Published:Updated:

“அட்லி பாவம்... விஜய் காப்பி அடிச்சார்..!” - ஜாலி கேலி இயக்குநர் மகேந்திரன் #VikatanExclusive

“அட்லி பாவம்... விஜய் காப்பி அடிச்சார்..!” - ஜாலி கேலி இயக்குநர் மகேந்திரன் #VikatanExclusive
“அட்லி பாவம்... விஜய் காப்பி அடிச்சார்..!” - ஜாலி கேலி இயக்குநர் மகேந்திரன் #VikatanExclusive

அன்று ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ படங்களின் மூலம் மிகச்சிறந்த இயக்குநராகவும், இன்று 'தெறி', 'நிமிர்' படங்களின் மூலம் நடிகராகவும் ஜொலிக்கும் இயக்குநர் மகேந்திரனைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றோம். அவர் மட்டுமல்ல, பெரிய சைஸ் சத்யஜித்ரே படமும், அவர் வாங்கிக் குவித்த விருதுகளும் நம்மை வரவேற்கின்றன.

“நான் குறை மாசத்துல பிறந்தவன். மற்ற குழந்தைகளைப்போல நான் என்னோட சின்ன வயசுல இருந்ததில்லை. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலகூட என் அம்மாகிட்ட மத்தவங்க, 'எப்படியோ... உன் பிள்ளை பிழைச்சிட்டான். என்ன ஒண்ணு, மத்த பிள்ளைங்க மாதிரி இருக்க மாட்டான்'னு சொல்வாங்க. இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருப்பேன். அதுதான் என்னை மாத்துச்சுனு நினைக்கிறேன். அப்போ, என்னால மத்த பிள்ளைங்க மாதிரி ஓட முடியாது, விளையாட முடியாது. மத்தவங்க செய்யாததை நாம செய்யணும்னு முடிவு பண்ணேன். லைப்ரரி பக்கம் ஒரு பையனும் வரமாட்டான். அர்த்தம் புரியுதோ இல்லையோ, எல்லா மொழிப் புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து லைப்ரரி போனேன். போகப்போக எனக்குப் புத்தகங்கள்தான் உலகமா மாறுச்சு. கல்கி, சாண்டில்யன், தி. ஜானகிராமன்னு பெரும் உயரத்துல இருந்த எழுத்தாளர்களோட படைப்புகளைப் படிச்சேன். சினிமாவுல எழுத்தாளர், அப்புறம் இயக்குநர் ஆனேன். இப்போ நடிகனா இருக்கேன்" என்றவர், 'நீங்க எதாவது கேளுங்க' எனக் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிறார். 

“நீங்க பலவருடம் எம். ஜி.ஆர், சிவாஜிகூட பயணிச்சிருக்கீங்க. அவங்ககூட ஒரு புகைப்படம் கூட நீங்க எடுத்ததில்லைனு சொல்றாங்களே..?" 

"அது என்னன்னு தெரியல... தோணவே இல்லை. அப்பப்போ நினைச்சுப் பாக்குறப்போ எனக்கே ஆச்சர்யமா இருக்கும். எம்.ஜி.ஆர்கூட இருந்தப்பவும் சரி. ரஜினி, கமல்கூட இருந்தப்பவும் சரி. நானா விருப்பப்பட்டு அவங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டது கிடையாது. நான் தேவ் ஆனந்த்தோட மிகப்பெரிய ரசிகன். ஒருமுறை பாம்பே போனப்போ ஒரு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஒரு புரொடக்ஷன் மேனேஜர் மூலமா நான் இருக்கறதைத் தெரிஞ்சிக்கிட்டு என்னைப் பார்க்க வந்திருக்கார் தேவ் ஆனந்த். என் ரூம் கதவை அவர் தட்ட, நான் யாருனு தெரியாம 'எஸ். கம் இன்'னு சொல்றேன். அவரைப் பார்த்தவுடனே ஆடிப்போயிட்டேன். எதுவும் பேசாம நிக்கிறேன். 'ரூமுக்கு வாங்க'னு சொல்லிட்டுப் போறாரு. 'நாம ஒண்ணும் அவ்வளவு பெரிய டைரக்டரும் இல்லையே. நம்மளைப் பார்க்க வந்திருக்காரே'னு நினைச்சுக்கிட்டே அவரோட ரூமுக்குப் போனேன். ஒரு ரசிகரா, எனக்கு அவர் எத்தனை மணிக்கு எழுந்திருப்பாரு, என்ன சாப்பிடுவாருங்கறது வரைக்கும் தெரியும். அவர்கிட்ட போனேன். என்னென்னவோ பேசுறாரு, நான் அவரைப் பாத்துக்கிட்டே உட்கார்ந்திருக்கேன். இந்தச் சந்திப்பு 'ஜானி' படம் வந்த சமயத்துல நடந்துச்சு. இப்படியெல்லாம் அவரை நேசிச்சிருக்கேன். ஆனா, அவரோடும் நான் போட்டோ எடுத்துக்கிட்டது கிடையாது. அவ்வளவு பெரிய மனுஷங்ககூட எல்லாம் இருந்திருக்கோம். ஒரு போட்டோகூட எடுக்கலையேனு சமயத்துல வருத்தமாகூட இருக்கும்..." 

"நீங்க விருப்பமில்லாமல்தான் சினிமாவுக்கு வந்ததா சொல்லியிருந்தீங்களே?"

"ஆம். விருப்பமில்லாமதான் வந்தேன். எம்.ஜி.ஆர் என்னை சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்தாரு. சினிமாவும் கல்யாணம் மாதிரிதான். ஒருசிலர் விருப்பப்பட்டு கட்டிக்குவாங்க. ஆனால், சினிமா எனக்குக் கட்டாயக் கல்யாணம்தான். எம்.ஜி.ஆர் கட்றா தாலியனு சொல்லிட்டாரு. அதுக்குனு என் மனைவியை நான் கொடுமைப்படுத்தலை. எனக்குத் தெரிஞ்ச சினிமாவை எடுத்தேன். அதுக்கப்புறம் இந்த சினிமாவே வேணான்டானு நிறைய தடவை ஓடியிருக்கேன். சினிமாவுல படங்கள் இயக்க ஆரம்பிச்ச பிறகும் ஓடியிருக்கேன். ஏன்னா, நான் யார்கூடவும் அதிகம் பேசமாட்டேன். ரஜினிகூட நல்லாப் பேசுவேன். மத்த யார்கிட்டயும் எந்தத் தொடர்பும் வச்சிக்க மாட்டேன். பணத்துக்காக எந்தப் படமும் எடுக்கலை. என் வேலை என்னவோ அதை நான் ஒழுங்கா பார்த்தேன். "

“எம். ஜி.ஆர், ரஜினி அவர்களுக்குப் பிறகு மூன்றாவது தலைமுறையான விஜய்கூட பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?" 

" 'தெறி'க்கு முன்னாடியே என்னை ரெண்டு படத்துக்கு நடிக்கக் கூப்பிட்டாங்க. ‘ஆய்த எழுத்து'ல நடிக்கக் கூப்பிட்டாங்க. என்னன்னு தெரியலை. நான் அதையெல்லாம் தவிர்த்துட்டேன். நாம யார்கிட்டயும் நெருங்கிப் பழகாட்டியும்கூட தயாரிப்பாளர் தாணுவும், அட்லியும் வந்து என்கிட்ட கேட்டாங்க. விஜய் ஆசைப்படுறாருனு சொன்னாங்க. அதுக்கு மேல என்னால மறுக்க முடியலை. அதற்கு முன்னாடி ஒரு தடவை நான் விஜயைப் பாத்திருக்கேன். 'சச்சின் ' படத்துக்குப் பூஜை போட்டப்போ என்கிட்ட வந்து நல்லாப் பேசுனாரு. விஜய் மேல ஒரு மரியாதை. அதனால 'தெறி'க்கு ஒத்துக்கிட்டேன். அட்லி கதை சொல்றப்போகூட என்னவோ சொல்லிட்டு இருந்தாரு. நான் அட்லியையே நல்லாக் கவனிச்சிட்டு இருந்தேன். எனக்கு அட்லியையும் பிடிச்சுப் போச்சு. அப்புறம்தான் 'தெறி' பண்ணோம். பிறகு தெலுங்குல பவன்கல்யாணோட 'கட்டமாராயுடு' பண்ணேன். இப்போ ப்ரியதர்ஷனோட 'நிமிர்', விஜய்சேதுபதி கூட 'சீதக்காதி' பண்றேன். கார்த்திக்கும் அவர் மகனும் பண்ற 'மிஸ்டர் சந்திரமெளலி' படத்திலேயும் நடிக்கிறேன்."

"பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்?"

"அப்போ எம்.ஜி.ஆர் எழுதச் சொன்னாரு. நிறைய பேரோட கதைகளைப் பார்த்தாரு. கடைசியா, நான் எழுதியதை ஓகே பண்ணாரு. படம் ஏன்னு தெரியல... எடுக்க முடியலை. அப்போ ஏதோ எழுதிட்டேன். இப்போ அதைப் படமா எடுக்க முடியாது. அந்தக் கதைக்கு வர்ணனையே பதினைந்து பக்கத்துக்குப் போகும். அதைத் திரைக்கதை பண்றது கஷ்டம்ங்க. நான் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி திரும்பவும் படிக்க ஆரம்பிச்சேன். பிரமிச்சுப் போயிட்டேன். முப்பது பக்கத்துக்கு மேல என்னால போகவே முடியலை. இப்போ நினைச்சுப் பாக்குறேன், நான் எம்.ஜி.ஆருக்காகப் பண்ண பொன்னியின் செல்வன் திரைக்கதையெல்லாம் எங்க போச்சுனே தெரியலை. "

“தமிழ் சினிமாவுல எந்தப் படம் வந்தாலும், 'இது அந்தப் படத்தோட காப்பி'ங்கிற வாதமும் வந்துடுதே?'' 

