Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அறம்-2, 'உமர் முக்தர்' ரஜினி, ரஞ்சித், நயன்தாரா...! - 'அறம்' கோபி ஷேரிங்ஸ்

பலதரப்பட்ட ரசிகர்களின் பாராட்டை 'அறம்' திரைப்படம் பெற்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் திரைப்படத்தைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் கோபி நயினாரையும் தவறாமல் வாழ்த்தி வருகின்றனர். முக்கியமாக இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்களும் படம் பற்றிய தங்களது கருத்து மற்றும் வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவு செய்கின்றனர். முக்கியமாக படத்தைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டினார். ரஜினிகாந்தும் படம் பார்த்துவிட்டு கோபியைப் பாராட்டியிருக்கிறார். சந்தோஷத்தில் இருந்த 'அறம்' படத்தின் இயக்குநர் கோபியிடம் பேசினோம். 

அறம்

’’ 'அறம்' படத்தின் வெற்றியை எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், என்றுமே நான் வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டேன். சமூக வலைதளங்களில் நிறைய பேர் என்னைப் பாராட்டிப் பதிவு செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், அது எதையும் நான் இன்னும் பார்க்கவேயில்லை. அடுத்து என்ன பண்ணலாம் அப்படிங்கிற ஒரு விஷயம்தான் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் நல்லா பண்ணிட்டேன். நல்ல பேச்சு இருக்கு என்பது பிரச்னையில்லை. இந்தப் படத்தில் வேறுவிதமான ஜனங்களின் உணர்வுகளுடன் நம்ம பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அடுத்த படத்தில் இன்னும் நல்ல விஷயத்தை ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டிருக்கு’’ என்று பேச ஆரம்பிக்கிறார் கோபி நயினார். 

’’என் கிராம மக்கள் இந்தப் படத்தின் வெற்றியைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். எங்கள் ஊரின் பெயரைத் திரையரங்குகளில் பார்த்த அனைவருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. என் ஊரின் மைந்தனாகக் காட்சிகளைப் பதிவிட்டிருந்தேன். ஜாதி மத பேதமில்லாமல் அனைவரும் கொண்டாடினார்கள், சந்தோஷமாக இருந்தார்கள், அழுதார்கள், பேனர்கள் வைத்தார்கள். இந்தப் படத்தைப் பார்த்த எல்லோருக்கும் அரசு நம்மை ஒருங்கிணைக்கும் அப்படிங்கிற நம்பிக்கை வந்திருக்கு. என்னுடைய முதல் படத்தில் என் ஊரைக் காட்டியது எனக்குச் சந்தோஷம். ஊர் மக்களுக்கு அதைவிடச் சந்தோஷம். என் ஊரில் படத்தை எடுக்கக்கூடிய முழுச் சுதந்தரம் அனைத்தையும் நயன்தாராதான் எனக்குக் கொடுத்தார்’’ என்றவரிடம் ரஜினி படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார் என்பதையும் சொல்ல ஆரம்பித்தார்.

''ரொம்பக் குறைவான நேரம்தான் ரஜினி என்னிடம் போனில் பேசினார். நான் ராயபுரத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருந்தேன். அப்போது போன் வந்தது. ''சார், நாங்கள் ரஜினி வீட்டிலிருந்து பேசுறோம். ரஜினி சார் பேசணும்னு சொன்னார். பேசுங்க''னு சொன்னார்கள். எனக்குப் பெரிய ஷாக்காக இருந்தது. ரஜினி போனை எடுத்து ஒரு முப்பது விநாடிகள் சும்மா கடகடனு அவருடைய ஸ்டைலில், '' அறம் படம் பார்த்தேன். பிரமாதமா இருந்தது. சூப்பரான படம். என்ன இப்படியொரு படம்னு ஆடிப் போயிட்டேன். வாழ்த்துகள். காட் ப்ளஸ் யூ'' அப்படினு சொல்லிட்டு வைத்துவிட்டார். எனக்குப் பெரிய சந்தோஷமாக இருந்தது'' என்றவர், ரஜினிக்கும் அவருக்குமான ப்ளாஷ் பேக் காட்சி ஒன்றை விவரிக்கிறார். 

''எனக்கு 19 வயசு இருக்கும் போது கதை சொல்வதற்காக ரஜினி சார் வீட்டுக்குப் போனேன்.  என்னுடன்  சில நண்பர்களும் வந்திருந்தார்கள். ரஜினி சார் வீட்டுக்கு முன்னாடி போனால், அங்கிருந்த செக்யூரிட்டி 'என்ன, என்ன வேணும்''னு கேட்டார். ' நாங்க, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து வருகிறோம். ரஜினி சாருக்குக் கதை சொல்லணும்'னு சொன்னேன். அப்போது நான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து போகலை. ரஜினியிடம் எப்படியாவது கதை சொல்லணும்னு பொய் சொன்னேன். உடனே செக்யூரிட்டி எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு 'போங்கடா, போங்க'னு தொறத்தி விட்டுட்டார். 

அறம்

நாங்க விடாமல் மறுநாளும் ரஜினி சார் வீட்டுக்கு முன்னாடி போய் நின்றோம். அன்று ரஜினி சாரின் திருமணநாள். அதனால், பாரதிராஜா சார் மற்றும் சில சினிமா பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்துகள் சொல்வதற்காக வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் நாங்கள் போய் நின்றோம். நாங்க எல்லாம் தீவிர ரஜினியின் ரசிகர்கள். அப்போது மாடியிலிருந்து எங்களைப் பார்த்த ரஜினி எங்களை உள்ளே கூப்பிட்டார். நான் அப்போது காலில் ஷூ போட்டிருந்தேன். அதைக் கழட்டி வைக்கப்போனேன். ரஜினி உடனே, ''ஆ.. பரவாயில்லை. அதலாம் கழட்ட வேண்டாம். உள்ளே வா வந்து உட்கார்''னு சொன்னார். நான் மெதுவாக அவரிடம் ''உங்ககிட்ட கதை சொல்லணும்'' னு சொன்னேன். கேட்டவுடன் ரஜினி சிரித்தார். சிரித்துக்கொண்டேயிருந்தார். ''என்னை வச்சு நீங்கப் படம் பண்ணப் போறீங்களா''னு கேட்டார். 

