Published:Updated:

“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..!” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan

“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..!” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan
“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..!” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan

"இவங்கள்லாம் என்ன கமர்ஷியல் படம் எடுக்கறாங்க, எம் பையன் ஒரு கமர்ஷியல் படம் எடுத்திருக்கான். அதுதான் ஒரிஜினல் கமர்ஷியல் சினிமா" பொல்லாதவன் படம் பற்றி பாலுமகேந்திரா தன் நண்பருடன் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் இவை. அதுவே, வெற்றிமாறனிடம் 'உனக்குள்ள இவ்வளவு வயலன்ஸ் இருக்கும்'னு நினைக்கலடா என்று மட்டும்தான் கூறினார் என்பது வேறு கதை. சும்மா சூறாவளித்தனமான அடித்து நொறுக்கும் கமர்ஷியல் அல்ல, நியாமான... நிஜமான கமர்ஷியல் அது. அந்த கமர்ஷியல் சினிமா வந்து இன்றோடு பத்து வருடம் ஆகின்றன. ஆனால், இப்போது பார்த்தாலும் "இது எல்லாத்துக்கும் காரணம், நான் ரொம்ப ஆசப்பட்டு வாங்கின பைக்தான்னு சொன்னா நம்ப முடியுதா...." எனப் படம் முழுக்க வரும் வசனங்கள் அனிச்சையாக நம் சிந்தனைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். அது எல்லா கமர்ஷியல் படமும் செய்துவிட முடியாது. அதற்குள் உண்மை இருந்தால் மட்டுமே உள்ளே இழுக்கும். 

"Polladhavan is a commercial film. But Vetrimaran shows us, the commercial film doesn't mean it shouldn't have any logic behind it." என்று `பொல்லாதவன்' பற்றி `மூவிங் இமேஜஸ்' கிஷோர் தனது வீடியோ ஒன்றில் குறிப்பிட்டது முக்கியமாகப்பட்டது. நிறைய ஏரியாக்களில் நாம் பார்த்திருக்கக் கூடும். வேலைக்குப் போகும் ஒரு பேச்சுலர் அண்ணன் இருப்பார். அவர் தன் டூ வீலரை உயிருக்கும் மேலாக காதலிப்பார். தினமும் காலை தன் வீட்டு வாசலில் சென்டர் ஸ்டாண்டு போட்டு, நான்கு பக்கெட் தண்ணீரில் இரு ஆன்ட்டி டான்ரஃப் ஷாம்பூ பாக்கெட்டுகளை ஊற்றி கைவிட்டு கலக்கி, ஊரே வாய் பிளந்து பார்க்கும் அளவுக்குத் தேய்த்து தன் வண்டியைக் குளிப்பாட்டுவார். அந்த மாதிரி ஓர் இளைஞனைத்தான் பிரபுவாக வடிவமைத்திருப்பார் வெற்றிமாறன்.

இதுனூடே பொல்லாதவன் தொடங்கிய, வளர்ந்த கதை பற்றி சொல்ல வேண்டும். பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராய் இருந்த வெற்றிமாறன் அவர் இயக்கிய “அது ஒரு கனா காலம்” படத்தின் போது தனுஷிடம் ஒரு கதை சொல்கிறார். அது பிடித்து போனதும் ஒரு தயாரிப்பாளரிடம் வெற்றியை அனுப்பிவைக்கிறார் தனுஷ். அது “தேசிய நெடுஞ்சாலை 47” என்கிற ரோட் மூவி. (அதுதான் பின்நாள்களில் “உதயம் என்.எச். 4” ஆக சித்தார்த் நடிப்பில் வெற்றிமாறனின் நண்பர் மற்றும் உதவியாளர் மணிமாறன் இயக்கத்தில் வெளியானது.) ‘தேசிய நெடுஞ்சாலை 47’ ஸ்க்ரிப்ட் பிடிக்கவில்லை என்று வேறொரு ஸ்க்ரிப்ட்டை கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்தச் சமயத்தில்தான், வெற்றிமாறனின் நண்பர் ஒருவர் புதிதாய் வாங்கிய பைக் காணாமல் போகிறது. அதையே கதைக் கருவாய் வைத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்தான் “பொல்லாதவன்”. “கதை சரியில்லை” என்று ஒரு தயாரிப்பாளர் சொல்ல, “கதை ஓகே ஆனா..” என்று மற்றொரு தயாரிப்பாளர் சொல்ல, “கதை ஓகே.. ஷூட் போலாம்” என்று வேறொரு தயாரிப்பாளர் சொல்லி இரண்டு நாள் ஷூட்டுக்குப் பின் வேண்டாம் என்று வெளியே போக, இப்படிப் பலர் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். கிட்டத்தட்ட எட்டு தயாரிப்பாளர்கள் மாறியபின்புகூட மாறாமல் கூடவே இருந்த ஒரே நபர் `தனுஷ்'. 

படத்தில் “பஜாஜ் பல்சர்”தான் ஹீரோ. எனவே பஜாஜ் நிறுவனத்தை ஸ்பான்சர் செய்ய அணுகிய போது அவர்கள் மறுத்துவிட்டனர். தயாரிப்பாளரும் “வேற வண்டிய வெச்சுகோங்கப்பா.. என்ன ஆகிடப்போகுது” என்று சொல்ல, வெற்றிமாறனுக்கு மட்டும் பல்சரை மாற்றும் எண்ணம் இல்லவே இல்லை. அந்த சமயம், நிறைய பேரைக் கவர்ந்திருந்தது பல்சர். அதனால்தான் படத்தில் பல்சர் அவ்வளவு முக்கியம் என நம்பியிருந்தார். அதை உணர்ந்த வெற்றியின் மனைவி அவருக்கு புதிதாய் ஒரு பல்சரை வாங்கி தந்திருக்கிறார். இதை அறிந்த தயாரிப்பாளர் “என்ன யா? சொல்லகூடாதா?” என்று தானும் படத்துக்காக ஒரு பல்சரை வாங்கிதந்தார். இப்படி ஒரு பிடிவாதம்தான், படத்தில் வரும் பல்சரையும், அது பிரேக் பிடிக்கும் போது ஒலிக்கும் வசந்த முல்லை ட்யூனையும் நம் மனதில் பதியவைத்தது. 

படப்பிடிப்புத் தளத்தில் பல பிரச்னைகள். ஒருமுறை கோபத்தில் ஹீரோயின் திவ்யா ஸ்பந்தனாவை திட்டியிருக்கிறார் இயக்குநர். அவர் கோபித்துக்கொண்டு சென்று விட, “பட வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயமாக இருக்க, இப்பொழுது கிடைத்த ஹீரோயினையும் இப்படி திட்டி அனுப்பிவிட்டோமே. தயாரிப்பாளரிடம் என்ன சொல்வது... சொன்னால் கிடைத்த வாய்ப்பும் பறிபோய்விடுமோ” என்று வெற்றி யோசித்திருக்க, தயாரிப்பாளரோ “விடுப்பா.. போகுது. நாம வேற பொண்ண வெச்சு எடுத்துக்கலாம்” என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். பின்பு சமாதானம் செய்து திவ்யாவையே படத்தில் தொடர்ந்து நடிக்கவைத்தார்கள். 

வில்லன் “செல்வம்” வீடு மிகவும் எளிமையாக ஹவுசிங் போர்டில் அமைந்திருக்கும். “வில்லன் வீடு இப்படியா இருக்கும்? ஒரு பிரமாண்டம் வேணாமா?” என்று தயாரிப்புத் தரப்பில் கேட்டிருக்கிறார்கள். நிஜமாகவே வட சென்னையில் வசிக்கும் ஒரு பெரிய கையின் வீட்டை சென்று பார்த்து ரெஃபரன்ஸ் எடுத்து கட்டமைத்திருந்தார் வெற்றி மாறன். உண்மைதான் நம்மை உள்ளே இழுக்கும் என்று சொல்லப்படுவது இதைத்தான்.

“நீ கேளேன்.. நீ கேளேன்?” என்கிற காமெடி எழுத்து வடிவில் நன்றாக இருந்ததைப்போல் ஷூட் செய்யும்போது எடுபடவில்லையாம். அதனால் அதை வைப்பதா வேண்டாமா என்று பெரிய குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்னமும் அந்த வசனத்தை சொல்லிக்கொண்டுதான்  இருக்கிறார்கள். படத்தில் சந்தானம் செய்யும் ஒவ்வொரு காமெடியும் அவரே எழுதியவைதான். பிறகு “காமெடி போர்ஷன் கம்மியா இருக்கு” என்று தயாரிப்பாளர் தரப்பில் சொன்னதால் கருணாஸ், சந்தானம் அவர்களை வைத்து மீண்டும் ஷூட் செய்யப்பட்டது. கதையை மீறி பயணிப்பதில் உடன்படாத இயக்குநர் இறுதியில் அவற்றை நீக்கியிருக்கிறார். 

இப்போது படம் நம்மிடம் (பார்வையாளர்கள்) வழங்கப்படும், வேலை இருக்கிறதே. படத்தின் ரிலீஸ் நாள், அதாவது பத்துவருடத்துக்கு முன் இதே நாள். தீபாவளி அன்று படம் ரிலீஸ். கூடவே விஜய் நடித்த “அழகிய தமிழ் மகன்”, சூர்யா நடித்த “வேல்” என்று பலத்தப் போட்டி. முதல் நாள் `பொல்லாதவன்' பற்றி பெரிய பேச்சு எதுவும் இல்லை. ஆனால், வந்தது. படத்தில் சென்னைப் பாஷையில் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கிஷோர். “நான் டப்பிங் பேசினா தமிழ் சரியாக இருக்காது" என ஒதுங்கியவரை, "இல்ல நீங்கதான் பேசணும்" எனக் கூட்டி வந்து பேச வைத்திருந்தார் வெற்றி. படம் ரிலீஸ் ஆன பிறகு மதுரை தியேட்டர்களில் படம் பார்த்தபின், கிஷோருக்கு போன் செய்து, "இங்க எல்லாரும் 'செல்வம் மட்டும்தான் பக்காவா சென்னைத் தமிழ்ல பேசியிருக்கான்’னு கமென்ட்ஸ் குவியுது" என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன். கூடவே இரண்டாம் நாளிலிருந்து படம் பற்றிய பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. அந்த சமயத்தில் `யாரடி நீ மோகினி' படப்பிடிப்பில் இருந்தார் தனுஷ். படம்  ஹிட் என சொல்வதற்காக வெற்றிமாறன், தனுஷுக்கு போன் செய்திருக்கிறார். போனில் பட்டாசு சத்தம் முதலில் கேட்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து தனுஷின் குரல் சொன்னது “எனக்கு இன்னிக்குதான் தீபாவளி”.

கமர்ஷியல் படம் என்ற முத்திரை இருப்பதால் சொல்கிறேன். கோடம்பாக்கத்தில் பல உதவி இயக்குநர்களுக்கு கனவாக இருப்பது முதல் பட வாய்ப்பு. கமர்ஷியல் அந்தஸ்துக்காக படத்தின் டைட்டில் ஹிட்டான பழைய ரஜினி படத்திலிருந்து கடன் வாங்கப்பெற்றது. இன்றுவரை வெற்றி மாறனுக்கு இந்த டைட்டிலில் அந்தக் கதை வந்ததில் உடன்பாடில்லை. காமெடி ட்ராக் தனியாக வைக்கப்பட்டது. இன்னும் எத்தனை எத்தனையோ சமாதானங்கள். இருந்தபோதும் சினிமாவின் மீதான வெற்றிமாறனின் காதல், தீராத தாகம் படத்தில் டைரக்டர் டச்சாக இடம்பெற்றது. அந்த வெற்றிதான் வேறு எந்த சமாதானமும் இல்லாமல் ஆடுகளம் என்ற ஒரு க்ளாஸீக்கை நமக்குப் பெற்றுத் தந்தது.
பொல்லாதவன் பற்றி ஒவ்வொரு முறை பேசும் போதும் மருத்துவமனையில் கிஷோர் - தனுஷுக்கு இடையில் நடக்கும் உரையாடல் பற்றிக் கூறுவேன். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அந்தக் காட்சியில் நீங்கள் பார்ப்பது, அசல் எந்த கசடுகளும் இல்லாத அசல். அதனால்தான் பொல்லாதவன் ஓர் அசல் கமர்ஷியல் சினிமா.

வாழ்த்துக்கள் பொல்லாதவன் டீம்!

அடுத்த கட்டுரைக்கு