Published:Updated:

`` ‘அந்த’ நடிகரும் ’சிரிப்பு’ நடிகரும் 'எப்படி வாழக் கூடாது’னு உதாரணம்..!’’ - 'அண்ணாதுரை' விழாவில் பரபரப்பு

`` ‘அந்த’ நடிகரும் ’சிரிப்பு’ நடிகரும் 'எப்படி வாழக் கூடாது’னு  உதாரணம்..!’’ - 'அண்ணாதுரை' விழாவில் பரபரப்பு
`` ‘அந்த’ நடிகரும் ’சிரிப்பு’ நடிகரும் 'எப்படி வாழக் கூடாது’னு உதாரணம்..!’’ - 'அண்ணாதுரை' விழாவில் பரபரப்பு

விஜய் ஆண்டனியின் 'எமன்' பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படமான 'அண்ணாதுரை' வருகிற நவம்பர் 30-ந் தேதியன்று திரைக்கு வர இருக்கிறது. தற்போது திரைக்கு வருவதற்கு முன்பே படங்களை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. இதற்கு  அண்ணாதுரை படமும் விதிவிலக்கல்ல. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றுப் படம் போன்ற செய்திகள் உலா வந்த நிலையில், படக்குழு அதனை மறுத்து , இது சமூக பிரச்னையை பொதுவாக சாடும் படம் என்ற தகவலை தெரிவித்தார்கள். மேலும், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வின் போது படத்திலிருந்து முதல் 10 நிமிடக் காட்சியையும் வெளியிட படக்குழு முன்னதாகவே திட்டமிட்டிருந்தது. அதன்படி, சென்னை சத்யம் தியேட்டரில் இப்படத்துக்கான ஆடியோ ரிலீஸ்  இன்று நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை இலவசமாக www.vijayantony.com என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் எடிட்டராகவும் மாறியுள்ளார் என்பது புதுதகவல். 

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், "படங்களை பற்றிய விமர்சனங்களை ட்விட்டரில் சொல்லக் கூடாது. ஒருபடம் எடுக்க அந்தக் குழு எவ்வளவு கஷ்டப் படுறாங்கனு தெரியுமா. தணிக்கை குழு ஒருதடவை படத்துக்குச் சான்றிதழ் கொடுத்துட்டாங்கன்னா அவ்ளோதான். வேறயாரும் சான்றிதழ் கொடுக்கத் தகுதியானவர்கள் கிடையாது" என்று கூறினார். 

"ஆகச்சிறந்த 50 தமிழ் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் அண்ணாதுரை நிச்சயம் இருக்கும்" என்று இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீநிவாசன் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார், "விஜய் ஆண்டனியை சில வருடங்களுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். அவர் இருக்குற இடமே தெரியாது. ஒரு பூனை மாதிரி பதுங்கியே இருப்பார். 'விஜய்'னு பேர் வெச்சு நடிக்க வந்த எல்லாருமே இப்படித்தான்னு நெனக்கிறேன். இவங்களோட ஆக்ரோஷத்தை திரையில நடிப்பு மூலமாத்தான் வெளிப்படுத்துவாங்க" என்று கூறினார். 

விஜய் ஆண்டனி பேசும்போது,"ராதிகா மேடமை எனக்கு 15 வருஷமா தெரியும். முதன் முதலில் 'சின்னப் பாப்பா பெரியப் பாப்பா' நாடகத்துல என்னை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தியது இவங்கதான். அவங்க பக்கத்துல நான் ஒரு நடிகனா உட்காருவேன்னு நெனச்சே பார்க்கலை" என்றார்

மேலும், இயக்குநர் பாக்யராஜ்,"அவள், அறம் மாதிரியான சின்னச் சின்ன படங்கள் ஹிட்டாக ஓடிக்கிட்டு இருக்குற இந்த நெருக்கமான சூழ்நிலையில இந்தப் படம் வெளிவருவது சவாலான விஷயம். ராதிகாவோட தன்னம்பிக்கைதான் அவங்க வெற்றிக்குக் காரணம். இந்தப் படத்தோட புதுமுக இயக்குநர் ஸ்ரீநிவாசன், இதுவரைக்கும் இயக்குநர் வசந்தபாலன், சுசீந்திரன், எழில் இவங்க மூணு பேர்கிட்டயும் உதவியாளரா வேலை பார்த்திருக்கார். உதயநிதி, விஜய் ஆண்டனி எல்லாருக்குமே அவங்க வீட்டுப் பெண்கள் ரொம்ப உறுதுணையா இருக்காங்க" என்று கூறினார். 

மேலும், இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக சில புகார்களை முன்வைத்தார். "தயாரிப்பாளர்கள் சங்கத்துல மூன்று புகார்கள் வந்திருக்கு. ஒரு நடிகர் படத்தோட 30 சதவீத படப்பிடிப்பு நடந்ததும், இது போதும் படத்தை ரிலீஸ் பண்ணுங்கனு சொல்லியிருக்கார். 'நான் முழுசா படம் முடிச்சு கொடுக்கணும்னா மூணு வருஷம் ஆகும்'னும் சொல்றார். சினிமாவுல விஜய் ஆண்டனி மாதிரி நேர்மையா இருக்குறவங்க 90 சதவீதம் பேர். ஆனா. மீதி இருக்குற 10 சதவீதம் பேர் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்காங்க. நான் சொன்ன அந்த நடிகர் நடிச்ச அந்தப் படத்துக்காக 18 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செஞ்சுருக்காங்க. தன்னை நம்பி பண முதலீடு செஞ்ச தயாரிப்பாளரோட நிலை இப்போ என்ன ஆகும்னு அவர் கொஞ்சம் கூட யோசிக்கலை. இந்த மாதிரியான ஆட்களைப் பார்த்து நல்லா இருக்குற 90 சதவீத சினிமா துறையினரும் எதைப் பத்தியும் கவலைப்படாம இருக்கக் கூடாது. முடிந்த அளவுக்குப் போராடி இப்போதான் அந்தத் தயாரிப்பாளர் புகார் கொடுத்திருக்கார். இந்த நடிகர் ஒட்டுமொத்தமாக 29 நாள்தான் படப்பிடிப்புக்கு வந்திருக்கார். 4 மணி நேரத்துக்கு மேல படப்பிடிப்பு நடந்ததே கிடையாது. இந்தியாவிலேயே எனக்குத் தெரிஞ்சு யாருமே இவ்வளவு தரக்குறைவா நடந்துக்கிட்டது கிடையாது. 

இன்னொரு பிரபல நகைச்சுவை நடிகர் ஒரு தயாரிப்பாளரைக் காயப்படுத்தியிருக்கார். இவங்க எல்லாருமே நம்ம 'எப்படி வாழக் கூடாது' என்பதற்கான உதாரணங்கள். தவிர , விஷால் ரொம்ப தெளிவா இருக்கார். அவர் நடிகர் சங்கம் சம்பந்தமான எந்தப் பிரச்னையிலும் தலையிட மாட்டேன்னு சொல்லிட்டார். அதனால தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பா நாங்க எல்லாரும் கடும் நடவடிக்கை எடுக்கப்போறோம்' என்று கூறி விழாவில் பரபரப்பை கிளப்பினார்.