Published:Updated:

பல்போ ... பல்பூஸ் !

பேட்டி: பொன்.விமலா , படங்கள்: தே.தீட்ஷித்

பல்போ ... பல்பூஸ் !

பேட்டி: பொன்.விமலா , படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:

''ஹை! எங்களுக்கு எப்போதும் பல்பு கொடுத்துதானே பழக்கம்?! ஆனா, பல்பு வாங்கினதைப் பத்தி கேக்குறீங்களே... வாட் எ காமெடி... வாட் எ காமெடி!'' என கலர் கலராகச் சிரித்தாலும், நிஜ வாழ்க்கையில் தாங்கள் வாங்கிய பல்புகளை தீபாவளி ஸ்பெஷலாகத் தோரணம் கட்டித் தொங்கவிடுகிறார்கள் நம் கலக்கல் காமெடி பட்டாசுகள். 

பல்போ ... பல்பூஸ் !

சதீஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்ன சொல்றதுங்க... ஒண்ணா, ரெண்டா, நான் வாங்கின பல்பை யெல்லாம் சேர்த்து வெச்சா ஒரு பல்பு கடையே வைக்கலாம். அப்ப, நான் சிவகார்த்திகேயனோட 'எதிர்நீச்சல்’ படத்துல நடிச்சுட்டு இருந்தேன். எங்க வீட்ல இருக்கிறவங்களைப் பத்தி ஆஹா, ஓஹோன்னு அவர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். 'வீட்ல எல்லோருக்கும் சினிமா ஆர்வம் அதிகம். உங்களைப் பத்தியும், படத்தைப் பத்தியும் ஏகத்துக்கு சொல்லி வெச்சிருக்கேன்’னு சிவகார்த்திகேயன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அன்னிக்குன்னு பார்த்து நான் 'எதிர்நீச்சல்’ படத்தோட டப்பிங்ல இருந்தேன். அப்பதான் அம்மாகிட்ட இருந்து போன் வந்துச்சு. 'என்னப்பா, எப்படி இருக்கே? நல்லாருக்கியா? சிவா தம்பி எப்படி இருக்கு?’ன்னு அம்மா அவரைப் பத்தி விசாரிக்க, போனை ஸ்பீக்கர்ல போட்டேன். 'என்னப்பா, என்ன பண்ணிட்டு இருக்கே? எங்கே இருக்கே?’ன்னு அம்மா கேட்க... 'எதிர்நீச்சல் டப்பிங்ல இருக்கேம்மா’னு நான் சொன்னதுதான் தாமதம்... 'என்னது! எதிர்நீச்சல் டப்பிங் படமா?’ன்னு அம்மா தடாலடியா கேட்டதும், அப்படியே நான் சிவா முன்னாடி அசடு வழிஞ்சேன் பாருங்க. ஒரே பல்பா போச்சுங்க!''

பல்போ ... பல்பூஸ் !

ஆர்த்தி

''பல்பா..? அதெல்லாம் கொடுத்துதானே பழக்கம். இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, நானும் அப்பப்போ பல்பு வாங்கியிருக்கேன்தான். அதுல இருந்து ரெண்டு அவுத்து வுடுறேன்; கேட்ச் பண்ணிக்குங்க.

நான் பொதுவாவே ரொம்ப வாலுப் பொண்ணு. அதுலேயும் சமையல்கட்டுல பண்ற அட்ராசிட்டிக்கு அளவே இருக்காது. 'நல்லா சாப்பிட்டா மட்டும் போதுமா? தீபாவளிக்கு ஏதாவது உருப்படியான ஸ்வீட் பண்ணு, பார்க்கலாம்!’னு சவால்விட்டாங்க. 'என்னது... ஆர்த்திக்கே சவாலா, ஆலமரத்துல வவ்வாலா?’ன்னு சிலபல புக்ஸ் எல்லாம் படிச்சுட்டு, அதிரசம் செய்ய ஆரம்பிச்சேன்.

ஒரு கிலோ வெல்லம், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ நெய்னு பெரிசா லிஸ்ட் எழுதிக் கொடுத்துட்டு, அம்மாகிட்ட சீன் போட்டுட்டு இருந்தேன். நான் கேட்டது எல்லாம் ஒண்ணுகூட மிஸ் பண்ணாம வாங்கிக் கொடுத்தாங்க. எல்லாத்தையும் கலந்து எண்ணெய்யில போட ஆரம்பிச்சதும், கொஞ்ச நேரத்துல வாசனை ஊரையே தூக்குச்சு! அம்மா கண்ணுல தௌசண்ட் வாட்ஸ். எல்லாருக்கும் நாக்கு வேற நமநமன்னு ஊற ஆரம்பிச்சுடுச்சு. ஆனா, செஞ்சு முடிச்சுட்டுப் பாத்தா, அதெல்லாம் அதிரசம் இல்ல... கறுப்பு கலர் எறிதட்டு! ஆரம்பத்துல கும்முன்னு வாசம் வந்து, கடைசியில தீய்ஞ்ச நெடி வந்து, எல்லாரும் காறிக் காறித் துப்பினாங்க. அதுல ஒண்ணு ரெண்டு அதிரசம் சுமாரா இருந்துச்சு. 'அதையெல்லாம் எடுத்து தூக்குல போடவாம்மா?’ன்னு கேட்டேன். 'இதைத் தூக்குல போடறதுக்கு பதிலா, உன்னைத் தூக்குல போடணும்டி!’னு கடுப்பா சொல்லிட்டு, உடனே சிரிச்சுட்டாங்க. நான் வாங்கின பல்பு வீட்டுக்கு மட்டுமில்லாம, ரோட்டுக்கே வெளிச்சம் தந்துடுச்சு.

அடுத்து, சின்ன வயசு சம்பவம் ஒண்ணு. அப்ப எங்க குரூப்புக்கு ஆகாதவங்க ஒருத்தர் இருந்தாங்க. அவங்க வீட்டை நோக்கி தீபாவளி அன்னிக்கு ராக்கெட் விடுறதுதான் என்னோட மாஸ்டர் பிளான். பசங்க எல்லாரையும் ஒண்ணா தெருவுல கூட்டிட்டேன். பெருசா மணலைக் குவிச்சு வெச்சி, அதுல ராக்கெட்டை அவங்க வீட்டை நோக்கிப் போகிற மாதிரி லேசா சாய்ச்சு சொருகி, ஏதோ சந்திராயன் விடுறது கணக்கா பசங்ககிட்ட ஏகப்பட்ட பில்டப் கொடுத்துப் பத்த வெச்சுட்டு, குதி குதின்னு குதிச்சா... அந்த சனியன் பிடிச்ச ராக்கெட் அப்படியே உல்டாவா திரும்பி, எங்க வீட்டுக்குள்ள பாஞ்சிருச்சு. பசங்க கைதட்டி சிரிப்பா சிரிச்சு பல்பு கொடுத்தாங்க. இன்னொரு பக்கம் அம்மா துரத்தோ துரத்துன்னு துரத்த... நான் வாங்கின பல்பு அந்த முறையும் ஊர் முழுக்கப் பரவிப்போச்சு!''

பல்போ ... பல்பூஸ் !

பகவதி பெருமாள்

''நான் காலேஜ் படிக்கும்போது எக்கச் சக்க பல்பு வாங்கியிருக்கேன். அந்த பல்புகளை எல்லாம் யோசிக்கும்போதே, எனக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஓவரா காமெடி பண்ணி, கலாய்ச்சிட்டு இருப்பேன். அதே மாதிரி அவங்களும் என்னை ஓவரா கலாய்ப்பாங்க. அப்படி ஒரு நாள் சைக்கிளைக் கொண்டுபோய் கேன்ட்டீன்ல நிறுத்திட்டு, ஃப்ரெண்ட்ஸ்களை கலாய்ச்சிட்டு இருந்தேன். கொஞ்சம் ஓவரா கலாய்ச்சிட்டேன் போலிருக்கு; மறுநாள் என் சைக்கிளைக் காணோம். எங்கே தேடியும் கிடைக்கல. என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும்தான் ஒளிச்சு வெச்சுட்டு விளையாடுறாங்கன்னு திட்டினேன்.நான் பேசுறதையே காதுல வாங்கிக்காம அவங்க கிளம்பிப் போயிட்டாங்க. அப்படியே டென்ஷனை கன்ட்ரோல் பண்ணிட்டு மறுபடியும் கேன்ட்டீனுக்குப் போனா, நான் விட்ட இடத்துலேயே சைக்கிள் நிக்குது. அந்த சைக்கிளை அப்படியே உருட்டிட்டு வந்தா, ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் இடுப்புல கையை வெச்சுக்கிட்டு எதிர்ல வழியை மறிச்சுட்டு நிக்கிறாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அவங்க முறைக்க, நான் ஒரு மாதிரி வழிஞ்சு, தலையைச் சொறிஞ்சிட்டு வரவேண்டியதா போச்சு.  பல்புன்னா பல்பு, அப்படியொரு பல்பு!

அப்புறம்... 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பாலாஜி தரணிதரன், திடீர்னு ஒருநாள் ஷூட்டிங் நடுவுல எமோஷனலா பேசிட்டு இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல அழ ஆரம்பிச்சுட்டார். 'இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே’ன்னு மண்டை குழம்பிப் போய், அவரை சமாதானம் பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு அவர் தானாவே சிரிக்க ஆரம்பிச்சுட்டார். நான் பேய் அடிச்ச மாதிரி பேந்தப் பேந்த முழிக்க, அவர் என்னைப் பார்த்துச் சிரிக்க, கூட இருந்த எல்லாரும் அவர்கூட கூட்டுசேர்ந்து சிரிக்க, எனக்கு ஒண்ணுமே விளங்கலை. 'என்னாச்சு? இவரு அழுதாரு. நாம போயி ஆறுதல் சொன்னோம். அப்புறம் அவரு சிரிச்சாரு. இப்ப சுத்தி இருக்குறவங்க எல்லாரும் சிரிக்குறாங்க... அட என்னாச்சு?’ன்னு விஜய் சேதுபதி மாதிரியே நான் உளற ஆரம்பிச்சுட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது, என்னை ஏமாத்துறதுக்காக அவர் போட்ட பிளான் அதுன்னு. வாங்கின பல்புல வயிறு வலிச்சுப் போச்சு, போங்க!''

பல்போ ... பல்பூஸ் !

காளிவெங்கட்

'' 'கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்துக்காக கேரளாவுல ஷூட்டிங். ஷூட்டிங் போன இடத்துல எனக்குன்னு ஒரு கேமரா கிடைக்க, பார்க்குற எல்லாத்தையும் படம் பிடிச்சுட்டு இருந்தேன். படத்துக்காக நிறைய கேரளப் பொண்ணுங்க அந்த இடத்துல குவிஞ்சிருந்தாங்க. அவங்களை கேமரா கண்களால சைட் அடிக்கணும்னா, கசக்குமா என்ன? விடாம வளைஞ்சு நெளிஞ்சு படம் பிடிச்சேன். இதுல என்ன ட்விஸ்ட்னா, ஒருகட்டத்துல பொண்ணுங்களே என்னைத் தேடிவந்து கேமராவுல சிக்கிட்டு இருந்தாங்க. 'என்னடா இது... கேரளப் பொண்ணுங்க நம்மளையும் நோக்குறாங்களே’னு தலையை ஸ்டைலா கோதிக்கிட்டே விடாம சைட் அடிச்சேன். திடீர்னு அதுல ஒரு பொண்ணு 'கீச்.. கீச்...’னு வாயிலேயே ஒரு சவுண்ட் கொடுத்து தூரத்துல இருந்து கூப்பிட்டுச்சு. 'நாம என்ன அவ்ளோ பெரிய மன்மதனா?’னு மனசுக்குள்ள ஃபீல் பண்ணிக்கிட்டே, 'அடி விழாம இருந்தா சரி’ன்னு பக்கத்துல போனேன். அப்ப அந்தப் பொண்ணுங்க எல்லாம், 'நீங்க காமெடி ஆக்டர்தானே?’ன்னு மலையாளத்துல கேட்டதும், நான் மந்திருச்சி விட்ட கோழி மாதிரி 'ஹிஹிஹி’ன்னு வழிஞ்சேன் பாருங்க... 'புது ஊரு... புது பொண்ணுங்க... நம்மளோட அழகைப் பார்த்து மயங்கித்தான் சைட் அடிக்குறாங்க’ன்னு நினைச்சா, அம்புட்டும் போச்சு. போட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு நான் பண்ணின குரங்குச் சேட்டைகளைப் பார்த்துதான் என்னை உத்து உத்து கவனிச்சு இருக்காங்கன்னு அப்புறமாதான் தெரிஞ்சது. எனக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமா போச்சு!''

