Published:Updated:

சிம்பு படத்தில் நயன்தாரா அறிமுகம்..!? - தயாரிப்பாளரின் ஃப்ளாஷ்பேக்

சிம்பு படத்தில் நயன்தாரா அறிமுகம்..!? - தயாரிப்பாளரின் ஃப்ளாஷ்பேக்
சிம்பு படத்தில் நயன்தாரா அறிமுகம்..!? - தயாரிப்பாளரின் ஃப்ளாஷ்பேக்

சிம்பு படத்தில் நயன்தாரா அறிமுகம்..!? - தயாரிப்பாளரின் ஃப்ளாஷ்பேக்

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களில் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் அந்த ஹீரோக்களே முடிவு செய்வர். இன்று அந்த இடத்தை அடைந்துள்ளார் நயன். ஆம், தன்னை மையப்படுத்திய படங்களை அவர் அப்படித்தான் அணுகுகிறார். சினிமாவில் ஹீரோயின்களுக்கான காலம் மிகக்குறுகியது என்பதால்தான் ஒருபக்கம் ஹீரோவை மையப்படுத்திய வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் மறுபக்கம் ‘அறம்’ போன்ற கதைப்படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி சம்பளம், பிராண்ட் வேல்யூ... என்று எப்படிப் பார்த்தாலும் இன்றைய தேதியில் நயன்தாராதான் நம்பர் ஒன் நடிகை. ஆனால் இந்த இடம் அவருக்கு ஒரு படத்திலோ, ஒரு வருடத்திலோ கிடைத்துவிடவில்லை. மிக நீண்ட சினிமா பயணத்தின் மூலம் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார். 

`ஐயா' படம் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் அடுத்து `சந்திரமுகி'யில் ரஜினிக்கு ஜோடி. ‘இந்த வரிசையில் இனி கமல், விஜயகாந்த் போன்ற சீனியர்களுடன்தான் நடிப்பார்’ என்று நினைத்தபோது உடல் எடை குறைத்து சிம்புவுடன் `வல்லவன்' படத்தில் ஜோடியானார். அடுத்து சிம்புவின் வயதையொட்டிய தனுஷுடன் `யாரடி நீ மோகினி'யில் நடித்தபோது... ‘இளைய நடிகர்களின் ஹீரோயின்’ என்று பார்க்கப்பட்டார். அந்த சமயம் அப்படியே யூ-டர்ன் அடித்து விஜய்யுடன் `வில்லு', அஜித்துடன் `ஏகன்', சூர்யாவுடன் `ஆதவன்' என்று நடுத்தர வயது ஹீரோக்களின் படங்களில் பரபரப்பாக நடித்தார். இன்றுஅடுத்தத் தலைமுறை நடிகரான சிவகார்த்திகேயனுடன் `வேலைக்காரன்' படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இப்படி தன்னை எப்போதும் டிரெண்டிலேயே வைத்துக்கொள்வதுதான் நயன் ஸ்பெஷல். 

ஆனால் அவரின் முதல் தமிழ் சினிமா அறிமுகம் தோல்வியில் முடிந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? அவரின் தமிழ் சினிமா அறிமுகம் குறித்து தெலுங்கு பட தயாரிப்பாளரும் அவரை அறிந்தவருமான `தேவி ஸ்ரீதேவி' சதீஷிடம் பேசினோம்.

“மலையாளத்தில் வந்த ‘மனசினகரே’ என்ற படத்தை தெலுங்கில் டப்பிங் செய்வதற்காக அந்தப் படத்தை பார்த்தேன். அதில் நடித்து இருந்த ஹீரோயின் அழகாகவும் இருந்தார். நன்றாக நடித்தும் இருந்தார். ‘இவர் யார்’ என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டேன். ‘இவர் பெயர் டயானா. இதுதான் முதல் படம்’ என்றார்.

பிறகு நான் அந்த விஷயங்களை மறந்துபோனேன். அந்த சமயத்தில் கலைப்புலி தாணு சார் ‘தொட்டி ஜெயா’ என்ற படத்தை தயாரித்துக்கொண்டு இருந்தார். சிம்பு ஹீரோவாக நடித்த அந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை நான் வாங்கியிருந்தேன். அதில் சிம்புவுக்கு ஜோடியாக எந்த நடிகையை ஒப்பந்தம் செய்வது என ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக ஹீரோயினை தேர்வு செய்யும் பொறுப்பை, அந்தப் பட இயக்குநர் வி.இசட்.துரையிடமே ஒப்படைத்தார் தாணு சார். அன்று தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த முன்னணி நடிகைகளில் யாரை புக் பண்ணலாம் என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் மலையாளத்தில் பார்த்த ’மனசினகரே’ படத்தைப் பற்றியும் அதில் அறிமுகமாகியிருந்த டயானா பற்றியும் சொல்லி அவர் இந்தப் படத்துக்கு பொருத்தமாக இருப்பார்’ என்று சொன்னேன். ‘லுக் டெஸ்ட் பண்ணிப்பார்த்துவிட்டு முடிவுசெய்வோம்’ என்றார் டைரக்டர்.  கொச்சினில் இருந்த டயானாவை  தொடர்புகொண்டு பேசினேன். லுக் டெஸ்டுக்காக சென்னை வர ரயிலில் டிக்கெட் போட்டு வரவழைத்தேன்.

சென்னை வந்த டயானாவுக்கு அம்பல் லாட்ஜில் அறை போட்டுக்கொடுத்தோம். சென்னையில் மூன்று நாள்கள் தங்கவைத்து போட்டோ ஷூட் செய்தார் புகைப்படக்கலைஞர் தேனி செல்வம். அதன்பிறகு டைரக்டர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, `இப்ப `ஆட்டோகிராஃப்' படம் பிரமாதமா போயிட்டு இருக்கு. அதுல நடிச்ச கோபிகாவை இதில் நடிக்கவைக்கலாம்' என்றார். 

இந்த விஷயத்தை நான் டயானாவிடம் எடுத்துச்சொல்லி, புரியவைத்து அவருக்கு சென்னையிலிருந்து கொச்சின் செல்வதற்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினேன். அன்று அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போன டயானா இன்று நம்பர் ஒன் நயன்தாராவா திரும்பி வந்திருக்காங்கன்னா அதுக்கு அவங்க உழைப்பும் தன்னம்பிக்கையும் தான் காரணம். இப்போதுகூட என்னை எங்கேயாவது பார்த்தால், அதே அன்பில் மறக்காமல் நலம் விசாரிப்பார் நயன்தாரா’ என்கிறார் தேவி ஸ்ரீதேவி சதீஷ். 

அடுத்த கட்டுரைக்கு