''ஆமா சார். உமர் முக்தர் ஸ்டைலில் ஒரு வரலாற்றுக் கதையிருக்கு. நீங்க நடித்தால் நன்றாகயிருக்கும்'' னு சொன்னேன். அவர், ''கண்டிப்பாகப் பண்ணலாம். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள்'' னு சொல்லி அனுப்பி வைத்தார். 

அதன்பிறகு 'வணக்கத்துக்குரியவன்'னு ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். அந்தப் படத்துக்கு ஹீரோயின் குஷ்பூ. ஹீரோவும் ரெடி பண்ணியாச்சு. ஒரு வித்தியாசமான கதை. எல்லாம் ரெடி பண்ணிட்டோம். தி.நகர் கற்பக அம்மாள் கோவில் தெருவில் ஆபீஸ் எல்லாம் போட்டுவிட்டோம். தயாரிப்பாளரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிட்டோம். தயாரிப்பாளர்,’படத்துக்கு இசை இளையராஜாதான். அவரிடம் ஓகே வாங்கிடு’னு சொல்லிட்டார். இளையராஜா சாரைப் போய்ப் பார்த்தேன். கதை சொன்னேன். பிடித்திருந்தது. ஓகே சொல்லிட்டார். இளையராஜா அப்போது என்னைப் பார்த்து '' நீ சின்ன பையனா இருக்க. நீதான் டைரக்ட் பண்ணப் போறீயா''னு கேட்டார். அந்த நேரத்தில்தான் இயக்குநர் பாண்டியராஜன் சார் டைரக்ட் பண்ண வந்த நேரம். நான் தலையை வேகமாக ஆட்டினேன். படத்துக்குப் பூஜை போடுற நாள் வரைக்கும் எல்லாம் ஓகே வாங்கியாச்சு. 

அந்த நேரத்தில் ரஜினி சாரை நான் தொடர்பு கொண்டேன். ஏன்னா, அவர் எந்த உதவியாக இருந்தாலும் கூப்பிடுங்கனு சொல்லியிருந்தார். ரஜினி சாரிடம், ''நீங்க எந்த நாள் சொல்றீங்களோ அன்னைக்குப் படத்தின் பூஜையை வைத்துக்கொள்வோம். நீங்கதான் வந்து ஆரம்பித்து வைக்கணும்''னு சொன்னேன். உடனே அவர்,'' என் நாள் எல்லாம் முக்கியமில்லை. உனக்கு எந்த நாள் நல்லாயிருக்கோ, அதுதான் உனக்கான நாள். உனக்கு ஏத்த நாள் எதுனு சொல்லு. அன்னைக்கு இந்தியாவில் நான் எங்கு இருந்தாலும் வந்துடுறேன்''னு சொன்னார். சில காரணங்களால் என்னால் அந்தப் படத்தை இயக்க முடியவில்லை.  

அந்தச் சமயத்தில் நான் வாணியம்பாடி போகும் போது சாதிய ரீதியாக நடந்த சில சம்பவங்களைப் பார்த்தேன். அதுவரைக்கும் உலகம் சம்பந்தமாக எனக்கு எந்த ஐடியாவும் இல்லாமலிருந்தது. எப்போதும் புத்தகத்தில் படித்த சம்பவங்களை வைத்து படம் பண்ணலாம்னு நினைத்த எனக்கு, நேரில் சில விஷயங்களைப் பார்த்த போதுதான் உண்மை நிலவரங்கள் புரிய ஆரம்பித்தது. அதற்கு அப்புறம் நான் வேறு மாதிரியான பாதையில் சென்றுவிட்டேன். வாழ்க்கையே மாறிவிட்டது’’ என்றவரிடம், ’வேறு எந்தப் பிரபலங்கள் உங்களுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்’ என்று கேட்டோம்.

அறம்

''படம் பார்த்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். நான் அதைப் பார்த்த பிறகு அவருக்குப் போன் பண்ணி உங்கள் வாழ்த்துக்கு நன்றி என்று சொன்னேன். இயக்குநர் மனோபாலா எனக்குப் போன் பண்ணி, ''ஹீரோ, ஹீரோயினை வைத்துப் படம் பண்ணுவதை மறந்துவிடு. இதே ஜானரில் கதை பண்ணு. எனக்கு ஒரு படம் பண்ணு. கதை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை''னு சொன்னார். பார்த்திபன் ரொம்ப நேரம் என்னிடம் பேசினார். ''நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க. இப்படி ஒரு படம் வாய்ப்பே இல்லை’’னு சொன்னார். இயக்குநர் கோ.சீலன், ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், கதிரேசன் இன்னும் பல பிரபலங்கள் போனில் வாழ்த்தினார்கள்’’ என்றவர், ’’ ‘அறம் 2’ கண்டிப்பாக வரும். நயன்தாராதான் அதிலும் நடிப்பார். அறம் படத்தைவிட மிகவும் காட்டமான விஷயத்தை 'அறம் 2' பேசும். இந்திய அரசியலமைப்புப் பற்றிய படமாக அது இருக்கும். 'அறம் 2' சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்’’ என்று சொல்லி விடை பெற்றார் இயக்குநர் கோபி நயினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!