"ராமாயணத்தை எடுத்துக்கிட்டா நூறு ராமாயணம் இருக்கு. கம்பன் பிறக்குறதுக்கு முன்னாடியே ஏகப்பட்ட ராமாயணம் வந்துருக்கு. நாம ஏன் இன்னைக்குக் கம்பனை மட்டும் புகழ்றோம். ஏன்னா, கம்பன் அதைப் பிரசன்ட் பண்ணது அவ்வளவு சிறப்பா இருந்துச்சு. அதேமாதிரிதான் இதுவும். ஒண்ண மூலமா வச்சி அதைவிட பெருசா எடுக்கிறதுலாம் என்னைப் பொறுத்தவரைக்கும் சாமர்த்தியம்தான். அப்படியே எடுக்கிறதுதான் அசிங்கம். ‘தெறி’  படம் வேற படத்தோட காப்பினு சொன்னாங்க. அதேமாதிரி கதையில வேற யாரும் படம் எடுக்கலையா என்ன... அட்லி பையன் பாவம். அவன் இப்போதான் வளர்ந்துட்டு வர்றான். எல்லாப் படமும் காப்பினு சொல்றாங்க. இப்போ ஒரு படம் இதுல இருந்துதான் வந்துச்சுனு சொல்லவே முடியாது. அந்தப் படத்துக்கு மூலமா ஒரு படம் இருந்திருக்கும். அதுக்கு மூலமா ஒரு படம் இருந்திருக்கும். எதைப் பார்த்தாலும் காப்பினு சொல்றாங்க. ஒரு சிலர் அதை ரொம்ப பெருசுப்படுத்துறாங்க. எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது ஒரு படம் இந்த மாதிரி வந்தா அதையே பிடிச்சிகிட்டு காப்பி காப்பினு சொல்றாங்க. வேலையில்லாதவங்க செய்ற வேலை இது."

"மீண்டும் படங்கள் இயக்கும் எண்ணமிருக்கிறதா?"

"பணத்தோட ஒரு முட்டாள் வந்தா எடுக்க வேண்டியதுதான் (சிரிக்கிறார்). ஆனா, இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லைங்க." 

"உங்களுக்கு எந்த மாதிரி படங்கள் பிடிக்கும்" 

"கடைசியா ரொம்பப் பிடிச்சது வம்சியோட 'தோழா' படம். தவிர, 'வெண்ணிலா கபடிக் குழு', 'மொழி' ஆகிய படங்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. "

"இப்பவும் புத்தகங்கள் படிக்கிற பழக்கம் தொடருதா?"

"இப்பவும் நான் படிச்சுக்கிட்டுதான் இருக்கேன். சாண்டில்யனோட எல்லாப் புத்தகங்களும் வெச்சிருக்கேன். இப்போ படிக்கிறதுனா, ஆர். சூடாமணியோட 'தனிமைத் தளிர்', அ. முத்தானந்தத்தோட 'நல்லம்மா', தி. ஜானகிராமன் புத்தகங்கள்... இவைதான் என் லிஸ்டு".

"உங்க மகன் ஜான் 'சச்சின்' படத்தை இயக்கினார். அந்தப் படத்தைப் பார்த்துட்டு அவர்கிட்ட என்ன சொன்னீங்க" 

"நான் ஜான்கிட்ட கதையைக்கூட கேட்டதில்லை. அவங்க அம்மாகிட்டதான் எதையோ சொல்லிட்டு இருப்பான். படத்துல ஒரு சீன் மட்டும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அவன்கிட்டயும் அதான் சொன்னேன். விஜய் நிறைய இடத்தில டைவர்ட் ஆகிட்டு ஒரு இடத்துக்கு வருவாரு. அங்க கொட்டும் மழையில ஜெனிலியாவைப் பார்ப்பார். அந்த சீன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதற்கப்புறம் 'தெறி' ஷூட்டிங் அப்போ கூட விஜய் என்கிட்ட சொன்னாரு, "நான் அந்தப் படத்துக்கு வேற மாதிரி நடிக்கலாம்னு கிளம்பிப் போனேன். அங்க உங்க பையன் ஜான், கதையைச் சொல்றப்பவே நல்லா நடிச்சுக் காட்டுவார். அப்புறம், ஜான் நடிப்பை பார்த்துதான் சார் நான் காப்பியடிச்சு நடிச்சேன்னு" சும்மா விளையாட்டுக்குச் சொன்னார்."