Published:Updated:

“அந்த விபத்து பத்தி நினைச்சுப் பார்க்கக்கூட விரும்பலை!” நடிகை சுதா சந்திரன்

“அந்த விபத்து பத்தி நினைச்சுப் பார்க்கக்கூட விரும்பலை!” நடிகை சுதா சந்திரன்
“அந்த விபத்து பத்தி நினைச்சுப் பார்க்கக்கூட விரும்பலை!” நடிகை சுதா சந்திரன்

"என் சோதனைக் காலத்தை எளிதாகக் கடக்க உதவினது டான்ஸ் மற்றும் ஆக்டிங். இந்த இரண்டையும் எக்காலத்துலயும் விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை. அதனால தொடர்ந்து இளமைக் காலத்திலிருந்த அதே உத்வேகத்தோடு நடிச்சுக்கிட்டிருக்கேன்" - உற்சாகத்துடன் பேசுகிறார் நடிகை சுதா சந்திரன்.

“ ‘ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியில நடுவர் பயணத்தை நிறைவு செய்திருக்கீங்க. நடுவர் அனுபவம் எப்படி இருந்துச்சு?” 

“ரொம்பவே நல்ல அனுபவம்தான். இந்த நிகழ்ச்சி, சின்னத்திரை நடிகர் நடிகைகள் டான்ஸ் உள்ளிட்ட தங்களின் பல திறமைகளையும் வெளிப்படுத்தும் களம். அதை கலைஞர்களும் சிறப்பா பயன்படுத்தினாங்க. ‘இதுமாதிரியான மேடைகள் மூலம்தான் எங்களுக்குள் இருக்கிற திறமையை நாங்களே தெரிஞ்சுக்க முடியுது'னு பல போட்டியாளர்கள் சொன்னது சந்தோஷமா இருந்துச்சு. குறிப்பா, 'டான்ஸ் ஜோடி டான்ஸ்', 'டான்ஸிங் கில்லாடிஸ்', 'ஜீ டான்ஸ் லீக்'னு தொடர்ந்து வருஷக்கணக்கில் ஜீ தமிழ் சேனலோடு பயணிச்சது நிறைவான அனுபவம்."

“இன்றைக்கு இருப்பது போல, உங்க இளமைக் காலத்தில் டான்ஸ் திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் இருந்திருக்காதே..."

"ஆமாம். இப்போது இருக்கிறமாதிரியெல்லாம் என் இளமைக் காலத்துல திறமையை வெளிப்படுத்த நிறைய சேனல்கள் மற்றும் மீடியா வெளிச்சம் இருக்கும் மேடைகள் கிடையாது. அதனால ரொம்பவே கஷ்டப்பட்டுதான் எங்க திறமைகளை வெளிப்படுத்தினோம். அதெல்லாம் பெரிய போராட்டம்தான். அதையும் மீறி மக்களின் அன்போடும், அங்கீகாரத்தோடும் முப்பது வருஷமா பயணிக்கிறேன். வெற்றிகள் கிடைக்கிறது கஷ்டம். அதை தக்கவெச்சுக்கிறது அதைவிடக் கஷ்டம். அதனால நாங்க எதிர்கொண்டு வந்த கஷ்டங்களையெல்லாம் போட்டியாளர்களுக்குச் சொல்லுவோம்."

"எந்தத் தருணத்துல டான்ஸை உங்களுக்கான துறையா தேர்ந்தெடுத்தீங்க?"

"என் மூணு வயசுல எனக்குள் இருந்த டான்ஸ் திறமையை பெற்றோர் கண்டுபிடிச்சு, டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பினாங்க. இதுதான் என் எதிர்காலம்னு நானும் டான்ஸைக் காதலிக்க ஆரம்பிச்சு, ஆர்வத்தோடு கத்துக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து அரங்கேற்றம் முடிச்சுட்டு, மேடை நிகழ்ச்சிகள்ல நடனமாட்டிருந்தேன். அப்படியே நடிகை மற்றும் நடுவரானாலும் டான்ஸை மட்டும் எந்தச் சூழல்லயும் கைவிடலை."

“அந்த கார் விபத்து சம்பவத்தை நினைச்சு இப்போ வருத்தப்படுவதுண்டா?”

“இல்லவேயில்லை. இளம் வயசுல ஏற்பட்ட கார் ஆக்ஸிடென்ட்ல என் ஒரு காலை இழந்தேன். உடல் மற்றும் மன வலியால் துடிச்சுப்போனேன். ஆனா, பெற்றோர் மற்றும் நான் நேசித்த நடனம் கொடுத்த உத்வேகத்துல பிரச்னையை எதிர்த்து மன தைரியத்துடன் போராட ஆரம்பிச்சேன். ‘செய் அல்லது செய்துமடி'தான் பொதுவான பாலிஸி. எனக்குமட்டும் விதிவிலக்காகுமா. நெவர். அதனால நடந்ததை நினைச்சு வருந்துறதைவிட, எதிர்காலம் சிறப்பாக அமைய தேவையான முயற்சிகளைச் செய்ய நினைச்சேன். டான்ஸ் என் தேர்வா இருந்துச்சு. கால் இல்லாத நிலையில நடனமாட முடியுமா. வலியுடன் என்னைச் சுத்தி நிறைய கேள்விகளும் தயக்கங்களும் இருந்துச்சு. 'என்னால் முடியும்'ங்கிற நம்பிக்கை மனசுல உறுதியா இருந்துச்சு. செயற்கைக்கால் பொருத்திகிட்டேன். முன்பைவிட, இம்முறை இன்னும் அதிக உத்வேகத்தோடு டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். தொடர்ந்து இப்போவரைக்கும் அந்தப் பழைய கசப்பான சம்பவத்தை நினைச்சுப் பார்க்கவேமாட்டேன். எதிர்காலம்தான் நம் வாழ்க்கை. அதை நோக்கித்தான் நானும் போயிட்டிருக்கேன்."

"முதல் படத்துலேயே தேசிய விருது வாங்கின அனுபவம் எப்படி இருந்துச்சு?"

"தன்னம்பிக்கையோடு நான் பயணிச்சதைப் பார்த்து, நிறைய டான்ஸ் மற்றும் ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு. அப்படி 1984-ல் நான் நடிச்ச முதல் படம் 'மயூரி'ங்கிற தெலுங்குப்படம். என் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சதோடு, தேசிய விருதும் கிடைச்சுது. அந்த விருதுதான் தொடர்ந்து நடிப்பில் என் திறமைகளை வெளிப்படுத்தும் உத்வேகத்தைக் கொடுத்துச்சு. அப்படித் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி உள்ளிட்ட பல மொழிப் படங்கள்ல நடிச்சேன்." 

"25 வருஷமா சின்னத்திரையிலயும் கலக்கிட்டிருக்கீங்களே..."

"கல்யாணத்துக்குப் பிறகு சின்னத்திரையில அதிகமா கவனம் செலுத்தினேன். பல மொழி சீரியல்கள்ல நடிகையாகவும், டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல நடுவராவும் 25 வருஷமா பயணிச்சுகிட்டிருக்கேன். அப்படித்தான் தமிழ்ல நான் நடிச்சுப் பல வருஷமான நிலையில, குட்டி பத்மினி என்னை தமிழ் சீரியலுக்கு கூட்டிட்டுவந்தாங்க. 'கலசம்', 'தென்றல்', 'தெய்வம் தந்த வீடு' சீரியல்கள்ல நடிச்சதோடு, 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியையும் நடத்தினேன். அப்புறம் நடுவர்பணினு தொடர்ந்து தமிழ் மக்களோடு கனெக்ட்டா இருக்கேன்."

"உங்க அக்சஸரீஸ் ரொம்பவே யுனிக்கா இருக்கே. ஸ்பெஷல் ரகசியம் இருக்கா?"

"சீரியல்கள்ல நடிச்சுகிட்டிருந்த சில வருஷம் கழிச்சு கலர்ஃபுல்லான காஸ்ட்யூம் பயன்படுத்துற மாதிரியான ரோல் வந்துச்சு. மக்கள் அதை ஏத்துக்கிட்டாங்க. அதனால தொடர்ந்து பெரும்பாலான சீரியல்கள்ல கலர்ஃபுல்லான டிரஸ், அக்சஸரீஸ் பயன்படுத்தி நடிச்சுக்கிட்டிருக்கேன். என் நடிப்பு மற்றும் நடனத்தைப் பத்தி கேட்கும் வேளையில, என் அக்சஸரீஸ் பத்தியும் மக்கள் கேட்கத் தவறுவதேயில்லை. ஆனா, என் ரியல் லைஃப்ல அப்படியே ஆப்போசிட். வீட்டில் ரொம்பவே சிம்பிளாதான் இருப்பேன்."

"டான்ஸ் உங்க வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான விஷயம்?"

"டான்ஸ்தான் என் வாழ்க்கை. அதுதான் சுவாசம். அதனால்தான் எனக்கான அடையாளத்தைப் பெற்றிருக்கேன். கஷ்டச் சூழல்கள்லேருந்து மீண்டு வர உதவினதும், இப்போவரை நான் ஆக்டிவா இருக்கவும் உதவுறது டான்ஸ்தான். இது இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியாது. என் இடைவிடாத டான்ஸ் பயணம்தான், 'உன்னால டான்ஸ் ஆட முடியுமா'னு கேட்ட பலருக்கும் பதில்." 

"இப்போகூட டான்ஸ், நடிப்புனு ஆக்டிவா இருக்கீங்களே... 'கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்' என நினைச்சதுண்டா?"

"இல்லவேயில்லை. டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சு 50 வருஷம் ஆகப்போகுது. சினிமாவுக்கு வந்து முப்பது வருஷமாகிடுச்சு. தினமும் புதுப் புது இடங்கள்ல டான்ஸ் ஆடுறேன்; கேரக்டர்ல நடிக்கிறேன். மனநிறைவு இன்னும் கிடைக்கலை. நிறைவா நடிச்சுட்டோம்னு ஃபீல் வந்தா, அதோடு இந்த வாழ்க்கை முடிஞ்சுடும். கலைக்கு மட்டும் எந்த எல்லையும், முடிவும் கிடையாது. மும்பையில ஃபேமிலியோடு வசிக்கிறேன். காலையில ஒன்பது மணிக்குக் கிளம்பினா, வீடு வர நைட்டு பத்து மணியாகிடும். இளமைப் பருவத்துல இருந்த அதே உத்வேகத்தோடும் சுறுசுறுப்போடும் இப்பவும் இயங்கிட்டிருக்கேன். இப்பவும் இந்தியா, வெளிநாடுகள்னு மாறி மாறி பயணிச்சுக்கிட்டுதான் இருக்கேன். மாசத்துல எல்லா நாள்களும் ஆக்டிங், டான்ஸ்னு இயங்கிட்டுதான் இருக்கேன். மாசத்துல குறைந்தபட்சம் ரெண்டு பெரிய கச்சேரியில நான் ஆடுறதை வழக்கமா வெச்சிருக்கேன். எங்கே போனாலும் மக்கள் ரொம்பவே அன்பா பழகுறாங்க" எனப் புன்னகைக்கிறார் சுதா சந்திரன்.