Published:Updated:

ஆக்ச்சுவலி இன்ஜினீயர்... ஆனா, அமலா பால், லட்சுமி மேனனுக்கு சல்சா டீச்சர்!

ஆக்ச்சுவலி இன்ஜினீயர்... ஆனா, அமலா பால், லட்சுமி மேனனுக்கு சல்சா டீச்சர்!
ஆக்ச்சுவலி இன்ஜினீயர்... ஆனா, அமலா பால், லட்சுமி மேனனுக்கு சல்சா டீச்சர்!

ஆக்ச்சுவலி இன்ஜினீயர்... ஆனா, அமலா பால், லட்சுமி மேனனுக்கு சல்சா டீச்சர்!

22 வயதில் நடனத்தின் அத்தனை படிகளைக் கற்றுத்தேர்ந்து, இன்று பல சினிமா நடிகர், நடிகைகளுக்கும் கற்றுத்தருகிறார் சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜனனி சடகோபன். 'எனக்கும் என் அக்காவுக்கும் நிறையவே வித்தியாசம்; நான் அக்காவைவிட கொஞ்சம் குள்ளமாக இருந்ததால், டான்ஸ் கிளாசில் சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள். விழுந்து புரண்டு அடம்பிடித்து ஒருவழியாக வகுப்பில் சேர்ந்தேன். அப்படித்தான் டான்ஸ் கற்றுக்கொள்ளவே ஆரம்பித்தேன். அக்காவைவிட நான் பெரிய ஆளாக வரவேண்டும் என்று விரும்பினேன்'' என்று புன்னகையுடன் ஆரம்பிக்கிறார். 

''கோவையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே டான்ஸ் கிளாஸில் சேர்ந்தேன். பிறகு, ஆறாம் வகுப்பின்போது சென்னைக்கு வந்துட்டேன். என் அக்காதான் எனக்கு எல்லா விஷயத்திலும் உதாரணம். ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கிட்டேன். அங்கே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், இனிமே ரியாலிட்டி ஷோக்களுக்கே போககூடாதுனு முடிவுப் பண்ணினேன். என் முழுகவனத்தையும் படிப்பில் காட்டினேன். அந்த நேரத்தில் என் அக்கா ஃபுட்பால், கராத்தே பிளாக் பெல்ட், மாடல் எனப் பல திறமைகளை வளர்த்துக்கொண்டார். ஒருமுறை அக்காவுடன் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே ஒவ்வொரு நடன அசைவுகளும் என்னை ஈர்த்துச்சு. இத்தனை நாள்களாக டான்ஸ் கத்துக்காமலேயே இருந்துட்டோமேனு தோணுச்சு. அந்த நிமிஷமே டான்ஸ்மீது ஈர்ப்பு அதிகமாச்சு'' என்கிறார் ஜனனி. 

சிம்பு நடித்த 'போடா போடி' படத்தில் வரலட்சுமிக்கு டான்ஸ் மாஸ்டராக நடித்திருந்த ஜெப்ரிவார்டன் அவர்களிடம் நான்கு வருடங்கள் நடனம் கற்றுக்கொண்ட ஜனனி, ''சல்சா, சாச்சா, ரூம்பா என டாங்கோ நடனத்தில் 18 வகைகள் இருக்கு. நான்கு வருடத்தில் இதையெல்லாம் கற்றுக்கொண்டேன். பிறகு, கல்லூரி படிப்பில் கவனத்தைத் திருப்பினேன். இன்ஜினீயரிங் ECE படிச்சேன். டான்ஸ் ஆர்வம் எந்த அளவுக்கு இருந்ததோ, அதே அளவு படிப்பிலும் இருந்துச்சு. டான்ஸ் நிகழ்ச்சிகளுக்குப் போனாலும், நேரம் கிடைக்கும்போது புத்தகத்துடன் உட்கார்ந்துடுவேன். 

