Published:Updated:

“தாத்தா பேச முயற்சி பண்றார்... சீக்கிரம் இயல்பாகிடுவார்..!’’ - உதயநிதி ஸ்டாலின் #VikatanExclusive

“தாத்தா பேச முயற்சி பண்றார்... சீக்கிரம் இயல்பாகிடுவார்..!’’ - உதயநிதி ஸ்டாலின் #VikatanExclusive
“தாத்தா பேச முயற்சி பண்றார்... சீக்கிரம் இயல்பாகிடுவார்..!’’ - உதயநிதி ஸ்டாலின் #VikatanExclusive

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின்மூலம் கலகல நாயகனாகக் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், அடுத்தடுத்து பல்வேறு விதமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தன்னை ஒரு நடிகனாக நிரூபித்துவருகிறார். இயக்குநர் கெளரவ் நாராயணனின் இயக்கத்தில், நாளை வெளிவரவிருக்கும் 'இப்படை வெல்லும்' பட ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த உதயநிதியிடம் உரையாடியதிலிருந்து...

உங்க படத்துக்கான கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க?

“ ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் ஹிட்டாகும்னு நான் நிஜமா நினைக்கவே இல்லை. ஹிட் ஆனவுடனே, சந்தானத்தைக் கூட வெச்சுக்கிட்டு, ஒரு நாலு பாட்டோட இதே ரூட்ல அப்படியே போயிடுவோம்னு நினைச்சேன். 'எனக்கே போரடிச்சிடுச்சு. அப்புறம் ஆடியன்ஸுக்கு  போரடிக்காதா?'னு யோசிச்சேன். அந்த நேரத்துல கமிட்டான க்ரைம் த்ரில்லர் படம்தான், 'கெத்து'. வேற ஒரு கதைக்காக ப்ளான் பண்ணும்போதுதான்,  'மனிதன்' அமைஞ்சது. என் கரியர்ல எனக்கு நம்பிக்கைகொடுத்த படம், மனிதன். எந்த மாதிரியான கேரக்டரையும் சவாலா எடுத்து நடிக்க முடியும்னு எனக்கு உணர்த்துன படம். 'மனிதன் 2' பண்ணணும்னு ஆசை. ஆனா, நம்ம எதையோ ஒன்னை நோக்கி அது வேணும்னு நினைச்சா, அது கிடைக்காது. ஒரு நாள் தானாவே அது நம்மளைத் தேடி வரும்போதுதான் நல்லா இருக்கும். அப்புறம் பண்ண, 'சரவணன் இருக்க பயமேன்', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'இப்படை வெல்லும்' எல்லாமே ஒரே நேரத்துல நடிச்ச படங்கள். ஆனா, 'பொதுவாக எம்மனசு தங்கம்' நான் எதிர்பார்த்த அளவு போகலைனு சின்ன வருத்தம் இருக்கு. சில படங்கள் ஸ்கிரிப்ட்டைக் கேட்டு ஓகே சொல்லிட்டு, 'தெரியாம சொல்லிட்டோமோ' அப்புறம் நினைப்போம்ல, அந்த மாதிரியான படம்தான், 'இப்படை வெல்லும்.' ரொம்ப அதிகமா வேலை வாங்குனாங்க. ஒண்ணு, நான் யாரையோ துரத்திட்டு இருப்பேன். இல்ல, யாரோ என்னைத் துரத்திட்டு இருப்பாங்க. இப்படிப் படம் முழுக்க ஓடிட்டே இருப்பேன்.'’

இந்தப் படத்துல நடிச்ச அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்க...  

“ஐயோ! நிறைய இருக்கு ப்ரதர். பாண்டிச்சேரில நான் ஓடாத ரோடே இல்லை. அந்தளவுக்கு ஓடவெச்சுட்டாங்க. டேனியல் பாலாஜி, ஆர்.கே சுரேஷ்கூட நடிச்ச சண்டை சீன்கள்ல ரொம்பச் சிரமமா இருந்துச்சு. உண்மையாவே அடிச்சார். பாலா சாரோட 'தாரை தப்பட்டை' முடிச்சுட்டு, அப்படியே வந்த ஒரு வேகத்துல என்னை செஞ்சுட்டாங்க. அதே மாதிரி, 'க்ளைமேட் நல்லா இருக்கும்'னு சொல்லி, பாட்டுக்காக ஓமன் கூட்டிப்போனாங்க. அங்க போனா, 45 டிகிரி வெயில். விட்டிருந்தா அப்படியே ஓடி வந்திருப்பேன். நான் ஓடும்போதெல்லாம் ரிச்சர்டு சாரும் கூடவே ஓடிவருவார் கேமராவைத் தூக்கிட்டு. ஒரு ரன்னிங் ரேஸே நடந்துச்சுனா பாத்துக்கோங்களேன். நிறைய விதவிதமான கேமராக்களை முதன்முறையா பாத்தேன். ரிச்சர்டுகிட்டதான் அதைப்பத்தி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படத்துல நடிக்கிறது புதுசாவும் சவாலாவும் இருந்துச்சு.'’
 

இதுவரை உங்ககூட நடிச்ச கதாநாயகிகள் பற்றி சொல்லுங்க... 

ஹன்சிகா - 'ஓகே ஓகே' நல்ல ஹிட். 'மனிதன்' படத்துல பெர்ஃபாமன்ஸ் நிறைஞ்ச கதாபாத்திரம். எல்லாராலும் பாராட்டப்பட்ட படம். அதனால, என்னோட லக்கி கோ ஸ்டார்னு சொல்லுவேன். 

நயன்தாரா - கூட இருக்கும் ஆர்டிஸ்ட்டை ஓவர் டேக் பண்ணி பெர்ஃபாமன்ஸ்ல பிண்ணிடுவாங்க. இப்போ, பல ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்குறாங்க. 

எமி ஜாக்சன் - எந்த சீன் சொன்னாலும், கூட நடிக்கிறவங்களுக்கு நல்லா ஒத்துழைப்பாங்க. 

ரெஜினா - ஜாலியா இருப்பாங்க. எப்ப பார்த்தாலும் ஜிம், வொர்க் அவுட்னு ஒரே பிஸியா இருப்பாங்க. 

நிவேதா பெத்துராஜ் - நம்ம ஊர் பொண்ணுங்கிறதே ஸ்பெஷல்தான். கொடுத்த கேரக்டரை கச்சிதமா நடிச்சு அசத்திடுவாங்க. 

மஞ்சிமா மோகன் - எந்தளவுக்கு விளையாட்டுத்தனமா இருக்காங்களோ, அந்தளவுக்கு ஸ்கிரீன்ல சீரியஸா இருப்பாங்க.    

சந்தானம், சூரி ரெண்டு பேர் கூடவும் நடிச்சிருக்கீங்க.  என்ன வித்தியாசம்னு நினைக்குறீங்க? 

“சந்தானம், படத்துல ஹீரோவையே கலாய்ச்சுட்டு ஒருமாதிரி போய்ட்டே இருப்பார். சூரி, வெகுளித்தனமான காமெடிகள் பண்ணி ஸ்கோர் செய்றதுல கெட்டிக்காரர். அதுவும் இந்தப் படத்துல சீரியஸா நடிச்சிருக்கார், ஆனா, பார்க்கிறவங்களுக்கு பயங்கர காமெடியா இருக்கும். ரெண்டுமே வேற மாதிரி ஸ்டைலா இருக்கும். ஆனா, என்ஜாய்மென்ட் ஒண்ணுதான்.'

'நிமிர்' படத்துக்கு ப்ரியதர்ஷன் எப்படி அப்ரோச் பண்ணார்?

“அவர் என்னைப் பாக்கணும்னு சொன்னார். வேற ஏதோ பேசப் போறார்னுதான் நினைச்சேன். சத்தியமா, நடிக்கக் கூப்பிடுறார்னு நினைச்சு போகலை. அங்க போனா, 'படம் பண்ணப்போறேன். நீதான் ஹீரோ'னு சொன்னார். நான் நம்பாமல், 'என்ன சார் சொல்றீங்க? நிஜமாவா"னு கேட்டேன். 'டேய் நான் டைரக்டர்டா. உனக்குத் தெரியாதா?'னு கேட்டவுடனே, 'சார் எப்ப வேணாலும் பண்ணலாம்'னு சொல்லிட்டு வந்தேன். 'இதுவரை உன் படம் ஒண்ணுகூட பார்த்ததில்லை'னு ஷூட்லதான் சொன்னார். 'அதனாலதான் என்னைக் கூப்பிட்டிருக்கீங்க'னு சொன்னேன். உண்மையாவே, அது வேற ஒரு சினிமா மேக்கிங். 38 நாள்ல படத்தை முடிச்சுட்டார். நிறைய கத்துக்கிட்டேன்.’’
 

'ஹீரோயின் இல்லாத ஸ்கிரிப்ட் இருக்கு'னு உங்க மனைவி சொன்னாங்களே... 

'உண்மையாவே இருக்கு. முதல் சீனே ஹீரோயின் இறந்திடுவாங்க. யாரு கொன்னாங்கன்னு கண்டுபிடிக்கிறதுதான் கதை. ஹீரோயின் போட்டோவுக்கு மாலை போடுற மாதிரிதான் முதல் ஷாட்டே. நான் மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டேன்.’’

ரெட் ஜெயன்ட் மூவீஸ்ல மத்த நடிகர்களை வெச்சு படம் பண்றது குறைஞ்சுடுச்சே?

“இப்போ நானே என் கம்பெனி பேனர்ல நடிக்கிறதில்லை. வெளியே நல்ல ஆஃபர் வருது. நல்ல ஸ்கிரிப்ட்டும், நியாயமான பட்ஜெட்டும் இருந்தா கண்டிப்பா பண்ணுவேன்.'’

உங்க தாத்தா உங்களுடைய எந்தெந்த படங்கள் பார்த்திருக்கார்? இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு? 

“முன்பைவிட இப்போ நல்லா இருக்கார். வயசுக்கான முதிர்ச்சிதான். பேச முயற்சி பண்றார், நம்ம பேசுற விசயங்களுக்கு ரியாக்ட் பண்றார். இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு நம்புறோம். என் முதல் படம் வந்தபோது, அவருக்குப் படத்தை ரிலீஸுக்கு முன்னாடி காட்டலை. ரிலீசான பிறகு அவர் என்னைக் கூப்பிட்டு, என்னடா, உன் படம் நல்ல ஹிட்டாமே. எனக்கு உன் படத்தைப் போட்டுக் காமிக்க மாட்டியா?னு கேட்டார். அப்புறம், அன்னைக்கே போட்டுக் காமிச்சேன். 'பரவாயில்லைடா. முதல் படம் மாதிரியே தெரியலை. நல்ல நடிச்சிருக்க'னு சொன்னார். அப்புறம், 'இது கதிர்வேலன் காதல்' பார்த்துட்டு, நல்லா இருக்குனு சொன்னார். அதுக்குப் பிறகு, எந்தப் படமும் பார்க்கலை. ஆனா, அவருக்கு 'மனிதன்' படத்தை போட்டுக் காமிக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, அப்பா என்னோட படங்கள் பாத்துட்டு நல்லா இருக்குனுதான் சொல்லுவார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ப்ரிவியூ பார்த்துட்டு, ’என்னடா சிரிப்பாவே இல்லை’னு சொல்லிட்டார்.'

ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்தை எப்படிப் பார்க்குறீங்க? 

“கமல் சார் அவரோட நற்பணி இயக்கம் மூலமா நிறைய செஞ்சுட்டு இருக்கார். ரஜினி சாரும் ரொம்ப வருஷமா வருவேன்னு சொல்லிட்டு இருக்கார். ஜனநாயக நாட்டுல யாருக்கு வேணாலும் அரசியலுக்கு வர்ற உரிமை இருக்கு. ஒவ்வொருத்தரும் ஓட்டு போடும்போதே அரசியலுக்கு வந்துட்டாங்கன்னுதான் நான் நினைக்கிறேன். இப்போ இவங்க ரெண்டு பேரும் சொல்றாங்க. தேர்தல் வரணும், கட்சி ஆரம்பிக்கணும், மக்கள் ஏத்துக்கணும் இன்னும் இவ்ளோ விசயங்கள் இருக்கு. பார்ப்போம்.''

இப்போ இருக்குற அரசாங்கம் பற்றி உங்கள் பார்வை என்ன?

'இந்த அரசாங்கம் மேல யாருக்குமே திருப்தி இல்லைனுதான் நான் நினைக்கிறேன். நான் சினிமாக்காரங்க, பொது மக்கள்னு நிறைய பேர்கிட்ட பழகுறேன். அவங்க என்கிட்ட கேக்குற விஷயம், 'இந்த அரசாங்கத்தை எப்போங்க மாத்துவீங்க. எதாவது பண்ணுங்க'னுதான். மேல இருந்து சொல்றதைத்தான் இவங்க கேக்குறாங்க. சொந்தமா முடிவு எடுக்குறதில்லைனு எல்லாருக்குமே தெரியும். ஒரு நாள் டைம் வரும்போது எல்லாமே ஆட்டோமேட்டிக்கா மாறும்னு நினைக்கிறேன்.’’
 

'நிமிர்' அனுபவம் எப்படி இருந்தது? அடுத்து என்ன ப்ளான்?

“ ‘மனிதன்' படம் எப்படி எனக்கு ஒரு நம்பிக்கை கொடுத்துச்சோ, அதுமாதிரி இந்தப் படமும் என் கரியர்ல முக்கியமான படமா இருக்கும்னு நம்புறேன். என்னைவிட ப்ரியதர்ஷன் சார் ரொம்ப நம்புறார். எல்லாப் படத்துலயும் ஷாட் முடிஞ்ச பிறகு, நான் போய் மானிட்டரைப் பார்ப்பேன். ஆனா, இதுல பார்க்கலை. ஏன்னா, ப்ரியதர்ஷன் சார் இருப்பார். எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கும். அதுமட்டும் இல்லாம, நான் போய் பாக்குறதுக்குள்ள மானிட்டரை அடுத்த ஷாட் எடுக்க தூக்கிட்டு வேற எங்கேயாச்சும் போயிடுவாங்க. 'நிமிர் ' படத்துக்குப் பிறகு, தேனாண்டாள் தயாரிப்புல மித்ரன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்றேன்.”