Published:Updated:

“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..!” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி

“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..!” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி
“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..!” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி

“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..!” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி

‘என்ன... அந்தப் படங்கள்ல இவர் நடிச்சிருந்தாரா? நான் பாக்கவேயில்லையே...' என்று யோசிக்குமளவுக்கு மைனர் ரோல்களில் நடித்துவந்த இவரை உலகுக்கு அடையாளம் காட்டியது பரோட்டாதான். இதன்பிறகு, பல படங்களில் தன் வசனத்தாலும் உடல் மொழிகளாலும் முக பாவனைகளாலும் பட்டி தொட்டியெங்கும் பட்டயைக்கிளப்பி, சமீபத்தில் புஷ்பா புருஷனாக அதகளம் செய்தவர் சூரி. தற்போது பல படங்களில் பிஸியாக வலம்வரும் இவரிடம் ஒரு ஜாலி சாட்...

'இப்படை வெல்லும்' படத்துக்குள் எப்படி வந்தீங்க?

“என் பங்க்ஸ் கெளரவ் எடுத்த முதல் படத்துல குறிப்பிட்ட கால்ஷீட் கொடுத்து நடிச்சிருந்தேன். அப்புறம் கொஞ்சம் கேப் விட்டு என்னை கூப்பிட்டாங்க. அப்போ நான் வேற ஒரு படத்துல நடிச்சிட்டு இருந்தேன். ரெண்டாவது படமான 'சிகரம் தொடு' படத்துல தேதி பிரச்னைகளால நடிக்க முடியாம போச்சு. அப்போவே 'என் மூணாவது படத்துல கண்டிப்பா நீங்க நடிக்கணும்'னு சொன்னார். 'எப்போனு மட்டும் சொல்லுங்க. கண்டிப்பா நடிக்கிறேன்'னு சொன்னேன். அதே மாதிரி உதயநிதி ப்ரதரும் எப்போ சந்திச்சுகிட்டாலும் கண்டிப்பா ஒன்னா ஒரு படம் நடிக்கணும்னு சொல்லி பேசிட்டே இருப்போம். அதே மாதிரி அமைஞ்சுது. எதிர்பார்த்த ஹீரோ, டைரக்டர் ரெண்டு பேருமே கிடைச்சாங்க. இந்த வாய்ப்பை விடக்கூடாதுனு கப்புனு உள்ளே வந்துட்டேன்.’’

நீங்களும் உதயநிதியும் தொடர்ந்து மூணு படங்கள்ல நடிச்சுட்டீங்க. இந்த ஹாட்ரிக் கூட்டணி பத்தி சொல்லுங்க...

“நாங்க முதன் முதலா கமிட்டானது இந்தப் படத்துலதான். அப்புறம், தளபதி பிரபு இயக்கத்துல 'பொதுவாக எம்மனசு தங்கம்', கடைசியாதான் எழில் சாரோட 'சரவணன் இருக்க பயமேன்' நடிச்சோம். ஆனா, அப்படியே தலைகீழா ரிலீசாச்சு மூணு படங்களும். இயக்குநர் வேறவேறயா இருந்தாலும் ஹீரோ ஒன்னுதான். தொடர்ந்து மூணு படங்களிலுமே நடிக்க ஹீரோவும் ஒத்துக்கணும். ஏன்னா, அடுத்தடுத்து படங்கள் பண்றதுனால, போஸ்டர் பார்த்துட்டு ஒரே மாதிரி இருக்கும்னு மக்கள் நினைக்க வாய்ப்பிருக்கு. ஹீரோக்கள் இந்த மாதிரி விஷயங்கள்ல கவனமா இருப்பாங்க. ஆனா, உதய் ப்ரதர், 'அண்ணே இருக்கட்டும். நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து பண்றோம்'னு சொன்னார். உண்மையா, அவர் கூட அடுத்தடுத்த படங்கள்ல வொர்க் பண்ணது ரொம்ப சந்தோசமா இருக்கு.’’

இந்தப் படத்துல சூரியை வித்தியாசமா காட்டியிருக்காங்களாமே...

'’எங்க கூட்டணில இது ஹாட்ரிக் படமா இருக்கும். ஆனா, ஹாட்ரிக் நடிப்பா கண்டிப்பா இருக்காது. ஏன்னா, எழில் சார் படம் என் ரெகுலர் நடிப்பு இருக்கும். 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்துல பொன்ராம் சார் படத்துல இருக்கமாதிரி கொஞ்சம் கமர்ஷியலா இருக்கும். ஆனா, இந்தப் படத்துல என்னை நானே புதுசா பார்க்குறேன். மத்த படங்கள்ல நான் நடிச்சமாதிரி டயலாக்கோ பன்ச்சோ இதுல இருக்காது. காமெடினு இல்லாம ஒரு கேரக்டர் ரோல் பண்ணிருக்கேன். படம் முழுக்க நான் சீரியஸா வருவேன். ஆனா, ஒவ்வொரு சீனையும் ஆடியன்ஸ் ரசிப்பாங்க. புது சூரியை மக்கள் பார்ப்பாங்க. எனக்கும் இது மாதிரி காமெடியிலேயே வித்தியாசமா பண்ணணும்னு ரொம்ப ஆசை. இது மாதிரி யாராவது கதை சொன்னாங்கன்னா வேற எதையும் எதிர்பாக்காம உடனே நடிக்கப் போயிடுவேன்.’’
 

 உதயநிதிக்கும் உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க...

'’அவர் எவ்ளோ பெரிய பின்னணியுடைய குடும்பத்திலிருந்து வந்த பிள்ளை. அதனால, யார்கிட்டயும் ரொம்ப அதிகமா வெச்சுக்க மாட்டார், பழகமாட்டார்னுதான் நான் நினைச்சேன். ஆனா, இந்த மூணு படங்கள் மூலமா ஒரு வருஷமா அவருக்கூட ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன். இப்போ எப்படி பழகுறாரோ அப்படிதான் முதல் சந்திப்பிலேயும் பழகினார். இவரை மாதிரி மத்தவங்களை மரியாதையுடன் நடத்த முடியாது. அதே போல, எட்டு மணிக்கு ஷூட்னு சொன்னா, 7.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து இருப்பார். டைமிங்ல கில்லி. உதவி செய்யுற மனப்பான்மையைப் பார்த்து அசந்து போயிருக்கேன். சமீபத்துல எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல ஆறு மாசம் வெச்சிருந்தோம். அப்போ இந்த விஷயம் தெரிஞ்சவுடனே, அவருக்குத் தெரிஞ்சவங்க கிட்டலாம் சொல்லி டாக்டர்கிட்ட பேசுவார். ஒரு நாள் நான் டாக்டருக்கு போன் பண்ணி, 'அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு?'னு கேட்டா, 'நல்லா இருக்கு சார். இப்போ தான் உதய் சார் பேசுனார்'னு சொல்லுவாங்க. அடுத்து அண்ணனுக்கு போன் அடிச்சு அப்பா பத்தி கேட்டா, 'காலையிலதான் உதய் சார் பேசுனார், அப்போ நீ கூட இல்லையா?'னு கேட்பாங்க. அந்தளவு ரொம்ப அக்கறையா இருப்பார். இதே மாதிரி பலருக்கு உறுதுணையா இருந்திருக்கார். உதவி செய்யுறதோட நிறுத்தாம அது சரியா அவங்களுக்கு போய்ச்சேருதானு வாட்ச் பண்ணுவார். அவரோட எண்ணத்துக்கே அவர் எங்கேயோ போயிடுவார். என் தம்பி சிவகார்த்திகேயன் கூட நடிக்கும்போது எப்படி உணர்ந்தேனோ அப்படிதான் உதய் ப்ரதர் கூட இருக்கும்போதும் உணர்ந்தேன்.’’

படத்துக்குப் படம் உங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட எப்படித் தயார்ப்படுத்திக்குறீங்க? 

“கதைதான் நம்மளை மாத்தணும். ஒரு கிராமத்து படத்துல கைலி கட்டி  நடிச்சுட்டு அடுத்த கிராமத்துல படத்துல கோட் சூட் போட்டு நடிக்க முடியாது. எதார்த்த கிராம மக்களுடைய வாழ்வாதாரம், இயல்பு எப்படியோ அப்படிதான் நடிக்க முடியும். என்ன அதுல மீசை இல்லைனா இந்தப் படத்துல மீசை வெச்சுக்கலாம், அதுல லுங்கி கட்டுனா இதுல அலுக்கு வேட்டி கட்டிக்கலாம் அவ்வளவுதான். மத்தபடி, போன படத்துல ஆழமா ரீச்சான ரியாக்‌ஷன்களைத் தவிர்த்துட்டு புதுசா நடிக்கலாம். ஸ்கிரிப்ட்டும் டயலாக்கும்தான் என்னை அந்த கதாபாத்திரமாவே மாத்தும். ஒரு சில மாடுலேஷனை வேணா மாத்தலாமே தவிர கதையும் கன்டென்ட்டும்தான் நம்மளை வித்தியாசப்படுத்தும்.’’

ஸ்கிரிப்ட்ல இல்லாம ஸ்பாட்ல பேசி நல்ல ஹிட்டான டயலாக்குகள் என்னென்ன?  

“அது நிறைய இருக்குங்க. குறிப்பிட்டு சொல்லணும்னா, 'ரஜினிமுருகன்' படத்துல ஆடி கார் ஷோ ரூம்ல நடக்குற சீன்ல, அந்த மேனேஜர்கிட்ட 'இவ்ளோ அழகா இங்கிலீஷ் பேசத் தெரிஞ்ச உனக்கு அதை யார்கிட்ட பேசணும்னு தெரியலை பாத்தியா'னு சொல்ற டயலாக். அப்புறம் காரை எடுத்து ரவுண்ட் போகும்போது, அந்த கார் ஓட்டையில எழுந்திரிச்சு என் தம்பி கார்த்தி மட்டும் 'எங்க அப்பா வந்து கேட்டா, ஆடி கார்ல ஆரப்பாளையம் வரைக்கும் போயிருக்கேனு சொல்லுங்க'னு பேசுறதுதான் ஸ்கிரிப்ட். உடனே நான் எழுந்து, 'டீக்கடைக்கார அண்ணே, அவர் வந்து கேட்டா ஆடி கார்ல கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிருக்கேன்னு சொல்லுங்க'னு சொல்லுவேன். அவர் என்னனே புரியாம யாருனு கேப்பார். அதுக்கு 'அட யாரும் கேட்கமாட்டாய்ங்கடா. நீயா எவன்டயாச்சும் சொல்லுடா'னு பேசுனதெல்லாம் ஸ்பாட்ல அடிச்சுவிட்டதுதான். இதுக்கெல்லாம் அந்தந்த இயக்குநர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.’'
 

முன்பைவிட இப்போ கொஞ்சம் கலர் ஆகிட்டீங்களே...

’சந்தோசத்துல ஒரு பூரிப்புல கூட இருக்கலாம். அப்போ வறுமை, பசியும் பட்னியுமோட சினிமாவுக்காகப் போராடிகிட்டு இருந்தோம். இப்போ கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சு மக்கள் மத்தில பேரும் புகழும் கிடைச்சுருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்கு. சந்தோசம் மட்டும் இருந்தா காக்கா கூட கலராயிரும்.'’

திரைக்குப் பின் சூரி எப்படி? 

'’நான் எப்பவுமே ரொம்ப ஜாலியான ஆளு. நீங்க ஸ்கிரீன்ல பாக்குறதைவிட டபுள் மடங்கு வெளியே இருப்பேன். அதைத்தான் வெளிப்படுத்துறேன். என் கேரக்டர்ல பாதியைத்தான் ஸ்கிரீன்ல பாக்குறீங்க. இன்னும் அம்பது சதவிகித சூரி உள்ள இருக்கான். அவனை இனி வரும் காலங்கள்ல வெளிக்கொண்டுவரணும். எனக்கு நண்பர்கள் அதிகம் ஊர்லையும் சரியும் சென்னைலயும் சரி. அவங்கிக்கிட்ட இருந்துதான் நிறைய கத்துக்கிட்டேன். இன்னமும் ஊருக்குப் போனா, அவங்ககூடதான் அதிக நேரம் இருப்பேன். இன்னொன்னு சொல்லட்டுமா நான் ஒரு தனிமை விரும்பி.  ஷூட்டிங்காக வேற எங்கயாச்சும் போயிட்டா ரூம்ல நான் மட்டும் டிவி பார்த்துட்டு தனிமையா இருப்பேன்.’’

மதுரையில உங்க ஹோட்டலை சிவகார்த்திகேயன் திறந்து வெச்சுருக்காரே...

“ஆமாங்க, அம்மன் ரெஸ்டாரென்ட். அதுக்கு நானும் என் குடும்பமும் சிவாவுக்குத்தான் நன்றி சொல்லணும். சினிமாக்குள்ள வந்து நான் எவ்ளோ பணம், புகழ்னு சம்பாதிச்சேன்னு தெரியலை. நான் சம்பாதிச்ச ஒரு விவரிக்க முடியாத, அளக்க முடியாத ஒரு சொத்துன்னா அது என் தம்பி சிவகார்த்திதான். அந்தக் கடை திறக்க என் குடும்பத்திலிருந்து யார் கூப்பிட்டிருந்தாலும் கண்டிப்பா வந்திருப்பார். அவர்கிட்ட பிடிச்சதே அந்த விட்டுக்கொடுக்காத பாசம்தான். ஏற்கெனவே, மூணு கடைங்க இருக்கு. முதல்முறையா ஒரு பெரிய ஹோட்டலா ஆரம்பிச்சது இதுதான். என் குடும்பத்தைப் பத்தி எல்லாமே தம்பிக்குத் தெரியும். 'அண்ணே.. இன்னும் எதாச்சும் பண்ணனும்ணே. அவங்களுக்கு நம்ம சப்போர்ட் பண்ணுவோம்ணே'னு சொல்லிட்டே இருப்பார். என்னைவிட என் குடும்பத்து மேல அக்கறை எடுத்துப்பார். 'நீங்க கவலைப்படாதீங்கணே. நான் கண்டிப்பா வர்றேன். முடிஞ்சா நீங்க அங்க இருங்க. இல்லை ஷூட்டிங் போங்க நான் பாத்துக்குறேன்'னு எங்க குடும்பத்துக்காக, ராஜஸ்தான்ல ஷூட்ல இருந்த மனுஷன் மதுரை வந்தாப்ள. பாத்தீங்களா நான் எவ்ளோ பெரிய சொத்தை சம்பாதிச்சு வெச்சுருக்கேன்னு.’’

படங்கள்ல டபுள் மீனிங் வசனங்கள் அதிகமா வர ஆரம்பிச்சுடுச்சு. அதை எப்படிப் பார்க்குறீங்க?

'’எனக்கு இதுல உடன்பாடு இல்லை. நான் பேசுன வசனங்கள்ல எங்கேயாச்சும் டபுள் மீனிங் வந்தால் நான் ஃபீல் பண்ணுவேன். டபுள் மீனிங் வசனங்கள் இப்ப மட்டுமல்ல. அந்தக் கால புராண நாடகங்கள் காலத்துல இருந்தே இருக்கு. அப்போல்லாம் ஜென்ட்ஸைவிட லேடீஸ்தான் என்ஜாய் பண்ணி பார்ப்பாங்க. அந்த மாதிரியான வசனங்கள் பளிச்சுனு நேரடியா இல்லாம முகம் சுளிக்க வைக்காம, யாரையும் காயப்படுத்தாம இலைமறை காயா இருந்தா ஓகே' என்றவர் ப்பாய்..ஜீ யூ என்றபடி விடைபெற்றார்.

அடுத்த கட்டுரைக்கு