பல்போ ... பல்பூஸ் !

அர்ஜுனன் நந்தகுமார்

''ஹா... ஹா... ஹா..! பல்பா..?! (கேட்கும்போதே கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு!) நம்ம வாழ்க்கைல எக்கச்சக்க பல்புகள் குவிஞ்சு கிடக்குங்க. நான் காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயம் அது. அப்ப ஒரு பொண்ணு என்கிட்ட... ஸ்டாப், ஸ்டாப்! ஒரு நிமிஷம் இங்கே கதையை அப்படியே நிறுத்துறோம். இப்ப ஒரு சின்ன பையன், கையில கம்பி மத்தாப்பைக் கொளுத்தி, சர்...சர்னு சுத்திட்டு இருக்கான். என்னடா, சம்பந்தமே இல்லாம சின்ன பையன் வர்றானேன்னு பாக்குறீங்களா? பிகாஸ், நாம இப்ப ஓல்டு ஸ்டைல் கொசுவத்திக்குப் பதிலா தீபாவளி ஸ்பெஷலா கம்பி மத்தாப்பு மூலமா ஃப்ளாஷ்பேக் போறோம். ஓகேவா?

யெஸ்... இப்பவே நான் ரொம்ப அழகுன்னா, காலேஜ் டைம்ல எவ்ளோ அழகா இருந்திருப்பேன்னு யோசிச்சுப் பாருங்க. என்னோட அழகுல மயங்கின அந்தப் பொண்ணு, வேலன்டைன்ஸ் டே அன்னிக்கு என்கிட்ட புரபோஸ் பண்ணப் போறானு, சுத்தி இருந்த நம்ம கூட்டாளிங்க சூடேத்திவிட்டானுங்க. நானும் ஆசை ஆசையா வாயைப் பொளந்து கிட்டு 'ஆஆஆஆ’ன்னு பார்த்துட்டு இருந்தேன். அந்தப் பொண்ணு என் பக்கத்துல நெருங்கி வந்தா. ஆனா, நெருங்கி வந்தவ எதுவும் சொல்லாம, என்னைக் கிராஸ் பண்ணிப் போயிட்டே போயிட்டே இருந்தா. 'அடிப்பாவி... ஏன் இப்படிப் பண்ணா?’னு மனசுல நினைச்சுக்கிட்டு, அவளை நிறுத்தி, 'ஏதோ சொல்ல வந்த மாதிரி இருந்துதே! என்னவானாலும் தயங்காம சொல்லு. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்’னேன். 'ஸாரி... ரக்‌ஷாபந்தன் எப்ப வருதுன்னு கேக்கணும்னு நினைச்சேன்’னு பல்பு கொடுத்து எஸ்கேப் ஆயிட்டா. அப்ப என் முகத்துல பத்து லிட்டர் எண்ணெய் வடிஞ்சதை எப்படிங்க என் வாயால சொல்லுவேன்!

அட, அதுகூடப் பரவாயில்லைங்க. போன வாரம் கால் டாக்ஸி புக் பண்ணிட்டு, கார்ல போயிட்டிருந்தேன். அந்த டிரைவர் என்னைப் பாத்ததும், 'சார்... உங்களை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே! அட, ஆமா... நீங்க சினிமாவுலதானே நடிக்கிறீங்க? ஆனா, எந்தப் படம்னுதான் ஞாபகம் வரலை’ன்னு சொன்னார். பரவாயில்லையே... இந்த அளவுக்காச்சும் நம்மளை நாலு பேருக்குத் தெரியுதேன்னு நானும் ஹேப்பி ஆயிட்டு, 'நான் இறங்குற வரைக்கும் உங்களுக்கு டைம் தரேன். அதுக்குள்ள எந்தப் படம்னு கண்டுபிடிங்க’ன்னு சொன்னேன். அவரும் ரொம்ப நேரமா யோசிச்சிட்டு, 'எனக்கு ஞாபகம் வந்திடுச்சு’ன்னு சொன்னார். 'ஹை... சூப்பரு! சொல்லுங்க, சொல்லுங்க... எந்தப் படம்னு சொல்லுங்க?’ன்னு கேட்டு, ஏதோ புகழ்ந்து பாடிய புலவருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப் போற மன்னர் மாதிரி பயங்கர பில்டப் கொடுத்து காத்துட்டு இருந்தேன். 'அட, ஆமா சார்! அந்தப் படத்துல உங்க நடிப்பு செம சூப்பர் சார்! சான்சே இல்ல..! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை எப்படி சார் மறக்க முடியும்?’னு கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. 'அடப்பாவி! அதுல நான் நடிக்கவே இல்லையே. கவுத்துட்டானே... கவுத்துட்டானே’ன்னு அசடு வழிஞ்சுட்டுக் கிளம்பி வந்தேன் பாருங்க... அது பல்போ பல்பு!''

பல்போ ... பல்பூஸ் !

பாலசரவணன்

''எங்க ஊர்ல நான்தான் கெத்து! என் ஃபிரெண்ட்ஸ்ல  பசங்க பொண்ணுங்கன்னு எல்லாரையும் கூட்டிட்டுத் திருவிழாவுக்குப் போறதா பிளான். அப்படிப் போகும்போது எல்லாரும் ஒரு வேன்ல போகலாம்னு முடிவு பண்ணிக் கிளம்பினாங்க. நான் மட்டும் பந்தாவா ஃபோர்டு கார்ல கிளம்பலாம்னு முடிவு பண்ணினேன். என்கூட சில நண்பர்களையும் சேர்த்துக்கிட்டு, ரெண்டு வண்டியா கிளம்பிப் போனோம். பாதி வழியிலேயே நான் போன கார், இன்ஜின் மக்கராகி நின்னு போயிடுச்சு. வேன்ல வந்த ஃபிரெண்ட்ஸ் எல்லாரும், 'அந்த டப்பா காரை விட்டுட்டு எங்ககூட வந்துடு’ன்னு கூப்பிட்டாங்க. ஆனா, 'என்னை விட்டுக்கொடுத்தாலும் கொடுப்பேன். என் காரை விட்டுத்தர மாட்டேன்’னு பஞ்ச் டயலாக் பேசிட்டு, என் காரை சரிபண்ணிட்டுக் கிளம்பலாம்கிற முயற்சியில இறங்கினேன். 'சரி, சரி... சீக்கிரம் வந்து சேரு’ன்னு எல்லாரும் போயே போயிட்டாங்க. சாயங்காலம் திருவிழா முடிஞ்சு எல்லாரும் திரும்பி வந்து பார்த்தா, அப்பவும் நான் அதே இடத்துலேயே நிக்குறேன். அதுக்கப்புறம் என்ன...? 'பாம்பப்பப்ப பாம்ப்பப்ப...’ன்னு 'கரகாட்டக்காரன்’ மியூஸிக்கை எல்லாரும் கோரஸா பாட, பல்பை வாங்கி கார்ல வெச்சேன். அப்புறம் வேற வழியே இல்லாம, டர்க்கி டவலால் முகத்தைத் துடைச்சுட்டு அவங்க வந்த வேன்லயே தொத்திக்கிட்டு வீடு வந்து சேர்ந்தேன். ஹூம்... இது மாதிரி சிலபல பல்புகள் வாங்கிட்டேதான் இருப்பேன்! வாங்கிட்டுதான் இருக்கணும். இல்லேன்னா வாழ்க்கை சுவாரஸ்யமாவே இருக்காதில்லே? என்ன சொல்றீங்க?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism