Published:Updated:

“எப்படி கவுக்கலாம் காலி பண்ணலாம்னு நினைக்கிறாங்க..!” - ‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்

“எப்படி கவுக்கலாம் காலி பண்ணலாம்னு நினைக்கிறாங்க..!” - ‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்
“எப்படி கவுக்கலாம் காலி பண்ணலாம்னு நினைக்கிறாங்க..!” - ‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்

“விக்ரம் சார்ட்ட வருடத்துக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ போனில் பேசுவேன். சந்திப்பேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்கள் கேட்டுட்டு கூப்பிட்டுப் பேசினார். அந்தப் படத்தைப் பார்த்துட்டும் கூப்பிட்டுப் பேசினார். இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணணும்ங்கிற முயற்சி காக்க காக்க டைம்ல இருந்து போயிட்டு இருக்கு. இந்தச் சமயத்தில் வழக்கம்போல் போனில் பேசும்போது ‘துருவ நட்சத்திரம்’ லைனை அவர்ட்ட போன்ல சொன்னேன். ‘ரொம்ப நல்லா இருக்கு. எப்ப பண்ணலாம்’னு கேட்டார். எனக்கும் தனுஷுடன் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ இருக்கு. உங்களுக்கும் ‘ஸ்கெட்ச்’ போயிட்டு இருக்கு. இதை முடிச்சிட்டு பண்ணிக்கலாம்னு சொன்னேன். ‘ஸ்கெட்ச்’சுக்குப் 10 நாள், உங்களுக்கு 10 நாள்னு பண்ணிக்கலாம்’னு சொன்னார். அந்தச் சமயத்தில் தனுஷ் படம் மூணு மாதம் பிரேக் ஆகி அவர் ‘வடசென்னை’ ஷுட்டிங்க்குப் போயிட்டார். வேறு எந்த விஷயங்களையும் யோசிக்காம, ‘துருவ நட்சத்திர’த்துக்குக் கிளம்பிட்டோம். இப்ப விக்ரம் சாரை வெச்சு 50 நாள் ஷூட் பண்ணிட்டோம். இன்னும் 20 நாள் ஷூட் போனால் படம் முடிஞ்சிடும்.” - கௌதம்மேனனின் மனதிலிருந்து வருகின்றன வார்த்தைகள். பரபரப்பான பட வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கிப் பேசினார். 

துருவ நட்சத்திரம்’ குறிப்பிட்ட 10 பேரைப்பற்றின கதை. இன்டெலிஜென்ஸ், நெட்ஒர்க்கிங், சீக்ரெட் டீம், கமாண்டோ... போன்ற விஷயங்கள் உள்ள படம். நாட்டின் பாதுகாப்பு. விமானத்துறை, ராணுவம், கப்பல்படை, உளவுத்துறை இவர்களைத் தாண்டி, ஒரு டீம் தேவைப்படுது. இது எல்லா நாடுகளிலுமே லைசன்ஸ் டு கில் ப்ளஸ் ரெட் டேப்பிசம் இல்லாம இறங்கி ஒர்க் பண்ணிட்டுப் போயிடலாம். யாருனு தெரியாது. நமக்கு வேண்டிய ஒரு விஷயம் பண்ணிட்டாங்கனு புரியும். அவங்களுக்கு ரூல்ஸ் ரெகுலேஷலாம் எதுவுமே கிடையாது- ஆனால் எமர்ஜென்சியில இறங்கி ஒர்க் பண்ணுவாங்க. மேலும் உறவுத்துறை, போலீஸ் டிபார்ட்மென்டுக்குத் தரவேண்டிய விஷயங்கள் இவங்கமூலமாகவும் போகும். செட் ஆஃப் கேரக்டர்ஸ். ஒருத்தர் அந்த டீமை செட் பண்ணி ஒர்க் பண்றமாதிரியா விஷயம். எல்லா நாடுகள்லயும் இது இருக்கு. இந்தியாவிலும் இருக்கு. யாருக்கும் தெரியாது. நாட்டுக்காக தங்களோட அடையாளங்களை மறைச்சு ஒர்க் பண்ற டீமைப் பற்றிய கதை. அவங்க யார், என்ன பண்றாங்க, அவங்களோட வலி, சந்தோஷம், வாழ்க்கைனு நிறைய விஷயங்கள் இதில் பண்ணலாம்னு இருந்தது விக்ரம் சாருக்குப் பிடிச்சிருந்தது. ஒவ்வொரு வருஷமும் ஒரு பார்ட்னு இந்தப் படத்தை மூணு பார்ட் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். ‘பாகுபலி’யில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார் என்ற விஷயத்தை முதல் பகுதி லூப்பா வெச்சிருந்த மாதிரி இதில் ஒரு விஷயத்தை ஓப்பன் பண்ணி வெச்சிட்டு ஒரு சீரிஸா ‘துருவ்’ கேரக்டரை வெச்சு பண்ணலாம்னு ஐடியா. நிச்சயம் பெரிய பிரமாண்டமான ஃபீல் ஸ்கிரீன்ல உங்களுக்குக் கிடைக்கும்.

‘இவங்க உலகத்துக்குள்ள நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன். அந்த உலகத்துக்குள்ள நீங்க வர்றீங்கனு நினைச்சு இந்தப் படத்தைப் பாருங்க....’ங்கிற டிஸ்க்ளைமரோடத்தான் இந்தப்படம் ஆரம்பிக்கும். நாட்டுக்காக தங்களோட அடையாளத்தை மறைச்சுகிட்டு ஒர்க் பண்ற 10 பேரோட உலகத்துக்குள்ள உங்களை அழைச்சிட்டு போகேப்போறேன். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியா...னு என் படங்களுக்காக  இதுக்கு முன் இத்தனை நாடுகள் பயணமானது இல்லை. திருப்தியா இருக்கு.”

“இந்தப் படத்துக்குள் வந்தபிறகு விக்ரம் என்ன ஃபீல் பண்ணினார்?”

“ ‘கடின உழைப்பாளி. பயங்கர இன்வால்வ்மென்ட்.’ அவரை இயக்கிய எல்லா இயக்குநர்களிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்லுவார்கள். ஆனால் அதுதான் உண்மை. சீஃப் அசோஷியேட் டைரக்டர் மாதிரி ஒர்க் பண்றார். என் டீம் எதுவுமே பண்ணவேண்டாம். அவரே இறங்கி அந்தச் சூழலை செட் பண்ணிடுவார். ‘விடுறா சாரே பண்ணட்டும்’னு என் அசிஸ்டென்டுகளிடம் சொல்லிட்டேன். நாம ரசிகரா ஒரு படம் பார்க்கும்போது அந்த ஆர்ட்டிஸ்ட் என்ன பண்ணுவாங்கனு தெரியும். அதுல இருந்து கொஞ்சம் மாறுபட்டு பண்ண வைக்கணும்னு தான் முயற்சி பண்ணியிருக்கேன். லுக்ல, ஸ்டைல்ல, பேசுற டோன்ல எப்படி மாற்றலாம் என்ற முயற்சிதான். ஆக்ஷன் ரொம்ப வித்தியாசமாவும் டூப் இல்லாம நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கார். நாம, இதுதான் இப்படி இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லும்போது அதை ரசிச்சு உள்வாங்கி பண்றார். சில விஷயங்கள் டோன்டவுன் பண்ணுவார். இங்கிலீஷ் நிறைய வேணாம்னு சொல்லுவார். சில இடங்கள்ல இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துச் சொல்லுங்க கவுதம், இப்படி இருந்தால் பெட்டரா இருக்கும்னு சொல்லுவார். பிறகு 10 நிமிஷம் கழிச்சு சொல்லும்போது, ‘இதைத்தான் நான் எதிர்பார்தேன்’னு என்கரேஜ் பண்ணுவார். இயல்பாகவே ரொம்ப நட்பா பழகக்கூடிய கேரக்டர். அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாரும், ‘சார்’க்கு பதிலா ‘விக்ரம்’னு கூப்பிட்டாக்கூட கோவிச்சுக்கமாட்டார் அந்தமாதிரி ஒரு நட்பு சூழலை கிரியேட் பண்ணியிருக்கார். ஏன்னா வேலை செய்ற இடத்துல அந்த கம்ஃபர்டபுள் இருந்தாதான் அது படத்துல தெரியும். மியூசிக்கலி ரசனை உள்ளவர். கிதார் வாசிப்பார். கார்ட் என்னனு தெரியும். லிப் சிங் அப்படி பிடிப்பார்.  கன்டினியூடி, மேக்கப் அப்படி வெச்சிருப்பார். நாமபோய் சொல்லணும்னு அவசியமே கிடையாது. போன மாசம் ஒருஷாட். அதோட தொடர்ச்சி இன்னைக்கு எடுத்தோம்னா அழகாக கன்டினியூட்டி பிடிப்பார். பல நாடுகள், ஏகப்பட்ட பிரஷர்கள். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட் பிளசென்டா இருக்கு. அதுக்குக் காரணம் இந்த மனிதர்தான்.”

“ஐஸ்வர்யா ராஜேஷ், ரீது வர்மானு இரண்டு ஹீரோயின்கள். அவங்க கமிட் ஆன கதையைச் சொல்லுங்க?”

