Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'‘நடிக்கும்போது கையை எங்க வெச்சுக்கிறது” ஞானசம்பந்தத்தின் 'விருமாண்டி' வித் கமல்

“அவருடைய ஒவ்வொரு பிறந்தாள் அன்னைக்கும் அவரை நேர்ல வந்து பார்த்து பேசிட்டு போவேன். அப்படி இன்னைக்கும் அவரை நேர்ல பார்த்து பேசினேன். அவரை பார்த்துட்டு ஊருக்குப் போற வழியில ஏர்போர்ட்ல நின்னுதான் உங்கள்ட்ட பேசிட்டு இருக்கேன்.” கமல்ஹாசன் உடனான நட்பு பற்றி கேட்டால், ‘அது அரைமணி நேரத்துல பேசுற சமாசாரம் இல்லைங்களே. இருந்தாலும் அந்த நேரத்துக்குள்ள சொல்றேன்” என்று பேசத்தொடங்குகிறார் பேராசிரியர் கு. ஞானசம்பந்தம். கமலின் பிறந்தநாளான இன்று அவருடைய நெருங்கிய நண்பரான இவரிடம் பேசியதிலிருந்து...

ஞானசம்பந்தம்


    
“நான் முதன்முதல்ல கமலை சென்னை சோழா ஹோட்டல்ல நடந்த ஒரு ஆல்பம் வெளியீட்டு விழாவுலதான் சந்திச்சேன். எம்.எஸ்.வி சார், வைரமுத்துனு நிறைய பேர் வந்திருந்தாங்க. நான் மைக்ல பேசிட்டு இருந்த சமயத்தில் கமல் தன் ‘ஹே ராம்’ பட ஷூட்டிங்ல இருந்து நேரா அங்க வந்திருந்தார். அவரை அப்போ பார்க்கும்போது ஒரு மன்னன் மாதிரி இருந்தார். அப்ப என் பேச்சில் சிலேடையா ஒரு கதை சொன்னேன். இந்தக் கதையைச் சொல்லி முடிச்சதும் எல்லாரும் பயங்கரமா விழுந்துவிழுந்து சிரிச்சாங்க. எம்.எஸ்.வி சார் என் கையைப் பிடிச்சுப் பாராட்டுனார். அன்னைக்குக் கமலைப் பார்த்தேனே தவிர அவர்கிட்ட எதுவும் பேசிக்கலாம் இல்லை.

அடுத்து வேறொரு நிகழ்ச்சியில பார்த்துகிட்டோம். அப்ப அவரா என்கிட்ட வந்து, ‘நீங்க அன்னைக்குச் சொன்ன சிலேடையை நான் ரொம்ப ரசிச்சேன்’னு சொன்னார். பிறகு ஒருநாள் என்னை போன்ல கூப்பிட்டு, ‘நான் ‘விருமாண்டி’னு ஒரு படம் பண்ணப்போறேன். அதுல மதுரைதான் கதைக்களம். நீங்களும் மதுரைங்கிறதால என்கூட இருக்கணும்’னு சொன்னார். அதில் திரைக்கதையை அவரே எழுதினார். அதுக்கு நான் கொஞ்சம் உதவி பண்ணினேன். இப்படி நல்லா போயிட்டு இருந்தப்ப திடீர்னு ஒருநாள், ‘இதுல நீங்க நடிக்கிறீங்களா’னு கேட்டார். நான் பயந்துட்டேன். ‘ஐயய்யோ வேணாம். இது மாடு புடிக்கிற படம். என்னால நடிக்க முடியாது’னு சொன்னேன். ‘அப்படியா’னு கேட்டவர், ‘அப்ப நான் மாட்டைப் புடிக்கிறேன். நீங்க மைக்கை பிடிங்க’னு சொன்னார். பட் அந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது (சிரிக்கிறார்) அப்படித்தான் அதுல ஜல்லிக்கட்டு நடக்கும்போது பின்னணியில் வர்ணனை பண்ணும் கேரக்டர்ல நடிச்சேன். அதுதான் எனக்கு முதல் படம். அவர் போட்டுக் கொடுத்த பாதையில இதுவரைக்கும் இருபத்தைந்து படங்கள் பண்ணிட்டேன்.

கமல்

அதுக்கடுத்து நான் நடிச்ச படம், ‘இதயத்திருடன்’. அந்தப்படம் நடிச்சிட்டு இருந்த சமயத்தில் அவரைச் சந்திக்கும்போது அவர்ட்ட, "ஒரு கேரக்டர்ல நடிச்சிட்டு இருக்கும்போது கைய என்ன பண்றது"னு கேட்டேன். அந்தக் கேள்வியை அவர் ரொம்ப ரசிச்சார். உடனே, ‘நீங்க மேடையில பேசிட்டு இருக்கும்போது கைய என்ன பண்ணுவீங்க"னு என்கிட்ட திருப்பிக் கேட்டார். உடனே நான், ‘எனக்குக் கை இருக்குறதே மறந்து போயிடும்’னு சொன்னேன். 'அதுதான் முக்கியம். நீங்க அந்த கேரக்டரா மாறிட்டீங்கனா கையைப்பற்றி கவலையே படமாட்டீங்க’ன்னார். ‘அட ஆமாம்’னு போகப்போகதான் புரிஞ்சுது. 

என் மகள் திருமணத்துக்காக மதுரைக்கு வந்திருந்தார். யாருமே சொல்லாத ஒரு நல்ல விஷயத்தை என்கிட்ட சொன்னார். ‘உங்க மகள் கழுத்தில திருமாங்கல்யம் கட்டும்போது உங்க கண்கள் கலங்குனதைப் பார்த்தேன். பொண்ணப் பெத்த எல்லா அப்பாவோட கண்ணுலயும் இந்த மாதிரி கலங்கத்தான் செய்யும். எனக்கும் ஒருநாள் அந்தக் கலக்கம் ஏற்படும்’னு சொன்னார். என்னால அந்த வார்த்தைகளை மறக்கவே முடியாது.         

ஒருமுறை அவர் பிறந்தநாள் சமயத்தில் அவரைப் பார்க்கப்போயிருந்தேன். எல்லாரும் அவருக்குப் பரிசு கொடுத்துட்டு இருந்தாங்க. நடிகை ஜெயப்பிரதா ஒரு மிருதங்கத்தை அவருக்குப் பரிசா கொடுத்தாங்க. அதை வாங்கின உடனேயே, ‘நீங்க மிருதங்கம் வாசிச்சே ஆகணும்’னு சொன்னோம். அங்கேயே உட்கார்ந்து வாசிச்சுக் காட்டினார். அவ்வளவு அருமையா வாசிச்சதை கேட்டதும் நாங்க எல்லாரும் கைதட்டினோம். பிறகு அவர் கிட்டப்போய் கைகொடுத்து வாழ்த்திட்டு, ‘இந்தக் காலத்துல புத்தகம் கொடுத்தாலே வாசிக்கமாட்டாங்க. நீங்க மிருதங்கத்தையே வாசிச்சிட்டிங்களே’னு சொன்னேன். அதைக் கேட்டதும் ரொம்ப சந்தோஷப்பட்டார். 

அவர் சாமி கும்பிடாத ஆள். நான் பக்திப் பழம். ஆனால், அந்த விஷயங்களை நாங்க எங்களுக்குள் வெச்சுப்போமே தவிர ஒருநாளும் எங்களுக்குள் முரண்பட்டதே இல்லை. அவர் எனக்கு அப்பப்ப நிறைய பரிசுகள், புத்தகங்கள் கொடுத்திருக்கார். ஒருமுறை நான் பாரதியார் விருது வாங்கிட்டு வந்திருந்தேன். அப்ப அவர் எனக்கு 'சம்பந்தபாரதி'னு பட்டமே கொடுத்தார். வேறொருமுறை பேசிட்டு இருக்கும்போது, "உங்களுக்கும் எனக்கும் என்னா சம்பந்தம்"னு கேட்டேன். உடனே, 'ஞானசம்பந்தம்'னு சொன்னார். 

இன்னொரு சமயம் என் "சினிமாவுக்குப் போகலாம் வாங்க" புத்தகத்தோட வெளியீட்டு விழாவில கலந்துகிட்டு புத்தகத்தை வெளியிட்டார். தமிழ் மீது ரொம்பப் பற்று உள்ளவர். அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது. எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிருப்பார். நட்புக்கு உரிமையும் மரியாதையும் கொடுப்பார். இன்னைக்கு வரைக்கும் நானும் அவரும் வெளியில எங்க போனாலும் ரெண்டு புத்தகங்களை வாங்கிட்டு வந்துடுவோம். ஒண்ணை நான் வெச்சுகிட்டு இன்னொரு புத்தகத்தை கொடுத்துக்குவோம். கடைசியா, ஜெயமோகன் எழுதின அறம் புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். 

அவர் நல்ல உடல்நலத்தோடு வாழ்வாங்கு வாழணும்னு வாழ்த்துறேன்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement