Published:Updated:

“நானும் தேர்தல்ல நிக்கலாம்னு இருக்கேன்..!” - பார்த்திபன் #HBDParthiban #VikatanExclusive

சுஜிதா சென்
“நானும் தேர்தல்ல நிக்கலாம்னு இருக்கேன்..!” - பார்த்திபன் #HBDParthiban #VikatanExclusive
“நானும் தேர்தல்ல நிக்கலாம்னு இருக்கேன்..!” - பார்த்திபன் #HBDParthiban #VikatanExclusive

குண்டக்க மண்டக்க என்ற ஆஸ்தான வார்த்தையின் சொந்தக்காரருக்கு இன்று பிறந்தநாள். 'எப்படி சார் டைமிங்ல ரைமிங்கா பேசுறீங்க?" என்பதில் தொடங்கி பிறந்தநாளுக்கு என்ன ப்ளான்?" என்பது வரை இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபனிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.

“நான் பிறந்தநாள் கொண்டாடி கிட்டத்தட்ட 25 வருஷம் ஆகுது. அன்றைக்கு நான் வீட்லயே இருக்க மாட்டேன். யாரையும் பார்க்க மாட்டேன். அதுக்கு அடுத்த நாள்தான் வீட்டுக்குப் போவேன். இது ஒருவகையான ஞானம். பிறந்த தினத்தை மட்டும்தான் கொண்டாடணுமா என்ன. நாம் பிறந்த ஒவ்வொரு தினத்தையும் கொண்டாடலாம். பிறந்தநாள் கொண்டாடுற கான்செப்ட் 'கோயிலுக்குள்ள மட்டும்தான் சாமி இருக்கு'னு சொல்ற மாதிரி இருக்கு. ஏன் வெளியில கடவுளைப் பார்க்க முடியாதா. அதுமாதிரி என்னுடைய சந்தோஷம் உங்க கிட்ட இருந்துதான் வரணும்னு நெனச்சா நான் முட்டாள்னு அர்த்தம். இப்போ இப்படி பேசுறது விரக்தி கிடையாது. விஷய ஞானம்" என்று அவரது பாணியிலேயே பேச ஆரம்பித்தார்.

"வேறெந்த நாளைக் கொண்டாடுவீங்க?"

"365 நாள்ல ஐந்து நாள்கள் சிறப்பா கொண்டாடப்படும். என் மூணு குழந்தைகளோட பிறந்தநாள். என் மனைவி சீதா பிறந்தநாள். எங்களுடைய திருமண நாள். இந்த தினங்கள்ல என்னோட வேறு ஒருத்தவங்களும் சம்பந்தப்பட்டிருக்குறதுனால கொண்டாடுவேன். தவிர, என்னுடைய வெற்றிகளையும் கொண்டாடுவேன்."

"அப்படி சமீபத்துல கொண்டாடிய வெற்றி" 

 " ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்துக்காகக் கிடைத்த வெற்றி. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்கு இல்ல. அதனால நான் கவலையும் பட்டதில்ல. விமர்சனத்தைப் பார்த்துக் கவலைப்பட்டா வாழ்க்கையே கவலையிலதான் ஓடிட்டிருக்கும். என்னுடைய படைப்பு என் கையைவிட்டு சினிமா உலகத்துக்குப் போயிருச்சுன்னா யாரு என்ன விமர்சனங்களை வேண்டுமானாலும் முன்வைக்கலாம்."

"அபிநயா, கீர்த்தனா, ராக்கி என்ன பண்றாங்க?"

"நாங்க ஆளுக்கொரு பாதையில பயணம் பண்ணிட்டிருக்கோம். வழியில ஏதாவது ஒரு ரோட் சிக்னல்ல கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்துக்கிட்டாதான் உண்டு. அந்த அளவுக்குப் பசங்க அவங்கவங்க வேலைகள்ல ரொம்ப பிஸி. ராக்கி, ஏ.எல்.விஜய் கிட்ட அசிஸ்டன்ட்டா வேலை பார்த்துக்கிட்டிருக்கார். 'தான் பெரிய கமர்ஷியல் பட இயக்குநரா மாறணும்'கிறது அவரோட கனவு. தன்னுடைய ரெண்டாவது, மூணாவது படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டணும்'கிறதுதான் இப்போதைக்கு அவரோட டார்கெட்.

கீர்த்தனாவும் அவங்க முதல் படத்துக்காகக் கதை எழுதிட்டிருக்காங்க. அவங்களோட கதைகள்ல நான் தலையிட மாட்டேன். சில சமயம் ஸ்க்ரிப்ட் ரைட்டிங் சம்பந்தமா சில உதவிகளைக் கேக்குறதுண்டு. அப்போ ஏதாவது அறிவுரை சொல்வேன். அத்தி பூத்த மாதிரி நாங்க மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசுறதும் உண்டு" என்று சொல்லி முடிக்கும்போது சுங்கச் சாவடியை எட்டியிருப்பார் போலும். 

"இப்போதான் டோல்ல காசு கட்டினேன். நம்ம அரசாங்கம் ரோடு போடுற காசைவிட நம்ம டோல்ல கட்டுற காசுதான் அதிகம். சில நேரம் டோல்ல என்கிட்ட காசு வாங்க மாட்டாங்க. ஆனா, நான் காசு கொடுத்துட்டு வருவேன். இந்தக் காசு கவுன்சிலருக்குத்தான் போகுதுனு சொல்றாங்க. அதனால நான்கூட தேர்தல்ல நிக்கலாம்னு இருக்கேன்" என்று சிரித்தார். 

’’நிக்கலாமே சார்..." என்று கூறியபோது, "அதுதான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற உரிமை. யார் வேணும்னாலும் தேர்தல்ல நிக்கலாம். ஆனா, அதுல ஜெயிக்குறதுக்கு வேற மாதிரியான ஒரு ரூபம் தேவைப்படுது. அந்தக் காலத்துல வீட்டுக்கு ஒருவரை ராணுவத்துக்கு அனுப்புறமாதிரி அரசியல்லயும் தனி மனிதர்களோட பங்கு அதிகமா இருக்கணும். என்னுடைய ஆசை சினிமா மட்டுமே. அதுல நான் தன்னிறைவு அடையணும். மூணு வேளை சாப்பாட்டுக்கும் தங்குற இடத்துக்கும் ரெடி பண்ணணும். அரசியல்னாலே காசுதான். அதனால எனக்கு அதுல உடன்பாடு இல்ல'’ என்று முடிக்கும்போது, “பிறந்தநாள் சம்பந்தமா உங்களோட அடுத்த கேள்வி என்ன பாஸ்" என்றார். 

'நீங்க நிறைய பிரபலங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கீங்க. அந்த மாதிரி உங்கள யாராவது சர்ப்ரைஸ் பண்ணியிருக்காங்களா?"

"எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறது பிடிக்கும். அதேமாதிரி மத்தவங்களும் எனக்குக் கொடுக்கணும்னு எதிர்பார்த்ததில்ல. ஒருநாள் ரஜினி சார் வீட்ல விருந்து முடிஞ்சதும் அவரே என்னை என் வீட்டுல ட்ராப் பண்ணார். அவர் போன பின்னாடி அவருக்காக ஒரு குட்டிக்கவிதை எழுதி அனுப்பினேன்.   

`விலக விலக புள்ளிதானே...

நீ மட்டும் எப்படி விஸ்வரூபம்?’ இதுதான் அந்தக் கவிதை. 

அவர் போன காரைப் பார்த்துட்டே இருந்தேன். தூரத்துல போகப்போக கார் குட்டியாகி மறைந்ததும் இந்தக் கவிதை எழுதணும்னு தோணுச்சு. அதைப் பார்த்துட்டு, "எப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது?’'னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டார். 

இப்போ சில தினங்களுக்கு முன்னாடி கமல் சார் பிறந்தநாளுக்கு அவரைப் பார்க்கப் போனேன். பல பேர் மாலையெல்லாம் போட்டு மரியாதை செய்துட்டிருக்கிறப்போ நான் பக்கத்துல போய், 

"கை கொடுத்தேன்...

கை கொடுக்கிறேன்...

கை கொடுப்பேன்"னு மட்டும் சொன்னேன். என்னை ஒரு கணம் பார்த்துட்டுக் கட்டிப்பிடிச்சார். அந்த அரவணைப்புல நட்புணர்வு இருக்கிறதை உணர்ந்தேன். சில சர்ப்ரைஸ்க்குப் பொருள் செலவு பண்ணியிருக்கேன். சிலருக்கு அறிவைச் செலவு பண்ணியிருக்கேன். அந்த மாதிரி எனக்கு யாரும் இதுவரை சர்ப்ரைஸ் கொடுத்ததில்ல. அதுக்கு நான் இடமும் கொடுத்ததில்ல. பல மேடைகள்ல பல பேர் என்னுடைய படங்களைப் பத்திப் பேசாம நான் கொடுக்கிற சர்ப்ரைஸ் பத்திப் பேச ஆரம்பிச்சப்போதான் எனக்கு பயம் வந்துருச்சு. நிறுத்திக்கிட்டேன். என் பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்த நினைக்கும் அனைவருக்கும் நன்றி" என்று முடித்தார்.