வெளியிடப்பட்ட நேரம்: 22:04 (08/11/2017)

கடைசி தொடர்பு:12:34 (09/11/2017)

டிசம்பரில் அறிவிக்கிறார் ரஜினி, ஜனவரியில் ஆரம்பிக்கிறார் கமல்! இந்த வார ஆனந்த விகடனில்... 

ந்த வார ஆனந்த விகடனில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் கமல் வழக்கம்போல் புதிய புயலை மையம்கொள்ள வைத்துள்ளார். அவர், சமீப நாள்களில் சென்னைப் புறநகரில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் மருத்துவம் மற்றும் அதன் துணைப் படிப்புகளுக்கான கல்லூரிகளின் கலைவிழா நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அடுத்து விவசாய சங்கங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். பிறகு சமூகப் போராளிகளைத் தன் இயக்கத்தாருடன் சந்திக்கவைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதன்பிறகு தன் பிறந்தநாளில் மருத்துவ முகாம், ‘மையம் விசில்’ செயலி அறிவிப்பு நிகழ்ச்சி என்று பரபரப்பாக வலம் வருகிறார். இந்த நான்கு நிகழ்வுகளைச் சுற்றியே இந்தவார ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரின் கன்டென்ட் அமைந்துள்ளது. அதனுடைய ஒரு டீசர்தான் இது. 

ரஜினி, கமல்

செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கமலிடம் ஒரு மருத்துவ மாணவர், “‘நம்மவர்’ படத்தில் பேராசிரியர்களை நல்லவிதமாகக் காட்சிப்படுத்தியிருந்தீர்கள். ஆனால், பெரும்பாலான திரைப்படங்களில் பேராசிரியர்களை காமெடியனாகவோ, வில்லத்தனத்துடனோதான் காட்டுகிறார்கள். ஏன்?” என்று கேட்டார். 

அதற்கு கமல், “சினிமாவில் நிறைய மாணவர்கள் இருப்பதுகூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நானே மாணவனாக இருந்தபோது ஆசிரியர்களைக் கேலி செய்ததுண்டு. அது மாணவர்களுக்கே உரித்தான குணம். என் பள்ளியில் ஓர் ஆசிரியர், அட்டகாசமாக ஆங்கிலம் கற்பிப்பார். அவருக்கு யானைக்கால் வியாதி இருந்தது. ‘கஜபாதம்’ என்று சம்ஸ்கிருதத்தில் பெயர் வைத்தோம். ஆனால், போகப்போக ஆசிரியர்கள்மேல் அன்பு வந்துவிடும். என்ன கொஞ்சம் லேட் ஆகும். நானே 40 வயதில்தானே ‘நம்மவர்’ படமெடுத்தேன்!” என்றார். 

ரஜினி, கமல்

அடுத்து, “தொலைநோக்குப் பார்வையோடு பயணிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும், அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களுக்கும் நீங்கள் ஒரு வழிகாட்டுதலாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார் ஒரு மாணவர். அதற்கு, “வழி தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். யாருக்குமே வழி தெரியுமென்று சொல்ல முடியாது. உங்களுக்கு வழிகாட்டும் தகுதி எனக்கிருப்பதாகக் கருதவில்லை. இது ஒரு தொடர்கதை. முடிவிலி. பயணித்துக்கொண்டேதான் இருக்கவேண்டும். பாதை தெரியும்வரை.” என்று சொன்ன கமலுக்கு செம அப்ளாஸ். 

இந்தக் கேள்விகளைத் தவிர, “கடந்த 50 வருடங்களில், உங்கள் ரசிகர்களிடமிருந்து கிடைத்த மறக்கமுடியாத விமர்சனம். ரியாக்‌ஷன் என்ன?”, “உங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவர்கள். நீங்கள் மருத்துவராக வேண்டும் என நினைத்தது உண்டா? அந்த வாய்ப்பு இப்போது உங்கள் முன் இருந்தால் டாக்டர், ஆக்டர் இரண்டில் எதைத் தேர்வு செய்வீர்கள்?”... என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இந்த வார ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளன. 

ரஜினி, கமல்

இவற்றைத்தவிர தமிழக மக்களுக்கு முறையான பயிற்சியோ, விழிப்பு உணர்வோ கொடுக்கப்படாததால் முடங்கிப்போயிருக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றியும் எழுதியுள்ளார். “அரசை கேள்விகேட்டுக்கொண்டே இருக்கிறாயே... உன் நோக்கம்தான் என்ன? என்று சிலர் என்னைப்பார்த்து கேட்கலாம். அவர்களை பதில் சொல்லும் இடத்தை நோக்கி நகர்த்துவது. அதன் மூலம் அவர்களைச் செயல்பட வைப்பது. இதுதான் எங்களின் நோக்கம். ‘இல்லையில்லை... இதன்மூலம் பதிலளிக்கும் இடத்தை நோக்கி நீ நகர முயற்சி செய்கிறாய்’ என்ற சிலரின் சந்தேகப்பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆம். முடிந்தால் செய்யுங்கள். இல்லையேல் எங்களையாவது செய்ய விடுங்கள்” என்று இந்தவாரத் தொடரை முத்தாய்ப்பாக முடித்துள்ளார். 

ந்தவார விகடனில் இன்னொரு சர்ப்ரைஸ், ரஜினியின் அட்டைப்படத்துடன் கூடிய, ‘வந்துட்டேன்னு சொல்லு’ என்ற தலைப்பில் வந்துள்ள அவரின் அரசியல் நகர்வுகள் பற்றிய கட்டுரை. பெங்களூரில் ஒரு சாதாரணப் பேருந்து நடத்துநராக இருந்தவர் தன் வேலையைத் துறந்து சினிமா ஆர்வத்தில் சென்னை வந்து ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்று பின் இயக்குநர் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வில்லனாக நடித்து ஹீரோவாகி, சூப்பர் ஸ்டாராகி, அந்த இடத்தைப் பல ஆண்டுகளாக தக்கவைத்து இன்று இந்தியாவின் பெரிய பட்ஜெட் படமான ‘2.0’வில் நடித்து முடித்து... இப்படி வளர்ந்து உயர்ந்து நிற்கிறார். அவர் கடந்த கால் நூற்றாண்டாக   ‘அரசியலுக்கு வருவேன்... வருவேன்...’ என்று கூறிக்கொண்டிருப்பது மட்டுமே அவரைப் பற்றி சிலர் வைக்கும் விமர்சனம். அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், ‘இம்முறை நிச்சயம் வருவார்’ என்கிறார்கள். அதற்கான காரண காரியங்களை அலசுகிறது இந்த அட்டைப்படக் கட்டுரை. 

ரஜினி, கமல்

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வு, எடப்பாடி அரசின் நிலையற்ற தன்மை, கலகலத்துப்போய் உள்ள அ.தி.மு.க, தனக்கு முன்னதாக களத்துக்கு வந்துள்ள கமல்ஹாசனின் சுறுசுறுப்பு, நடிகர் விஜய்யின் வளர்ச்சி, அனைத்துக்கும் மேல் முன்பைவிட திடமாக இருக்கும் தி.மு.க-வின் அடிப்படை கட்டமைப்பு... என்று தமிழக அரசியலின் இன்றைய சூழலை ரஜினி உணர்ந்தே இருக்கிறார். இந்த ஆட்சி தொடருமா, கவிழுமா, கவிழ்க்கப்படுமா என்ற அரசியல் சதுரங்கத்தைப் பற்றி இவருக்கும் ஒரு கணிப்புக் கணக்கு உள்ளது. அந்தக் கணக்கு கிட்டே நெருங்கும்போதுதான் இவரின் அரசியல் கட்சி தொடக்கம் இருக்கும்... என்று செல்கிறது அந்தக் கட்டுரை.

இதெல்லாம் டீசர்தான்... இவற்றைத்தவிர நடிகர் தனுஷ் பற்றிய 25 ஆச்சர்ய தகவல்கள் சொல்லும் ‘தனுஷ்-25’, இயக்குநர் சுசீந்திரனின் ஃபேமிலி பேட்டி... என பல சுவாரஸ்யங்களுக்கு ஆனந்த விகடன் வாங்கி வாசிங்க. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்