Published:Updated:

‘ஆளவந்தான் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா?’ க்வென்டின் டாரன்டீனோவிடம் கேட்கப்பட்ட கேள்வி..! #16YearsOfAalavandhan

விகடன் விமர்சனக்குழு
‘ஆளவந்தான் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா?’ க்வென்டின் டாரன்டீனோவிடம் கேட்கப்பட்ட கேள்வி..! #16YearsOfAalavandhan
‘ஆளவந்தான் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா?’ க்வென்டின் டாரன்டீனோவிடம் கேட்கப்பட்ட கேள்வி..! #16YearsOfAalavandhan

Sight & Sound என்ற சினிமா பத்திரிகையின் விமர்சகரான நமன் ராமச்சந்திரன் தன்னிடம் சொன்னதை வைத்து, பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் அந்தக் கேள்வியைக் கேட்டார். என்ன கேள்வி என்பதற்கு முன்பாக எங்கே, யாரிடம் என்பதையும் தெரிந்து கொள்வோமே?

வெனிஸ் நகரத்தில், இயக்குநர் க்வென்டின் டாரன்டீனோவிடம் கேட்கப்பட்ட அந்தக் கேள்வி இதுதான்: “உங்களுடைய கில் பில் 1 படத்தில் வரும் ஆக்ரோஷமான வன்முறைக்காட்சிகள், அப்படியே அனிமேஷன் காட்சிகளாக மாறும். இந்தப் பாணியை நீங்கள் ஒரு இந்தியப் படத்தைப் பார்த்துத்தான் அமைத்தீர்களா?”.
 
க்வென்டின் டாரன்டீனோ இதற்கு, “ஆமாம். அபய் (ஆளவந்தானின் இந்தி வர்ஷன்) என்ற பாலிவுட் படம் பார்த்துவிட்டுத்தான் நான் அதுபோன்ற ஒரு புதிய விஷயத்தைச் செய்தேன்” என்று சொன்னார். அதன்பிறகு, வழக்கம்போல, ஒரு Foreigner / Outsider பாராட்டினால்தானே நம்மிடமிருக்கும் நல்ல விஷயங்கள் தெரியும்? என்பதை உறுதிப்படுத்துவதைப் போல, பலரும் இதைப் பற்றிப் பேசி, கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால், சினிமா ரசிகர்களுக்கு, 2001ல் வந்தபோதே இது ஒரு கல்ட் படமென்பது தெரிந்த விஷயம்தானே?
 
அமெரிக்காவில் Fantastic Fest என்றொரு வருடாந்திர திரைப்படக் கொண்டாட்டம் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில், சென்ற ஆண்டு ஆளவந்தான் படத்தின்  இந்தி வர்ஷனான “அபய்” திரையிடப்பட்டு பரவலான பாராட்டுக்களைப் பெற்றது. அதன் பிறகு, இந்தப் படத்தின் டிஜிட்டல் வர்ஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயம்: இந்த ஆளவந்தான் படமானது, மணியன் அவர்களின் இதயம் பேசுகிறது வார இதழின் இளமைச் சிறப்பிதழாக வந்த 03-07-1983வது இதழில் இருந்து தொடராக வெளியானது. இத்தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பாக, மணியன், ஓவியர் ஜெயராஜ் மற்றும் கமல்ஹாசன் அவர்கள் அனைவரும் கலந்து பேசி, இத்தொடர் எப்படி Shape ஆக வேண்டுமென்று தீர்மானித்து, அதற்கேற்ப இத்தொடரை வடிவமைத்தனர். தொடர் மக்கள் மத்தியில் பெறுவரவேற்புப் பெற்றதற்கு, ஓவியர் ஜெயராஜும் ஒரு காரணம்.
 
இத்தொடர் வெற்றி பெற்றதற்கு இன்னொரு காரணம், கமல்ஹாசனின் தேடல் வேட்கை. இந்தக் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் மனநோயாளியாக இருப்பார். அதற்காகவே, சென்னை மனநல மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருக்கும் நோயாளிகளை கூர்ந்து அப்ஸர்வ் செய்து, அவர்களின் செயல்களை Rational ஆகப் புரிந்து கொள்ள முயன்றார், கமல். இதற்காகவே தனது நண்பரான ராதுவையும் உடன் அழைத்துச் சென்று, அவருடன் தீவிரமாக விவாதித்து, அதன்பிறகுதான் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டாவது கதாபாத்திரத்தின் குணநலன்களை, செயல்களை கதையில் கொண்டு வந்தார்.

டாக்டர் பிரபு தத்தா என்பவர்தான் கதையின் Narrator. அவரது பார்வையில்தான் இந்த மொத்தக் கதையுமே தொடராக சொல்லப்பட்டிருக்கும். கதையில் வரும் முக்கிய பாத்திரங்களுக்கு அவர்தான் ஃபேமிலி டாக்டர். அந்த அடிப்படையில் அவர் இந்தக்கதையை வாசகர்களுக்குச் சொல்வதாக எழுதப்பட்டது.

ஆளவந்தான் & தாயம்: இந்த இரு தலைப்புகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான். தாய விளையாட்டில் ஒன்று விழுவது எப்படி சிரமமான விஷயமோ, அதைப்போலத்தான் ஒரு நாட்டை ஆள வருபவனாக இருப்பதும். 40 மில்லியன் விந்தணுக்களில் ஒன்று மட்டுமே கருவாக உருவெடுப்பது போல, பலகோடி மக்களில் ஒருவர்தான் ஆள்பவராக உருவெடுக்கிறார். ஆனால், ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களது வாரிசுதான் ஆளவந்தான் – நாட்டை ஆளப்போகும் அரசன். இங்கேயே, குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தைக் கமல் அழகாக விளக்கி விடுகிறார்.
 
ஆளவந்தான் படம், 2001ம் ஆண்டு தீபாவளியன்று, (16, நவம்பர், 2001) தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நேரடிப் படமாகும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது. கமல்ஹாசனின் ஆகச்சிறந்த பத்து படங்களில் சர்வ நிச்சயமாக ஆளவந்தானும் அடங்கும்.