Published:Updated:

''ரஜினி, கமல், விஜயைவிட அஜித் அரசியலுக்கு வரலாம்..!'' - சொல்கிறார் நடிகர் நண்பர்

''ரஜினி, கமல், விஜயைவிட அஜித் அரசியலுக்கு வரலாம்..!'' - சொல்கிறார் நடிகர் நண்பர்
''ரஜினி, கமல், விஜயைவிட அஜித் அரசியலுக்கு வரலாம்..!'' - சொல்கிறார் நடிகர் நண்பர்

''சினிமாமீது இருக்கும் காதல் காரணமாக என் அம்மா சின்ன வயதிலேயே கேரளாவைவிட்டு சென்னைக்கு வந்தவர். ஹீரோயினாகத் தமிழ் சினிமாவில் வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்ட அவருக்குக் கிடைத்தது சின்ன ரோல்தான். அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட 'சந்திரலேகா' படத்தில் என் அம்மா நடித்திருப்பார். அதில் நடனமும் அம்மா ஆடியிருப்பார். என் அம்மாவின் தாத்தா கேரளாவில் பேண்ட் மாஸ்டர். அதனாலேயே அம்மாவுக்கு நடனம் நல்லா வரும். சினிமாவில் நிறைய படங்களில் அம்மாவைப் பார்க்கலாம். 

எனக்கு இரண்டு அண்ணன்கள். வீட்டில் மூன்றாவது பையன்தான் நான். என் அண்ணன்கள் இருவருமே சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடித்தார்கள். ஜெமினி ஸ்டுடியோஸ் எடுத்த படங்கள் எல்லாம் பார்த்தால் இரண்டு சின்னப் பசங்க பீப்பீ ஊதிக்கொண்டிருப்பார்கள். அந்த பீப்பீ பசங்களுக்கு மாடலாக முதலில் நிற்க வைத்துப் போட்டோ எடுத்தது என் மூத்த அண்ணன்தான். அதில் என் அண்ணனுடன் ஜெமினி கணேஷனின் முதல் பையனும் நிற்பார். 

அதே மாதிரி என் அப்பாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவின் தாய் மாமன்தான் என் அப்பா. ஜானகி அம்மாவுக்கு காடியன் என் அப்பாதான். ஜானகி அம்மாவைச் சினிமாவுக்குக் கூப்பிட்டு வந்து நடிக்கவைத்தது எல்லாம் அப்பாதான். பிற்காலத்தில் ஜானகி அம்மா எம்.ஜி.ஆரை திருமணம் செய்தபோது ஏற்பட்ட சின்ன மனக்கசப்பின்போது அப்பா அவர்களை விட்டுப் பிரிந்துவிட்டார். அதன்பிறகு எனக்கு 5 வயது இருக்கும்போதே நான் நாடகத்துக்கு நடிக்க வந்துவிட்டேன். என்று தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணா. 

ஆர்.எஸ்.மனோகரன் சாருடைய நாடக கம்பெனியில் என்னுடைய ஐந்து வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்தேன். ''சாணக்கியன் சபதம்'' அப்படிங்குற நாடகத்துக்குச் சின்ன வயது பையன் கேரக்டருக்கு நடிக்க என்னை அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர் முன்னாடி பெரிய வசனம் எல்லாம் பேசி நடித்துக் காட்டினேன். உடனே அவர் ''டேய் தம்பி ஹீரோ வேஷம் போட்டு நடிக்க நாங்க எல்லாம் இருக்கோம். நீ சின்ன வயசுப் பையனா மட்டும் நடி''னு சொன்னார். அவருடைய நாடக கம்பெனிக்கு மட்டும் ஐந்து வயதிலிருந்து ஒன்பது வயது வரைக்கும் கிட்டதட்ட ஐந்நூறு நாடகத்துக்கு மேல் நடித்திருக்கிறேன். சின்ன வயசிலேயே ரொம்ப பிஸியாகத்தான் இருப்பேன். காலையில் ஒரு நாடகம். மாலையில் ஒரு நாடகம்னு என்னைக் கையில் பிடிக்க முடியாது. 

