Published:Updated:

''7ஜி ரெயின்போ காலனி அனிதாவா ஏன் நடிக்க முடியாதுனு சொன்னேன் தெரியுமா?’’- ரகுல்ப்ரீத் சிங் #VikatanExclusive

பா.ஜான்ஸன்
ப.தினேஷ்குமார்
''7ஜி ரெயின்போ காலனி அனிதாவா ஏன் நடிக்க முடியாதுனு சொன்னேன் தெரியுமா?’’- ரகுல்ப்ரீத் சிங் #VikatanExclusive
''7ஜி ரெயின்போ காலனி அனிதாவா ஏன் நடிக்க முடியாதுனு சொன்னேன் தெரியுமா?’’- ரகுல்ப்ரீத் சிங் #VikatanExclusive

"என்னது வெல்கம் பேக் டூ தமிழ் சினிமாவா... `என்னமோ ஏதோ' படத்துக்குப் பிறகு தெலுங்குப் படங்கள்ல அடுத்தடுத்து நடிக்க வேண்டியிருந்தது அதனால தமிழ்ல நடிக்க முடியல, அதுக்கு வெல்கம் பேக்லாம் ஓவரோ ஓவர்" என ஆரம்பத்திலேயே கலவரமாகிறார் ரகுல் ப்ரீத் சிங். "உங்களுடைய பெயர்..." எனக் கேட்க ஆரம்பிக்கும் போதே, "ஹையோ அதை ஏன் கேட்கறீங்க, ராகுல் ப்ரீத் சிங், ராகுல் ப்ரீத்தி சிங்னு டிசைன் டிசைனா என் பேரைப் பயன்படுத்துறாங்க. என்னோட பேரு ரகுல் ப்ரீத் சிங், நீங்க ரகுல்னு மென்ஷன் பண்ணாக் கூட போதும். ஆனா, கரெக்ட்டா பயன்படுத்துங்க" என ஆரம்பித்ததுமே ஒரு ஸ்வீட் கண்டிஷனை வைத்தார்.

’’ஏன் தமிழ்ல இவ்வளோ கேப்னு கேக்கறாங்க. எனக்கு இது கேப்னு தோணல. ஏன்னா, நான் ஒண்ணும் சும்மா வீட்ல இருக்கல. ஒரு படத்துக்குப் பிறகு இன்னொன்னு வரிசையா பேக் டூ பேக் தெலுங்கு சினிமா வாய்ப்புகள் வரும்னு நானே எதிர்பார்க்கல. அதனால தமிழ்ல நடிக்கலையே தவிர வேற ஒண்ணும் காரணம் இல்ல. `ஸ்பைடர்' படம் மூலமா திரும்ப தமிழ்ல நடிக்க வந்தது சந்தோஷமா இருந்தது. நிறையப் பேர் பாராட்டினாங்க.’’

தெலுங்கில் தொடர்ந்து 12 படங்கள் எங்க பார்த்தாலும் நீங்கதான். தொடர்ந்து நடிச்சிட்டே இருந்த அனுபவம் எப்படி இருந்தது?

''செம்ம சூப்பரான அனுபவம் அது. எனக்குத் தொடர்ந்து வேலை செய்திட்டே இருக்கறது ரொம்பப் பிடிக்கும். அதுவும் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபுனு திறமையான, பெரிய ஹீரோக்களுடைய படங்கள், யார்தான் மிஸ் பண்ணுவா?. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம் கொடுத்தது. ரொம்பப் புதுசான அனுபவம் `ஸ்பைடர்' படம். ஏன்னா அது பைலிங்குவல். தெலுங்குல ஷூட் பண்ணும் போது எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. அதுவே தமிழ்னா வசனம் பேசும் போது சில வார்த்தைகள தெலுங்குல பேசிடுவேன். எனக்கு தமிழ் பேசத் தெரியும். ஆனா, சில வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தை உடனே ஞாபகத்துக்கு வராது. அதைவிட சிரமம் டான்ஸ்தான். ஒரு பாட்டுக்கு ஆடப் போறீங்க, மியூசிக் மட்டும்னா ஓகே. ஆனா, லிப் மூவ்மென்ட் இருந்ததுனா, அந்த ஸ்டெப்பை தமிழுக்கு ஒரு முறை, தெலுங்குக்கு ஒரு முறைனு ஆடணும். அதை பெர்ஃபக்டா கொடுக்கணும். பைலிங்குவல் ரொம்பப் புது அனுபவமா இருந்தது. ஆனா, அந்தப் படங்கள் மூலமா நிறைய பாராட்டுகள் கிடைச்சது. ரசிகர்களுடைய அன்பும் கிடைச்சது.'' 

`தீரன் அதிகாரம் ஒன்று' வாய்ப்பு எப்படி வந்தது? 

'' 'சதுரங்க வேட்டை' படம் முன்னாடியே பார்த்திருக்கேன். படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதற்கப்புறம் 'தீரன் 'படத்தில நடிக்கிற வாய்ப்பு வந்த உடனேயே ஓகே சொல்லிட்டேன். என்னைத் தமிழ்ப் பொண்ணா அவ்வளவு அழகா காமிச்சிருக்காங்க. ப்ரியாவுக்கும் - தீரனுக்கும் உள்ள ரொமான்ஸ்  போர்ஷன் ரொம்ப அழகா இருக்கும். படத்தில் என்னோட பேரு ப்ரியா.''

கமர்ஷியல் பட ஹீரோயின்களுக்கு ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்றதுக்குச் சிரமமானதா இருக்கும். ஒவ்வொரு படத்திலும் உங்களை வித்தியாசமாகக் காட்ட எவ்வளவு மெனக்கெடுறீங்க?

