Published:Updated:

’தேவர் அடியார்’ 'தே**யா’ ஆன பின்னணி தெரியுமா? ‘நாச்சியார்’ படக்குழுவினருக்கு ஒரு கேள்வி!

’தேவர் அடியார்’ 'தே**யா’ ஆன பின்னணி தெரியுமா? ‘நாச்சியார்’ படக்குழுவினருக்கு ஒரு கேள்வி!
’தேவர் அடியார்’ 'தே**யா’ ஆன பின்னணி தெரியுமா? ‘நாச்சியார்’ படக்குழுவினருக்கு ஒரு கேள்வி!

'நாச்சியார்' படக்குழுவினருக்கு...

வணக்கம். பொதுவாக ஒரு படத்தின் டீசர் வெளியானால் பரபரப்பு கிளம்புவது இயல்புதான். அதிலும் பிரபல இயக்குநரின் படம், பிரபல நடிகை திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் படங்களில் ஒன்று, பிரபல இசையமைப்பாளர் நாயகனாக நடிக்கும் படம் என்று ஏகப்பட்ட 'பிரபல' காரணங்கள், 'நாச்சியார்' டீசருக்கான எதிர்பார்ப்பில் இருந்தன. ஒரு படத்தின் டீசரில் ஏதாவது ஒரு வசனம், பார்வையாளர்களைக் கவர்ந்து பலராலும் பரபரப்பாகப் பேசப்படும். ஆனால், 'நாச்சியார்' டீசரில் இருந்ததோ ஒரே ஒரு வசனம். இயக்குநர் பாலா எதிர்பார்த்ததுபோலவே அந்த ஒரே ஒரு வசனமும் பரபரப்பாகப் பற்றிக்கொண்டது. அந்த வசனம் 'தேவடியாப் பயலுவளா'. (சில மென்மன வாசகர்களுக்காக இக்கட்டுரையில் இந்த வார்த்தையை இனி நட்சத்திரக் குறியிட்டு குறிப்பிடுகிறேன்).


ஒரு படத்தின் டீசர் என்பது படத்தின்மீது எதிர்பார்ப்பையும் கவனத்தையும் குவிக்க வேண்டும் என்பதையும் தாண்டி, படத்தின் தன்மை என்ன, கதைக்களம் எப்படிப்பட்டது, யாரைப் பற்றிய கதை என்பதை சாராம்சமாகப் பார்வையாளர்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால், இயக்குநர் பாலாவுக்குத் 'தே*****யா'-வைத் தாண்டி, 'நாச்சியார்' குறித்துப் பார்வையாளர்களுக்குச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா என்ன. ஏற்கெனவே 'பரதேசி' பட டீசர் வெளியானபோதும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் பாலா, படத்தில் நடிப்பவர்களைப் பிரம்பால் அடிப்பது போன்ற காட்சிகள் அந்த டீசரில் இடம்பெற்றதே சர்ச்சைக்குக் காரணம். அதில் பிரம்படி என்றால் இதில் 'தே*****யா'. நம்மைப் பொறுத்தவரை இதைப் பற்றி பாலாவிடம் சொல்வதற்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

தமிழின் முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் பாலாவுக்கு என்று ஓர் இடமுண்டு. வித்தியாசமான மனிதர்கள், வெளிநாட்டுப் படங்களைக் காப்பியடிக்காமல் மண்ணின் அசல் தன்மையுடன்கூடிய கதைக்களம், மனித மனத்தின் சிடுக்குகளைக் காட்சிப்படுத்தும் விதம் ஆகியவை பாலாவின் தனித்தன்மைகள். பாலா படங்கள் என்பதற்காகவே பார்க்கும் கணிசமான பார்வையாளர்களும் உண்டு. அப்படியிருக்க, இந்தப் பிரம்படி சர்ச்சை, ''தே*****யா'' வசனம் என்று தனியாக விளம்பரப் பரபரப்பைக் கிளப்ப வேண்டிய தேவைதான் என்ன?

அதேபோல் பாலா படங்களின் குறிப்பிடத்தக்க தனித்தன்மை மனித மனத்தின் வக்கிரத்தையும் கொடூரத்தையும் அதற்கான அழகியலுடன் காட்சிப்படுத்துவதுதான். உலக இலக்கியங்களில் இதற்கான முன்மாதிரிகள் உள்ளன. மனித மனத்தின் வக்கிரங்களை வாசகர்கள்முன் வைப்பதன் மூலம் அதன் உளவியலையும் சமூகப்பின்னணியையும் ஆராய்வதே அத்தகைய படைப்புகளின் நோக்கம். எது பார்க்கக் கூடாதது என்று தவிர்க்கப்பட்டதோ அதை பாலா காட்சியாக வைத்தபோது, 'வித்தியாசமாக இருக்கிறதே' என்று ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அதுவே பாலாவின் துணிச்சலாகவும் தனித்தன்மையாகவும் கொண்டாடப்பட்டது. ஆனால், இந்த வக்கிரம் என்பது படைப்புடன் இணைந்து இருக்க வேண்டுமே தவிர, அதை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தும்போது, அது அசிங்கமாகிவிடுகிறது. அதுதான் 'பரதேசி', 'நாச்சியார்' டீசர்களில் நடந்துள்ளன. 'தே*****யா பயலுவளா' என்ற வார்த்தை ஆபாசமோ இல்லையோ, அதை விளம்பரத்துக்காகப் பாலா பயன்படுத்தியது நிச்சயம் ஆபாசம்தான்.
'ஏன், தமிழ் சினிமாவில் இந்த வார்த்தையை யாருமே பயன்படுத்தவில்லையா' என்ற கேள்வி எழலாம். 'நாம் இருவர்', 'ரத்தக்கண்ணீர்', 'விக்ரம்' தொடங்கிப் பல படங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கௌதம் மேனன் படங்களில் ஆங்கிலக் கெட்டவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இவை படத்தின் கதையோட்டத்தில் இருக்கும்போது உறுத்தலாகத் தெரிவதில்லை. ஆனால், வேண்டுமென்றே படத்தின் டீசரில் தனித்து வைக்கும்போது நிச்சயம் ஆபாசமாகத்தான் தெரிகிறது.

அப்படியானால் 'கெட்டவார்த்தையே பேசக் கூடாது' என்று கலாசார போலீஸ் ஆகிறீர்களா என்ற கேள்வியும் எழலாம். உண்மையில் வார்த்தைகளில் நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனால், தமிழில் வசைச்சொல்லாகப் பயன்படுத்தப்படும் அனைத்து வார்த்தைகளும் பெண்களின் பிறப்புறுப்பு பற்றியவையாகவும் பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கக்கூடியவையாகவுமே இருக்கின்றன. ஓர் ஆணைத் திட்ட வேண்டும் என்றால் நேரடியாகத் திட்ட வேண்டியதுதானே அவன் அம்மாவைத் 'தே*****யா' என்று ஏன் திட்ட வேண்டும். மேலும், வரலாறு தெரிந்தவர்கள் யாரும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தமாட்டார்கள்.

தமிழில் தேவதாசி முறை என்ற கொடிய வழக்கம் இருந்தது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் கோயில்களுக்குப் பொட்டுக்கட்டப்பட்டு, அவர்கள் 'கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்' என்ற பொருளில் 'தேவர் அடியார்' என்றழைக்கப்பட்டனர். பின்னாளில் அது 'தேவடியார்' என்றும், பேச்சுவழக்கில் 'தே*****யா' என்றும் ஆனது. இந்தப் பெண்களின் வாழ்க்கை சொல்ல முடியாத துயரங்களைச் சுமந்தது. 'கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்' என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் ஊர்ப்பெரிய மனிதர்களின் பாலியல் பண்டமாகவே அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். 

இத்தகைய கொடூரமான தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்னும் குரலை அழுத்தமாக ஒலித்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. சென்னை மாநகராட்சியின் முதல் துணைமேயர், தென்னிந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைகளைப் பெற்ற முத்துலெட்சுமி ரெட்டி இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்குபெற்றவர். முத்துலெட்சுமி ரெட்டியின் தேவதாசி ஒழிப்புக் கோரிக்கைக்கு அழுத்தமான ஆதரவு தந்து களத்தில் நின்றவர் தந்தை பெரியார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, காந்தியும் முத்துலெட்சுமியின் தேவதாசி ஒழிப்புக் கோரிக்கையை ஆதரித்துப் பேசினார். சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவரப்பட்டபோது, "தேவதாசிப் பணி புனிதமானது. கடவுளுக்குத் தொண்டு செய்யும் உயரிய பணி" என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி. "இது புனிதமான பணி என்றால் அதை உங்கள் சாதிப்பெண்கள் செய்ய வேண்டியதுதானே" என்று பதிலடி கொடுத்தார் டாக்டர் முத்துலெட்சுமி. பிறகு சட்டப்படியாகத் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. 

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் 'தே*****யா' என்ற வார்த்தை மட்டும் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. பெண்களை வசைபாடுவதற்கும் ஆண்களை வசைபாடுவதற்கும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த இடத்தில் பெரியாரின் அரசியலையும் நினைவுகூரலாம். பார்ப்பனரல்லாத மக்கள் வேதத்திலும் மனுதர்மத்திலும் 'தஸ்யூக்கள்', 'சூத்திரர்கள்' என்றழைக்கப்பட்டார். 'சூத்திரன்' என்ற வார்த்தைக்கான பல அர்த்தங்களில் ஒன்று 'வேசி மகன்' என்பது. எனவே 'சூத்திரர் என்னும் இழிவு ஒழிய வேண்டும்' என்று அவர் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். இப்போது 'சூத்திரர்' என்ற வார்த்தையே கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டது. ஆனாலும், சாதியம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பது வேறு விஷயம். 

சாதியின் பெயரால் ஒருவர் 'தே*****யா மகன்' என்று அழைக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடந்த மண்ணில் ஒரு பெண்ணே 'தே*****யா பயலுக' என்று வசனம் பேசுவதாக டீசர் வெளியிடுவது சரிதானா இயக்குநர் பாலா அவர்களே. 'மகளிர் மட்டும்' படத்தில் பெண்ணியவாதியாகவும் அம்பேத்கர் - பெரியார் கருத்துகளில் ஆர்வமுள்ளவராக நடித்தீர்களே, இப்போது தெரிந்தேதான் இந்த வசனத்தைப் பேசினீர்களா அல்லது உதடசைத்தீர்களா ஜோதிகா அவர்களே?

அடுத்த கட்டுரைக்கு