அப்போதுதான் டெல்லிக்கு ஒரு நாடகத்துக்காகப் போனபோது அப்போதைய குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் என் நாடகத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டு அவர் மடியில் என்னைத் தூக்கி உட்கார வைத்துப் பாராட்டினார். அப்போது எனக்கு வயசு ஆறுதான் இருக்கும். குடியரசுத்தலைவர் என்றால் யார்னு கூட எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு ஸ்கூலில் படிக்கும்போது நாடகம் நடிப்பேன். அந்த நேரத்தில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கும்போது என் நாடகம் நடந்தது. அப்போது பள்ளிக்கூட நாடகத்துக்குத் தலைமை தாங்க விருந்தினராக கவிஞர் பாரதிதாசன் வந்திருந்தார். அவர் என் நாடகத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார். அங்கயிருந்த எல்லோருடனும் ''இந்தப் பையனை நான் ஏற்கெனவே நிறைய நாடக மேடையில் பார்த்திருக்கிறேன். அற்புதமா நடிப்பார்''னு சொல்லி எனக்கு ஒரு பேனா பரிசாகக் கொடுத்தார். அதற்குப் பிறகு எங்கள் குடும்பமே சொந்தமாக நாடக கம்பெனி நடத்த ஆரம்பித்துவிட்டோம். என் சித்தாப்பா சங்கர்தான் அதற்கு உரிமையாளர். அவர்தான் முதல் மலையாள படம் 'பாலா' படத்தின் ஹீரோ. 

இப்படிப் பல சினிமா விஷயங்கள் என் சினிமா வாழ்க்கையில் இருந்தும். நாங்கள் கோடம்பாக்கத்தில் இருந்தும், எம்.ஜி.ஆரின் உறவினராய் இருந்தும் நான் சினிமாவுக்குள் வருவதற்கு எனக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டது. நான் யாருடைய தயவுடனும் சினிமாவுக்குள் வரவில்லை. நான் நானாகதான் வந்தேன். சினிமாவில் உறவுகள் இருப்பது பெரிய விஷயமே கிடையாது. உழைப்பும் அதற்கான அதிர்ஷ்டமும் கடவுள் அருளும் இருந்தால் மட்டுமே சினிமாவுக்கு வரமுடியும். 

இயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் காரைக்குடி நாராயணனிடம் உதவி இயக்குநராய் சேர்ந்தேன். அவர் நிறைய படங்கள் எடுப்பார். ஆனால், எந்தப் படமும் ரிலீஸாகாமல் அப்படியே இருக்கும். அதன்பிறகு நானே நாடகங்கள் எழுத ஆரம்பித்தேன். அப்போதும் எனக்குச் சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதன்பிறகு அங்க, இங்கனு சுத்தி இயக்குநர் பாண்டியராஜன் சாரிடம் உதவி இயக்குநராய் 'கன்னி ராசி' படத்தில் சேர்ந்தேன். அந்தப் படம் 100 நாள் ஓடியது. அப்போதுதான் லைஃப் கொஞ்சம் பிக்அப் ஆனது. 

அதன்பிறகு 'ஆண்பாவம்' படத்தில் வேலை பார்த்தேன். ''எங்க அம்மாவை நீ கட்டிக்குறப்போ, உங்க அம்மாவை நான் கட்டிக்க கூடாதா?'', ''கத்துனா குத்துவேன். குத்துனா கத்துவேன்'' அப்படிங்குற வசனமெல்லாம் நான்தான் எழுதினேன். படத்தில் இடம்பெற்ற முதல் சீன் ''பொட்டி வந்துருச்சா'' அந்த சீன் என் ஐடியாதான். 'ஆண்பாவம்' படத்தில் காட்சிக்குக் காட்சி என் வசனம் இருக்கும். பாண்டியராஜன் படத்தில் நடித்ததால் அந்தப் படத்தின் பல காட்சிகளை நாங்கதான் இயக்கினோம். அதற்குப் பிறகு எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட சில உரசல்கள் காரணமாக அவருடன் வேலை பார்க்கவில்லை. 

