Published:Updated:

ரெயின்போ இயக்குநர்கள் !

ஆர்.சரண், பொன்.விமலா படங்கள்: ஆ.முத்துக்குமார்

ரெயின்போ இயக்குநர்கள் !

ஆர்.சரண், பொன்.விமலா படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:

''பொதுவா நாங்க எல்லோரும் ஒரே இடத்துல மீட் பண்ணுற வாய்ப்பு கிடைச்சா ஒண்ணு ஆடியோ லான்ச்சா இருக்கும். இல்லாட்டி, படத்தோட ப்ரீவ்யூ ஷோவா இருக்கும். அது இல்லாம, ஒட்டுமொத்தமா எங்களோட சமகால இயக்குநர்களை ஒரே நேரத்துல சந்திக்குற வாய்ப்பு கொடுத்த விகடனுக்கு எங்களோட நன்றிகள்..!'' - கோரஸ் குரலில் ஆரம்பித்தனர் புதுமுக இயக்குநர்களான 'குக்கூ’ ராஜுமுருகன், 'தெகிடி’ ரமேஷ், 'மஞ்சப்பை’ நவீன் ராகவன், 'என்னமோ நடக்குது’ ராஜபாண்டி, 'சதுரங்க வேட்டை’ வினோத், 'பூவரசம் பீப்பீ’ ஹலிதா ஷமீம் மற்றும் 'திருமணம் எனும் நிக்காஹ்’ அனீஸ்.

இவர்கள் ஏழு பேரும் வானவில்லின் வண்ணங் களாய் தங்கள் எண்ணங் களால் தமிழ் சினிமாவுக்கு அழகுசேர்த்த இளம் படைப் பாளிகள். சமீபத்திய கவன ஈர்ப்புப் படங்களை எடுத்த இளம் இயக்குநர்கள். ''வழக்கமா நாங்கதான் கேள்வி கேப்போம். இப்போ நீங்க உங்களுக்குள்ள மாத்தி மாத்தி கேள்விகள் கேட்டு என்ஜாய் பண்ணலாம். இது நீங்க புரொடியூஸர்கிட்ட கதை சொல்ற வழக்கமான டிஸ்கஷன் இல்ல. அதனால, தைரியமா ஜாலிப் பட்டாசு களைக் கொளுத்திப் போடுங்க. நாங்க ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கிறோம்!'' என்று சொன்னோம். அப்புறம் என்ன, நான்ஸ்டாப் கொண்டாட்டம்தான்!

ரெயின்போ இயக்குநர்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அசிஸ்டென்ட்டா இருந்து டைரக்டர் ஆகுறது... இல்லாட்டி, குறும்படம் எடுத்து டைரக்டர் ஆகுறதுன்னு ரெண்டு முறைகள்ல இப்ப டைரக்டர்கள் உருவாகிட்டு இருக்காங்க. குறும்படங்கள் மூலமா இயக்குநர்கள் உரு வாகுறது உண்மையாவே வரவேற்கவேண்டிய விஷயம்தான். நம்ம டைரக்டர்கள்கிட்ட இருந்து சினிமாவை கத்துக்குறதைவிட நிறைய படங் களைப் பார்த்து கத்துக்குறதுதான் அதிகம். டி.வி.டி-க்கள் பார்த்து சினிமாவைக் கத்துக்க லாமே தவிர, பார்த்த டி.வி.டி-யெல்லாம் வெச்சு காப்பி அடிச்சு அதே மாதிரி படம் பண்ணக் கூடாது. இங்கேயே நம்மைச் சுத்தி நிறையக் கதைகள் இருக்கு!'' - அதிரடி சரவெடியாய் திரிகொளுத்தி ஆரம்பிக்கிறார் வினோத்.

''அட, ஆமா பாஸ்..! இந்த அஞ்சு வருஷத்துல தமிழ் சினிமா நிறைய மாற்றம் அடைஞ்சிருக்கு. இங்கே இத்தனை பேர் வந்திருக்க காரணமே, மாற்றுச் சிந்தனையின் வெளிப்பாடுதான். ஒரு கதைக்கான இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வேணும்னாலும் வரலாம். அது எங்கோ படிச்ச புத்தகத்திலிருந்து வரலாம்; பார்த்த சம்பவத்தில் இருந்து வரலாம். 'மஞ்சப்பை’ படம்கூட நம் வீட்டில் இருக்கும் பல தாத்தாக்களின் கதை தானே? அதை ஏன் மத்தவங்களும் யோசிக்கக் கூடாது. மலையாளப் படங்கள்ல பார்த்தோம்னா, கம்யூனிஸ்ட் கொடிகளை ஆங்காங்கே பார்க்க முடியும். அதுபோல நம் மண்ணோட ஈரத்தைப் பதிவுசெய்ய நிறையவே யோசிக்க வேண்டி யிருக்கு'' என, அடுத்த விஷயத்துக்குள் ராஜு முருகன் நுழைந்தார். அதை எல்லோரும் ஆமோதிக்க, ''என் படத்துல கரைவேட்டி தெரியற ஒரு சீனுக்கு போற வர்றவங்கள்லாம் அட்வைஸ் பண்ணி, அந்தக் காட்சியைப் படமாக்க வேணாம்னு சொன்னாங்க. என்ன கொடுமை பாருங்க!'' என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார் ஹலிதா ஷமீம்.

ரெயின்போ இயக்குநர்கள் !

''பெரிய படங்கள் கூடவே நம்மோட சின்ன படங்கள் ரிலீஸ் ஆகுறதுல பிரச்னை இருக்கு. சில நேரங்கள்ல மிரட்டலும் நடக்குது. இதுக்கு சிறிய அளவுல படம் பண்ற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்ன பண்ணலாம்?'' என ஒரு சென்சிடிவ் கேள்வியை அவரே முன்வைக்க, அவருக்கு ரமேஷ் பதில் சொன்னார்...

''பெரிய பட்ஜெட் படங்களா இருந்தாலும் சரி, சின்ன பட்ஜெட் படங்களா இருந்தாலும் சரி... நல்ல படங்களை நாம் கொடுக்கும்போது மக்கள் தாமாகவே நம்ம பக்கம் திரும்ப வாய்ப்பு இருக்கு. இந்தப் பிரச்னையும் தானாகவே சரியாகும்'' என்றதும், அனைவரும் தலையசைத்து ஆமோதித்தனர்.

''அதெல்லாம் இருக்கட்டும். விமர்சனம்கிற பேர்ல சமூக வலைதளங்கள்ல கொத்து பரோட்டா போட்டு சினிமாக் களைக் காலியாக்குவது சரியா?'' என அடுத்த டாப்பிக்குக்குள் நுழைந்தார் நவீன் ராகவன்.

ரெயின்போ இயக்குநர்கள் !

''விமர்சனம் பண்றது தப்பில்லை. ஆனா, அதையே பூதாகரமாக்குறதுதான் தப்பு. சமூக வலைதளங்கள்ல விமர்சனம் எழுதற வங்க தங்களோட மேதாவித்தனத்தைப் பதிவு பண்ணணும்னு நினைச்சு ஒட்டுமொத்தமா குறை சொல்ல ஆரம்பிச்சுட றாங்க. இப்ப மீடியாவை விட, தனி மனித விமர்ச னம்தான் அதிகமாயிடுச்சு. முதல்நாள் முதல் ஷோ தியேட்டர்ல டெம்பிள் ரன் கேம் விளையாடிக் கிட்டே, 'படம் மொக்கை பாஸ்’னு பத்தாவது நிமிஷம் ஸ்டேட்டஸ் போட்டு காலி செஞ்சிடுறாங்க'' என்றார் ஹலிதா ஷமீம்.

''என்னைக் கேட்டா இன்டெர்வெல்ல சமோசா விக்குறவர்தான் கரெக்டா படம் தேறுமா தேறாதானு சொல்வார். பிரிவியூ ஷோ நடத்தினாக்கூட, ஹலிதா சொல்றமாதிரி டெம்பிள் ரன் விளையாடிட்டுதான் படம் பாக்குறாங்க...'' என்று சிரிப்போடு சொன்னார் வினோத்.

அவரைத் தொடர்ந்த ராஜுமுருகன், ''இப்போ விமர்சனம் பண்றவங்கள்லயே கிரியேட்டர்ஸ் நிறையப் பேர் வளர்ந்துட்டு வர்றாங்க. உண்மையைச் சொல்லணும்னா, நம்ம டயலாக் ரைட்டர்களைவிட செம க்யூட்டா நச்சுன்னு ஒரு விஷயத்தை போற போக்குல நெட்ல விமர்சகர்களா மாறி எழுதிடறாங்க. அவங்க நமக்கு மிக முக்கியமானவானவங்க. அவங்களையும் தாண்டித்தான் நாம் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்'' என்றார். எல்லோரும் அவரது குரலுக்கு வலு சேர்த்தார்கள்.

''என் அனுபவத்துல ஒண்ணு சொல்றேன்... நார்மல் ஆடியன்ஸைப் பொறுத்தவரை எது தப்புன்னு தெரி யாது. ஆனா, அவங்களை கவனமா விசாரிச்சுப் பார்த்தா அவங்க சொல்ற செய்திகள் நாம யாருமே எதிர்பார்க் காத ஒரு கவன ஈர்ப்பா இருக்கும். போறபோக்குல 'அந்த சீனை இப்படி வெச்சிருந்திருக்கலாமே தம்பி’னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. யோசிச்சுப் பார்த்தா, ஷாக்கிங்கா இருக்கும். ஏன்னா, அதுதான் சரியா னதா இருந்திருக்கும். நாம நம்மளோட சினிமா காம்ப்ரமைஸ்ல அதை மறந்தே போயிருப்போம். அதனால, யாரையும் இங்கு குறைச்சு மதிப்பிட முடியாது! யாரு வேணாலும் விமர்சனம் பண்ணுங்க. ஆனா, தயவுசெய்து படம் பார்த்துட்டு எழுதுங்க'' என்றார் ராஜபாண்டி.

ரெயின்போ இயக்குநர்கள் !

''குறும்படங்களின் வரவு திரைப்படங்களின் டிரெண்ட் செட்டரா இருக்கு. 'சூது கவ்வும்’, 'பீட்சா’ போன்ற படங்கள் சக்சஸ்ஃபுல்லாவும் வேற லெவலுக்கும் போக, இப்போ குறும்பட இயக்குநர்களுக்கு மவுசு கூடிருச்சு. எனக்கும்கூட என்னோட குறும்படங்கள்தான் 'தெகிடி’ கிடைக்கக் காரணமா இருந்துச்சு!'' என்றார் ரமேஷ்.  

''குறும்பட இயக்குநர்களால் வந்திருக்கிற இந்த மாற்றம் நல்ல விஷயம்தான். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹீரோக்கள் கதை கேட்க ஆரம்பிச்சிருக்காங்க இல்லையா...'' என்று நவீன் ராகவன் சொல்ல, ''ஹீரோயிஸத்தின் அளவு இப்போ மாறிட்டு வருது. பெரிய ஹீரோக்களே இதைப் படிப்படியா புரிஞ்சுட்டு வர்றாங்க. அதேபோல பெரிய இயக்குநர்கள்கூட மாற்றுத் திரைக்கதை தேடிப் பயணிக்க ஆரம்பிச்சதுக்குக் குறும்படங்கள் தான் காரணம். என்னதான் பெரிய பட்ஜெட் படமா இருந்தா லும், படம் சரியில்லாட்டி அது ஒரே நாள்ல காலி ஆகுற அளவுக்குக் குறும்பட இயக்குநர்களின் வரவு மிக முக்கியமா இருக்கு. இந்த வரவுதான் அடுத்தகட்ட சினிமாவைக் கொண்டுசெல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்ல'' என்று அந்த டாப்பிக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராஜுமுருகன்.

''சரி... ஜாலியா ஒரு டாப்பிக்குக்கு போலாமா? ஹீரோக்களுக்கு கதை சொன்ன வித்தியாச அனுபவங்களைச் சொல்லுங்க. முதல்ல நான் சொல்றேன். ஒரு ஹீரோவுக்கு நான் 'சதுரங்க வேட்டை’ கதை சொல்லப் போனேன். நல்ல மட்ட மதியானம். கதை சொல்ல ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷம் தூங்கிட்டாரு'' என்று வினோத் ஆரம்பித்து வைக்க...

ரெயின்போ இயக்குநர்கள் !

