Published:Updated:

ரஜினி டாப் 10

எஸ்.பி.முத்துராமன்

ரஜினி டாப் 10

எஸ்.பி.முத்துராமன்

Published:Updated:

சூப்பர் ஸ்டார் நடித்து 25 வெற்றிப் படங்களை இயக்கியிருப்பவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். வேறு எந்த இயக்குநரும் இவரது இந்த சாதனையை முறியடித்தது இல்லை. ''சிவாஜி ராவ் என்ற வைரத்தை நான் கண்டெடுத்தேன். ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன். அந்த ரஜினிக்கு 25 விதமான நல்ல பாத்திரங்களைக் கொடுத்து, அவரைப் பிரமாதமாக நடிக்க வைத்து, அந்த வைரத்துக்குப் பட்டை தீட்டி அழகுபார்த்தவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்'' என்று எஸ்.பி.எம்-மை மனதாரப் பாராட்டி மகிழ்ந்தவர், ரஜினி தன் குருநாதர் என்று போற்றும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

ரஜினிக்கு எஸ்.பி.முத்துராமனிடம் தனி மரியாதை, நட்பு உண்டு. ''பெங்களூரில் என் கூடப் பிறந்த அண்ணன் சத்தியநாராயணா இருக்கிறார். சென்னையில் என் கூடப் பிறக்காத அண்ணன் முத்துராமன் சார் இருக்கிறார்'' என்று உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து ரஜினி நெகிழ்ந்து கூறுவார்.

ரஜினி டாப் 10

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரஜினி நடித்த படங்களிலேயே, உங்களுக்கு மிகவும் பிடித்த டாப் டென் கேரக்டர்களை பட்டியலிடுங்களேன்'' என்று எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டோம்.

''நான் டைரக்ட் பண்ணின படங்களிலேயேகூட பத்து கேரக்டர்கள் என்றால், எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். ரஜினி எப்போதுமே, படத்தின் கதை தனக்குப் பிடித்தால்தான் படம் பண்ண ஒப்புக்கொள்வார். அவர் தன் கேரக்டரைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு முழுக் கதையும் பிடிக்க வேண்டும். அப்படித்தான் 150-க்கும் மேற்பட்ட படங்களை முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். பல படங்களில் நடிப்பதை இந்தக் காரணங்களுக்காகத் தவிர்த்தும் இருக்கிறார்.

அவர் பார்த்துப் பார்த்து செய்த, செதுக்கிய கேரக்டர்களில் பத்தே பத்தினை மட்டும் பொறுக்கியெடுப்பது எப்படி? எல்லாமே நல்ல முத்துக்கள்தான்!'' என்றவர், நமது வற்புறுத்தலுக்கிணங்க ரஜினியின் டாப்-10 கேரக்டர்களைப் பட்டியலிட்டார்.

1. புவனா ஒரு கேள்விக்குறி

ரஜினி டாப் 10

'அபூர்வ ராகங்கள்’ படத்தில் இறுதிக் காட்சியில் ரஜினிகாந்த் ஒரு கதவைத் திறந்து கொண்டு வருவதுபோல, கே.பி சார் காட்சி வைத்திருப்பார். அது அந்த வீட்டுக் கதவு அல்ல; லட்சக்கணக்கான தமிழர்களின் இதயக் கதவைத் திறந்து ரஜினி வருகிறார் என்பதையே சிம்பாலிக் காக, தீர்க்கதரிசியாக சொல்லியிருக்கிறார்.

ரஜினி நடிப்பில், பாடி லாங்குவேஜில் புதுமை இருப்பதைப் பார்த்து வியந்த பஞ்சு அருணாசலமும் நானும், எங்கள் படத்தில் ஒரு சின்ன பாத்திரம் தரலாம் என்று அவரை அழைத்தோம். நேரில் பார்த்துப் பேசியதும் 'இவ்வளவு பவர்ஃபுல் மனிதரை, பார்க்கிற பார்வையில் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளவரை ஏன் சின்ன கேரக்டரில் போட வேண்டும்?’ என்று தோன்ற, ''விரைவில் முக்கியமான கேரக்டரில் உங்களை உபயோகிப்படுத்திக் கொள்கிறோம்'' என்று அவரிடம் சொல்லி அனுப்பிவிட்டோம்.