அப்புறம் நானே ஒரு படம் பண்ணலாம்னு டைரக்‌ஷன் பண்ணினேன். படத்துக்குப் பெயர் 'காக்கா கடி'. அந்தப் படத்துக்கு பாண்டியராஜன்தான் ஹீரோ. அந்த நேரத்தில் கல்யாணம் பண்ணியிருந்தேன். இன்றைக்கு வரைக்கும் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. அப்புறம் சில படங்களுக்கு வசனம் எழுதினேன். அப்புறம் ஒருவரின் அறிமுகத்துடன் கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் சேர்ந்தேன். அவருடைய 'சேரன் பாண்டியன்'' படத்திலிருந்து அவருடன்தான்  வேலைப் பார்த்தேன். 

கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படம் 'புதுக் காவியம்'. அந்தப் படத்தின் டிஸ்கஷன் எல்லாத்துலையும் அவருடன்தான் இருந்தேன். ஆனால், அந்தப் படம் ரிலீஸாகவில்லை. ஏன்னா, என் ராசிதான். அதற்குப் பிறகு 'புரியாத புதிர்' படம் எடுத்தார். அந்தப் படத்தில் அவருடன் நான் வேலை பார்க்கவில்லை. அதனால்தான் அவருடைய முதல் படமாக 'புரியாத புதிர்' ரிலீஸானது. ஏன்னா, நம்ம ராசி அப்படி. அப்புறம் 'சேரன் பாண்டியன்' படத்திலிருந்து இன்று வரை அவருடன் இருக்கிறேன். என்னை அவருடன் இணை இயக்குநராய் இருக்கச் சொல்லி கே.எஸ்.ரவிக்குமார் சாரே கேட்ட காரணத்தால் அவருடன் சேர்ந்தேன். அவருடன் நான் வேலைப் பார்த்த நிறையப் படங்கள் நல்ல ஹிட் அடித்தது. அப்போதுதான் 'பெரிய குடும்பம்' படத்துக்கு வசனம் எழுதினேன். அந்தப் படம் நூறு நாள் ஹிட் அடித்தது. உடனே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை வைத்துப் படம் எடுக்க ஆசைப்பட்டார். நானும் கதை சொன்னேன். அந்தப் படத்துக்கு தயாரிப்பு ஜெமினி ஃபிலிம் கலர் லேப்பின் ஓனர். கே.எஸ். சாரும், தயாரிப்பாளரும் சொன்னாங்க ''உன்னுடைய முதல் படம் மாதிரி இந்தப் படம் ரிலீஸ் ஆகாமல் இருக்காது. கண்டிப்பாக ஓடும். தைரியமாக டைரக்‌ஷன் பண்ணு''னு சொன்னாங்க. அதனால்தான் டைரக்‌ஷன் பண்ணவே போனேன். 

ஜெயராம், மீனா இருவரையும் நடிக்க வைத்து ஷூட்டிங் போனேன். ஆனால் மூணாவது நாள் ஷூட்டிங் போயிட்டு இருந்தபோதே ஃபிலிம் ரோல் இல்லைனு ஷூட்டிங் நிறுத்திட்டாங்க. மணிவண்ணன் என்னிடம் வந்து, ''டேய் ரொம்ப நல்ல ராசிடா உனக்கு. ஃபிலிம் ரோல் ஓனரேயே படம் தயாரிக்க வைத்து. அவரையே ஃபிலிம் ரோல் இல்லைனு ஓட வைச்சுட்டியே'' அப்படினு என்கிட்ட வந்து நான் வருத்தமாக இருந்தபோது சிரிச்சிக்கிட்டே சொன்னார். 

இதற்கு அப்புறம் நான் படம் எடுப்பேன்னு நினைச்சீங்களா... எடுத்தேன். அஜித் புண்ணியத்தில். அந்த நேரத்தில் விக்ரமன் சார் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் நடிக்க என்னைக் கூப்பிட்டார். ''எப்படியிருந்தாலும் ஒரு இரண்டு சீன்தான்  கொடுப்பீர்கள். நான் போயிட்டு அப்புறம் வர்றேன்''னு கிளம்பிட்டேன். அப்போது விக்ரம் சார் கூப்பிட்டு 'படம் முழுக்க நீ வருவ' அப்படினு சொல்லி படத்தில்  கார்த்திக் சாருடைய ப்ரெண்ட் கேரக்டர் கொடுத்தார். அதுதான் என் நடிப்பில் வந்த முதல் படம்னு சொல்லலாம். ஓவர் நைட்டில் என்னை ஸ்டார் ஆக்கிய படம் அதுதான். எனக்கு மறுவாழ்வு கொடுத்த படமும் அதுதான். படத்தில் நான் நடித்த கேரக்டர் பற்றி பத்திரிகையில் எல்லாம் புகழ்ந்து எழுத, என்னைத் தேடி பல வாய்ப்புகள் வந்தது. 

அந்த நேரத்தில் தயாரிப்பாளர் ஒருவர் ''உன் கதையை அஜித்திடம் சொல்லிட்டு வா'' அப்படினு சொன்னார். நான் உடனே, ''நீங்க வேற அவர் இப்போதுதான் 'காதல் கோட்டை'னு ஒரு ஹிட் படம் கொடுத்தார். காதல் படமா நடிச்சிட்டு இருக்கிறார். அவர் என் படத்தில் எப்படி நடிப்பார்''னு கேட்டேன். 

அஜித்திடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ''ரமேஷ் கண்ணா, ரொம்ப ராசியான இயக்குநர். அவர் எந்தப் படம் எடுத்தாலும் பாதியிலேயே நின்றுவிடும்'' அப்படினு சொல்ல. அப்போது என் படத்தின் இயக்குநர் அவர்தான். அவருக்குத்தான் படம் பண்ணுவேன்னு'' அஜித் சொல்ல, ஜெயராம், மீனா வைத்து எடுத்த படத்தை அஜித், தேவயானி, ஹீரா வைத்து 'தொடரும்' படமாக எடுத்தேன். படத்தின் முதல் நாள் ஷூட் அஜித், நடிகை எல்லாம் வந்தார்கள். அப்போது விக்ரம் சார் போன் பண்ணி ''உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் ஒரு இரண்டு சீன் மட்டும் பாக்கியிருக்கு. ஒரு அரைநாள் வந்து நடிச்சிட்டு போ''னு சொல்றார். விக்ரம் சார்கிட்ட போனிலேயே சண்டை போடுறேன். அஜித் என்கிட்ட வந்தார். ''என்ன ஆச்சு''னு கேட்டார். நான் நடந்ததைச் சொல்ல. ''பரவாயில்லை  வெயிட் பண்ணுறோம். போயிட்டு வாங்கனு'' சொன்னார். எனக்காக ஒரு அரைநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெயிட் பண்ணினார். யார் பண்ணுவா இப்படி?

'தொடரும்' படம் ரிலீஸாகி நல்ல ஹிட். எனக்கு ஒரே சந்தோஷம் ஏன்னா, 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படம் அதற்கு முந்தைய வருடம் ரிலீஸாகி எனக்கு நல்ல பேர் தந்தது. அதற்கு அடுத்த வருடமே 'தொடரும்' மூலம் இயக்குநராகவும் நல்ல பெயர். பத்து வருடமாக என் வாழ்க்கையில் நடக்காத சந்தோஷம் அப்போதுதான் நடந்தது. 

ஒருநாள் பாலசந்தர் சார் என்னைக் கூப்பிட்டுப் பேசினார். ''கார்த்திக்கு ஒரு படம் பண்ணனும். நீ என் கூடவே இரு''னு சொன்னார். அந்த நேரத்தில் எனக்குப் பேஜர் ஒன்றை பாலசந்தர் சார் வாங்கிக் கொடுத்தார். அந்தப் பேஜருக்கு ரஜினி சாருடைய மெசேஜ் ஒன்று வந்தது. இவர் நம்மை எதற்குக் கூப்பிறார்னு பேசினால், ''ரமேஷ் கண்ணா, உன் படம் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'  பார்க்கணும்னு'' சொன்னார். உடனே ஏற்பாடு பண்ணிப் படம் போட்டுக் காட்டினேன். 

ரஜினி சார் என்கிட்ட, ''நம்ம அடுத்தப் படம் பண்றோம். நடிக்கிறீங்கனு'' சொன்னார். ''சார் நான் நடிக்கிறேன். அப்படியே உங்கப் படத்தில் இணை இயக்குநராய் வேலை பார்க்கிறேன். ஏன்னா, உங்க ஒரு படத்தில் வேலை பார்த்தால் நூறு படத்தில் வேலை பார்த்தற்குச் சமம்''னு சொன்னேன். அவர் சிரிச்சிக்கிட்டே, ஓகேனு சொன்னார். அந்தப் படம்தான் 'படையப்பா'.

'படையப்பா' படத்தில் ஒரு ஷாட் வரும். அது அப்பா ரஜினி கேரக்டர். அப்போது, கே.எஸ். சார் என்னைக் கூப்பிட்டு, ''டேய் இப்போது நீ என்ன பண்ணுற, ஷேரில் கோட் போட்டு ரஜினி மாதிரி உட்கார். நான் தூரத்திலிருந்து ஒரு ஷாட் எடுத்துக்குறேன்''னு சொல்லி என்னை உட்கார வைத்துவிட்டார். நான் ஷூட்டிங் ஸ்பாட் அலைச்சலில் எனக்கு வியர்த்து ஊத்துது.  கோட் போட்டு உட்கார்ந்துவிட்டேன். அடுத்த ஷாட்டைப் பார்த்தால் ரஜினி சார் அதே கோட் போட்டு அவருக்கு ஷாட்.

எனக்கு ஒரே வருத்தம். அய்யோ நாம போட்ட கோட் போட்டுக்கிட்டு ரஜினியா நடிக்கப்போறார்னு. ''டேய் நல்ல சென்ட் எதாவது இருந்தா அந்தக் கோட்டில் அடிங்கடானு''  சொல்லிட்டுத் திரும்புனா ரஜினி நிற்கிறார். ''என்ன ஆச்சு, ரமேஷ் கண்ணா. ஏன், டென்ஷனா இருக்க. இதற்கு எல்லாம் டென்ஷன் ஆகக்கூடாதுனு. கொடு அந்த கோட் போடுறேன்''னு வாங்கிப் போட்டு நடித்தார். அவரை மாதிரி ஒரு எளிமையான மனுஷனைப் பார்க்க முடியாது. 'படையப்பா' படத்தில் வரும் ''ஓ கிக் ஏறுதே'' பாட்டில் நானும், செந்திலும் குடிச்ச  எச்சில் கிளாஸை வாங்கி அவர் அப்படியேதான் குடித்தார். 

'கோச்சடையான்' படம் ரஜினியுடன் வேலைப் பார்த்தேன். அந்த நேரத்தில் அவருக்கு வசனம் எல்லாம் நான்தான் சொல்லிக் கொடுத்தேன். அப்போது ஒரு வசனம் வரும். நாசர் சொல்வார், ''ராணா உனக்கு வாய்ப்பு வராது''னு. அதற்கு ரஜினி உடனே ''வாய்ப்புகள் அமையாது நம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்''. இது நான் எழுதின டயலாக். அதைதான் ரஜினி படத்தில் பேசியிருப்பார். அந்த வசனம் அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. நிறைய மேடைகளில்கூட அந்த வசனத்தைப் பயன்படுத்துவார். அந்த வசனத்துக்காக என்னைப் பாராட்டியதோடு, அதைதான் படத்தின் போஸ்டரில் போட வேண்டும் என்றார். 

அதேமாதிரி இன்னொரு வசனம் எழுதிப் பேசச் சொன்னதுக்கு, 'பேசவே மாட்டேன்'னு சொல்லிட்டார். நான் ரஜினியிடம் கேட்டேன் ''ஏன் சார் இந்த வசனம் பேசலைனு''. ரஜினி சொன்னார், '' 'முத்து' படத்தில் நீ எழுதின டயலாக்கைப் பேசி நான் வம்பில் மாட்டிக்கிட்டது போதாதா''னு சொன்னார். 'முத்து' படத்தில் நான் எழுதின வசனம்தான் ''நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்''.  

