Published:Updated:

காதலுக்கு இது பொன்விழா!

எஸ்.சந்திரமௌலி

காதலுக்கு இது பொன்விழா!

எஸ்.சந்திரமௌலி

Published:Updated:

தமிழ் சினிமா வரலாற்றில், மிகச் சிறந்த பத்து காமெடி படங்களைப் பட்டியலிட்டால், அதில் கட்டாயமாக இடம்பெறும் ஒரு படம், டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய 'காதலிக்க நேரமில்லை’.

 'காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுகமான புதுமுகங்கள் பலர். அவர்களை ஸ்ரீதர் தேர்ந்தெடுத்த விதமே அலாதி! வைஜெயந்திமாலாவின் நடனக் குழுவில் ஆடிக்கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தபோது, அவரது முகவெட்டு ஸ்ரீதரைக் கவர, உடனே அந்தப் பெண்ணை அழைத்து வந்து, மேக்-அப் டெஸ்ட் எடுத்து, செலக்ட்டும் செய்துவிட்டார். அந்தப் பெண் முதல் ஷெட்யூலில் நடித்தாலும், பின்பு அதே படத்தை மீண்டும் முதலில் இருந்து எடுத்தபோது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு காதலிக்கு உரிய மெச்சூரிட்டி இல்லை என்று சொல்லி, வேறு ஒருவரை நடிக்க வைத்தார். ஆனாலும், செலக்ட் செய்து நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்ட காரணத்தால், அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து மாதச் சம்பளம் கொடுத்து வந்தார். அவர்தான் பின்னர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான 'வெண்ணிற ஆடை’ நிர்மலா.

காதலுக்கு இது பொன்விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை இந்தியில் (தில் ஏக் மந்திர்) எடுத்தபோது, ஸ்ரீதர் அடிக்கடி மும்பை சென்று வரவேண்டி இருந்தது. அப்போது, விமான நிலையத்தில் ஒரு நண்பர் 'வசுந்தரா’ என்ற ஏர்ஹோஸ்டஸை ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் பெண்ணுக்கும் சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கவே, அவரை 'காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். அவர்தான் நடிகை காஞ்சனா. கேமராமேன் சுந்தரத்துடன் வந்த, திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சிங்கப்பூர் இளைஞனின் நடை, உடை, பாவனை ஸ்ரீதருக்குப் பிடித்துப் போக, அவருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அவர்தான் ரவிச்சந்திரன்.

 டைரக்டர் ஸ்ரீதர், நடிகர் பாலையாவின் பரம ரசிகர். அவரை மனதில் வைத்துக்கொண்டே ஒரு கேரக்டரை உருவாக்க, பாலையாவும் சந்தோஷமாக நடிக்கச் சம்மதித்தார். பாலையா ரேஸ் பிரியர் என்பதால், ரேஸ் நாட்களில் ஷூட்டிங்குக்கு வரமாட்டார் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு இருந்தது. இதுபற்றி பாலையாவிடம் கேட்ட ஸ்ரீதர், 'உங்களுடைய அபார நடிப்பாற்றலை மனசுல வெச்சுக்கிட்டு, உங்களுக்காகவே உருவாக்கின கேரக்டரில் வேறு யாரையும் நடிக்க வைக்க எனக்கு மனசில்லை. அதே நேரம், என் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் ஆழியாறு அணைப் பகுதியில்தான் நடக்கப்போகுது என்பதால், உங்களால் ஷூட்டிங் தடைப்பட்டு விடக்கூடாது!' என்று சொல்ல, ''என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது' என்றார் பாலையா. அதுபோலவே, படப்பிடிப்பு முடியும் வரை தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார் பாலையா.

 டைரக்டர் ஸ்ரீதர், கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. மூவரும் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு பாட்டு எழுதி, டியூன் போடுவதற்காக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இடையில் பேச்சு திசைமாறி, வேறு எங்கோ போக, கண்ணதாசன் குறுக்கிட்டு, 'விஸ்வநாதன்... வேலை வேணும்! சீக்கிரமா டியூனைப் போடு!' என்று தமாஷாகச் சொன்னார். உடனே அதற்கே டியூன் போட்டுப் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி. 'ஏன் ஸ்ரீ! நான் சாதாரணமா விசுவிடம் சொன்னதற்கே டியூன் போட்டுட்டாரே, அந்த அப்பா கேரக்டருக்கு என்ன பேர் வெச்சிருக்கீங்க?' என்று கேட்டார் கண்ணதாசன். 'அதற்கென்ன... அந்த அப்பா கேரக்டருக்கு விஸ்வநாதன்னே பேர் வெச்சிடலாம்! நீங்க அப்படியே பாட்டை கன்டினியூ பண்ணுங்க' என்று ஸ்ரீதர் சொல்ல, பாடல் உருவானது.

 இந்தப் பாடல் உருவான விதம் இப்படி என்றால், ஒரு மணி நேரத்துக்குள்ளாக இரண்டு பாட்டுகள் ரெடியான சாதனையும் இந்தப் படத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த இரு பாடல்கள்... நாளாம் நாளாம் திருநாளாம்...’, 'நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா... தா... தா!’

 'காதலிக்க நேரமில்லை’ படத்தின் சில காட்சிகள் சென்னையில் மெரீனா பீச்சில் எடுக்கப்பட்டன. அப்போது ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க ராணி மேரி கல்லூரி மாணவிகள் வருவதுண்டு. அப்படி, சிநேகிதிகளோடு வந்து ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த தேவசேனாதான் பின்னர் ஸ்ரீதரின் மனைவியாக ஆனார்.

 'காதலிக்க நேரமில்லை’ வண்ணப்படத்தை ஜெமினி கலர் லேப்பில்தான் பிராசஸ் செய்து, பிரின்ட் போட்டு, வெளியிட்டார் ஸ்ரீதர். அதை கௌரவிக்கும் விதமாக ஜெமினி அதிபர் வாசன், ஸ்ரீதருக்கும் அவரது யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு விருந்து அளித்தார். அப்போது, 'இந்திப் படங்களை நம்பி இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் துவக்கிய இந்த கலர் லேப்பில் தனது கலர் படத்தை பிராசஸ் செய்து, வடக்கில் இருப்பவர்கள் ஜெமினியின் மதிப்பை புரிந்துகொள்ளும்படி செய்திருக்கிறார் ஸ்ரீதர். பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஸ்ரீதர், இந்திப் பட உலகினருக்கு ஜெமினி கலர் லேப்பை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்' என்று வாசன் பெருமைப்படுத்திப் பேசியதை, ஸ்ரீதர் மிகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்.

டான்ஸ் மூவ்மென்ட்டுகளில் புதுமை இருக்க வேண்டும் என விரும்பிய ஸ்ரீதர், வழக்கமாகத் தன் படங்களுக்குப் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் என்ற டான்ஸ் மாஸ்டருக்கு பதிலாக, ஒரு புது டான்ஸ் மாஸ்டரை அறிமுகப்படுத்த எண்ணினார். ஜெயராமன் என்று ஒரு டான்ஸ் மாஸ்டரைப் பற்றி (சித்ராலயா) கோபு சொல்ல, ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 3 மணிக்கு அவரை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார் ஸ்ரீதர். அதன்படி, அன்றைய தினம் சரியாக 3 மணிக்கு ஒருவர் வந்து ஸ்ரீதரைச் சந்திக்க வேண்டும் என்று சொல்ல, அலுவலக ஊழியர் ஒருவர் அவரை ஸ்ரீதரின் அறைக்கு அழைத்துக்கொண்டு போனார். 'டான்ஸ் மாஸ்டர் வேணும்னு கேட்டிருந்தீங்களாமே..?' என்று வந்தவர் தயங்க... 'ஆமாம்!' என்று சொன்ன ஸ்ரீதர், படத்துக்காகப் பதிவு செய்திருந்த ஒரு பாடலை டேப் ரெக்கார்டரில் ஓடவிட்டு, 'இதுக்குப் புதுமையா ஏதாவது டான்ஸ் மூவ்மென்ட்ஸ் செஞ்சு காட்டுங்க' என்றார். அவர் செய்துகாட்டிய மூவ்மென்ட்ஸ் ஸ்ரீதருக்குப் பிடித்திருந்ததால், படத்தில் எத்தனை பாட்டுக்கு டான்ஸ் அமைக்க வேண்டும், லொகேஷன் என்னென்ன, யார், யார் ஆர்ட்டிஸ்ட் எனப் பல விஷயங்களையும் பேசி, அவரை அனுப்பி வைத்தார். தான் விரும்பினபடியே ஒரு புது டான்ஸ் மாஸ்டர் கிடைத்த சந்தோஷத்தில் ஸ்ரீதர் ஆபீஸை விட்டுப் புறப்பட்டபோது, வாசலில் காத்துக்கொண்டிருந்த ஒருவர், 'வணக்கம் சார், என் பேர் ஜெயராமன். டான்ஸ் மாஸ்டர் கோபு சார் உங்களைப் பார்க்கச் சொன்னார்' என்றார். தான் பேசி, முடிவு பண்ணிய டான்ஸ் மாஸ்டர் கோபு சொன்ன ஜெயராமன் இல்லை என்று தெரிய வர, அதிர்ச்சியடைந்தார் ஸ்ரீதர். இப்படி ஒரு வேடிக்கையான சூழ்நிலையில், 'காதலிக்க நேரமில்லை’ படத்துக்கு டான்ஸ் மாஸ்டரானவர்தான் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன்.

1964-ல் வெளியான 'காதலிக்க நேரமில்லை’ படத்தின் பொன்விழா அண்மையில் சிறப்பாக காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. காஞ்சனா, சச்சு, வி.எஸ்.ராகவன், சித்ராலயா கோபு என அந்தப் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் அந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism