Published:Updated:

“தயவு செஞ்சு இப்படிப் பண்ணாதீங்க!” - மக்களுக்கு ‘அறம்’ கோபி நயினார் வேண்டுகோள்

“தயவு செஞ்சு இப்படிப் பண்ணாதீங்க!” - மக்களுக்கு ‘அறம்’ கோபி நயினார் வேண்டுகோள்
“தயவு செஞ்சு இப்படிப் பண்ணாதீங்க!” - மக்களுக்கு ‘அறம்’ கோபி நயினார் வேண்டுகோள்

“ ‘சரஸ்வதி சபதம்' படத்துல கே.ஆர்.விஜயா பிச்சை எடுக்கும் கேரக்டரில் வருவாங்க. ஒரு யானை அவருக்கு மாலை போட்டதும், அவங்க ராணியாகிடுவாங்க. அந்த மாதிரி இருக்குது இப்ப என் வாழ்க்கை" என வெள்ளந்தியான சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் `அறம்' பட இயக்குநர் கோபி நயினார்.

“ ‘அறம்' படம் வெளியாவதற்கு முன்புவரை நான் சாதாரணமாத்தான் இருந்தேன். இப்பவும் அப்படித்தான் இருக்கேன். அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனா, இந்தச் சூழலை எனக்கு எதிர்கொள்ளத் தெரியலை. என்னை வளர்த்தெடுத்தது பத்திரிகையாளர்களும் என் நண்பர்களும்தான். இப்ப அவங்ககூட தொலைபேசியிலேயோ நேரிலேயோ ஃப்ரீயா பேச முடியாத அளவுக்கு, தொடர்ந்து பல வேலைகள். இது எனக்கு ஒரு பெரிய பிரச்னையாத்தான் இருக்கு. போகப்போக சரியாகிடும்னு நினைக்கிறேன். 

இந்தச் சூழலை நான் கற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லதுனு நினைக்கிறேன். ஏன்னா... எந்த மனிதனையும் கொண்டாடக் கூடாதுங்கிறது என் எண்ணம். நான் செய்ற வேலைகள்ல இதுவும் ஒரு வேலை. அவ்வளவுதான். ஒருவனைக் கொண்டாடுவதால் அது அவனுடைய உளவியலுக்குள் சென்று வேலைசெய்ய ஆரம்பிச்சுடும். `நாம ரொம்ப ஸ்பெஷல்போல'னு மனசு நினைக்க ஆரம்பிச்சுடும். `நான் ஸ்பெஷல்!' என்ற எண்ணம் எனக்கு வந்திடுச்சுன்னா, அதுவே ஓர் ஆதிக்க மனோபாவமா மாறி, ஒரு கட்டத்துல `என்னை ஏன் கொண்டாடலை'னு கேள்வி கேட்கும் இன்னோர் இடமா அது மாறிடும். அதுவே உங்கமேல ஒரு பொறாமையும் பகை உணர்வையும் ஏற்படுத்தும். எந்த மனிதனையும் கொண்டாடத் தேவையில்லை. எல்லா மனிதர்களும் மிக்க அன்போடு நேசிக்கப்பட வேண்டிய மனிதர்கள்னு நான் நினைக்கிறேன். அதனால், என்னைக் கொண்டாடாதீங்க" என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

கோபியின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண...

உங்க கடந்தகால வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்களேன்”

“நான் ரொம்ப சாதாரணமான ஆள். இங்கே யாருக்கும் பெரிய பின்னணியெல்லாம் எதுவும் இல்லை. நான் மீஞ்சூரில் சாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ப்ளஸ் ஒன் வரைக்கும் படிச்சேன். அப்பவே எனக்கு சினிமாவுல வரணும்னு எண்ணம். அதுக்கு அப்புறம் அரசியல்ரீதியான இயக்கங்கள், அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டது. இடதுசாரி அமைப்புகள், தலித் அமைப்புகளில் வேலைசெஞ்சிருக்கேன். இப்படித்தான் நான் வளர்ந்தேன்.

வளரும்போது சமகாலத்தோடு அரசியல் பேசி வளரும் சினிமாக்கள் வரலைங்கிற எண்ணம் எனக்குள் இருந்துச்சு. இது என் சொந்தக் கருத்தாகக்கூட இருக்கலாம். ‘பராசக்தி' படம் வெளிவரும்போது அப்ப மிகப்பெரிய அரசியல் எழுச்சி இருந்தது. அந்த மாதிரி அரசியலும் கலைப்படைப்பும் ஒண்ணா இணையணும். அதாவது, சாதியை ஒழித்த தமிழ்த் தேசியமும் பெரியாரும் அம்பேத்கரும், இடதுசாரிக்கான பெரிய அரசியல் தளத்தையும், பொருளாதாரத்தின் சமன்பாடு பங்கீடு பற்றிப் பேசும் பெரிய அரசியல் அமைப்பு இங்கு தேவைப்படுது. அதுக்கான கோட்பாடுகளும் தேவை. இதை எல்லாம் கொண்டுபோவதற்கான வேலைத் திட்டங்களாகக் கலைப்படைப்பை முன்னேற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். அதுக்காகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அதை ஓரளவுக்கு நான் நெருங்கியிருக்கேன்னு நம்புறேன்." 

“இந்தப் படத்தோட வெற்றியை எப்படிப் பார்க்கிறீங்க?"

“இந்த வெற்றியை என்னுடைய வெற்றியா நான் எப்பவுமே கொண்டாட முடியாது. ஏன்னா, மாவோ சொல்வார் ‘மக்களிடம் இருந்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும்’னு. ஒரு படைப்பாளி மக்களிடம் என்ன கற்றுக்கொண்டானோ அதை மக்களிடம் திருப்பித் தருகிறான். அப்போது மக்களிடம் கற்றுக்கொண்டதை மக்களிடம் திருப்பித் தரும்போது... அதை நம் வெற்றியா கொண்டாடவோ அகந்தைப்படவோ முடியாது. ஏன்னா, அது மக்களின் அறிவுச் சொத்து. அதை மக்களிடம் திருப்பித் தருவது ஒரு கலைஞனின் கடமை. அந்த வேலையைத்தான் நான் செஞ்சிருக்கேன். அதேபோல இந்தப் படத்தின் வெற்றியைத் தனிநபரின் வெற்றியா நான் கொண்டாடவே முடியாது. தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்காங்க, நடிகர்கள் இருக்காங்க... இவர்களின் ஆத்மார்த்தமான உழைப்புக்குரிய அங்கீகாரம்தான் இந்த வெற்றி."