சென்னையில் உள்ள 'ராக்' அகாடமியுடன் இணைந்து, சன் டி.வியின் 'சூப்பர் குடும்பம்', சன் டி.வி விருதுகள், ஜெயா டிவி விருதுகள், மிர்ச்சி விருதுகள் எனப் பல நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குநராக இருந்திருக்கேன். ராக் அகாடமி ரமாஸ் மாஸ்டரிடம் ஐந்து ஆண்டுகளாக வொர்க் பண்ணினேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு செப்டம்பர் மாதம் நடந்த குளோபல் இன்வெஸ்டர்ஸ் நிகழ்ச்சிகளை எங்கள் குழுதான் செஞ்சோம். இதுக்காக, முதல்வராக இருந்த ஜெயலலிதா எங்களை கூப்பிட்டுப் பாராட்டினார். அந்த பாராட்டு வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்று. இதுபோல பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கோம். எனக்குக் கற்றுத்தருவது ரொம்பவும் பிடிக்கும். நிறையப் பேருக்கு நடனம் கற்றுத்தந்திருக்கேன். அதில் மறக்க முடியாதவர், நடிகை ஸ்ரேயா. நாங்கள் பல சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் இணைந்து ஆடியிருக்கோம். ஸ்ரேயாவுக்கு நிறைய அசைவுகளை கற்றுத்தந்திருக்கேன். ஆக்ச்சுவலி நான் இன்ஜினியரிங் படித்திருந்தாலும். சில வருடங்களுக்கு முன்பு அமலா பால், லட்சுமி மேனன் போன்றவர்களுக்கு டான்ஸ் டீச்சராக இருந்ததை நினைத்தால் பெருமையாக இருக்கும்'' என்கிற ஜனனி, குடும்பம் பற்றி நெகிழ்வுடன் கூறுகிறார். 

''எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டும் என் அம்மாவையே சேரும். சிங்கிள் மதராக இரண்டு பெண்களையும் கஷ்டப்பட்டு படிக்கவெச்சு இந்த உயரத்துக்கு கொண்டுவந்திருக்காங்க. என் அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிக்கணும்னு ஆசை. எனக்கு அதில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஆனால், சின்ன வயசிலிருந்தே குறும்படங்களில் நடிச்சிருக்கேன். அதற்காக, அப்துல் கலாம் ஐயா கையால் அவார்டு வாங்கியிருக்கேன். நடனம் தவிர்த்து, ஓவியங்கள் வரையறது பிடிக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் நடந்துச்சு. கண் முழிச்சதுமே என் கால்கள் சரியா இருக்கானுதான் பார்த்தேன். அது மட்டும் போதும்னு நினைச்சேன். டான்ஸ் மேலே தீராத காதல்'' என்கிற ஜனனி, நடனத்துக்காகத் தான் பெற்ற பாராட்டுகளைப் பகிர்கிறார். 

''நான்காம் வகுப்பு படிக்கும்போது 'சாரல்' என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் டான்ஸில் முதலாவதாக வந்தேன். லதா ரஜினிகாந்த் அவார்டு கொடுத்தாங்க. மனோரமா ஆச்சி கையால் இரண்டு விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், அவார்டுகளை வாங்கியிருக்கேன். பிரிட்டீஷ் எம்பசி தேர்வு எழுதி, சில்வர் மெடல் வாங்கியிருக்கேன். நல்லா சம்பாதிச்சு ஒரு டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்கணும். அங்கே திறமைக்குத்தான் முதல் இடம் தருவேன். அதுதான் என் கனவு, லட்சியம் எல்லாம். இப்போ ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். அங்கே நிறையவே உதவியாக இருக்காங்க. அக்காவும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க. என் அம்மா ஈவென்ட் மேனேஜ்மென்ட், படங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் அரேஜ் செய்யறது போன்றவற்றை செய்யறாங்க. காஸ்டியூம் டிசைனிங்கிலும் அசத்துவாங்க. அவர் மாதிரி அம்மா கிடைச்சா, எந்தப் பிள்ளைகளும் சாதனைச் செய்ய முடியும்'' என்கிறார் ஜனனி.

பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கும் நடன இயக்குநராக இருக்கும் ஜனனி, ''முன்னாடியே சொன்னதுதான், எனக்குக் கற்றுக்கொடுப்பது ரொம்ப பிடிக்கும். நான் தெரிஞ்சுக்கிட்ட நடனத்தை என் வாழ்நாள் முழுக்க பலருக்கும் கடத்தணும்'' என்கிறார் கண்களும் பேசும்படி. 

அடுத்த கட்டுரைக்கு