அதேமாதிரி 'கோச்சடையான் ' படத்தில் இன்னொரு வசனம் எழுதினேன். 'ரத்தத்தின் ரத்தமே' அப்படினு . நாசர் சொல்வார் ''காலையில் நீ சூரியனே பார்க்க முடியாதுடா''னு. அதற்கு நான் ஒரு வசனம் எழுதி ரஜினிகிட்ட கொடுத்துப் பேசச் சொன்னேன். ''அந்தச் சூரியன்கூட என்னை கேட்டுத்தான் எழும்''னு ரஜினி, ''டேய் விளையாடாத''னு சொல்லிட்டு கடைசி வரைக்கும் பேசவே இல்லை . ஆனால், 'கோச்சடையான்' படத்தில் நான் நாகேஷ் கேரக்டரில் நடித்திருப்பேன். நாகேஷ் கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கும்னு நான் தான் சொன்னேன். அந்தக் கேரக்டருக்கு யாருமே செட் ஆகவில்லை. அதனால் நீயே நடினு கே.எஸ்.ரவிக்குமார் சார் சொன்னார். அந்தப் படத்தில் தீபிகா படுகோன் நடித்த முதல் காட்சியும் என்னுடன்தான். லண்டனில் ஷூட்டிங். ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லை. மறுநாள்தான் ஷூட்டிங் வருவார். என்ன பண்ணலாம்னு யோசித்த கே.எஸ்.சார் ''டேய் ரமேஷ் கண்ணா, நாகேஷ் கேரக்டர் ஷூட் பண்ணலாம். நீ மீசையை எடுத்துட்டு வா''னு சொல்லிட்டார். ரஜினி அடுத்தநாள் ஷூட்டிங் வந்தார். நான் ரஜினியிடம் சொன்னேன். ''சார் தீபிகாவுடன் தமிழில் முதலில் நடித்த ஹீரோ நான்தான்''னு. ரஜினி விழுந்து விழுந்து சிரித்தார்." என்றவரிடம் கமலைப் பற்றிக் கேட்டால், 

கமலுடைய 'அவ்வை சண்முகி'' படத்திலிருந்து கமல் சார் படங்களில் இருப்பேன். 'பம்மல் கே சம்பந்தம்' படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோது  கமல் இயக்குநர் மெளலி சார்கிட்ட சொன்னார். ''நீங்கள் இந்தப் படத்துக்கு சினேகா புக் பண்ணுறீங்களோ சிம்ரன் புக் பண்ணுகிறீர்களோ எனக்குத் தெரியாது ரமேஷ் கண்ணா கால்ஷீட் வேணும். ஏன்னா, மெட்ராஸ் பாஷை கரெக்டா ரமேஷ் கண்ணாதான் பேசுவான்'னு சொன்னார். 

நான் எனக்கு உலக சினிமா அறிவு இருக்குன்னு காட்டிக்கிறதுக்காகவே கமல் சார்கிட்ட 'ஜப்பான் டைரக்டர், அமெரிக்கா டைரக்டர்' இப்படித்தான் பேசுவேன். கமல் அவர்களைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் கரெக்டா சொல்வார். நான் வாயடைத்து நின்றுவிடுவேன். 'அவ்வை சண்முகி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு காலையில் இரண்டு மணிக்கு எல்லாம் வந்துவிடுவார். ஏன்னா, அவருக்கு மேக்அப் போடவே ஒரு நாலு மணிநேரம் ஆகும். அவருடைய அர்ப்பணிப்பு பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. 'அவ்வை சண்முகி' படத்தில் ஒரு காட்சியில் நானும் நடித்திருப்பேன். அந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நான் நடித்த காட்சி ஒன்றுக்கு எஸ்.பி சார் தெலுங்கில் எனக்கு டப்பிங் பேசியிருப்பார். எஸ்.பி என்னிடம் சொன்னார். ''ரமேஷ் கண்ணா, நான் கமல் தவிர யாருக்கும் தெலுங்கில் டப்பிங் பேசுனதில்லை. உன் நடிப்பு பிடித்திருந்தது. அதனால்தான் டப்பிங் பேசினேன்'' என்றார்." என்று கமலை பற்றிச் சொன்னவர் அடுத்தாக 'ப்ரெண்ட்ஸ்' படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தைத் தொடர்கிறார்.

'ஃப்ரெண்ட்ஸ்' படத்தின் ஷூட்டிங்  ஸ்பாட் கலகலப்பாக இருக்கும். ஷூட்டிங் முடிந்தவுடன் நான், விஜய், சூர்யா மூன்று பேரும் ஒண்ணா ரூமுக்குப் போய் போர்வை விரித்துப் படுத்துவிடுவோம். அப்போதுதான் சூர்யா, ஜோதிகாவைப் பற்றி எங்களிடம் சொல்வார். அதற்கு சூர்யாவையும் ஜோதிகாவையும் விஜய் கிண்டல் அடிப்பார். 'ப்ரெண்ட்ஸ்' ஷூட்டிங் சமயத்தில் கொடைக்கானலில் 'தெனாலி' ஷூட்டிங் போயிட்டு இருந்தது. நான் நேராக 'தெனாலி' ஷூட்டிங் போய் ஜோதிகாவைப் பார்த்து ''சூர்யா உங்களை ரொம்ப கேட்டார்''னு சொல்வேன். ஜோதிகா உடனே ''நானும் அவரை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க'' என்பார். சூர்யாகிட்ட போய் ''தங்கச்சி உன்னைக் கேட்டதா சொல்லுச்சுப்பா''னு சொல்வேன். இப்போவரைக்கும் சூர்யா என்னை மச்சான்னுதான் கூப்பிடுவார். 

'ப்ரெண்ட்ஸ்' படத்துக்கு இளையராஜா மியூசிக். அவர் சித்திக்கைக் கூப்பிட்டு, 'இந்தக் கேரக்டருக்கு ரமேஷ் கண்ணாதான் கரெக்ட்'னு சொல்லியிருக்கிறார். 'ஆதவன்' படத்துக்கு நான்தான் கதை எழுதினேன். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் சார் ''டேய் சூர்யாவுக்கு ஒரு படம் பண்ணனும். கதை ஏதாவது சொல்லுடா''னு சொன்னார். அதுதான் 'ஆதவன்' கதை. அந்தப் படத்தில் வடிவேல் கேரக்டருக்கு நான்தான் நடிக்கிறதா இருந்தது. வடிவேலு வந்ததும், என்னை சமாதானப்படுத்தி 'இளையமான்' கேரக்டரை உருவாக்கி, அதில் நடித்தேன்" என்றவரிடம் 'கமல் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறதே...' என்றால்,

''கண்டிப்பாக  வரட்டும். நிறைய பேரைப் பார்த்துவிட்டோம். இவர்கள் வந்தால் நல்லது பண்ணுவார்கள். பொதுமக்கள் பலர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ரஜினி வந்தாலும் நல்லது செய்வார். விஜய் வந்தாலும் சரி இவர்களைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். இவர்கள் எல்லோரையும் தாண்டி, அஜித் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஏன்னா, அவருக்குத் தமிழகத்தில் நிறைய மாஸ் இருக்கு. கமல், ரஜினி, விஜய், அஜித் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தாலும் நல்லது பண்ணுவார்கள். நாலு பேரும் ஒண்ணா வந்தாலும் சரி. தனித்தனியாக வந்தாலும் சரி. நல்லது நடக்கும். எதிர் எதிர்க்கட்சியாக இவர்கள் வந்தாலும் சரி, நிச்சயமாக அரசியலுக்கு வர வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, அர்விந்த் சுவாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு நான்தான் வசனம் எழுதுறேன். நேரம் ஆச்சு" என விடைபெற்றார் ரமேஷ் கண்ணா.