Published:Updated:

`பாகுபலி' தேவசேனா முதல் `அறம்' நயன்தாரா வரை... 2017-ன் கலக்கல் Solid Fashion புடவை ட்ரெண்ட்!

`பாகுபலி' தேவசேனா முதல் `அறம்' நயன்தாரா வரை... 2017-ன் கலக்கல் Solid Fashion புடவை ட்ரெண்ட்!
`பாகுபலி' தேவசேனா முதல் `அறம்' நயன்தாரா வரை... 2017-ன் கலக்கல் Solid Fashion புடவை ட்ரெண்ட்!

`பூக்களே... சற்று ஓய்வெடுங்கள்! நம்ம ஃபேஷன்ல மறுபடியும் ப்ளெய்ன் வந்தாச்சு. அதனால பூக்களுக்கு ஓய்வு கொடுத்தாச்சு. ஃபேஷன் ஒரு சுழற்சி. ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு ஃபேஷன் வரும், வந்து மறையும். அதற்கேற்ப, கொஞ்சம் காலம் முன் பூக்கள் அச்சிடப்பட்ட ஆடைகள்தான் ஃபேஷன். இப்போ, ப்ளெய்ன்தான் ட்ரெண்ட். நம்ம நாட்டு ஆடை வடிவமைப்பாளர்கள் இந்த வருடக் குளிர்கால ஃபேஷன் `சாலிட்' (solid) என்று கூறியிருக்கிறார்கள். இப்பவே  டிஜிட்டலில் அச்சிடப்பட்ட பிளவுஸுக்கு ப்ளெய்ன் புடவைதான் எல்லோருடைய சாய்ஸ். இந்த ட்ரெண்ட் எல்லாம் நம்மகிட்ட கொண்டுவந்து சேர்க்கிறது திரைப்படங்கள்தான். சமீபத்துல வந்த திரைப்படங்களும், அதிலிருந்து ட்ரெண்ட் ஆன புடவைகளும் பற்றிய அப்டேட் இதோ!

அஜித் நடித்த `விவேகம்' படத்தில் காஜல் அகர்வால் உடுத்திருந்த புடவை செம க்ளாஸ். இந்தப் படத்துல காஜல், புடவையிலதான் அதிகபட்சக் காட்சிகள்ல இருப்பார். ஒவ்வொரு புடவையிலயும் அழகா இருந்தாலும், குறிப்பா மின்ட் மற்றும் டீல் வண்ணப் புடவையில் ரொம்பவே அம்சமா இருப்பார். ப்ளெய்ன் டீல் நிற புடவை. அதற்கு ஏற்றதுபோல் மின்ட் நிற ப்ளெய்ன் முழுநீள கை பிளவுஸ் அணிந்து, ஜுவல்ஸ் ஏதுமில்லாம, ரொம்ப அழகா காட்சியளிப்பார். சிம்பிள் அண்ட் நீட் லுக்!

`தேவசேனை'னு சொன்னதும் கண்டுபிடிச்சிருப்பீங்க. அதேதான், உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்திய `பாகுபலி-2'ல் அனுஷ்காவின் அறிமுகக் காட்சியில் அவர் அணிந்திருந்த புடவை டாப் நாட்ச். கம்பீரமான தோற்றத்தில் அவர் அணிந்திருந்த ஹாட் பிங்க் (hot pink) ப்ளெய்ன் பட்டுப்புடவை அதற்கு ஏற்ற நீல நிற புரொக்கேட் (brocade) பிளவுஸ் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இளவரசி ஆச்சே, அதற்கு ஏற்றார்போல் ஒட்டியாணம், வளையல், நெக்லெஸ், சுட்டி, மாட்டல் என ஒரு தேவதையாகக் காட்சியளிப்பார். ஹாட் அண்ட் போல்ட் லுக்!

அதே `பாகுபலி-2'ல் நடித்த நீலாம்பரியை மறக்க முடியுமா? சிவகாமி என்ற கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் தைரியமான தோற்றம். அதிகபட்சக் காட்சிகளில் ப்ளெய்ன் புடவைதான் உடுத்தியிருப்பார். குறிப்பாக, போருக்குச் செல்லும் காட்சியில் அவர் மெரூன் வண்ணப் புடவையும், அச்சிட்ட பிளவுஸும் அணிந்திருப்பார். அந்த உடையில் அவரது தோற்றம் எளிமையாவும் நேர்த்தியாகவும் இருக்கும். ராணி என்ற அகங்காரமில்லாத அலங்காரம் வெளிப்படுவதை நாம் கவனித்திருக்கலாம். நீலாம்பரி நீலாம்பரிதான்!

விஜய் நடித்த `பைரவா' படத்துல கீர்த்திசுரேஷ் புடவையில் அசத்திருப்பாங்க. அதுலயும் `நில்லாயோ...' பாடல்ல வர்ற எல்லா புடவைகளுமே வாவ்! குறிப்பா `பச்சை வண்ணப் பூவே'னு சொல்ற அளவுக்கு ப்ளெய்ன் பச்சை நிறப் புடவை, வயலெட் நிற பார்டர், அதற்குக் கச்சிதமா பொருந்திய வயலெட் புரொக்காட் பிளவுஸ்ல கீர்த்திசுரேஷைப் பார்க்க `அடடா!'னு சொல்லவெச்சுது. க்யூட் அண்ட் ஸ்வீட் லுக்!

சமீபத்தில் ரிலீஸாகி தமிழ்நாட்டையே கலக்கிட்டிருக்கிற படம், `அறம்'. நயன்தாராவின் நடிப்புக்குத் தீனி போடும் விதத்தில் அமைந்தது `மதிவதனி' கதாபாத்திரம். அந்த கேரக்டருக்கு மெருகேற்றும்விதமா இருந்தது அவரின் உடை. `மெஸ்ஸி பிண்ட்' (messy pinned) டைப்பில் நம் நாட்டுப் பாரம்பர்ய ஹண்ட்லூம் ப்ளெய்ன் காட்டன் புடவையை அணிந்திருப்பார். அதற்கு மேட்சிங்கா பிளவுஸ், அதுவும் கழுத்தளவுக்கு நீண்டு போல்டு லுக் கொடுத்திருக்கும். இந்தப் படத்துல நயன்தாராவுக்கு ரெண்டே ரெண்டு புடவைதான். டர்காய்ஸ் பச்சை மற்றும் கிரே நிறங்களில் கலெக்டர் காஸ்டியூம் க்ளாசிக் டச். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆபரணங்கள் ஏதுமின்றி, சிறிய முத்து கம்மல், மெல்லிய வளையல், கைகடிகாரம், ஒரு கயிறு என லேடி சூப்பர் ஸ்டாரின் கலெக்டர் கெட்டப் பக்கா மாஸ்.

2017 - ம் ஆண்டில் டிஜிட்டல் வேலைப்பாடுகளை மூட்டைக் கட்டி வைத்து, `சாலிட்' ஃபேஷன் ஆனது. 2018 -ம் ஆண்டின் ட்ரெண்ட் இக்கட் (ikkat), கலம்காரி (kalamkari) போன்ற பேட்டர்ன்களாகக்கூட இருக்கலாம். எதுவானாலும் `ட்ரெண்ட் செட்' செய்யும் நாயகிகளின் ஆன் ஸ்க்ரீன் அப்டேட்களை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.