Published:Updated:

நான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது !

பேட்டி: ம.கா.செந்தில்குமார் படங்கள்: கே.ராஜசேகரன்

நான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது !

பேட்டி: ம.கா.செந்தில்குமார் படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:

ரு சாமானியனின் சாதனைக்கு சமீபத்திய உதாரணம் சிவகார்த்திகேயன். டி.வி-யில் இருந்து வருபவர்களை ரசிகர் கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நெடு நாள் நம்பிக்கையைத் தகர்த்தவர். சிட்டி, பட்டி என்ற சினிமா கிராமரை அடித்து நொறுக்கி ஆல் ஏரியாவிலும் கலெக்ஷன் கொட்டவைக் கிறார். சிவாவின் 'பக்கத்து வீட்டுப் பையன்’ இமேஜ், தங்கள் வீட்டில் ஒருவராக அவரை நினைக்க வைத்திருக்கிறது. சிவாவிடம் பேசியதில் இருந்து...

நான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது !

''இன்று டான்ஸ் ஷோ, நாளை காமெடி நிகழ்ச்சி, அடுத்த நாள் அவார்டு நிகழ்ச்சின்னு டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பாளரா பரபர சூழலில் இருந்து விலகி, ஒரு சமயத்தில் ஒரே ஒரு கதையில் பயணம் பண்ணும் சினிமா அனுபவம் எப்படி இருக்கு?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டி.வி-ங்கிறது 24 X 7 வேலை. சினிமாவுக்கு வரும்போது மூணு புரோகிராமுக்கு காம்பியர். தவிர, ஸ்டேஜ் புரோகிராம், வெளிநாட்டு நிகழ்ச்சிகள்னு ஓடிட்டே இருந்தேன். ஆனா, இப்ப ஆறு மாசத்துல 80 நாட்கள்தான் வேலை. ஆனா, நமக்குத் தெரியாத துறை, எகிறிக்கிடக்கும் எதிர்பார்ப்புங்கிறதால ஃபோகஸ் அதிகமாயிடுச்சு. ஏகப்பட்ட பேரின் வேலையை நாமதான் ஸ்கிரீன்ல கொண்டுபோய் நிறுத்தப்போறோம் என்ற எண்ணம், ஏகப்பட்ட கோடிகள் முதலீடு, நமக்கான சம்பளம், இதை யெல்லாம் தாண்டி பணம் கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்கள்... இப்படி பிரஷரான வேலை. ஆனா, அதை என்ஜாய் பண்ணி செஞ்சுகிட்டு இருக்கேன்.''

''வீட்டுல இதுக்கு என்ன ரெஸ்பான்ஸ்? அவங்க என்ன சொல்றாங்க?''

''முதல்ல ஒருமாதிரி சிங்க் ஆகாமதான் இருந்துச்சு. 'நமக்கெதுக்கு சினிமா? நம்ம ஃபேமிலியில இதுக்கு முன்ன யாருமே இருந் தது இல்லையே?’னு அம்மா, அக்கா, வொய்ஃப் எல்லாருக்குமே குழப்பம். அதுவும் என்னை மாதிரி சாமான்ய குடும்பங்கள்ல இருந்து வர்ற வங்களுக்கு சினிமா ஒரு மாய உலகம். முதல்ல வெளியில தெரியும் விஷயம், புகழ். அது ஒரு மனிதனை என்ன வேணாலும் பண்ணும். அப்புறம், எப்பவுமே டீசன்ட்டான விஷயம் மட்டுமே பண்ணிட்டு இருக்க முடியாது; சில நேரங்கள்ல உடைச்செல்லாம் பல விஷயங்கள் பண்ண வேண்டி வரும் என்ற பயமும்கூட! 'வேணவே வேணாம்’னு நிறைய அட்வைஸ். 'உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை சினிமா வுல பண்ணமாட்டேன். அதுக்கு நான் கியா ரண்ட்டி!’ன்னு பேசி அவங்களைச் சரிக்கட்டின தையே ஒரு ஸ்கிரிப்டா பண்ணலாம்.''

நான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது !

''உங்க மனைவி என்ன சொல்றாங்க? படங்களைப் பார்த்துட்டு ஏதாவது விமர்சனம் பண்ணுவாங்களா?''

