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

திரையில் நாம் பார்த்த நாயகன் அர்ஜூன் என்றால் திரைக்கு பின்னால் இருந்து பின்னணி இசையிலும், பாடலிலும் மெர்சல் காட்டிய நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். “ஷக்கலக்க பேபி” மேற்கத்திய இசையையும், “குறுக்கு சிறுத்தவளே” மெலடியையும் ஒருசேர நம்மை ரசிக்கவைக்க வைத்தார். ஷங்கருக்கே உரிய பிரமாண்டத்தை மேலும் பிரமாண்டமாக காட்டி தன் பங்குக்கு தானும் கெத்து காட்டியிருப்பார் K.V.ஆனந்த்.

திரைப்படத்தில் மிகப்பெரிய நட்ச்சத்திரப் பட்டாளத்தை கொண்டு காட்சி படுத்துவது மிகப்பெரிய சவால் என்றால் அவர்கள் அனைவருக்கும் திரையில் சமமான அளவுவில் தோன்ற வைப்பது அதைவிட மிகப்பெரிய சவால். அந்த வகையில் திரைப்படத்தில் நடித்த அனைவரையும் நாம் திரையில் அடிக்கடி காண முடிந்தது. அதுல என்னனா, படத்தோட ஹீரோ அர்ஜூனுடன் ஹீரோயின் மனிஷா கொய்ராலாவை விட அதிக காட்சிகள் இருந்தவர் மணிவண்ணன்தான். அதுவும் வடிவேலுவின் அந்த “ இடுப்பு சென்டிமென்ட்”... எங்க இருந்துப்பா இந்த கான்செப்டெல்லாம் புடிச்சீங்க...

முதல்வன் திரைப்படத்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காண முடிவதைப் போல் தினம் தினம் முதல்வன் திரைப்படத்தின் காட்சிகளின் டெம்ப்ளட்களை மீம்ஸ்களாக பார்க்கலாம். அந்த அளவிற்கு மீம் கிரியேட்டர்களுக்கு பிடித்தமானவன் இந்த முதல்வன்.
சில திரைப்படங்களை ஒன் டைம் மேஜிக் என்பார்கள். அது போலவேதான் முதல்வனும். இனி சுஜாதா, ரகுவரன், மணிவண்ணன் இல்லாத ஒரு முதல்வனை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.