Published:Updated:

அஞ்சுல ரெண்டு ஓ.கே.! - நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
அஞ்சுல ரெண்டு ஓ.கே.! - நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்
அஞ்சுல ரெண்டு ஓ.கே.! - நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

சமுதாயத்தில் அவ்வப்போது நடக்கும் பிரச்னைகளை சினிமாவில் பதிவு செய்வது சுசீந்திரன் பாணி. ஜீவா படத்தின் விளையாட்டுத்துறை, மாவீரன் கிட்டுவில் சாதிப்பிரச்னை, ஆதலால் காதல் செய்வீர் பதின்பருவத்தினரின் உளவியல் சிக்கல்களை அலசியவர், இந்த முறை எடுத்திருக்கும் விஷயமும் மிக முக்கியமானது. சுசீந்திரனை இந்த விஷயத்துக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால், இந்தமுறை அவர் கையாண்டிருக்கும் பிரச்னைதான் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் என்பதால், அதைத் திரையில் பார்த்துக்கொள்வதுதான் ஒரே வழி. 

பணத்துக்காக கொலைகள் செய்யும் வில்லன். அவர்களிடம் சிக்கும் ஹீரோ & டீம். முடிவு என்ன என்பதுதான் நெஞ்சில் துணிவிருந்தால். ஒரு நடுத்தரக் குடும்பம், வில்லன், வில்லனின் பிரச்னையில் இவர்களை சிக்கவைப்பது என சுசீந்திரனின் டெம்ப்ளேட் ஃபார்முலாதான். 
கேட்டரிங்கில் வேலை பார்க்கும் நண்பர்கள் சுந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி. தனக்கு வரும் ஒவ்வொரு கொலை அசைன்மென்ட்டையும் எந்தவித தடயமும் இல்லாமல், கொன்று முடிக்கும் ஹரிஷ் உத்தமன் & டீம். அசைன்மென்ட், பிளாக்மெயில், பெத்த லாபம், கொலை என போலீஸுக்கே தெரியாமல் வாழ்கிறார் ஹரிஷ் உத்தமன். ஒரு குறிப்பிட்ட அசைன்மென்ட்டில் சுந்தீப் கிஷன், விக்ராந்த இரையாக, அடுத்த என்ன என்பதை ட்விஸ்ட்டுடன் சொல்ல முயன்றிருக்கிறார் சுசீந்திரன். 

முதல்பாதி முழுவதும் சொதப்பல்கள். எப்போதும் காதல் காட்சிகளை சுவாரஸ்யமாக எடுக்கும் சுசீந்திரன், இந்தமுறை தவற விட்டிருக்கிறார். எரிச்சலூட்டும் ஆரம்பக்கட்ட காட்சிகள் படத்தின் மீதே ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது. சுந்தீப் ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடா என்பவரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். படத்தில் அவர் இருப்பதே மறந்துவிடுகிறது.

தாடி, கைலி, நீள சிகரெட் என அள்ளு கிளப்புகிறார் ஹரிஷ் உத்தமன். ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை அமர்க்களம் செய்திருக்கிறார். ஹீரோவாக சுந்தீப் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் க்ளிஷேவைத் தவிர்க்க சுந்தீப், விக்ராந்த் இருவருக்குமே, கம்பிகளைக் கொடுத்து அடிக்க சொல்லியிருப்பது ஸ்மார்ட் சாய்ஸ்.

பாடலை வலிந்து திணித்த காலம் போய், பாடலுக்காக ஒரு நண்பன், அவனுக்கு ஒரு கல்யாணம், அங்கு ஒரு பிரிவு, அதற்கு ஓர் அட்வைஸ் என ஒரு பாடலுக்கு யூ டர்ன் போட்டு டேபிளை உடைப்பதெல்லாம் டூ மச். இடைவேளை சீக்வென்ஸுக்காக முதக்பாதி முழுவதையும் அடகுவைத்துவிட்டு, அந்தக் கணம் வரும்போது பாதியில் இடைவேளை என்கிறார்கள். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வந்தால், விட்ட மொமெண்ட்டம் திரும்பவா கிடைக்கும்? அதன் பிறகு இறுதி 10 நிமிடங்கள் முன்பு வரை டிபிக்கல் சுசீந்திரனின் தரமான கிளாஸ் மேக்கிங்.

படத்தின் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை, சுசீந்திரன் படங்களில் எப்போதும் வரும் எவெர்க்ரீன் நட்சத்திர பட்டாளம். நான் மகான் அல்ல படத்தில் வரும் வில்லன் கோஷ்டி, தாஸ், துளசி, டி.சிவா என அதே டெய்லர் மேட் கதாப்பாத்திரங்கள். எப்படியும் இவர்களின் கதாப்பாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்பதை முன்னரே தீர்மானிக்க வைக்கிறது. சுசீந்திரன் திரைக்கதை யுக்தியை மாற்ற வேண்டிய நேரமிது. 

கச்சச்ச கச்சச்ச கச்சச்ச கா, சிக் சிக் சிக் என படத்தில் வரும் இரு பாடல்களும் இமானின் ரிப்பீட். பாடல்களில் சொதப்பியிருக்கும் இமான், பின்னணி இசையில் கவர்கிறார். சாதாரண காட்சிகளைக் கூட மேம்படுத்திக் காட்டுகிறது பின்னணி இசை. அன்பறிவின் சண்டைக்காட்சிகள் பதற்றத்தைக் கூட்டுகின்றன. அதுவும், அந்த க்ளைமாக்ஸ் சண்டை... சுசீந்திரன் டச். ஆனால், அந்த உடும்புப்பிடி தான் படத்தில் வரும் ஒரே காமெடிக்காட்சி. சாரி சூரி. மாறி மாறி வரும் திரைக்கதை டெம்போவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறது கேமரா.

பிரச்னைகளின் காரணங்களை தனது ஷார்ப் வசனங்கள் மூலம் சொல்வதுதான் சுசீந்திரனின் வழக்கம். இந்தமுறை ஏனோ வாட்சாப் பார்வர்டுகளுக்கு பலிகடா ஆகியிருக்கிறார். நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, ஹீரோ உச்சஸ்தாயியில் 53% போலி டாக்டர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என பேசுவதெல்லாம் படத்தோடு ஒன்றவில்லை. ஹ்யூமர், ரொமான்ஸ், நட்பு, ஆக்ஷன், த்ரில்லர் எனக் காம்போ படையல் செய்ய நினைத்திருக்கிறார் சுசீந்திரன். ஆக்ஷனும், த்ரில்லரும் பாஸாக, மற்றவை எல்லாம் அரியர் வைத்துவிட்டன.