''அது எனக்கு வர்ற ரோல்லையே தெரிஞ்சுடும். நான் நிஜத்தில் சிட்டி பொண்ணு. ஆனா, `ராரண்டோய் வீடுக்கி சுட்டம்'னு ஒரு தெலுங்கு படத்தில் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பொண்ணா நடிச்சிருப்பேன். அதே மாதிரி தீரன் படத்திலும் வித்தியாசமான ரோல்தான். என்னோட பாடி லாங்குவேஜ் முதற்கொண்டு நிறைய விஷயம் மாத்திக்க வேண்டியிருந்தது. நடிப்புங்கறது யாரும் சொல்லிக்கொடுத்து வரவழைக்க முடியாது. நாமளே வளர்த்துக்க வேண்டியதுங்கறது என்னுடைய நம்பிக்கை. நானே பல நபர்களிடமிருந்து கத்துக்கறேன். உணர்வுகள, கேமிராவா ஃபேஸ் பண்றதுல என ஒவ்வொண்ணா கத்துக்கிட்டிருக்கேன். நான் இந்த ரோலுக்கு செட் ஆக மாட்டேன்னு ஒரு பேச்சு எழாத அளவுக்கு எல்லாக் கதாபாத்திரத்துக்கும் பொருந்துவதற்கு உழைக்கறேன்.'' 

கதாநாயகியை மையப்படுத்தி நிறைய படங்கள் வருது. அதுமாதிரியான படங்களில் நடிக்க விருப்பமிருக்கா?

''அந்த மாதிரி வாய்ப்பு வந்தா, `ஒய் நாட்?'. கண்டிப்பா நடிப்பேன். கதாநாயகியை மையமா வெச்சுனு இல்ல, நடிக்கறதுக்கு ஸ்கோப் உள்ள படம்னாலும் நடிப்பேன். `ராஜா ராணி' எடுத்துகிட்டீங்கனா அதுல எல்லாருக்குமே சமமான ரோல் இருக்கும். எல்லாருடைய நடிப்பும் பேசப்பட்டது. அந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசை. இப்போ அந்த மாதிரி படங்கள் நிறைய வர ஆரம்பிச்சிருக்கு.'' 

இப்போ பிஸி ஹீரோயின் நீங்க. ஆனா, ஆரம்பத்தில் பட வாய்ப்பு வரும்போது மறுத்தீங்களாமே?

''நான் பதினெட்டு வயசிலயே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அதைப் பார்த்திட்டு வந்த வாய்ப்புதான் `கில்லி'னு ஒரு கன்னடப் பட வாய்ப்பு. அது `7ஜி ரெயின்போ காலனி' படத்துடைய ரீமேக். அந்தப் படத்தை ரெஃபரன்ஸுக்குப் பார்த்தபோதுதான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு ஒவ்வொரு ரீஜனுக்கும் ஒரு சினிமா இருக்குன்னே தெரிஞ்சது. படிச்சது ஆர்மி ஸ்கூல்ங்கறதால, சினிமா அவ்வளவா தெரியாது. சௌத் இந்தியன் சினிமான்னா ஒரு இன்டஸ்ரினுதான் நினைச்சிட்டிருந்தேன். மறுத்ததுக்குக் காரணம் என்ன தெரியுமா? நீங்க சொன்னா நம்பவே மாட்டீங்க, அவங்க எனக்குக் கால் பண்ணி "நாங்க உங்களுடைய டேட் ஆஃப் பெர்த் பார்த்தோம். அதை வெச்சுப் பார்க்கும் போது, நீங்க வருங்காலத்தில் பெரிய நடிகையா வருவீங்கனு தெரிஞ்சது. அதனால நீங்க இந்தப் படத்தில் நடிக்கணும்னு விரும்பறோம்"னு சொன்னாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நான் வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா, அவங்க எங்க வீட்ல எல்லாம் பேசி, `7ஜி ரெயின்போ காலனி' பட சீடி அனுப்பி வெச்சாங்க. நான் படத்துடைய க்ளைமாக்ஸ் பார்த்திட்டு பயங்கரமா அழுது, நான் அந்த க்ளைமாக்ஸ் பண்ணவே மாட்டேன்னு அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதனப்படுத்தினாங்க. ஆனா, எனக்கு ஒரு ஐடியா, நாம ஏன் சினிமால வர்ற காசை பாக்கெட் மணியா வெச்சுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. `தடையற தாக்க' படத்தில் நடிச்சதும் அப்படித்தான். அதில் நான் ரொம்ப சின்ன ரோல். ஆனா, அப்போ எனக்கு படத்துடைய இயக்குநர் யாரு நடிகர் யாருனு எந்த ஐடியாவும் இல்ல. அப்படி ஆரம்பிச்ச ட்ராவல், இப்போ நிஜமாவே ஒரு நடிகையா வளர்ந்திருக்கேன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.'' 

நீங்க நடிச்ச முதல் படத்தைப் பார்த்தப்போ என்ன தோணுச்சு?

''நோ ஐடியா. என்ன தோணுச்சுனு ஞாபகமே இல்ல. எனக்கு என்னோட நடிப்பில் என்ன மிஸ்ஸாகுதுன்றதை மட்டும்தான் கவனிச்சிட்டிருப்பேன். அதனாலயே சூப்பரா பண்ணியிருக்கேன்னு நம்பிக்கையே வராது. முதல் படத்துக்கும் சரி, இப்போ `ராரன்டோய் வீடுக்கி சுட்டம்', `ஸ்பைடர்' படத்துக்கும் சரி நிறைய பாராட்டுகள் கிடைச்சது. சும்மால்லாம் பாராட்ட மாட்டாங்கள்ல. அது தீரனுக்கும் நடக்கும்னு நம்பறேன்.’’