Published:Updated:

சினிமாவில் எம்.ஜி.ஆரின் ஆதிக்கத்துக்கு இதுவும் ஒரு காரணம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-18

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
சினிமாவில் எம்.ஜி.ஆரின் ஆதிக்கத்துக்கு இதுவும் ஒரு காரணம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-18
சினிமாவில் எம்.ஜி.ஆரின் ஆதிக்கத்துக்கு இதுவும் ஒரு காரணம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-18

1940களில் தமிழ் திரையுலகம்

எம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே. தியாகராஜ பாகவதரும் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நிலை மாறியதால், ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான பாகவதர் 1966-ல் விடுதலை பெற்று வந்ததும் படங்களில் முன்பு போல் ஆர்வம் காட்டவில்லை. சில படங்கள் நடித்தபோதும் அவை சரியாக ஓடவில்லை.

எம்.ஜி.ஆர் ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக நடித்த பிறகும் சில படங்களில் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார். மர்மயோகி பேய்ப் படம் என்பதால் குழந்தைகள் பயப்படுவார்கள் என ஏ முத்திரை பெற்றது. அது நிஜப் பேய் அல்ல என்பதால் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.

“கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறும் என்றால் குறி வைக்க மாட்டான்” என்று எம்.ஜி.ஆர் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயிற்று. பலர் தம் ஆண்பிள்ளைகளுக்கு ‘கரிகாலன்’ என்று பெயர் சூட்டினர்.

பி.யு. சின்னப்பா

முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று “உத்தமபுத்திரன்” படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, ஒரே படத்தில் பத்து வேடம் போட்டார். ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில் நான்கு கதாநாயகிகளுடன் நடித்தவர், வாள்வீச்சில் கெட்டிக்காரர்; எம்.ஜி.ஆர் வியந்து போற்றும் மேடைக்கலைஞர். இவர் ராஜபார்ட வேடம் ஏற்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் ஸ்திரீபார்ட் வேடம் ஏற்றிருக்கிறார். இத்தகைய சிறந்த கலைஞரின் மரணம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்துக்கு ‘ராஜபாட்டையை’ (நெடுஞ்சாலை) அமைத்துக் கொடுத்தது. 1951-ல் பி.யு. சின்னப்பா திடீரென ஒரு விபத்தில் காலமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் (1952) படங்களில் ‘என் தங்கை’ இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றிவாகை சூடியது. கிறிஸ்தவ மன்னராக எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ஜெனோவா’ (1953) நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டது. இந்தப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையை எம்.ஜி.ஆர் முதன்முதலாக அங்கீகரித்தார்.

ஜனாதிபதி பரிசு பெற்ற ‘மலைக்கள்ளன்’

பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பி.யு. சின்னப்பாவைப் போல எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” தமிழுக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

ரஞ்சன் என்ன ஆனார்?

“சந்திரலேகா” படம் ஜெமினி தயாரிப்பில் ஐந்து கோடி செலவில் உருவான படமாகும். அதில் எம்.ஜி.ஆரின் நாடகத்தந்தை எம்.கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே. ராதா கதாநாயகனாகவும் ரஞ்சன் வில்லன் சசாங்கனாகவும் நடித்திருந்தனர். இருவருமே தமிழ்த்திரையுலகின் தன்னிகரற்ற நடிகர்களாக வந்திருக்க வேண்டும். ஆனால் விதி யாரை விட்டது?

1955-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. அடுத்த ஆண்டில் (1956) ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப் பரிசு அளித்தன. ‘தாய்க்குப் பின் தாரம்’ படப்பிடிப்பில் காளையுடன் சண்டை போடுவதில் எம்.ஜி.ஆர் காட்டிய தயக்கம் தேவருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்டுக்காக’ காத்திருக்காமல் தேவர்தனது அடுத்த படமான ‘நீலமலைத் திருடனில்’ ரஞ்சனை கதாநாயகன் ஆக்கினார். படம் எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. பெரிய வெற்றியும் பெற்றது.

எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ரஞ்சனின் ரசிகர்களும் தம்முள் மோதிக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு சமமான ஒரு போட்டியாளர் வந்துவிட்டதான சூழ்நிலை உருவானது. எம்.ஜி.ஆர் உடனே தனது ‘நாடோடிமன்னன்’ படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார். பாதிப் படத்தை வண்ணப்படமாகவும் எடுத்தார். 1958-ல் வெளிவந்த நாடோடிமன்னனில் எம்.ஜி.ஆரை ரசித்த ரசிகர்கள் அதன்பின்பு ரஞ்சனை ரசிக்கவில்லை. அடுத்த ஆண்டு (1959) வெளிவந்த ராஜாமலையசிம்மனும், மின்னல் வீரனும் ரஞ்சனுக்கு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. 1960-ல் வெளிவந்த ‘கேப்டன்’ ரஞ்சனும் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. படங்கள் ஓடாததால் அவர் தன் மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் போய்த் தங்கிவிட்டார். இப்போது தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் தனிச்செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம் ஆனார். சிலருடைய மரணமும் சிலருடைய தோல்வியும் கூட எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தன.

கலைவாணரின் ஆளுமை

கலைவாணர் சிறையிலிருந்து 1946-ல் வந்த பின்பு பல படங்களை தயாரித்து நஷ்டப்பட்டார். அந்த துக்கத்திலேயே காலமானார். இவர் மரணத்துக்குப் பின்பு எம்.ஜி.ஆர் அவர் மகன்களை டாக்டர் மற்றும் எஞ்ஜினியர் ஆக்கினார். மகள்களுக்கு முன்னின்று செலவு செய்து  ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்தார்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் எம்.ஜி.ஆர் 1956-ல் ‘மதுரை விரன்’, 1957-ல் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படங்களில் நடித்தார். ராஜா தேசிங்கு படத்தில் மகமத் கானாக நடிக்க இருந்த என்.டி. ராமராவை மாற்றி எஸ்.எஸ்.ஆருக்கு கலைவாணர் அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். பின்பு எம்.ஜி.ஆரும் தன் பங்குக்குச் சில மாற்றங்களைச் செய்தார். படம் வெளி வருவதற்குள் என்.எஸ் கே. 1957-ல் காலமாகிவிட்டார். பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படம் 1960-ல் வெளிவந்தது. எஸ்.எஸ். ஆரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறாதபடி எம்.ஜி.ஆரின் இரட்டை வேடம் அமைந்தது.

ராஜாதேசிங்கு வெளியாவதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ வந்து அவரது அதிகாரத்தையும் செல்வாக்கையும் தமிழ்த் திரையுலகில் ஆழமாக வேரூன்றிவிட்டது. அவரின் படங்களில் இனி மாற்றம் சொல்ல என்.எஸ். கேயும் இல்லை என்ற நிலையும் உருவாகி விட்டது.

எம்.பி. ஆனார் எஸ்.எஸ்.ஆர்

திமுக ஆதரவு நடிகர்களாகப் பலர் தமிழ்த் திரையுலகில் இருந்தாலும் எம்.ஜி.ஆரும் எஸ். எஸ். ஆரும் தொடர்ந்து திரையுலகில் நிலைத்திருந்து வெற்றிவாகை சூடினர் எஸ்.எஸ்.ஆர். எனப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிவாஜி கணேசனுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்தும், தனியாகக் கதாநாயகனாகவும் நடித்துவந்தார். இவர் சிவந்த முகமும் சுருள் முடியும் நல்ல தமிழ் உச்சரிப்பும் புராணப்படங்களில் நடிப்பதில்லை என்ற இலட்சிய வேகமும் கொண்டவர். திமுக கொடியை முதன்முதலாக தனது சொந்தப் படமான ‘தங்கரத்தினத்தில்’ காட்டியிருந்தார். இந்திய நடிகர்களில் முதலில் சட்டமன்றத் (1962) தேர்தலில் நின்று வெற்றி பெற்று பெருமை உடையவர். ‘சேடப்பட்டி சிங்கக்குட்டி’ என்று அவரது சொந்தஊர்ப் பெயரால் அழைக்கப் பெற்றவர்.

கலைஞர் கருணாநிதி முதல்வரானபோது எஸ்.எஸ்.ஆருக்கு பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி) பதவியை வழங்கி அவரை டில்லிக்கு அனுப்பி வைத்தார். எஸ்.எஸ்.ஆர் நடிக்கவில்லை. மேல்சபை உறுப்பினரானதும் சிவாஜி வருத்தப்பட்டார். “திரையுலகில் நல்ல செல்வாக்குடன் இருக்கும்போது நீ ஏன் எம்.பி. பொறுப்பை ஏற்றுக் கொண்டாய்? இதனால் தமிழ்த் திரையுலகுக்கு குறிப்பாக எனக்கு மிகவும் நஷ்டம். இது வயதான பின்பு பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு” என்று எஸ்.எஸ்.ஆரிடம் கூறினார். 1969க்கு பிறகு திரைப்படங்களில் நடித்து எம்.ஜி.ஆர் அரசியலில் தனிப்பெரும் செல்வாக்கு பெற்றவரானார். (எம்.ஜி.ஆர் அதிமுக தொடங்கிய பின்பு எஸ்.எஸ்.ஆர் அக்கட்சியில் சேர்ந்து எம்.எல்ஆகி எம்.ஜி.ஆரிடம் முதலமைச்சர் பதவியைக் கேட்டார்.)

எஸ்.எஸ்.ஆர் தமிழ்த்திரையுலகை விட்டு வெளியேறி எம்.பி.ஆனதும் (திமுக) அரசியல் செல்வாக்குள்ள தனிப்பெரும் நடிகராக எம்.ஜி.ஆர் தமிழ்த்திரையுலகின் உச்சத்தை தொட்டார். பாகவதர் சிறை சென்றதும் பி.யு. சின்னப்பாவின் திடீர் மரணமும் என்.எஸ்.கேயின் நோயும் மரணமும் ரஞ்சனின் தோல்விகளும் எஸ்.எஸ்.ஆர் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினரானதும் எம்.ஜி.ஆருக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளாக அமைந்து திரையுலகில் தனிப்பெரும் செல்வாக்கைப் பெறவைத்தன.