''டி.வி-யில இருக்கும்போதுதான் நேரம் பெரிய பிரச்னையா இருந்துச்சு. நைட் 10 மணிக்கு வந்துட்டு, 'ரெண்டு மணிக்கு ஃப்ளைட்’னு சொல்லிட்டு, ஓடிடுவேன். திரும்ப நாலு நாள் கழிச்சு வந்து, அடுத்த ட்ரிப் புக்குத் தயாராவேன். ஆனா, ஒரு நேரத்துல ஒரு படம் மட்டும் பண்றதால சினிமாவுல நேரம் ஒரு பிரச்னையா இருந்தது இல்லை. இப்ப துரை செந்தில்குமார் படத்துக்காகத்தான் வெளிநாடு ஷூட் வெச்சிருக்காங்க. அதுக்கு முன் தேனி, கம்பம்தான் நமக்கான வெளிநாடு. இதெல்லாம் தாண்டி என் வொய்ஃபுக்கு டூயட் தான் முதல் பிரச்னை. டைரக்டர்ஸ் நமக்கு டீசன்ட்டா தர்றதால அதுகூட ஓ.கே! ஆனா, இப்பவும் டூயட்னா பார்க்க மாட்டாங்க. 'வெளிச்சப் பூவே’ பாட்டு எப்படி இருக்குன்னு அவங்களுக்கு இதுவரைக்கும் தெரியாது. மத்தபடி முதல் ரெண்டு, மூணு படங்கள்ல டான்ஸ் சுத்த மோசம்னு சொன்னாங்க. 'நல்ல நல்ல பாட்டா இருக்கு; நீங்க ஏன் இப்படி சொதப்புறீங்க?’ன்னாங்க. இப்ப அவங்களுக் காகவே மெனக்கெட்டு டான்ஸ் பண்றேன். அப்பயும், 'பரவாயில்லை, ஓகே’ம்பாங்க. இதையெல்லாம் தாண்டி நம்மளை ரொம்ப பீஸ்ஃபுல்லா வெச்சிருக்காங்க.''

''ஆராதனா என்ன சொல்றாங்க?''

''என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டரே அவங்க தான். வெளியில எவ்வளவுதான் கடுமையா வேலை பார்த்துட்டு வந்தாலும், என்னைப் பார்த்ததும் குடுகுடுனு தவழ்ந்துவந்து முட்டியைப் பிடிச்சுக்கிட்டு, 'தூக்கு’னு கேக்குற மாதிரி வந்து நிக்குறப்போ மொத்த ஸ்ட்ரெஸ்ஸும் காணாம போயிடுது! அடுத்து, இப்ப பாட்டு கம்போஸ் பண்ணி வந்த பிறகு, அதைப் போட்டு விட்ருவேன். அதுல ஏதாவது ரிதம் கேட்சியா இருந்தா, உடனே தலையை ஆட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அதுதான் அவங்களோட டான்ஸ். இப்ப அவங்களுக்கு 11 மாசம்தான் ஆகுது. வரும் தீபாவளி அன்னைக்கு பர்த்டே! பல நேரங்கள்ல ஆராதனா அழும்போது, 'சிரிக்க வையுங்க’னு என்கிட்ட கொடுத்துட்டுப் போயிடுறாங்க வொய்ஃப். 'அது இது எது - சிரிச்சா போச்சு’ ரவுண்டு மாதிரி ஆகிடுச்சு நம்ம பொழப்பு! ஆராதனாவை சிரிக்க வைக்கிறதுக்காகவே புதுசு புதுசா யோசிச்சு காமெடிகள் பண்ண வேண்டி இருக்கு.''

''டான்ஸை இம்ப்ரூவ் பண்ணச் சொல்லி மனைவி சொன்னதா சொன்னீங்க. சினிமா வுக்கு வந்த பிறகு உங்களை நீங்களே வேற என்னென்ன விஷயங்கள்ல இம்ப்ரூவ் பண்ணிட்டு வர்றீங்க?''

''மெரினாவுல நடிக்கும்போது, எனக்கு காமெடி மட்டுமே தெரியும். ஸ்கிரீன் பிரசன்ஸ், ஆக்டிங் பிரசன்ஸ் ஜீரோ! இப்ப உட்கார்ந்து ஒவ் வொரு படமா பார்க்கும்போது நிறைய தவறுகள் கண்ணுக்குத் தெரியுது. அப்படி என் முதல் கவனம் ஸ்கிரீன் பிரசன்ஸ். நாம ஸ்கிரீனில் அப்பீலிங்கா இருக்கணும். அடுத்து எமோஷன்; அப்புறம் டான்ஸ். நம்ம படங்கள்ல பாட்டு நல்லா அமைஞ்சிடுது. ஆரம்பத்துல பாட்டு ஷூட் முடிஞ்சதும்,  மாஸ்டர்ஸ் 'ஓகே சிவா, தேங்க்ஸ்!’னு சொல்லிட்டு போயிடுவாங்க. இப்ப, 'நல்லா இருந்துச்சு. ரொம்ப பிடிச்சிருந்துச்சு’னு சொல்றாங்க. அந்த ரெண்டு வார்த்தை ரொம்ப என்கரேஜிங்கா இருக்கு. இன்னும் நல்லா ஆடணும்னு தோண வைக்குது. ஷூட் இல்லாத சமயங் கள்ல ரெகுலரா ஜிம்முக்குப் போயிடுறேன். ஜிம் போறது டான்ஸுக்கு ஹெல்ப் பண்ணுது. இன்னும் ரெண்டு டேக் எடுத்து, ஃபோர்ஸா பெட்டரா ஆடுவோமேனு தோணுது. ஆனா, ஃபைட்தான் ரொம்பப் புதுசா இருக்கு. அடிக்கணும்; ஆனா, எதிர்த்தாப்ல இருக்கிறவங்க மேல அடி படக்கூடாது. ஆனாலும், அந்த பவர் இருக்கணும். அதையும் கொஞ்சம் கொஞ்சமா கத்துட்டு இருக்கேன். ஒரு சின்ன கேப் கிடைச்சா, அதுக்காக கிளாஸ் போகணும்னு ஆசைப்படுறேன்.''

நான் டூயட் ஆடினால் என் மனைவிக்குப் பிடிக்காது !

''இதெல்லாம் இருந்தாலும், உங்களுக்கே உங்களுக்கான காமெடி ஏரியாவில் உங்க பங்கு என்ன?''

''ஸ்கிரிப்ட்லயும் வொர்க் பண்ணுவேன். ஆனா, பாண்டிராஜ் சார் மாதிரியான சீனியர் டைரக்டர்ஸ்ட்ட போய் 'ஸ்கிரிப்டைக் கொடுங்க; நான் வொர்க் பண்ணித் தரேன்’னு கேட்க முடியாது. ஆனா, 'எதிர் நீச்சல்’ல வாங்கி வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சுது. ஒருசில பன்ச்சஸ் ஸ்கிரிப்ட்லயே வரும். ஒருசிலது ஸ்பாட்ல வரும். 'வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துல, 'மாமா, மாமா... உங்களை அக்கா கூப்பிடுறாங்க’ன்னு ஒரு சின்ன பொண்ணு கூப்பிடும்போது, 'உங்க அக்கா நல்லாயிருக்குமா?’ன்னு நான் கேட்டது ஸ்கிரிப்ட்ல இல்லாதது. டேக்ல ஸ்பான்டேனியஸா வந்தது. 'ஒரு லைன்ல வருத்தப்படாத வாலிபர்னு உங்க கேரக்டரையே சொல்லிட்டீங்க’னாங்க. அதை விகடன் விமர்சனத்துலகூட மென்ஷன் பண்ணியிருந்தீங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 'எதிர்நீச்சல்’லகூட காமெடியில எனக்கு நிறைய ஸ்கோப் இருக்காது. 'வள்ளிக்கு நீ மாரத் தன்ல ஓடுவியோனு டவுட். கீதாவுக்கு நீ வள்ளியோட ஓடிடுவியோனு டவுட்’ங்கிற பன்ச்சை, 'இது என் கேரக்டருக்கு செட்டாகாது. நீங்களே பேசுங்க’ன்னு சதீஷ§க்கு நான்தான் சொன்னேன். அதுபோல, அவர் பங்குக்கு எனக்கு நாலு பன்ச் சொன்னார். இந்த மாதிரி குட்டி குட்டி விஷயங்கள்தான் நமக்கு யோசிக்க வரும். அதுக்கு மேல வராது. என் நல்ல நேரம், இதுவரை எல்லாத்துக்குமே ஆடியன்ஸ் நல்லபடியா ரீயாக்ட் பண்ணிட்டு இருக்காங்க.''

''ஒரு படத்துக்கு சூரி, அடுத்த படத்துக்கு சதீஷ்... இவங்க ரெண்டு பேரும்தான் காமெடி கூட்டாளிங்கன்னு முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கே?''

''நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்தே சதீஷ் பழக்கம். அட்லி டைரக்ஷன்ல நாங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணினோம். அந்த காம்பினேஷன் சினிமாவுலயும் வொர்க் அவுட் ஆகிடுச்சு. 'சார், சார்... சதீஷ் நம்ம ஃப்ரெண்டு சார். நல்லா பண்ணுவார்’னு சதீஷை பாண்டிராஜ் சார் கிட்ட அழைச்சிட்டு போனேன். சதீஷைப் பார்த்துட்டு, 'நீங்க வெள்ளையா இருக்கீங்க. இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டீங்க’ன் னுட்டார். 'நடிக்க வராதுன்னு சொன்னாகூட ஏதாவது பண்ணிக் கத்துக் கலாம். வெள்ளையா இருக்கீங்கன்னா நான் என்னங்க பண்றது?’ன்னு பதறிட்டார் சதீஷ். ரெண்டு நாள் பீச் வெயில்ல நின்னார். 'சார்... இப்ப கறுத்துட்டேன். இப்ப எடுத்துக்கங்க, சார்’னு மறுபடி வந்து நின்னார். அடுத்து சூரி அண்ணன். 'இதுல ஏதாவது பண்ணணும் கார்த்தி. என்ன பண்ணலாம்?’பார். என்னை கார்த்தினு வீட்ல மட்டும்தான் கூப்பிடுவாங்க. அவர் இப்படிக் கூப்பிட்டதும், அட்டாச்மென்ட் ஆகிட்டேன். அவருக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கை. நான் எது சொன்னாலும் செஞ்சிடுவார். 'இங்க இருந்து குதிச்சு உருளுங்க’ன்னா அப்படியே செய்வார். அவர் என்னைக் கலாய்க்கிற மாதிரி ஒரு சீன்னா, அதுல அவர் கவுண்டர்; நான் செந்தில். நமக்குத் தேவை சீன்ல ஹ்யூமர் வொர்க் அவுட் ஆகணும். ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணணும். அவ்வளவுதான்! ஹீரோ- காமெடியன் அப்படிங்கிறதைவிட நாங்க பிரதர்ஸ்!''

''மறக்க முடியாத தீபாவளி அனுபவம் சொல்லுங்க?''

''என்னைப் பொறுத்தவரை தீபாவளின்னா, 12 வயசு வரை கும்பகோணம் பக்கத்துல உள்ள அப்பாவோட கிராமமான திருவீழிமிழலையில் கொண்டாடினதுதான் பசுமையா ஞாபகத்துல இருக்கு. வீட்ல அம்பது, அறுபது பேர் இருப்பாங்க. ஏன்னா, தாத்தாவுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைங்க. பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமான்னு ஒட்டுமொத்த சொந்தங்களும் அங்க கூடிடுவோம். படுக்குறதுக்குக்கூட இடம் பத்தாது. 'டேய், அங்க படுக்கலாம், இங்க படுக்கலாம், அந்த ரூம்லதான் ஃபேன் இருக்கு, அது எனக்குதான்’னு ஒரே அடிதடி, ரகளையா இருக்கும். காலையில சீக்கிரம் எழுப்பி விட்டுடுவாங்க. கல்யாண வீடு மாதிரி வரிசையில உட்கார்ந்து சாப்பாடு. சிலர் ஊர்ல இருந்தே ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க. கிச்சனுக்குள்ள போனா 20 பேர் ஸ்வீட் பண்ணிட்டு இருப்பாங்க. நாங்க இருபது, முப்பது குழந்தைகள் வெளியில விளையாடிட்டு இருப்போம். ஒரு ரூமை பட்டாசுக்குன்னே ஒதுக்கி இருப்பாங்க. யாருக்கும் எந்தவொரு ஈகோவோ, கெட்ட எண்ணமோ இருக்காது. அப்படி கொண்டாடுறதுதான் செலிபிரேஷன். எல்லாருக்கும் ஒருத்தர் விடாம டிரஸ் வாங்கியாச்சா, இல்லையா, எல்லாருக்குமான விஷயங்கள் இருக்கா இல்லையானு அப்பா செக் பண்ணிட்டே இருப்பார். ஒன், டூ, த்ரீ சொல்லி 30 பேர் ஒரே டைம்ல வரிசையா 30 ஃப்ளவர் பாட் பத்த வைப்போம். இதெல்லாம் இன்னும் கண்ணுக்குள்ள நிக்குது. ரொம்ப வருஷம் கழிச்சு நான் பட்டாசு வெடிச்சது, மதுரையில போன வருஷம் தலைதீபாவளிக்கு தான். ஒரு பத்தாயிரம் வாலாவை உருட்டிப் பத்தவெச்சிட்டு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துட்டேன். ஆனாலும், அந்த திருவீழிமிழலை தீபாவளியை அதுக்கப்புறம் நான் இன்னும் கொண்டாடவே இல்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism