Published:Updated:

நான்கு வெடிகுண்டுகளை மீட்கப் போராடும் மூவர் படை வென்றதா.? - ‘இப்படை வெல்லும்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
நான்கு வெடிகுண்டுகளை மீட்கப் போராடும் மூவர் படை வென்றதா.? - ‘இப்படை வெல்லும்’ விமர்சனம்
நான்கு வெடிகுண்டுகளை மீட்கப் போராடும் மூவர் படை வென்றதா.? - ‘இப்படை வெல்லும்’ விமர்சனம்

சென்னையின் நான்கு எல்லைகளில் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை ஹீரோவின் படை தடுத்ததா என்பதே, ‘இப்படை வெல்லும்’ படத்தின் ஒன்லைன்.

கணவர் இறந்த பிறகு, அவரின் அரசுப் பேருந்து ஓட்டுநர் வேலையைத் தனது மகன், இரண்டு மகள்களுக்காக ஏற்கிறார் ராதிகா. மகன் நன்றாகப் படித்து 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகிறார். அம்மாவின் ஆசைப்படி வங்கியில் லோன் வாங்கி சொந்த வீடு கட்டுகிறார் மகன். வங்கிக் கடனுக்காக 65 ஆயிரம் ரூபாயை மாதத் தவணையாகக் கட்டிவரும் நேரத்தில், ஆள்குறைப்பு நடவடிக்கையால் அவரின் வேலை போகிறது. மஞ்சிமா மோகன் உடனான காதலிலும் பிரச்னை. இது, ‘மகன் உதயநிதி'யின் கதை.
 
குறைந்த சம்பளம்; நிறைந்த சந்தோஷம்... என ‘சோட்டா பீம்’ சீரியலுக்கு டப்பிங் பேசும் வேலை இவருக்கு. நிறைமாத கர்ப்பிணி மனைவி. அவரின் பிரசவத்தில் ஒரு சிக்கல். குழந்தை நல்லபடியாகப் பிறக்குமா என கவலையுடன் இருக்கிறார் இவர். - இது ‘டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ சூரியின் கதை.
 
வெடிகுண்டு செய்வதில் நிபுணன். பழைய வழக்குகளில் சிறையில் இருப்பவன், லிபியா காரர்கள் கொடுக்கும் புது அசைன்மென்ட்டுக்காக சிறையில் இருந்து தப்பி, சென்னை நகரில் வெவ்வேறு ஆள்கள்மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கவைக்க முயல்பவன். - இது டேனியல் பாலாஜியின் கதை. 

இந்த வெடிகுண்டுச் சதியில் தொடர்புள்ளவர்கள் என நினைத்து, உதயநிதியையும் சூரியையும் போலீஸ் தவறுதலாகக் கைதுசெய்கிறது. இந்தச் சிக்கலிலிருந்து இவர்கள் மீண்டார்களா? வெடிகுண்டு விபத்திலிருந்து சென்னையைக் காப்பாற்றினார்களா என்பதே ‘இப்படை வெல்லும்’ படத்தின் கதை. 
 
இந்தியப் படையின் கார்கில் போர் வெற்றியில் தொடங்கி, இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி, செஸ் விஸ்வநாதன் ஆனந்த், பேட்மின்ட்டன் பி.வி.சிந்துவின் வெற்றிகளைக் கடந்து, ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியில் முடியும் டைட்டில் கார்டிலேயே கவனம் ஈர்க்கிறார், இயக்குநர் கௌரவ் நாராயணன். இவரது 'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' பட வரிசையில் இந்தப் படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

தீவிரவாதிகள் என்றாலே, முஸ்லிம்களாகத்தான் இருப்பார்கள் என்கிற பொதுப் புத்தியை உடைக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் இயக்குநர் செய்திருந்தாலும், அது வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. படத்தில், தீவிரவாதச் செயலில் ஈடுபடுவோர் அனைவரும் இந்துவாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாக சித்திரிக்கப்படும் சாமானியர்கள், அதிலிருந்து எப்படி வெற்றிகரமாக மீள்கிறார்கள்’ என்ற எவர்கிரீன் ஒன் லைனை முழுநீளப் படமாக்கியதில் கவர்கிறாரா?
 
இந்த வருடம் வெளிவந்த தன் படங்களில், உதயநிதிக்கு இதில் வித்தியாசமான கதைக்களம். நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கிறார். டேனியல் பாலாஜியுடனான சண்டைக் காட்சிகளில் யதார்த்தமாக நடித்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். ஆனாலும், முழுமையான நடிகராக அவரை ஏற்றுக்கொள்ள அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது.

காமெடி, குணச்சித்திரம் என்ற இரட்டைக்குதிரைச் சவாரி செய்திருக்கிறார் சூரி. காமெடியைவிட, குணச்சித்திரத்தில் மனதில் நிற்கிறார். ஆனால், இவரின் கதாபாத்திரப் பின்னணி ஏனோதானோ என்று கையாளப்பட்டிருப்பது சறுக்கல். 
 
அசிஸ்டென்ட் கமிஷனர் ஆர்.கே.சுரேஷின் தங்கையாக மஞ்சிமா மோகன். உதய்யை ட்ரிகர் செய்யும் கதாபாத்திரம். உதய் அறிவாளியாகவே இருந்தாலும், அவர் தடுமாறும் நேரங்களில் அட்வைஸ் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். பாடல், காதல் காட்சிகளுக்கு மட்டுமல்லாமல், க்ளைமாக்ஸ் வரை பயணிக்கும் கேரக்டர். ‘ரொம்ப க்யூட்’ என்றும் சொல்ல முடியாத, 'அபத்தம்'  என்றும் சொல்லமுடியாத ‘ஓ.கே’வான நடிப்பு. 

ராதிகாவுக்கு குறைவான காட்சிகளே. ஆனால், பெண் பேருந்து ஓட்டுநராக நிஜமாகவே பயணிகளை வைத்துக்கொண்டு பஸ் ஓட்டி மனதில் பதிகிறார். டேனியல் பாலாஜிக்கு குறைவான வசனங்களே. ஆனாலும் மிரட்டுகிறார். அவரை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். அதேபோல இரண்டே காட்சிகளுக்கு மட்டும் வரும் எம்.எஸ்.பாஸ்கரையும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்கிற எண்ணம் தோன்றுகிறது.  ஆர்.கே.சுரேஷுக்கு மிடுக்கான போலீஸாகவும் சீரியஸாக நடிப்பதுபோல சிரிப்பையும் வரவழைக்கும் கேரக்டர். 
 
ஆரம்ப காட்சியில், காரிலிருந்து இறங்கும் பூட்ஸ் கால்களில் ஆரம்பித்து, அப்படியே பயணித்து உயர்ந்து டாப் வ்யூவில் உத்தரப்பிரதேசத்தின் ஜெயிலைக் காட்டும் கேமராவின் கோணங்களில் கவனம் ஈர்க்கும் ரிச்சர்டின் ஒளிப்பதிவு, அதைத் தொடர்ந்து, சிறையில் சாப்பிடும் தட்டு, கதவின் வ்யூ ஃபைண்டர், சிக்னல் லைட் என்று ஒருவித க்ளிஷேவுக்குள் சிக்கி சலிப்படையவைக்கிறது. இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கேட்கும் ரகம் - ஏற்கெனவே கேட்ட ரகமும்கூட. அதுவும் அந்த க்ளைமாக்ஸில் ‘விஸ்வரூப’ பட பி.ஜி.எம்மை பட்டி டிங்கரிங் செய்திருப்பது எல்லாம் ஓவர் சாரே. படத்திற்கு எடிட்டிங் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அதற்காகவே, பிரவின் கே.எல்லுக்கு சிறப்பு பாராட்டுகள்.

ஒரே அபார்ட்மென்ட்டில் வில்லன், அவர்களைத் தேடும் ஹீரோ படை... டேனியலை உதய் கண்டறியும் காட்சி ‘குட்’ சொல்லவைக்கிறது. படம் ஆரம்பித்து ‘ஏதோ சொல்லப்போகிறார்கள்’ என்று வேகமெடுக்கத் தொடங்கும் நேரத்தில், தொய்வடைவது திரைக்கதையின் பெரிய மைனஸ். படத்தில் காமெடி ஓரளவுக்கு எடுபட்டாலும் அது இன்னொருபக்கம் படுசீரியஸாக நகரும் கதையைப் பலவீனப்படுத்துகிறது. சென்னையில் ஏன் குண்டுவைக்கிறார்கள்… ஆரம்பத்தில் காட்டும் லிபியா காரர்களுக்கும் டேனியல் பாலாஜிக்கும் என்ன தொடர்பு என்ற பின்னணியை சரியாகச் சொல்லாதது, டேனியலின் கதாபாத்திரத்தை டம்மியாக்குகிறது.
 
படத்தில், தீவிரவாதக் கும்பல் பேசிக்கொள்ள பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுன்ட்டை ஓப்பன் செய்வதற்காக வில்லனிடம் பாஸ்வேர்டை கேட்டு நேரத்தை இழுத்துக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில், ஜிமெயிலை ஹேக் செய்திருக்கலாம். ஜிமெயிலை ஹேக் செய்வதெல்லாம்  அவ்வளவு கஷ்டம் கிடையாது டைரக்டர். திரைக்கதையில் எப்போதாவது எதிர்பாராமல் ஒரு சில விஷயங்கள் நடக்கலாம். ஆனால், படம் முழுக்க எல்லாமே ஆக்ஸிடென்ட்டாகத்தான் நடக்கிறது. படத்தில் வரும் ஆக்ஸிடென்ட் உள்பட. இடைவேளைக்குப் பிறகு க்ளைமேக்ஸுக்கு 20 நிமிடம் முன்புவரை பட கேரக்டர்களிடம் இருக்கும் ஒருவித பரபரப்பை ரசிகர்களுக்குக் கடத்துவதில் கோட்டைவிட்டிருப்பவர்கள் ,கடைசி 20 நிமிடம் மட்டும் ஸ்கோர் செய்கிறார்கள். அந்த 20 நிமிட வேகத்தை படம் முழுவதும் கடத்தியிருந்தால், இப்படை நிச்சயம் ஷ்யூர் ஷாட் அடித்திருக்கும்.