Published:Updated:

’’ஒரு 'Animal'... ஒரு 'Trained Animal'... சவாலான 'நந்து’ போர்ஷன்..!’’ - ஆளவந்தான் மேக்கிங் சொல்லும் சுரேஷ் கிருஷ்ணா #VikatanExclusive #16YearsOfAalavandhan

தார்மிக் லீ
’’ஒரு 'Animal'... ஒரு 'Trained Animal'... சவாலான 'நந்து’ போர்ஷன்..!’’ - ஆளவந்தான் மேக்கிங் சொல்லும் சுரேஷ் கிருஷ்ணா #VikatanExclusive #16YearsOfAalavandhan
’’ஒரு 'Animal'... ஒரு 'Trained Animal'... சவாலான 'நந்து’ போர்ஷன்..!’’ - ஆளவந்தான் மேக்கிங் சொல்லும் சுரேஷ் கிருஷ்ணா #VikatanExclusive #16YearsOfAalavandhan

றதி எப்படியொரு தேசிய வியாதியோ, நல்ல ஒரு சினிமாவின் பெருமையை அவ்வப்போது தவறவிடுவதும் ஒருவித வியாதியே. அதில் மிக முக்கியமான ஒரு படம்தான் 'ஆளவந்தான்'. இப்படம் வெளியாகி இன்றோடு 16 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. அதை நினைவுகூறும் வகையில் படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்.  

1980-ல் கமல்ஹாசன் 'தாயம்' என்றொரு தொடர்கதை எழுதினார். அதைப் படமாக்குவதற்காக இயக்குநர் பாலசந்தரிடம் கேட்டிருக்கிறார். இது, காலத்தைக் கடக்கும் உணர்வுகளைக் கொடுக்கும் கதை என்பதால் அப்பொழுது  படமாக்கப்படவில்லை. 2000-ல் பாலசந்தரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் கிருஷ்ணாவிடமும், தயாரிப்பாளர் தாணுவிடமும் இக்கதை குறித்துப் பேசியிருக்கிறார் கமல். கதையின் ஒருவரியைக் கேட்டதும் இருவருமே எந்தவித மறுப்பும் கூறாமல் ஒப்புக்கொண்டார்கள். தமிழில் 'ஆளவந்தான்' என்றும் ஹிந்தியில் 'அபே' என்றும் வெளியிடுவதாகத் திட்டமிட்டார்கள். ஒளிப்பதிவாளராக திருவும், இசையமைப்பாளராக சங்கர்-எசான்-லாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பலருக்கும் தெரியாத உண்மை துணை இயக்குநராக ஜெயம் ரவி இப்படத்தில் பணியாற்றினார் என்பது. ரவீனா தன்டன், மனீஷா கொய்ராலா போன்றவர்களை லீடிங் ரோலாக வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினர். 2001-ல் படமும் வெளியானது.

ஒரு கதாபாத்திரம் விஜய்குமார், இன்னொரு கதாபாத்திரம் நந்தகுமார். பார்ப்பவர்களுக்குத்தான் இரு கதாபாத்திரம். ஆனால் அதை மக்கள் மனதில் பதியவைக்க இருவித நடிப்பை வெளிக்காட்டியவர் கமல் என்ற ஒருவரே. குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களால்  குழந்தையின் மனநிலை என்னவாகும்; அவ்வுணர்வு எப்படிப் பிரதிபலிக்கும்; என்பதே கதையின் கருவும், காட்சியும். பொதுவாக இயக்குநர் யாராக இருப்பினும் கமல் நடித்தால், அவருடைய ஆளுமைதான் படம் முழுக்கப் பயணிக்கும். தன் நடிப்பால் பார்ப்பவர்கள் அனைவரையும் தன்  வசம் ஈர்த்துவிடுவார். ஆனால் இந்தப் படத்தில் இவர் ஏற்ற நடித்த 'நந்து' கதாபாத்திரத்தில், இவர் நடித்தார் என்பதைவிட, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தாயைப் பிரிந்த ஏக்கம், தடம் மாறிய தகப்பனைக் கண்டு வரும் கோபம். இவை இரண்டும் வெறியாக மாறி, கற்பனையாய் ஓர் உலகை உண்டாக்கி, அங்கு நான் வைத்ததுதான் சட்டம், என்று சைக்கோத்தனமாக இவர் செய்யும் செயல்கள் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சி கலந்த பயத்தில் ஆழ்த்தியது. இது போன்ற நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'சீசோபெர்னியா' (Schizophrenia) என்று பெயர். அவ்வியாதி வந்தவர்போல் செயல்பட, இவர் கையில் எடுத்த ஆயுதம்தான் இந்த நடிப்பு. படம் பார்த்தவர்களுக்கு, 'நந்து' கதாபாத்திரத்தின் தாக்கம் குறைந்தது இரண்டு நாளாவது இருக்கும். அப்படியோர்  ஆணித்தரமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். குறிப்பாக இரு கமலும் சிறைச்சாலையில் உரையாடும் காட்சியில் மொட்டையடித்த நந்து கதாபாத்திரத்தின் நடிப்பு, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்தப் படத்தில் மற்றோர் அதிர்ச்சியில் ஆழ்த்தும் காட்சி, மனீஷா கொய்ராலாவை இவர் வெறித்தனமாகக் கொலை செய்வது. ரத்த வெறி கொண்ட அந்தக் காட்சியை, பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று எண்ணி அனிமேஷன் வடிவில் காட்சியை உருவாக்கியிருப்பார்கள். சைக்கோத்தனமாக மனீஷா கொய்ராலாவை கத்தியால் குத்தி, தெறிக்கும் ரத்தத்தை தன் முகத்தில் பூசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அனிமேஷனிலிருந்து அப்படியே நிஜத்துக்கு மாறும். தமிழ் சினிமா இதுவரை தந்திராத சில காட்சிகளையும், 'நந்து' எனும் கதாபாத்திரத்தைக் கொடுத்தது. பொருளாதார ரீதியில் வெற்றிபெறவில்லையென்றாலும், தமிழ் சினிமாவில் இது கொண்டாடப்படவேண்டிய முக்கியமான படம். படத்தில் கமல் கூறும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வைரமுத்து. இன்றும் அதை மனப்பாடமாக ஒப்பிக்கும் ரசிகர்கள் ஏராளம்.  

நந்துவுக்கு மட்டும் தெரியும் சில காட்சிகள், அவன் இன்னும் வளராத முரடன் என்று படம் பார்க்கும் மக்களுக்குச் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். தவிர, படத்தில் நுட்பமாக பல விஷயங்களைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை படத்தில் இரு கமல்ஹாசனும் இடம்பெறும் பல காட்சிகள் நமக்கு உணர்த்தும். ஹாலிவுட்டில் நேர்த்தியான இயக்குநர்களில் ஒருவர் க்வென்டின் டாரன்டீனோ. மனீஷா கொய்ராலாவைக் கொல்லும்போது இடம்பெறும் கார்ட்டூன் காட்சியை அவர் இயக்கத்தில் வெளியான 'கில் பில்' எனும் படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதை வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்டார். ஆசியாவில் மோஷன் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் படம் என்ற பெருமையும் 'ஆளவந்தான்' படத்துக்கு உண்டு. கார் சேஸிங் காட்சி, இராணுவ வீரராக மாற இவர் மேற்கொண்ட பயிற்சி, டூப் இல்லாமல் இவர் செய்த ஸ்டன்ட் காட்சிகள் என இப்படத்திற்காகத் தன்னை முழுக்க அர்ப்பணித்திருந்தார் கமல். சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தாலும், கமலின் கதை, யோசனை, நடிப்பு, உக்திகள் எனப் படம் நெடுகிலும் கமலின் ஆளுமை தலைதூக்கியிருப்பதைப் பார்க்கும் ரசிகர்களால் உணர முடியும். 'பாட்ஷா' படத்தை இயக்கிய அதே இயக்குநர்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, இந்தப் படத்துக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கான பதில் இன்றுவரை புரியாத புதிர். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தத் தெரியாத படங்கள் இன்னமும் வந்துகொண்டிருக்கும் நிலையில், 16 வருடங்களுக்கு முன்பு இது எப்படிச் சாத்தியமானது என்ற சந்தேகமே, படத்தின் வெற்றிக்குக் காரணமாகவும் மாறியது. 

படத்தைப் பற்றி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நம்முடன் பகிர்ந்த மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்.

''கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே கமல்ஹாசன் சார்தான். இதை இயக்கும் பாக்கியம் மட்டும் எனக்குக் கிடைத்தது. அவர் எழுதுன 'தாயம்' தொடரின் ஒன்லைனைச் சொன்னவுடனேயே எனக்கு ரொம்பப் பிடிச்சுருச்சு. 'ஒரு கேரக்டர் 'Animal' இன்னொரு கேரக்டர் 'Trained Animal'னு அவர் கதாபாத்திரத்தை எடுத்துச் சொன்னதே ரொம்ப அழகா இருந்தது. அந்த நேரத்துல இந்தப் படம் பண்ணா கண்டிப்பா ஒரு புது ஜானரா இருக்கும்னு நினைச்சோம். விஜய்குமாரோட உடலமைப்பு மிலிட்ரில இருக்குற மாதிரியும், நந்தகுமாரின் உடல் அமைப்பு அதைவிடக் கொஞ்சம் அதிகமாவும், மொட்டைத் தலையுடனும் இருக்கணும். மொதல்ல மிலிட்ரிமேன் போர்ஷனை முடிக்கலாம்னு ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணோம். இதுல என்ன ரிஸ்க்ன்னா ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரியான காட்சிகள் நிறைய இருக்கும். அதையெல்லாம் எடுக்கும்போதுதான் ரொம்ப சிரமப்பட்டோம். மனீஷா கொய்ராலாவை நந்து கொலை பண்ற மாதிரி ஒரு சீன் இருக்கும். அதுல நந்து கொலை பண்ணபிறகுதான் விஜய்குமார் வந்து பார்க்கணும். ஆனா மிலிட்ரிமேன் சீன்தான் நாங்க முதல்ல எடுக்கணும். மறுபடியும் செட்டைப் புதுசா போட்டுதான் எடுக்கணும். அதேமாதிரி ரெண்டு பேரும் ஜெயில்ல பேசிக்குற சீன்ல விஜய்குமார் போர்ஷன் மொதல்ல முடிச்சிட்டு. 2 மாசம் கழிச்சு நந்து போர்ஷன் எடுக்கணும். அந்த ஷூட்டிங் டெல்லியில நடந்தது. இதுக்கு நடுவுல க்ளைமாக்ஸ்ல வர்ற ஸ்டன்ட் சீன் பண்ணும் போது கமல் சாருக்கு அடிபட்டு மூணு மாசம் ரெஸ்ட்ல இருந்தார். டெல்லியில எடுக்க முடியாத சூழ்நிலை ஆகிடுச்சு. சென்னை, பிரசாத் ஸ்டுடியோல அதேமாதிரி ஜெயில் செட் போட்டோம். மறுபடியும் நந்தகுமார் போர்ஷன் எடுக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. இதுமாதிரி பல கஷ்டங்களைக் கடந்துதான் இந்தப் படத்தை முடிச்சோம். அந்தச் சமயத்துல படம் பெருசா ஓடலானாலும், இப்போ மக்கள் மத்தியில பேசப்படுறதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூடிய சீக்கிரம் படம் ரீ-ரிலீஸ் ஆகும், தாணு சார் அதுக்கான முயற்சியில இருக்கார். அப்போ என்ஜாய் பண்ண முடியாத ரசிகர்கள் கண்டிப்பா இப்போ என்ஜாய் பண்ணுவாங்க'' என நிறைவாகப் பேசுகிறார், சுரேஷ் கிருஷ்ணா.

வாழ்த்துகள் 'ஆளவந்தான்' டீம்!