அடுத்த மூன்று மாதத்தில், எழுத்தாளர் மகரிஷியின் 'புவனா ஒரு கேள்விக்குறி’ நாவலை படமாக்க முடிவு செய்தோம். நல்லவன் மாதிரி இருந்துகொண்டு, கெட்டவனாகச் செயல்புரியும் ரோலுக்கு சிவகுமாரை ஒப்பந்தம் செய்தோம். அதே அளவு முக்கியமான நண்பன் ரோலில் நடிக்க ரஜினியை அழைத்தோம். அதில் ரஜினிக்கு நிறைய வசனங்கள் இருந்தன. தயங்கினார். ''உங்க ஸ்டைலில் பேசுங்க. சரியா வரும்'' என்றேன். அந்த கேரக்டரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, திறமையாக நடித்து வெற்றி பெற்றார். படமும் 75 நாட்கள் ஓடி, வியாபார ரீதியிலும் வெற்றி பெற்றது.

ரஜினி டாப் 10

இந்தப் படத்தில் சிவகுமார் ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டு, ''பத்தோடு பதினொண்ணு. விட்ரு'' என்பார். ரஜினி பதிலுக்கு, ''கடப் பாரையை விழுங்கி, சுக்குத் தண்ணியைக் குடிச்சுட்டு ஜீரணம் ஆகும்னு சொல்றே; கடப் பாரை ஜீரணம் ஆகாதுடா. உன் வயித்தைக் கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்'' என்று ஸ்டைலாகச் சொல்வார். இந்த வசனத்துக்கு தியேட்டரில் பயங்கர கைத்தட்டல்!

2. முரட்டுக்காளை

ரஜினி டாப் 10

கிராமிய சூழ்நிலையில் பஞ்சு அருணாசலம் எழுதிய கதையை நான் இயக்கினேன். விவசாயி, நான்கு தம்பிகளுக்கு அண்ணன், நியாயத்துக்குப் போராடுகிற வீரன். அந்த வீரனுக்குப் பெயர் முரட்டுக்காளை.

'பொதுவாக என் மனசு தங்கம், போட்டி யின்னு வந்துவிட்டால் சிங்கம், பொறந்த ஊருக்குப் புகழைத் தேடு, வளர்ந்த நாட்டுக்குப் பெருமை தேடு, நாலு பேருக்கு நன்மை செய்தா, கொண்டாடுவார், பண்பாடுவார்...’ - அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் ரஜினி ரசிகர்களின் இதய கீதம் இந்தப் பாடல்தான்! இன்றைய ரஜினியின் குணாதிசயங்களை அன்றைக்கே பஞ்சு பாடலாக எழுதியிருந்தார். நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.

இந்தப் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடித்திருந்தார். பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவருக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ்!

''ஜெய் சார் பெரிய ஹீரோ! நூறு படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துச் சாதித்தவர். கதையிலே ஹீரோவான எனக்குச் சமமாக அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தவிர, படத்தின் எல்லா வகையான விளம்பரங்களிலும் அவருக்குரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும்'' என்று எங்களிடம் வலியுறுத்திச் சொன்னார் ரஜினி.

ரேக்ளா ரேஸ், மஞ்சுவிரட்டு, ஓடும் ரயிலில் ரயில் மீது சண்டை என்று ரஜினி தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த படம் இது. கிளைமாக்ஸில் ரயில்மீது ஏறி சண்டை போடும் காட்சியில், டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து சண்டை போட்டார். ''பரவாயில்லை, லாங் ஷாட்டுக்கு டூப் போடலாம்'' என்று சொன்னதற்கும், 'முடியாது’ என்று சொல்லிவிட்டார் ரஜினி. ''டூப்பும் சரி, நானும் சரி... உயிர், உயிர்தானே?'' என்றார். சண்டைக் காட்சிகளில் அவர் அவ்வளவு இன்வால்வ் ஆகி, ரிஸ்க் எடுத்து சண்டை போட்டதால்தான், அந்த த்ரில் கிடைத்தது.

3. ஆறிலிருந்து அறுபது வரை

ரஜினி டாப் 10

என் இயக்கத்தில் ரஜினி நடித்து அவருக்குத் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதும், எனக்கு சிறந்த இயக்குநர் விருதும் பெற்றுக் கொடுத்த படம். பஞ்ச் டயலாக், ரஜினி ஸ்டைல் எதுவும் கிடையாது. அவரது நடிப்புத் திறமையை மட்டுமே நம்பி, நான் எடுத்த படம்.

ஏழாவது படிக்கும் பையன், கூடுதலாக பிரின்ட்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவான். வளர்ந்த பின்பு அவனது தம்பி, தங்கைகள் நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்வார்கள். ரஜினி காதலிக்கும் பெண்ணும் அவரை விட்டுப் போய்விடுவாள். பின்னர் ரஜினி படாபட் ஜெயலட்சுமியை மணந்துகொள்வார். குடிசை தீப்பற்றி எரிய, மனைவி இறந்துவிடுவாள். ரஜினிக்கு ஆறுதலாக இருக்கும் நண்பர் 'சோ’வின் தூண்டுதலால், தன் சொந்த வாழ்க்கையையே கதையாக எழுதி, மக்களிடம் எழுத்தாளராக அங்கீகாரம் பெறுவார் ரஜினி. பணம், புகழ், செல்வம் எல்லாம் வந்ததும், மீண்டும் சொந்தங்கள் அவருடைய அறுபது வயதில் திரும்பி வரும். விரக்தியுடன் அவர் இறந்து போவார்.

ரஜினிக்கு ரசிகைகளை அதிகமாகப் பெற்றுக் கொடுத்த படம் இது. தன் கேரக்டரால், நடிப்பால் தமிழ் மக்களை, குறிப்பாக பெண்களைக் கவர்ந்த படம்.

4. ஸ்ரீ ராகவேந்திரர்

ரஜினி டாப் 10

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் மீது ரஜினிக்கு மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் உண்டு. ராகவேந்திர ஸ்வாமிகள் பற்றிப் படம் பண்ண வேண்டும் என்று அவருக்கு ரொம்ப நாளாக ஆசை. ''அடுத்தது எனக்கு நூறாவது படம். கவிதாலயாவுக்கு ஸ்ரீராகவேந்திரர் படம் பண்றதா முடிவு பண்ணிட்டேன். நாம பண்றோம்'' என்றார் ரஜினி, மிகவும் தீர்மானமாக. எனக்கோ தயக்கம். ஆக்ரோஷமும் ஆவேசமுமாக ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ரஜினி அமைதியாக, சாதுவாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? கே.பி சார்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்.

மேக்- அப், உடை, தோற்றம் எல்லாவற்றிலும் ரஜினி மூன்று மாத காலம் ராகவேந்திரராக நடிக்கவில்லை; அவராகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினி மட்டுமல்ல; முழு யூனிட்டுமே விரதமாக இருந்து, ஒரு வேள்வியை நடத்துவதுபோலத்தான் இந்தப் படத்தை எடுத்தோம். ஸ்ரீராகவேந்திரர் ஜீவசமாதி அடையும் காட்சியை ஏவி.எம் ஸ்டுடியோவில் செட் போட்டு படமாக்கினோம். இளையராஜாவின் நெஞ்சைத் தொடும் பாடல். செட்டில் இருந்த பலரும் உணர்ச்சிப் பெருக்கில் அழுதார்கள்.

''எங்களுக்கு எப்போதெல்லாம் கவலை, துக்கம் ஏற்படுகிறதோ, அப்போது இந்த படத்தின் டி.வி.டி-யைப் போட்டுப் பார்க்கிறோம். கவலை போகிறது; நிம்மதி கிடைக்கிறது'' என்று ராகவேந்திரா ஸ்வாமியின் பக்தர்களும், ரஜினி ரசிகர்களும் இன்றைக்கும் என்னைச் சந்திக்கும்போதெல்லாம் கூறுகிறார்கள். அவர்களின் அந்த ஆத்மார்த்தமான உணர்வு, ரஜினிக்கும் கே.பி. சாருக்கும் கிடைத்த பெருமை. அந்தப் பெருமையின் சாரல் எங்களையும் சேரும்!’

5. தில்லுமுல்லு

ரஜினி டாப் 10

கே.பி சார் தன்னுடைய சிஷ்யன் ரஜினியை வைத்து எடுத்த மாறுபட்ட நகைச்சுவைப் படம் 'தில்லுமுல்லு’. அதிலும், ரஜினிக்கு இரண்டு வேடங்கள். காமெடிக்கு கேட்கவா வேண்டும்? கதர் வேட்டி, ஜிப்பா, மீசை என்று ஒரு பாத்திரம்; மாடர்ன் டிரெஸ், மீசை இல்லாத மழுமழு முகம் என ஸ்டைலில் தூள் கிளப்பும் மற்றொரு பாத்திரம் என இரு வேடங்களில் படம் முழுவதும் ரசிகர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்திருப்பார் ரஜினி.

சந்திரன், தான் வேலை செய்யும் ஆபீஸின் முதலாளியை ஏமாற்ற, இல்லாத சகோதரனை தம்பி இந்திரனாக உருவாக்கி நடிப்பது, அதனால் ஏற்படும் விளைவுகள், கலாட்டாக்கள் என செம ஜாலியான படம்!

கே.பி சாருக்குப் பேரும் புகழும் பெற்றுக் கொடுத்த படம்!

6. முள்ளும் மலரும்

ரஜினி டாப் 10

ரஜினிக்குத் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொடுத்த படம் முள்ளும் மலரும். சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றது. ஃபிலிம் ஃபேர், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் அள்ளிய படம்.

சிவாஜிக்கு ஒரு பாசமலர் போல, ரஜினிக்கு முள்ளும் மலரும்!

ரஜினியின் மேலதிகாரியான இன்ஜினீயர் சரத்பாபு, கோபம் கொண்டு ரஜினியை வேலையை விட்டு நீக்கிவிடுவார். இதனால் மனம் வெறுத்த ரஜினி குடித்துவிட்டு வரும்போது லாரி மோதி, ஒரு கையை இழந்து விடுவார். சரத்பாபு, ரஜினியின் தங்கை ஷோபாவைக்  காதலிப் பார். அதை ரஜினி ஏற்றுக் கொள்ளாததால், இவர்களின் திருமணத்துக்கு ஊர் மக்களே ஏற்பாடு செய்வார்கள். ''அவங்க எல்லாம் ஊர் ஜனங்க. நான் உன் ரத்தம்'' என்பார் ரஜினி. ஷோபா இறுதிக் கட்டத்தில் மனம் மாறி, ரஜினியிடமே வந்துவிடுவார். அதில் பெரு மிதமும் சந்தோஷமும் கொள்ளும் ரஜினி, மனம் சமாதானமாகி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார்.

மகேந்திரனின் வசனமும் இயக்கமும், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவும் வெகுவாகப்  பாராட் டுக்கள் பெற்றன. சப்-டைட்டி லுடன் இந்தப் படம் ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. 'கையும் காலும் இல்லைன்னாக்கூட இந்தக் காளி பிழைச்சுக்குவான். கெட்ட பயல் சார், இவன்’ என்று தன்னைப் பற்றி ரஜினி சொல்லும்போது ரசிகர்களிடம் அப்படியொரு கைதட்டல்!

''ஷோபா மாதிரி ஒரு தங்கை இல்லையே என்று ஏங்கினேன். அந்த ஷோபாவும் இன்று இல்லை என்று துடிக்கிறேன்!'' - ரஜினியின் அந்தத் தங்கை பாசம், ஷோபாவின் மரணத் தின்போது வெளிப்பட்டது.

7. பாட்ஷா

ரஜினி டாப் 10

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், மும்பை தாதாக்கள் எப்படி இருப்பார்கள் என்று தமிழக மக்களுக்கு எடுத்துச் சொன்ன படம்.

ஸ்டைல், நடை, ஃபைட் என்று மாணிக் பாட்ஷா கேரக்டர் மூலம் மும்பை தாதாவாக அசத்தியிருப்பார் ரஜினி.  

'ஆட்டோக்காரன்’ பாட்டு ரஜினியின் புகழை மட்டு மில்லாமல், ஆட்டோக்காரர் களின் புகழையும் உயர்த் தியது. இந்தப் படம் வெளி வந்ததும், எல்லா ஆட்டோ காரர்களும் ரஜினியின் படத்தை - குறிப்பாக ஆட்டோக்காரர் வேடத்தில் காக்கி டிரஸ்ஸில் ரஜினி சல்யூட் அடிக்கும் படத்தைத் தங்கள் வண்டியில் ஒட்டி வைத்தார்கள்.

''நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி..!''

''உன் வாழ்க்கை உன் கையில்!''

''என்கிட்டே இருக்கிற கூட்டம், நான் சேர்த்த கூட்டம் இல்லை; தானா சேர்ந்த கூட்டம்!''

ரஜினி பேசிய இந்த வசனங்கள் மிகவும் பிரபலமாகி, ரசிகர்களை ரஜினியின்மீது அதீத அன்புகொள்ள வைத்தன.

அரசியலிலும் சினிமாவிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய படம் பாட்ஷா.

8. படையப்பா

ரஜினி டாப் 10

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினியோடு சிவாஜி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் தூள் கிளப்பி நடித்த படம். இந்தப் படத்தின் விறுவிறுப்பே, ரஜினி- ரம்யா கிருஷ்ணன் மோதல்தான்! ரஜினிக்குச் சமமாக ரம்யா கிருஷ்ணன் தூள் கிளப்பியிருந்தார்.  

''என் வழி தனி வழி!''

''என்கிட்டே நிறைய ஆள் பலம் இருக்கு. ஆனா, அவங்களை நான் சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கிட்டதில்லை!''

''அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை!'' - இந்த பஞ்ச் டயலாக் எல்லாம் கதையோடு, காட்சியோடு, கதாபாத்திரங்களோடு இணைந்து வந்தன. அதனால் பொங்கிய மக்களின் உற்சாகம் கைத்தட்டல்களாக வெளிப்பட்டு, அரங்கங்களை அதிர வைத்தன!

9. சந்திரமுகி

ரஜினி டாப் 10

இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் மிரட்டல் த்ரில் கதை. மனோதத்துவ டாக்டர் சரவணன் (ரஜினி), எஸ்டேட் அதிபர் செந்தில்நாதன்

(பிரபு) அவர் மனைவி கங்கா (ஜோதிகா), ரஜினிக்கு ஜோடி நயன்தாரா. சந்திரமுகி என்ற ஆவியை மையமாகக் கொண்டு கதை நகரும்.

கங்காவாக நடித்த ஜோதிகா, தன் கண் களாலேயே மிரட்டியிருப்பார். ரஜினி - நயன்தாரா காதல் காட்சிகள் ரஜினி - வடிவேலு நகைச்சுவை எல்லாம் கலகலப்பு.

ரஜினிக்குக் குறைவான காட்சிகள். ஆனால், வேட்டைய ராஜா பாத்திரத்தில் நிறைவு செய்திருப்பார். கங்காவைப் பிடித்திருக்கும் சந்திரமுகியை விரட்டும் காட்சிதான் உச்சகட்டம். வேட்டைய ராஜா 'லகலகலகலக’ என ஒலி எழுப்பி, திகிலை உண்டாக்கி அவர் நடந்துவரும் ஸ்டைல், ரசிகர்களை எழுந்து, நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது.  

அந்நாளில், எம்.கே.டி.பாகவதரின் 'ஹரிதாஸ்’ படம் ஓடிய சாதனையை முறியடித்து, 800 நாட்கள் ஓடி, மிகவும் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையை ஏற்படுத்தியது சந்திரமுகி. தமிழக அரசு ரஜினிக்கும் ஜோதிகா வுக்கும் சிறந்த நடிகர்கள் என விருது கொடுத்து கௌரவித்தது.

10. சிவாஜி

ரஜினி டாப் 10

இயக்குநர் ஷங்கரும் ஏவி.எம் நிறுவனமும் இணைந்த படம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் எல்லா பாடல்களும் ஹிட்! தோட்டா தரணியின் அரங்க அமைப்பு, ஆர்ட் டைரக்ஷன், கே.வி.ஆனந்தின் அருமையான ஒளிப்பதிவு ஆகியவை எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றவை.

''சாகிற நாள் தெரிஞ்சுபோச்சுன்னா, வாழ்ற நாள் நரகமாகிடும்.''

''கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்!''

''பேரைக் கேட்டாலே, ச்சும்மா அதிருதுல்லே..!'' - இவை இந்தப் படத்தின் ரொம்ப பாப்புலரான பஞ்ச் டயலாக்குகள்.

'சிவாஜி’ படம் மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட்!

ரஜினியின் ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் உட்கார வைக்கும். அவர் உதிர்க்கும் சாதாரண வார்த்தைகளுக்குக்கூட அப்படியொரு மந்திர சக்தி கிடைத்துவிடும். அந்த வகையில், அவரின் அனைத்துப் படங்களுமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவைதான். அப்படிச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ரசிகர்களைக் கவர்ந்த இன்னும்

10 படங்கள்!

1. ஸ்டைலான இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்’.

2. ரஜினி தன் வழக்கமான ஸ்டைல் எதுவுமின்றி, மிகச் சாதாரணமாக வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து, கேரக்டரோடு ஒன்றி நடித்த படம் - 'எங்கேயோ கேட்ட குரல்’.

3. பாதி தாதா, பாதி பணக்காரன் பாத்திரம். - நல்லவனுக்கு நல்லவன்.

4. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டும் பாத்திரம் - மனிதன்.

5. ரஜினி - பிரபு இருவரும் நடித்த முழு நீள நகைச்சுவைப் படம் - குரு சிஷ்யன்.

6. புதுமை எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய கணேஷ் பாத்திரத்துக்கு 'ப்ரியா’ படத்தில் உயிரூட்டி இருப்பார் ரஜினி.

இவை ஆறும் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியானவை.

7. ரஜினியின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் - தளபதி. இயக்கம்: மணிரத்னம்.

8. தாய்ப் பாசத்தை ரஜினி அருமையாக வெளிப்படுத்திய படம் - மன்னன். 'அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...’ பாடல் ரசிகர்களை அத்தனை நெகிழ்த்தியது. இயக்கம்: பி.வாசு.

9. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை வைத்து இயக்குநர் ஷங்கர் உருவாக்கிய பிரமாண்ட படம்; ரோபோவாக ரஜினி அற்புதமாக நடித்துப் பெயர் வாங்கிய படம் - எந்திரன்.  

10. மோஷன்கேப்சர் டெக்னாலஜியில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்; ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி அஸ்வின் இயக்கிய முதல் படம் - கோச்சடையான். அனிமேஷனிலும் அசத்தியிருக்கிறார் ரஜினி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism