Published:Updated:

'தீயில் விழுந்தால்தான் கொண்டாடப்படுவார்களா?' - 'பத்மாவதி' பட சர்ச்சைகள்

'தீயில் விழுந்தால்தான் கொண்டாடப்படுவார்களா?' - 'பத்மாவதி' பட சர்ச்சைகள்
'தீயில் விழுந்தால்தான் கொண்டாடப்படுவார்களா?' - 'பத்மாவதி' பட சர்ச்சைகள்

கருத்துச் சுதந்திரமும் படைப்புச் சுதந்திரமும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவரும் காலம் இது. `பத்மாவதி' படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்தே படம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துவிட்டன. `பாஜிராவ் மஸ்தானி' என்னும் பிரமாண்ட படத்தை இயக்கிய சஞ்சய்லீலா பன்சாலிதான் `பத்மாவதி’ படத்தின் இயக்குநர். `பாஜிராவ் மஸ்தானி’ படத்தின்போதே வரலாற்றுத் திரிபுகள் செய்திருப்பதாக படப்பிடிப்பு செட்டில் ஆரம்பித்து படம் ரிலீஸ் வரை பிரச்னை இருந்தது. இந்த முறையும் ஜெய்ப்பூரில் நடைபெற்ற `பத்மாவதி' படப்பிடிப்பின்போது, `ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனா’ என்ற அமைப்பு, படப்பிடிப்புத்தளத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அலாவுதீன் கில்ஜிக்கும் ராணி பத்மாவதிக்கும் காதல் காட்சிகள் கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதே அவர்களின் கோபம். இந்தக் காட்சிகள் பத்மாவதியின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன; சஞ்சய்லீலா பன்சாலியும் தாக்கப்பட்டார். எம்.பி சாக்‌ஷி மஹராஜ் போன்ற பா.ஜ.க பிரமுகர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த பிராமண அமைப்புகளும், ஜெய்ப்பூர் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள்.

ராணி பத்மாவதி யார்?

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரில் அமைந்திருக்கிறது சித்தூர்கோட்டை. மேவார் மன்னன் ராணா ரத்தன் சிங்தான் சித்தூர்கர்ரை ஆண்ட மன்னன். ரத்தன் சிங்கின் மனைவி `ராணி பத்மினி’ என்கிற பத்மாவதி. இவரின் அழகை `ஹிராமன்' என்னும் பேசும் கிளி மூலம் கேள்விப்பட்ட டெல்லி மன்னர் அலாவுதீன் கில்ஜி, பத்மாவதியை அடைவதற்காக சித்தூர் கர்ருக்குப் படையெடுக்கிறார். சித்தூர் கர்ருக்குப் படையெடுத்த அலாவுதீன் கில்ஜி, மகாராணியைச் சந்தித்தாலே போதும் என்று அரசன் ரத்தன் சிங்கிடம் தெரிவிக்கிறார். பத்மாவதியைப் பார்த்த நொடியில் அவரை அடையும் முனைப்பில், ரத்தன் சிங்கை கைதுசெய்து டெல்லிக்கு அடிமையாக அழைத்துச் செல்கிறார். ராணி, கணவனை மீட்கும் வைராக்கியத்துடன் டெல்லிக்குப் படையெடுத்து, அலாவுதீன் கில்ஜியுடன் போரிட்டு கணவனை மீட்கிறார். ஒரு பெண் தன்னை வென்றுவிட்டாள் என்ற கோபத்தில் கில்ஜி மீண்டும் படையெடுக்க, பெரும்படையுடன் தன்னால் போரிட முடியாது என்று புரிந்துகொண்ட பத்மாவதி மற்றும் தன்னுடன் வரும் 700-க்கும் மேற்பட்ட பணிப்பெண்களும் ``இதுதான் கில்ஜிக்கான என் பரிசு” என்று சபதமெடுத்து தீயில் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். 

ராணி பத்மாவதி பற்றிய இந்தக் குறிப்பு, கி.பி. 1540-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கவிதையில் முதன்முறையாகப் பதிவாகியிருக்கிறது. சூஃபி கவிஞரான முகமது ஜயசி (Muhammed Jayasi) என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கவிதை, `அவதி' என்ற மொழியிலிருந்தது. `பத்மாவதியை அலாவுதீன் கில்ஜி சந்திக்கவில்லை. முகமது ஜயசி எழுதிய பத்மாவதியின் வரலாறு ஒரு புனைவு... பத்மாவதி என்பதே கற்பனை  கதாபத்திரம்' எனப் பலவிதமான கதைகள் சொல்லப்பட்டுவருகின்றன.

பலரால் சித்திரிக்கப்படுவதைப்போல `அலாவுதீன் கில்ஜி, தன்னுடைய ஆட்சிப்பரப்பை விரிவாக்கம் செய்யவே சித்தூர்கருக்கு படையெடுத்ததாகவும், ராணி பத்மாவதிக்காக போர் தொடுக்கவில்லை' என்றும், `ராணி பத்மாவதி குறித்துக் கூறப்படும் கதைகள் வெறும் கற்பனையே' என்று பேராசிரியர் தஸ்னீம் சுராவர்தி, சந்தியா ஷர்மா உள்பட பல வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கிறார்கள்.

எதிர்ப்புகள் என்னென்ன?

இந்தத் திரைப்படத்தைச் சுற்றி நடக்கும் களேபரங்களையடுத்து, விளக்கமளித்துள்ள இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி, `` `பத்மாவதி' திரைப்படத்தை பெரும் முயற்சியுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்கியிருக்கிறோம். இதில் அலாவுதீன் கில்ஜிக்கும் ராணி பத்மாவதிக்கும் இடையில் எந்தக் கற்பனை காட்சிகளும் படமாக்கப்படவில்லை. ராஜ்புத்திரர்களின் மதிப்பைக் கருத்தில்கொண்டுதான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. ராஜ்புத் அமைப்புகளுக்கு படத்தை முன்னதாகவே திரையிட்டுக் காட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

ராஜ்புத்திரர்களின் மனம் புண்படும்படியான வரலாற்றுத் திரிபுகள், ராணி பத்மாவதி நடனமாடியது இல்லை. கில்ஜிக்கும் ராணி பத்மாவதிக்கும் இடையிலான காட்சிகள் ராணியை சிறுமைப்படுத்துகிறது. அவர் கீழ்த்தரமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார் போன்ற பல குற்றச்சாட்டுகளுடன் பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும் மிரட்டல்களும் படக் குழுவினருக்கு வந்துகொண்டிருக்கின்றன. 

சர்ச்சைகளைத் தொடர்ந்து எழும் கேள்விகள் எவை?

1963-ம் ஆண்டில் வைஜெயந்தி மாலாவும் சிவாஜி கணேசனும் நடித்து `சித்தூர் ராணி பத்மினி' என்ற திரைப்படம் தமிழில் வெளிவந்துள்ளது. 1964-ம் ஆண்டில் `மஹாராணி பத்மினி’ என்னும் பெயரில் இந்திப் படமும், 1930-ம் ஆண்டில் வங்காள மொழிப் படமும், பல டிவி சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டில் எழுந்துள்ள இந்த வகை சர்ச்சைகள் எதைக் காட்டுகின்றன? 

இஸ்லாமிய மன்னரான கில்ஜியும் ராணி பத்மாவதியும் ஒரே காட்சியில் காட்டப்படக் கூடாது என்பதுதான் காரணமா?

கொண்டாடப்படவேண்டுமென்றால், பத்மாவதிகளும் சீதைகளும் தீயில் விழுந்து உயிர்விட வேண்டுமா?

சமூகம் திணிக்கும் மதிப்புக்காக உயிரைவிடக் கூறும் புராணங்கள் நியாயப்படுத்தப்படலாமா?

கிபி.1540-ம் ஆண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ராணியின் மதிப்பைக் காக்க போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. 3,644 பாலியல் வன்புணர்வு வழக்குகளுடன், இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களுள் 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறது ராஜஸ்தான். சமகாலத்தின் இந்த அவலங்களை எதிர்த்துப் போராடுமா ராஜ்புத் சமூகம்?

டிசம்பர் முதல் தேதி திரைக்கு வருகிறார் ராணி பத்மாவதி. இவர் மேலும் எழுப்பவிருக்கும் கேள்விகளுக்காகக் காத்திருப்போம்.