''உங்களுக்காச்சும் தூங்கி னாரு. நான் இண்டஸ்ட்ரில இருக்குறதுலயே வயசு கம்மி யான ஹீரோவுக்குக் கதை சொல்லப் போனேன். கதையை முழுக்கக் கேட்டுட்டு, 'என்னைவிட வயசு கம்மியான ஒரு ஆளை இந்த கேரக்டர்ல போடுங்களேன். நான் கொஞ்சம் மெச்சூரிட் டியா இருப்பேன்’னு சொன்னார்'' என்று அனீஸ் சொன்னதும், வெடிச்சிரிப்பு அடங்க சற்று நேரமானது.

''சென்சாரின் அளவுகோல் பற்றி நாம பேசியே ஆகணும்!'' என சென்சிட்டிவ் விஷயத் தைக் கையில் எடுத்தார் ராஜ பாண்டி. ''இதைச் சொல்லக் கூடாது, அதைச் சொல்லக் கூடாதுன்னு சென்சாருக்கு பயந்து பயந்து எடுக்குறது இருக்கே, அது கொடுமைங்க! ஒரு படைப்பாளிக்கு கருத்துச் சுதந்திரம் அவசியம் தேவை. சினிமா ஒரு பிசினஸ்தான். அந்த லிமிட்டுக்குள்ள ஒரு நல்ல கருத்தை விதைக்க மெனக்கெடும் இயக்குநர்களை எல்லோரும் மதிக்கணும். படம் வர்றதுக்கு முன்னாடியே ஒவ்வொரு சங்கமா, அமைப்பா யூகங்கள் அடிப்படையில் அந்தப் படத்துக்கு எதிரா போர்க்கொடி தூக்கி, அந்தக் கலைஞனை அழிச்சிடக்கூடாது!'' என்றார்.

ரெயின்போ இயக்குநர்கள் !

''அரசியல் படங்கள் எடுக்க அவ்ளோ தயங்குறோம். 'பராசக்தி’, 'ரத்தக்கண்ணீர்’ மாதிரியான படங்கள் இப்ப வருவதற்கான சாத்தியங்கள் குறைஞ்சிட்டு இருக்கு'' என்று ராஜுமுருகன் சொல்ல, ''ஆமா... நீங்க படம் சென்சார் போறதைப் பத்திப் பேசுறீங்க. ஆனா, நான் கரை வேட்டியை வெச்சு ஷூட்டிங் பண்ணவே முடியல. பிரச்னை வரும்னு பயமுறுத்தினாங்க. இதுல சென்சார் வரைக்கும் பேசணுமா? பொதுவா, இங்கே பேசப்படாத விஷயங்கள் நிறைய இருக்கு. தைரியமா நம்ம வலிகளை, நம்ம மண்ணோட கலா சாரத்தைப் பிரதிபலிக்கிற உணர்வுகளை சினிமாவாக்க சென்ஸார் போர்டும் விதிகளைத் தளர்த்தி வரவேற்கணும். இது ஒருநாள்ல நடந்துடாது. ஆனா, நிச்சயம் மாறணும். மாறும்!'' என்றார் ஹலிதா ஷமீம்.

''படைப்பாளிக்கான சுதந்திரம் இங்கே இருக்குன்னு நினைக்கிறீங்களா?'' என ராஜபாண்டி கேட்க, ''என்னோட 'திருமணம் எனும் நிக்காஹ்’ சினிமா எடுக்க நான் பட்ட அனுபவத்தை வெச்சே ஒரு ஸ்கிரிப்ட் பண்ணலாம். உங்களுக்கே தெரியும்... படத்தோட டைட்டில்ல ஆரம்பிச்சு அத்தனை சர்ச்சைகள். உண்மையில, படத்துல டைட்டிலைத் தவிர ஒரு சர்ச்சையும் இல்லை. நான் நினைச்ச கதை கொஞ்சம் கொஞ்சமா மாறி மாறி, இன்னிக்கு வேற படமா திரையில வந்திருக்கு. தெளிவா சொல்லவேண்டிய ஒரு கருத்தை, பல காம்ப்ரமைஸ்கள் பண்ணி, சுத்திச் சுத்தி சொல்லியிருக்கேன். இன்னும் சிறப்பா பண்ணியிருக்க முடியும். அதுக்கான சுதந்திரம் இங்கே இல்லை. 'திருமணம்னா தமிழ்த் திருமணம். நிக்காஹ்னா அரபுக் கல்யாணம்’னு சொல்லி கடைசி வரை வரிவிலக்கு தர முடியாதுன்னு எதிர்த் தாங்க. நானும் விடாம போராடினேன். நல்ல விஷயத்தை ஜனரஞ்சகமா சொல்ல இவ்வளவு கஷ்டம்னா, மக்களோட வாழ்வியலை அசைச்சுப் பார்க்கும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படமாக்கவே முடியாதுபோல...'' என்று ஆதங்கத்தைக் கொட்டினார் அனீஸ்.

'' 'குக்கூ’ல எனக்கு எல்லாமே பாசிட் டிவ்வா அமைஞ்சுது. குறிப்பா, ஹீரோ தினேஷ் எனக்கு ரொம்ப ஃபிரெண்ட்லி. அவரை மாதிரியே இயக்குநரோட ஃபிரெண்ட்ஸா ஹீரோஸ் அமைஞ்சா கிஃப்ட்தான். பெரும்பாலும் இப்போ இருக்குற இளம் தலைமுறை ஹீரோக்கள் நட்புரீதியில பழகுறதால கதையை காம்ப்ரமைஸ் பண்ணிக்கத் தேவை யில்லை. சரி, அதை விடுங்க. ஒரு பெண் இயக்குநரால, தான் நினைத்த கதையை தைரியமா பதிவு செய்ய முடியற சூழல் இங்கே இருக்கா? பெண் இயக்குநரா உங்களோட பார்வையில் இதுக்கான பதில் என்னன்னு சொல்லுங்களேன்!'' -ஹலிதாவிடம் கேட்டார் ராஜுமுருகன்.

''ஹீரோயினுக்குப் பெரும்பாலும் தமிழ் தெரியாததனால இங்கிலீஷ்ல பேசி புரிய வைக்க ஒரு ஆள் தேவைங்கிற ரேஞ்சுலதான் பொதுவாவே பெண் உதவி இயக்குநர்களைப் பயன்படுத்துறாங்க. ஹீரோயினை மேய்க்க, அவங்களுக்கு மேக்கப் பண்ண, ஹெல்ப் பண்ண... இப்படித்தான் உதவி இயக்குநரா மாத்தப் படுறாங்களே தவிர, அவங்க எழுதறதுக்கான வாய்ப்பை யாருமே கொடுக்கிறது இல்ல. பெண்களால் ஆக்‌ஷன் படம் பண்ண முடியாதுன்னு இல்ல. யாராவது ஒரு பெண் இயக்குநர் அப்படி ஒரு படம் பண்ணி அந்த இமேஜை உடைச்சா, மத்தவங்க தானா வருவாங்க'' என ஹலிதா சொன்னதும், ''இன்னொரு காரணமும் இருக்கு. பெண் உதவி டைரக்டர்னா அவங்களைச் சத்தம் போட்டுத் திட்ட முடியாதேன்னுதான் பல பேரு பெண்களை இங்கே உதவிக்கு சேர்த்துக்கிறது இல்லை!'' என ராஜுமுருகன் போட்டு உடைக்க... சிரிப்புக் கச்சேரி அரங்கேறியது.

ரெயின்போ இயக்குநர்கள் !

''சரி, புரொடியூஸர்கிட்ட கதை சொல் லும்போது நமக்கெல்லாம் தனியா ஒரு அனுபவம் இருக்குமே, அதைப்பத்திச் சொல்லுங்களேன்?'' என ரமேஷ் கேட்க, ஹலிதா பேசியது காமெடி சரவெடி. ''தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூணு மொழியுமே தெரியாத ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லப் போனேன். அரைகுறையா தமிழ் தெரிஞ்ச அவரோட அசிஸ்டென்ட் முன்னிலையிலதான் என் கதையை அவர் கிட்ட சொன்னேன். அந்த அசிஸ்டென்ட்டின் ரியாக்‌ஷன் எப்படி இருக்குன்னு பார்த்துதான் அந்தத் தயாரிப்பாளர் ஓகே பண்ணுவாராம். நான் பக்கம் பக்கமா சொல்லச் சொல்ல, 'ஹீரோ கம்மிங், ஹீரோயின் டையிங், காமெடியன் லாஃபிங் சார்’னு மொழிபெயர்த்தார் பாருங்க... செத்துட்டேன். எதிர்ல இருக்குற வாட்டர் பாட்டிலுக்குக்கூட நாம ஃபீல் பண்ணி கதை சொல்லப் பழகிட்டா, சினிமாவுல ஜெயிச்சி டலாம். புரொடியூஸருக்கு மட்டுமில்ல... அவரைச் சார்ந்த எல்லோருக்குமே கதை சொல்லணும். அதுதான் ரொம்பக் கொடுமையான விஷயம்!'' என்றார் ஹலிதா.

அடுத்து பேசிய வினோத், ''ஒரு தயாரிப்பாளருக்கு என் கதை பிடிச்சு, கிட்டத்தட்ட ஷூட்டிங் கிளம்புற நேரத்துல, தயாரிப்பாளரோட சொந்தக்காரர் ஒருத்தருக்கும் கதை சொல்ல வேண்டிய சூழல். அந்த நபர் கதையைக் கேட்டுட்டுப் போகிற போக்கில், 'சுமாரான கதையால்ல இருக்கு. எங்கிட்ட இதைவிட நல்ல கதைல்லாம் இருக்கே!’னு பிரியாணி சாப்பிட்டு பல்லைக் குத்திக்கிட்டே போயிட்டார்'' என்றதும், ''அப்புறம்?'' என்றனர் எல்லோரும் கோரஸாய். ''அப்புறமென்ன... அவ்ளோதான்! அந்தத் தயாரிப்பாளர் புராஜெக்ட்டையே நிறுத்திட்டார்!'' என்று வினோத் டெரர் கூட்டிச் சொல்ல... சிரிப்பலை!  

''இப்ப கதை சொல்றதைவிட ஸ்கிரிப்ட் ரைட்டிங் வந்தாச்சு. அது இன்னமும் ஈஸியா இருக்கு. ஆனா, ஒரு டைரக்டரா நம்மைப் புரியவைக்க கதை சொல்றது ரொம்ப முக்கியம்'' என்றார் ரமேஷ்.

''கதையைச் சொல்றதைவிட அதை யார்கிட்ட சொல்றோம்கிறது முக்கியம். ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் பண்றவங்க, மாவு விக்குறவங்க இவங்களுக்கெல்லாம் சினிமா ஒரு பொழுதுபோக்கு. அதுல நம்மை இணைச்சுக்கலாம்னுதான் பார்ப்பாங்களே தவிர, அவங்களுக்கு நாம கதை சொல்லிப் புரிய வைக்கிறது கொஞ்சம் சவாலான விஷயம்தான். அப்படித்தான் ஒருத்தர்கிட்ட நான் காலையில ஆரம்பிச்சு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ஃபீலிங்கா கதை சொன்னேன். அவரும் கதையைக் கேட்டுட்டு, 'நல்லா இருக்கு தம்பி, நடுவுல ரீமா சென் பாட்டு வெச்சா நல்லா இருக்கும்!’னு சொன்னதும் கடுப்பாகிடுச்சு. ஆனாலும் சளைக்காம 'குக்கூ’வை 50 பேருகிட்டயாவது சொல்லியிருப்பேன்'' என்று ராஜுமுருகன் சொன்னதும், மீண்டும் சிரிப்புச் சத்தம் அடங்க நேரம் ஆனது.

அதையடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் ட்ரீம் புராஜெக்ட் எப்படி இருக்க வேண்டும் எனப் பேசியதும், கலகல விகடன் மினி இயக் குநர்கள் மாநாட்டுக்கு சூப்பர் எண்ட் கார்டு வந்தது.

நவீன் ராகவன்: எல்லா ஜானர்லையும் படங்கள் பண்ணணும்.
ராஜபாண்டி: த்ரில்லர், காமெடி படங்கள் பண்ணணும்.
ஹலிதா ஷமீம்: எல்லைகள் கடந்து உலகத் தரம் வாய்ந்த படங்கள் எடுக்கணும்.
வினோத்: ஜனங்களுக்கான படங்களைப் பண்ணணும்.
ராஜுமுருகன்: மக்களுக்கான அரசியல் பேசுற படங்களைப் பண்ணணும்.
ரமேஷ்: பாலாவோட 'நான் கடவுள்’ மாதிரியான வித்தியாசமான கதைக் களத்துல படங்கள் பண்ணணும்.
அனீஸ்: குழந்தைகளுக்கான படங்களை எடுக்கணும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism