Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஏவிஎம்-ன் கார்தான் என் சம்பளம்!” ‘களத்தூர் கண்ணம்மா’ கமல் டு ‘இந்தியன்’ கமல்... ஒரு பார்வை!

கமல்... வயது 63. அனைத்துத் தளங்களும் அப்படித்தான் சொல்கின்றன. ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘வசூல்ராஜா’, ‘வேட்டையாடு விளையாடு’ பட சமயங்களில் இருந்த உடல்வாகுகூட இப்போது இல்லை. அறுபதைக் கடந்தபின் இன்னும் இளமையாகிக்கொண்டே வருகிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் பல சமயங்களில் அவர் சிரிக்கும்போது, ஏனோ, ‘களத்தூர் கண்ணம்மா’வில் ஜெமினி கணேசன் தூக்கிக்கொஞ்சும் காட்சியில் இருக்கும் சிரிப்புதான் நினைவுக்கு வரும். ‘தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் ஹட்டன்’ (The curious case of benjamin hutton) திரைப்படம் போல், வயதாக ஆக, இளமையாகிக்கொண்டே வருகிறார் கமல்.  

கமல்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகுபவர்களில் எத்தனை நடிகர்கள் பெரியவனாகி சோபிக்கிறார்கள் என்கிற எண்ணிக்கையை எடுத்துப்பார்த்தால், கமல் மட்டுமே தனித்து நிற்பார். பதின்ம வயதில் அவருக்குமே, ஹீரோவின் அண்ணன் (குறத்தி மகன்) போன்ற வேடங்கள்தான் கிடைத்தன. மலையாளக் கரையோரம்தான் கமலை முதலில் தனி நாயகனாக அறிமுகம் செய்தது. கலைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்குக்கூட கேரளத் திரையுலகம்தான் விழா எடுத்து கவுரவித்தது என்பது தனிக்கதை. 

தன் முதல் படத்தில் ஏவி.எம்.மிடம் காரை சம்பளமாகக் கேட்டது முதல் கமலின் பல செய்கைகள் ஆச்சர்யம்தான். ஏனோ இந்தக் கலைஞன் திரைக்குப் பின்னால் மட்டுமே இருந்திருந்தால், இன்னும் நிறைய நல்ல சினிமாக்கள் தமிழில் வந்திருக்குமோ என்கிற எண்ணம் எப்போதுமே இருந்ததுண்டு. காரணம் அவர் இயக்கிய ‘ஹே ராமு’ம், ‘விருமாண்டி’யும். ‘கமல் தான் திரைக்கதை எழுதிய பல படங்களின் ஒன் லைனர்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்’ என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், அவர் திரைக்கதை எழுதும் அனைத்துப் படங்களிலும், ஒவ்வொரு கதாபாத்திரமும், அதன் முழு வடிவம் பெற்றிருக்கும். 

ஒரு புறம் தூக்குத் தண்டனை கூடாது என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்யும் ‘விருமாண்டி’, மற்றொருபுறம் ‘தீவிரவாதிகளைச் சுட்டுத்தள்ளலாம்’ என்று சுபாஷ் சந்திரபோஸாக மாறும் காமன் மேன்; ‘யாருன்னே தெரியாத ஒருத்தருக்குக் கண்ணீர் சிந்தும் ஒருவன் கடவுள், ஏன் நானுமேதான் கடவுள்’ என அன்பு பேசும் நல்லசிவம், ‘கடவுள் இருந்தா நல்லாருக்கும்’ என நக்கல் செய்யும் கோவிந்தராஜன், ‘எந்தக் கடவுள்’ என விரக்தி மனநிலையில் கேட்கும் விஸாம் அகமது கேஷ்மிரி, ‘ஞாபகம் ஒரு வியாதி’ என்கிற நந்து, ‘மறதி ஒரு தேசிய வியாதி’ என்கிற காமன் மேன்... இப்படி 90களுக்கு அடுத்து தான் நடித்த படங்களில் அத்தனை களேபரங்கள். 

ஏனோ தான் தயாரித்த முதல் படத்திலேயே, ‘படம் பிடிக்கலைன்னா காசு கொடுக்க வேணாம்’ என்பார் ரகு என்கிற கதாபாத்திரம். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் தன்மையில் முழுமையானதாகவே இருக்கும். ‘விஸ்வரூபம்’ படத்தின் மீதோ, ‘ஹே ராமி’ன் மீதோ, ‘தேவர் மகனி’ன் மீதோ நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், திரைப்படமாக அவற்றுள் வரும் கதாபாத்திரங்கள் கதைக்கு நியாயம்தான் செய்திருக்கும். 

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து இன்றுவரை, காங்கிரஸும் பாஜகவும் கைகோத்தது இல்லை. ஆனால், அதையும் செய்யவைத்தது கமலின் ‘ஹே ராம்’ திரைப்படம். கூட்டாக நின்று இரு கட்சியும் படத்தை தடை செய்ய போராடியது. காந்தியைத் தவறாகச் சித்திரித்தது என்ற குற்றச்சாட்டு முதல் எண்ணற்ற சர்ச்சைகள். உண்மையில் காந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருக்க வேண்டும் எனப் பொது மேடைகளில் பேசிய ஒரே நடிகர் கமல்தான். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும், குரல் கொடுத்தது தனி வரலாறு. ஆனால், அவ்வளவு போராட்டங்களை மீறி வெளியான திரைப்படம், கமலை ‘விக்ரம்’ திரைப்படத்துக்குப் பின் இரண்டாம் முறையாகப் பொருளாதாரத்தில் ஜீரோவாக்கியதுதான் மிச்சம். ஆனால், தன் படங்களின் தோல்வியின்போது ஒருமுறை கூட கமல் மக்களின் ரசனையைக் கேள்விக்கு உட்படுத்தியதே இல்லை. 

கமல் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பர மாடலாக நடிக்கிறார் என்ற போதே, விமர்சனங்கள் பலவாறு எழுந்தன. அதைவிட அதிகமாக சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் போது வந்தது. வாய்ப்புகள் குறைந்ததால், சின்னத்திரைக்குக் கமல் வந்துவிட்டார் என்றது முதல், கமலின் செயற்கைத்தனம் அப்பட்டமாக இருக்கிறது என்றதுவரை எண்ணற்ற விமர்சனங்கள். ஆனால், இதெல்லாம் இரு வாரங்கள் மட்டுமே. மூன்றாவது வாரத்திலிருந்து, கமல் வரும் வாரஇறுதி நாள்களுக்காகவே ரசிகர்கள் காத்துக்கிடந்தார்கள். உண்மையில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சி, கமலை பாமர ரசிகனிடமும் குடும்பங்களிடமும் கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கமல் இவ்வாறாக சொல்வார். ஒப்பந்தத்தில் செய்வோம் என கையெழுத்திட்ட பிறகு, அதற்கு ஒத்துழைக்காமல், இப்படி பிடிவாதம் பிடிப்பது எந்த வகையில் சரி ?. எப்படி உங்களை எல்லாம் நம்பி சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்கள். அரசியல், ட்விட்டர் புரட்சி என ஆயிரம் வேலைகள் இருந்தாலும், இன்னும் தன் கையில் இருக்கும் படங்களான இந்தியன் - 2, விஸ்வரூபம் -2 , சபாஷ் நாயுடு படங்களை முடித்துவிட்டுத்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார் கமல். 

ஆனந்த விகடனில் என்றோ படித்த நினைவு, சினிமாவுக்கு எந்தத் தொழில்நுட்பம் புதிதாக வந்தாலும், அதை முதலில் சென்று பார்ப்பதும், அதைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்துவதும் கமல்தான். புதிதாக வந்திறங்கிய ஒரு கருவியைக் காண, இரவு முழுக்க காத்துக்கிடப்பதுதான், இந்த வயதிலும் கமலை அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற்றுகிறது. பாரதிராஜா முதல்முறை கமலிடம் ‘16 வயதினிலே’ கதையைச் சொல்ல, அதற்கேற்ப சட்டையை அழுக்காக்கிக்கொண்டு, அலுவலகத்திலேயே நடித்துக் காண்பித்தாராம். 

கமல்

இளைஞராக இருந்தபோது படப்பிடிப்பினால் கால் உடைய, அந்தச் சமயத்தில் சங்கீதம் கற்க ஆரம்பித்தவர் பின் அதனை சினிமாக்களில் பயன்படுத்தினார். இந்த முறை தன் ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து கால் தவறி விழ, சில நாள்கள் பொறுத்துப்பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் பிளாக் எழுதுவது; சின்னத்திரை என வந்துவிட்டார். என்றோ கற்ற நடனம், ‘விஸ்வரூபம்’ வரை பயன்பெற்றது. தாளம் தப்பித்தப்பி ஆடும், ‘துள்ளி துள்ளி’ பாடல் முதல், ‘உனைக் காணாது நான்...’ என உருக்கும் தௌஃபிக் வரை கமல் கிளாஸ்தான். பள்ளிப்படிப்பைத் தாண்டாத கமல், கற்கவும், புத்தகங்கள் படித்து தன்னை அப்டேட் செய்துகொள்ளவும் என்றும் தயங்கியதே இல்லை.

கமலுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் விஸ்வநாத்தும் ஒருவர். ‘சலங்கை ஒலி’ படத்தில் வரும் இறுதிக்காட்சிதான் கமலின் ஆல்டைம் ஃபேவரைட். அரங்கமே கூடி இருக்க, ரசிகர்கள் கைத்தட்டும் காட்சி, இன்னும் இன்னும் என அந்தக் கலைஞன் நாற்காலியில் அமர்ந்திருப்பான். ஏனோ, அதுதான் நிஜ கமல் எனப் பலமுறை தோன்றும். கமல் திரைக்குப் பின்னால் இருந்திருந்தால், நல்ல சினிமாக்கள் கிடைத்திருக்கும் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், இத்தனை ஆண்டுகாலம் கமல் திரையுலகில் நீடித்து இருப்பாரா என்பதும் சந்தேகமே. கமர்ஷியல் வெற்றிகளில் வரும் பணத்தை, பரிசோதனை முயற்சிகளில் முதலீடு செய்வது என்பது கமலின் வாடிக்கை.  ஒரு பாடலாசிரியராக , திரைக்கதை வடிவமைப்பாளராக, நடன இயக்குநராக , இயக்குநராக, பாடகராக கமல் செய்த அற்புதங்கள் ஏராளம். அதில் ஒன்று இந்த உனைக் காணாது பாடல். இந்தப் பாடலின் விளம்பரத்தைக்கூட அவ்வளவு யோசித்து வெளியிடுகிறார். மூன்று மொழிகளில் ஒரு படம் வெளியாகப் போகிறது என்பதனை இதை விட எப்படி சொல்ல முடியும் ?

பெரும்பாலும் பெரிய நடிகர்களுக்கான பாடல்களில், காட்சிகளில் அவர்களுக்கென சில வரிகளை பாடலாசிரியர்கள், கதாசிரியர்கள் எழுதுவார்கள். சமயங்களில் கமலே அவற்றை செய்ததுண்டு. ‘உத்தமவில்லன்’ படத்தில் மகன் கதாபாத்திரம் கமலிடம் பேசும் அந்தக் காட்சி, "ஒரு நல்ல ஸ்கிரீன் பிளே எழுதணும், கோடம்பாக்கத்துல இருக்குற எல்லாருக்கும் நீங்க யாருன்னு காட்டணும்" என வரும் வசனம் தனக்காகவே எழுதிய ஒன்றாகத்தான் தோன்றும். ‘வசூல் ராஜா’ படப் பாடலில் வருவதுபோல் கமல், ‘சமுத்திரம் இல்லை, ஆனால், நிச்சயம் தேன்தான்’. 

நம்மைப்பொறுத்தவரை, கமல் ஒரு வெற்றியாளன்தான். ஆனால், அவரைப் பொறுத்தவரை, கமல் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு கலைஞன் அவ்வளவே. இப்போது அரசியலில் அடியெடுத்துவைக்க நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார். இது சினிமா இல்லை. நாள்களும் அதிகம் இல்லை என்பது கமலுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், இவ்வளவு யோசித்துக்கொண்டிருக்கிறார். வழக்கம்போல், முதலிரண்டு அத்தியாயங்கள் சொதப்பலாம். ஆனால், முழுமையாகக் கற்றுக்கொண்டால், அரசியலிலும் சாதிப்பார் என்றே தோன்றுகிறது!

கமலுள் மையம் கொண்ட புயல், தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு உதவட்டும். 

வாழ்த்துகள் கமல்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்