“40 வயதுகளில் இருக்கக்கூடிய ஆள், 28 ஒரு பெண். இருவருக்குமான காதல் போர்ஷன். அதனால, ‘சீனியர் வேண்டாம். வித்தியாசமா, ஃப்ரெஷ்ஷா இருக்கட்டும்’னு விக்ரம் சார் விரும்பினார். அந்த வகையில், ‘பெல்லி சூப்புலு’ பண்ணின ரித்து வர்மா சரியா இருப்பாங்கனு தோணுச்சு. தமிழ்ல இப்ப துல்கரோட ஒரு படம் கமிட் ஆகியிருக்காங்க. இன்டெலிஜென்ட் பெண். அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். வித்தியாசமா இருக்கட்டும் என்றுதான் அவங்களையும் கேட்டோம். எப்ப ஷூட்னு கேட்டாங்க. நாளைக்குனு சொன்னதும், அதிர்ந்துட்டாங்க. முதல்நாளே பெரிய சீன். ஆனால் அழகாக ஹேண்டில் பண்ணினாங்க. இது காதல், ஹீரோயின் பற்றிய படம் இல்லை. இரண்டு பேருக்குமே குறைவான காட்சிகள்தான். ஆனால் அந்த லவ் ஸ்டோரிகள் பாலுமகேந்திரா சார், பாலசந்தர் சார் படங்களோட டோன்ல  எஃபெக்டிவாக இருக்கும். இவங்க கேரக்டர்கள் அடுத்தடுத்த பார்ட்லயும் தொடரும்.”

“பார்த்திபனுடன் ஒர்க் பண்ணணும்னு ரொம்பநாளா பேசிட்டு இருந்தீங்க. இந்தப்படத்துல நடந்திருக்கு. என்ன சொல்றார் சீனியர் டைரக்டர்?”

“வெப் சீரிஸ், டிவி சீரிஸ், வெவ்வேற சினிமாக்கள்னு... இரண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணணும்னு ரொம்பநாளா பேசிட்டு இருந்தோம். இதுல அமைஞ்சது. எந்த சீன் தந்தாலும் ஏதோ ஒண்ணு இன்ட்ரஸ்டிங்கா பண்ணிடுறார். ஷூட்டிங்குக்கு ஒருமணிநேரத்துக்கு முன் கூடுவோம். ‘இதுதான் சீன்’னு பேசிகிட்டு ஒருமணிநேரம் டைம் எடுத்து எழுதுவேன். அவரும் ஒண்ணு யோசிப்பார். நான் எழுதிய விஷயத்தை சொல்லுவேன். அவர் யோசிச்சதை சொல்லுவார். எது பெட்டரா இருக்கோ அதை எடுத்துட்டு டேக் போவோம்.  கொஞ்சம் தாண்டி இருந்தா அப்பப்ப டோன்டவுன் பண்ணணும். தவிர அவரோட மேக்கப், காஸ்ட்யூம், தலைமுடினு எல்லாத்தையும் அவரே டிசைனர்கூட பேசி ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டார். இந்தப் படத்துக்கு அவர் எனக்காகத்தான் வந்தார்னு தெரியும். நானும் ஒரு சீனியர் ஹீரோ, டைரக்டருக்கான  ஃபீலை தந்திருக்கேன்னு நம்புறேன். இந்தப் படம் தவிர வேற படங்கள், அடுத்தடுத்து என்னென்ன விஷயங்கள் பண்ணலாம், லைஃப், டிராவல், அவரோட பயணம்னு நிறைய பேசிப்போம். இன்னைக்கு அவர் நடிகரா பயங்கர பிஸி. ‘இருந்தாலும் டைரக்ஷனை மிஸ் பண்ணாதீங்க சார். தொடர்ந்து பண்ணுங்க’னு சொல்லியிருக்கேன்.”

“சிம்ரனுடன் மீண்டும் ஒர்க் பண்றீங்க. என்ன ஸ்பெஷல்?”

“அவங்கள்ட்ட புதுசா விளக்கணும்னு அவசியம் இல்லை. ‘இன்னமும் நான் ஒர்க் பண்ணணும்னு விரும்புறீங்களா கௌதம்’னு கேட்டாங்க. ‘நிச்சயமா மேம்’னு சொல்லி அவங்களை அழைச்சுட்டு வந்தேன். பல்கேரியா, இஸ்தான்புல், ஜார்ஜியானு ஃபேமிலியை விட்டுட்டு வந்தாங்க. நாம சொல்லும் விஷயத்தை அப்படி உள்வாங்கி ஒண்ணு பண்ணுவாங்க. அதுல எந்த மாற்றமும் சொல்ல தேவையே இருக்காது. அதேபோல ராதிகா மேம். அவங்க 10 வருஷங்களுக்கு மேல என் ஃப்ரெண்ட். ஒரு தயாரிப்பாளரா எனக்கு நிறைய விஷயங்கள்ல உதவி பண்ணியிருக்காங்க. அப்படி இந்த லிஸ்ட்ல டிடியும் சேர்ந்தாங்க. நான் இப்படி ஒரு ப்ராஜெக்ட்னு சொல்லி கூப்பிட்டதும் யோசிக்காம வந்தாங்க. ‘விக்ரமைச் சுற்றி இருக்கும் கேரக்டர்களின் அறிமுகம் பிளஸ் என் பாணியில் சில விஷயங்கள் இருக்கும். ஆனால் நிச்சயம் பார்ட் டு இருக்கும்’னு சொல்லிதான் வரவெச்சேன். அவங்க பயங்கர ஷார்ப். அவங்கள மாதிரி என்னால டிவி ஷோக்கள் பண்ண முடியாதுனு எனக்குத் தெரியும். ‘இதுதான் இப்படித்தான் பண்ணணும்’னு அவங்களுக்கு எழுதி வெச்சிருந்த 10 லைனை வாசிச்சு காட்டிட்டு, ‘படிச்சுக்கங்க’னு சொன்னால், ‘இல்ல, டேக் போகலாம்’ம்பாங்க. உண்மையிலேயே அப்படியே அவங்க ஸ்டைல்ல சொல்லுவாங்க. நமக்குத் தேவையான கன்டென்ட் வந்துடும். அவங்க முன்னாடியே இறங்கியிருக்கணும்னு தோணுது. இவங்க தவிர ப்ரீத்தி, மாயா, வேட்டையாடு விளையாடு வில்லன் சலீம், வம்சி..பலர் இருக்காங்க.”

“டிவியில் இருந்த டிடியை சினிமாவுக்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்க?”

“டிடிக்கு முழுநேர நடிகையாகணும் என்கிற எண்ணம் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆனால் சிலர் கூப்பிடும்போது போய் நடிக்கிறாங்க. தனுஷ் படத்தில் இருந்தாங்க. நான் இந்தப்படத்துக்காக கூப்பிடவும் யோசிக்காம வந்தாங்க. கதையைச் சொன்னேன். அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. ‘சின்ன ரோல்னு நினைக்காதீங்க. இன்னும் சில விஷயங்கள் இருக்கும்.  இதுக்குக் கண்டிப்பா அடுத்தடுத்த பார்ட் பண்ணுவேன். அதுலயும் இந்தக் கேரக்டர் தொடரும்’னு சொன்னேன். அவங்களுக்கு இந்த லைன் பிடிச்சிருந்ததால ஒப்புக்கிட்டு நடிக்க வந்தாங்க. அவங்க டிவியில நிகழ்ச்சி பண்றமாதிரி நம்மால் பண்ண முடியாதுனு எனக்குத் தெரியும். நடிக்கிறதும் அப்படி ஷார்ப்பா பண்றாங்க. ஒவ்வொரு காட்சிக்கு முன்னாலும் நடிக்கிறவங்களுக்கு, எப்படி நடிக்கணும், என்ன பேசணும் என்பதை புல்லட் பாயின்ட் மாதிரி நான் எழுதிய கார்ட்டை கொடுப்பேன். ஒருமுறை பார்த்தாங்கன்ன எக்ஸ்ப்ரைன்... கண்டுபிடிச்சதால சொல்றீங்க. ஒகே டேக்ம்பாங்க. பாத்துக்கங்க. அப்படியே சொல்லுவாங்க. அவங்க ஸ்டைல்ல சொல்லுவாங்க. நம்ம கன்டென்டட் வந்துடும் முன்னாடியே அவங்க இறங்கியிருக்கணும்னு தோணுது. 

“விக்ரமுடன் நடிக்கும் அந்த 10 பேர் டீம் ஓ.கே. வில்லன் யார்?”

“அது சர்ப்ரைஸ்., அவரோட வாய்ஸ் மட்டும்தான் ட்ரெயிலர்ல கேட்கும். அவரோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்த விக்ரம் சார், ‘அவரை இப்போதிக்கு அறிவிக்காதீங்க. எவ்வளவு முடியுமோ அதுவரை சர்ப்ரைஸா வெச்சுக்கங்க’னு சொன்னார். ஓரளவு தெரிஞ்ச ஆள்தான். வேறவேற இடங்கள்ல பிரபலம். பயங்கரமா வந்துட்டு இருக்கார். செம ப்ரசன்ஸ். கொஞ்சம் அலசி பார்த்தீங்கன்னா யாருனு கண்டுபிடிச்சிடுவீங்க. விக்ரம் சாரே, ‘ஐயம் யுவர் ஃபேன்’னு சொல்லிட்டார். அவரை நடிக்கவைக்கலாம் என்பது டிடிகொடுத்த ஐடியாதான். ‘ஏன் இவரை காஸ்ட் பண்ணக்கூடாது’னு கேட்டு ஒரு குறிப்பிட்ட படத்தை பார்க்கச்சொன்னாங்க. அதைப் பார்த்துட்டு பேசி ஃபிக்ஸ் பண்ணினோம். அவரை வெச்சு இஸ்தான்புல்லதான் முதல்ல ஷூட் பண்ணினோம். அவர் பண்ணின விஷயங்களைப் பார்த்துட்டு அங்க இருந்த பாரின் க்ரு உள்பட எல்லாருமே கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க. பெக்கூலியர் உடல்மொழி, வாய்ஸ் மாடுலேஷன்னு விக்ரம் சார்க்கு ஈக்குவெலா இருந்தார். அதைவிக்ரம் சாரும் ரசிச்சார். ஒரு காட்சியில் அவரை விக்ரம் சார், ஷூவால் நெஞ்சிலயும் முகத்துலயும் மிதிச்சு அடிக்கணும்.  அப்ப அவர் கீழ விழணும். அடுத்த ஷாட்ல அந்த ஷூ பட்ட மார்க்கும் மூக்குல ரத்தமும் இருக்கணும். ‘அந்த ரத்த மேக்கப்பை நானே பண்றேன்’னு சொல்லி, தன்னோட மேக்கப்மேனை வரச்சொல்லி மேக்கப்போட ஆரம்பிச்சார். ‘நானே ஒரு ஷூவை எடுத்து குப்பையில வெச்சு முகத்துல் வெச்சுகிறேன்’னு அவர் சொன்னார். ‘வேண்டாம். அதையும் நானே பண்றேன்’னு விக்ரம் சார் பண்ணினார். ‘ஆமாம், நீங்க ஏன் சார் போடுறீங்க’னு அவர் கேட்டதும், ‘நேற்று நீங்க பெர்ஃபார்ம் பண்ணினதுல இருந்து நான் உங்க ஃபேனாகிட்டேன். நான்தான் பண்ணணும்’னு சொல்லி பண்ணினார். அந்த வில்லன் இந்தப் படம் முழுக்க இருப்பார். இவரைத்தவிர இன்னொரு ஸ்பெஷல் காஸ்ட்டும் இருக்கு. 10 பேர் கொண்ட அந்த கமாண்டோ டீமை வடிவமைக்கும் அந்தப் பெரியவர் கேரக்டர் யார் என்பதும் சஸ்பென்ஸ்.”

“ஆக்ஷன் படம், ஃபாரின் ஷூட்... உங்க டெக்னிக்கல் டீம் எந்தளவுக்கு ஒர்க் பண்ணியிருக்காங்க?”

“இந்தப்படம் ஆரம்பிக்கும்போது எனக்கு வேண்டிய கேமராமேன் மனோஜ் பரமஹம்சா பிஸியா இருந்தார். பிறகு ‘எனை நோக்கி பாயும்’ படத்துக்கு ஒர்க் பண்ற ஜோமோன் டி ஜானை ஃபிக்ஸ் பண்ணினோம். மூணு நாள் ஷூட் பண்ணின சூழல்ல அவருக்கு திடீர்னு உடம்பு முடிலை. அடுத்து ரவிகேசந்திரனின் பையன் சந்தா மூணு நாள் ஷூட் பண்ணினார். இடையில் ஒரு சின்ன பிரேக். அப்ப, ‘நீங்க பண்ணமுடியுமா’னு மறுபடியும் மனோஜ் பரமஹம்சாவை கேட்டேன். பிறகுவந்த அவர்தான் 80 சதவிகித படத்தை ஷூட் பண்ணினார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வுக்குப்பிறகு நாங்க சேர்ந்து ஒர்க் பண்ற படம். ஆனால் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் அவர்ட்டதான் கேட்பேன். ஆனால் மிஸ் ஆகிட்டே இருந்தது. இப்ப சேர்ந்து பண்றோம் என்பதில் சந்தோஷம். அவரால எல்லார்கூடவும் எளிதா ஒர்க் பண்ண முடியுமானு தெரியலை. சிந்திக்கிற ஒளிப்பதிவாளர். ஒரு டைரக்டர் அளவுக்கு ஒர்க் பண்ணுவார். சமயத்துல நான் யோசிச்சதைவிட ஒருத்தர் பெட்டரா யோசிக்கும்போது அதை நான் எடுத்துப்பேன். அதுல எந்த ஈகோ பிரச்னையும் எனக்கு இல்லை. அன்னைக்கு எடுக்கவேண்டிய காட்சிகள், ஒர்க் பண்றாரு, எக்யூப்மென்ட்..னு நான் பண்ணவேண்டிய பாதி வேலைகளை அவர் எடுத்துப்பார். ஷாட்டுக்குள் ஆர்ட்டிஸ்ட் எப்படி ஒர்க் பண்றாங்க, ஸ்கிரிப்ட்ல உள்ளது சரியா வருதானு நான் அதுல மட்டும் கவனம் செலுத்தினா போதும். ஆனால் அவர் இவ்வளவு வேலைகளையும் செய்துட்டு என் மைண்ட்ல உள்ளதை அப்படியே காட்சிகளா ஷூட் பண்ணி கொடுப்பார். நிச்சயம் அவர் டைரக்ஷன் பண்ணணும் என்பது என் விருப்பம். படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். இனிமேல்தான் ஹாரிஸ் ஜெயராஜ்கூட கம்போஸிங் உட்காரப்போறேன். கண்டிப்பா சர்ப்ரைஸ் காத்திருக்கும்.”

“ ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் எப்ப ரிலீஸ்?”

“இன்னும் 15 நாள்கள் ஷூட்டிங்தான் மீதம் இருக்கு. தனுஷ் வந்துட்டார்னா முடிச்சிடுவோம். அடத்தியான காதல் கதையும் ஆக்ஷனும் கலந்த படம். இதில், ஜாலியா ரவுசுவிட்டு சுத்திட்டு இருக்கிற கேரக்டரா இல்லாம  ஸ்டைலிஷான தனுஷை பார்க்கலாம். இதுவும் ‘துருவநட்சத்திர’மும் மூன்று வார இடைவெளிகள்ல ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் இன்னொரு பிளஸ் தர்புகா சிவாவின் இசை. இவர் இசையமைப்பாளரா அறிமுகமான ‘கிடாரி’ பட ஆடியோவை நான்தான் வெளியிட்டேன். அந்தப்பட பாடல்களை கேட்டுட்டு எனக்கு ஒரு ஃபீல் கிடைச்சுது- அவரை அழைச்சிட்டு வந்து ஃப்ரெஷா ஒரக் பண்ணுவோம்னு ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வை எடுத்தவரைக்கும் போட்டுகாட்டினேன். ‘இதுதான் சிச்சுவேஷன். பாட்டு ஒர்க் பண்ணலாம்’னு கேட்டதும், ‘இப்ப, இப்படி உட்கார்ந்து என்னால பாட்டு ஒர்க் பண்ண முடியாது. நீங்க சொன்னதை ஃபுல்லா உள்வாங்கிக்கிறேன். என் ஸ்பேஸ்ல போய் கம்போஸ் பண்ணிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு கிளம்பியவர் அன்னைக்கு நைட்ல இருந்து ஃபீட்பேக் பண்ணிட்டே இருந்தார். ‘அந்தப்பொண்ணு லைஃபல ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடத்துக்கு வந்திருக்கா.

அவளை அரவணைச்சு அவளுக்கு ஹீரோ ஆறுதல் தர்றான்’ இதுதான் .‘மறுவார்த்தை’க்கு நான் சொன்ன சிச்சுவேஷன். ‘ஓ பாப்பா லாலி’னு சாஃப்டா இல்லாம ‘உயிரின் உயிரே’ மாதிரி அந்த பீட்டே பாட்டை ட்ரைவ் பண்ணணும். சோல்ஃபுல் லிரிக்கா இருக்கணும்’னு சொன்னேன். அதுக்கு சிவா தந்த இந்த ட்யூன் கேட்டதும பிடிச்சது. சித் ஸ்ரீராம், தாமரை மேமை வரவெச்சு ரிக்கார்டிங் பண்ணினோம். ‘யார் இந்த மியூசிக்னு தெரியாமலேயே இந்த மியூசிக்கை ரீச் பண்ண முடியுமானு பார்க்கலாம். ரசிகர்கள் ஜட்ஜ் பண்ணட்டும்னு பண்ணினோம். இன்னைக்கு யூடியூப்ல இந்தப்பாட்டுக்கு 20 மில்லியன் ஹிட்ஸ் இருக்கு. ஆனால் பாவம் சிவாவுக்குதான் எக்கச்சக்க தர்மசங்கடம். ‘சார் பலரும், அந்த மிஸ்டர் எக்ஸ் நீங்கதானே’னு கேக்றாங்க. எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. பிரச்னையா இருக்கு’னு சொல்வார். ஒருகட்டத்துல இதுக்குமேல அவரை டார்ச்சர் பண்ணக்கூடாது’னு முடிவு பண்ணி, அவர்தான்னு அறிவிச்சோம். சிவா எந்தளவுக்கு நல்ல இசையமைப்பாளரோ அதேஅளவுக்கு நல்ல நடிகரும்கூட. சென்ஸ் ஆஃப் ஹியூமர்ல பிண்ணுவார். அவரை நடிகராகவும் என் படத்துல பயன்படுத்தணும்னு நினைச்சிட்டு இருக்கேன்.”. 

“வேற என்னென்ன புது முயற்சிகள்?”

“மொழிக்கு ஒருவராக ஏழெட்டு நடிகர்கள் நடிக்கும் படம் ஒண்ணு பேசிட்டு இருக்கோம். படத்தின் பெயர் ‘ஒன்றாக’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு மொழிக்கு ஒருவராக நான்கு நண்பர்கள். காலேஜ்ல ஒண்ணா படிச்சாங்க. காலேஜ் முடிஞ்சு 10 வருஷம் கழிச்சு அந்தக் கதையை ஓப்பன் பண்றோம். அவங்க நாலு பேரும் 5வது ஃப்ரெண்டோட கல்யாணத்துக்கா அமெரிக்கா பயணமாகுறாங்க. அதுக்கு முன்ன இந்த நாலு பேரின் கதை, அந்த அமெரிக்கப் பயணம், அதில் நடக்குற எமோஷன்ஸ்னு அழகான ஸ்கிரிப்டா அமைஞ்சிருக்கு. அதில் மூன்று ஹீரோயின்கள். ரஹ்மான் சார்தான் மியூசிக். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் கன்ஃபர்ம் பண்ணியிருக்கார். அடுத்த வருஷம் இந்தப்படத்தை ஆரம்பிக்கிறோம். அடுத்து எங்க பேனர்ல, அரவிந்த் சாமி, சந்திப் நடிக்கும் ‘நரகாசுரன்’ பண்றோம். கார்த்திக் நரேன் டைரக்ஷன். நரேன் செமயா ஒர்க் பண்றார். அவரளவுக்கு புரொடக்ஷன் பிளானிங் நான் பண்ணினதே கிடையாது. 22 வயசு நரேன்ட்ட நான் கத்துக்கிறேன்னுதான் சொல்லணும். இதுதவிர ‘பெண் ஒன்று கண்டேன்’ என்ற பெயரில் ‘பெல்லிசுப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக் பண்றோம். அதில் விஷ்ணு விஷால்-தமன்னா நடிக்கிறாங்க. அதுக்கும் தர்புகா சிவாதான் மியூசிக். இதுதவிர ‘வீக் எண்ட் மச்சான்’னு ஒரு வெப் சீரிஸ், ‘ஒன்றாக’ யூ டியூப் சேனலுக்காகப் பண்ணியிருக்கோம்.”

“வெவ்வேறு மொழிப் படங்களுடன் ஒப்பிடுகையில் நம் தமிழ் சினிமா இப்ப எந்த இடத்தில் இருக்கு?’”

“வட்டி, வரினு நம் சினிமா சூழல் அவ்வளவா ஆரோக்கியமா இல்லை. இங்க உள்ளவங்க ஒரு படம் நல்லா போயிட்டு இருந்தால், ‘அதைக் கொண்டாடணும், அதுதான் சினிமாவுக்கான வெற்றினு நினைக்கமாட்டேங்குறாங்க. எப்படி கவுக்கலாம், காலி பண்ணலாம்னுதான் யோசிக்கிறாங்க. ஒரு நல்ல படத்தை, நல்ல படம்னு ஒப்புக்க டைம் ஆகுது. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை தரக்கூடிய வெற்றி. அதை வெற்றினு ஒப்புக்க இங்க ஆள் இல்லை. எனக்கு வைபவ் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கு. அவரின் திறமைமேல நம்பிக்கைவெச்சு எங்களோட ஒரு ப்ராஜெக்டில் அவரை கமிட் பண்ணியிருந்தோம். ஆனால் அந்தப்பட ஹீரோயின் கொஞ்சம் யோசிச்சாங்க. அதனால அந்தப்படத்துல அவரால் நடிக்க முடியாத சூழல். ஆனால் இன்னைக்கு அவரோட பொட்டன்ஷியலை அவர் தெளிவா காட்டிட்டார். ஒருத்தரோட வெற்றியைத் தள்ளிப்போடலாம். ஆனால் யாராலும் தடுக்கமுடியாது என்பதற்கு வைபவ் ஒரு நல்ல உதாரணம்!”

“இந்த இக்கட்டான சூழல்ல இருந்து சினிமா மீண்டு வர அவசியம்னு நீங்க நினைக்கிறது எது?”

ஃபைனான்ஸ, கந்துவட்டி.... இப்படி இதையெல்லாம் பிரச்னைனு சொன்னாலும் இதைவிட மிகப்பெரிய பிரச்னை ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பது. அவனை வரவைக்க உதவும் ஒரே விஷயம் படத்தின் அந்த கன்டென்ட். ஆனால், ‘ரசிகனுக்கு இது போதும்’னு நினைச்சு ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிக்குறதுதான் தப்பு. அப்படி ஒண்ணு புதுசா, வித்தியாசமா, பெருசா சொன்னா நிச்சயம் அவன் வந்து பார்ப்பான். இதுக்குமேல சொல்லவேணாம்னு ஏன் நினைக்கணும். எத்தனையோ படங்களைப் பார்த்துட்டுதான் இருக்கோம். ஆனால் நாம இன்னும் பழைய மாவைதான் அரைச்சிட்டு இருக்கோம்னு தோணுது. ‘ஹீரோ கால்ஷீட் கிடைச்சுடுச்சு, அதனால உடனடியா ஒரு படம் பண்றோம்’ என்பது ஓ.கே. ஆனால் ஒரு வருஷம் ப்ரிப்ரொடக்ஷன் பண்ணி பண்ற படங்களும் அப்படியேதான் இருக்கு என்பதுதான் வேதனை. என்ன விமர்சனம் வெச்சாலும் ‘விக்ரம் வேதா’ புது முயற்சி. அந்த தைரியமும், புது முயற்சியும்தான் அந்த இயக்குநர்களை இன்னைக்கு மும்பை வரை அழைச்சிட்டுபோயிருக்கு, அமீர்கான், ஷாருக்கெல்லாம் இன்னைக்கு அவங்களுக்கு படம் பண்ண தயாரா இருக்காங்க. எல்லா தயாரிப்பு கம்பெனிகளும் அவங்களை வரவேற்று பேசிட்டு இருக்காங்க. ஆனால் இந்தச் சமயத்தில் அவங்களுக்கு என் அட்வைஸ் ஒண்ணு இருக்கு. நான் பண்ணின தவறை அவங்க பண்ணக்கூடாதுனு நினைக்கிறேன். ஆமாம், ‘விக்ரம்-வேதா’வை அவங்க ரீமேக் பண்ணக்கூடாது. ‘இது எங்களின் பாலிவுட் என்ட்ரிக்கான ஒரு முயற்சி’னு சொன்னா பண்ணலாம். நல்ல விஷயம்தான். ஆனால் ஒரு விஷயத்தை அப்படியே ரிக்ரியேட் பண்ணும்போது, முதல் முயற்சியில் இருந்த ஒரிஜினாலிட்டி ரீமேக் பண்ணும்போது வராது என்பது என் கருத்து. அதே படத்தை அவங்க வேறு இயக்குநரை வெச்சு இவங்களே தயாரிக்கலாம். இவங்க தங்கள்ட்ட இருக்கிற வேறு ஸ்கிரிப்டை ஃப்ரெஷ்ஷா பண்ணணும் என்பது என் விருப்பம். இப்படியான புது கன்டென்ட்டுகள்தான் இன்னைக்கு சினிமாவுக்கான உடனடித் தேவை.”

“தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர். எப்படி இருக்கு இந்த நிர்வாக அனுபவம்?”

“அங்க என் பங்களிப்புதான் குறைவுனு நினைக்கிறேன். என்னால் முடியும்போதுதான் போயிருக்கேன். சாமி-2, துருவநட்சத்திரம் இரண்டு படங்களுக்கும் விக்ரம் சாரின் கால்ஷீட் பிரச்னை வந்தப்ப அதையே கவுன்சில் கொண்டுபோய் இரண்டு பேருக்குமே அட்ஜெட்ஸ் பண்ணி தேதி வாங்கித் தந்தாங்க. அங்க வேற லெவல்ல ஒர்க் பண்றாங்க. எல்லாப் படங்களுக்காகவும் விஷால், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்பிரபு, கதிரேசன் சார், பிரகாஷ்ராஜ் சார்னு ஐந்தாறு பேர் வேலை செய்றாங்க. தன் படங்களை மறந்துட்டு, மத்தப்படங்களைப் பற்றிதான் அதிகம் பேசுறாங்க. இங்குள்ள பிரச்னைகள், புகார்கள்னு ஏற்கெனவே சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் இப்ப இன்னும் கிட்டப்போய் பல விஷயங்களைப் பார்க்கிறேன். சில தயாரிப்பாளர்கள் சரியாக ஓடாத படத்துக்கு சக்சஸ் பார்ட்டி வைப்பதும் சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கூட உள்ள பிரச்னைக்காக நல்லா ஓடுற படத்தைக்கூட கண்டுக்காததும்னு இரண்டையும் பார்க்கிறேன். 

யூனியன் எவ்வளவோ ஆக்கப்பூர்மான விஷயங்களை பண்ணிட்டு இருந்தாலும் இன்னும் ஃபைனான்ஸ் மாடல் மாறலை இன்ட்ரஸ்ட், அசல்... லேட்னா வட்டிக்கு தாமத வட்டினு போயிட்டே இருக்கு. பாதி படம் போயிட்டு இருக்கும்போது, படத்தை தொடர பணம் வேணும் என்பதற்காக ஆடியோ ரைட்ஸை வித்துடுவோம். பிறகு இந்தி ரைட்ஸ் விற்போம். ஆனால் இந்த ரைட்ஸ்களை ரிலீஸ் வரை ஹோல்ட் பண்ணினோம்னா ஏறி அதன் விலை பேசலாம். அப்படித்தான் ‘அச்சம் என்பது மடமையடா’, ‘மறுவார்த்தை’ பாடல்களோட லிரிக் வீடியோ, விஷுவல் ரைட்ஸ்களை நானே வெச்சுக்கிட்டேன். அந்த சமய பணத்தேவைக்காக இதை விற்றிருந்தேன்னா இப்ப மாதாமாதம் வரும் வருவாய் வந்திருக்காது. யூடியூப் வியூஸ் அதிகரிக்கும்போது விளம்பரங்கள் தானா வர ஆரம்பிக்குது. இதேபோல ஐடியூன் மூலமாகவும் மாதாமாதம் வருவாய் வரும். ஆனால் இதுக்கு முன் இதைப்பற்றியெல்லாம் நமக்குத் தெரியாது. படம் வந்தா போதும்னு விட்டுடுறோம். இப்ப எங்க யூடியூப் சேனல்ல ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்துட்டாங்க. அதுக்குனு தனியா கன்டென்ட் உருவாக்கணும். அதுதான் இன்னைக்கு கேம். இந்தமாதிரி விஷயங்கள்ல எஸ்.ஆர்.பிரபு பயங்கர நாலேட்ஜ் பெர்சன். அவர்தான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். 

இன்னைக்கு தியேட்டருக்கு வரவைக்க ஒண்ணு பெரிய படமா இருக்கணும், இல்லைனா சுவாரஸ்யமா பிரசன்ட் பண்ணணும். இது இரண்டும் இல்லைனா தியேட்டருக்கு வரமாட்டாங்க. அதை மனசுல வெச்சுக்கணும் அவ்வளவுதான்.”

அடுத்த கட்டுரைக்கு