Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நீங்கள் நிச்சயம் பேகுனாஹ் இல்லை... கங்கிராட்ஸ் வினோத்!’ தீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்

மொத்தக் காவல்துறையே கண்டுபிடிக்கத் திணறிய ஒரு கொள்ளைக் கூட்டத்தைத் தேடிச் செல்லும் ஒரு காவல் அதிகாரியின் பயணமும், துரத்தலும், வியூகங்களும், பர்சனல் வாழ்க்கையும் என விரிகிறது `தீரன் அதிகாரம் ஒன்று.'

தீரன் அதிகாரம் ஒன்று

வழக்கமான ‘கமர்ஷியல் போலீஸ்’ படங்களில் காண்பிக்கப்படுகிற முறையிலிருந்து சற்று விலகி, நிறைய யதார்த்த விவரங்களோடும், ஆவணப் பதிவுகளோடும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். 1995 முதல் 2005 வரை பெங்களூரு - கும்மிடிப்பூண்டி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோர வீடுகளில் கொள்ளை, கொலைகளை அரங்கேற்றிய ராஜஸ்தான் மாநில ஹவாரிய (பவாரியர் என்ற பெயர் திரைப்படத்திற்காக மாற்றப்பட்டுள்ளது) கும்பலைத் தமிழகக் காவல்துறை சுற்றி வளைத்து சட்டத்தின்முன் நிறுத்திய உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகியிருக்கிறது படம்.

கார்த்தி

பத்து வருடங்களுக்கும் மேல் தமிழகக் காவல் துறைக்குச் சவாலாக இருந்த Highway Decoits-ஐ பிடிக்க நடந்த தேடலும், துரத்தலும் பற்றி ஐ.பி.எஸ் தீரனின் (கார்த்தி) அறிமுகத்துடன் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். போலீஸ் பயிற்சி, பயிற்சிக்காக லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வேலைகளில் அமர்த்தப்படுவது, கூடவே ப்ரியாவுடன் (ரகுல் ப்ரீத் சிங்) காதல், கல்யாணம், வேலையில் நேர்மையாக இருந்ததற்காகப் பணிமாற்றம் எனப் படபடவெனக் கடக்கின்றன சில அத்தியாயங்கள். இதேசமயத்தில் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் செய்துகொண்டிருக்கிறது ஒரு கும்பல். இந்த வழக்கு கார்த்தியிடம் வர, துப்புத் தேடிப் போகிறார். கிடைப்பதோ... கொள்ளையர்களின் கைரேகை, ஒரு செருப்பு, நாட்டுத் துப்பாக்கியின் தோட்டா, சில காலி பான்பராக் பாக்கெட்டுகள் மட்டுமே! கைரேகைகள் எதுவும் பழைய குற்றவாளிகளுடன் பொருந்தவில்லை. அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், கொள்ளையடித்துவிட்டு எங்கு செல்கிறார்கள், அவர்களின் நெட்வொர்க் எப்படிப்பட்டது, அவர்களை எப்படிப் பிடிப்பது என எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. பெரும் தேடலுக்குப் பிறகு, இதே முறையில் வட மாநிலம் ஒன்றில் முன்பு கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகைகளும், இங்கு கிடைத்த கைரேகைகளும் பொருந்துகின்றன என்கிற க்ளூ மட்டும் கிடைக்கிறது. இறந்தது சாமானிய மக்கள் என்பதால், அந்தக் குற்றங்களின் மீதான விசாரணையில் உயர்அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். அதே கொள்ளையர்களால் ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கொல்லப்பட காவல்துறை உடனடியாக முடுக்கிவிடப்படுகிறது. குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் கேஸ் ஃபைல்களுடன் இந்தியா முழுக்க குற்றவாளிகளைத் தேடி தன் குழுவுடன் புறப்படுகிறார் கார்த்தி. இந்த ஆபரேஷன் எப்படி நடந்தது, குற்றவாளிகள் யார், அவர்களின் பின்னணி என்ன, அவர்கள் பிடிபட்டார்களா என்பதைப் பற்றி விளக்குகிறது பின்பாதி.

Rakul Preeth Sing

ஒரு காவல் அதிகாரிக்குரிய அசல் விறைப்புடன் வருகிறார் கார்த்தி. வழக்கு பற்றி விளக்குவதும், அதன் மீதான நடவடிக்கையை எடுக்கவிடாமல் தடுக்கும் அதிகாரிகளிடம் "இது வரை செத்தது சாதாரண ஜனங்கதானே. உங்கள மாதிரி ஒரு போலீஸையோ, அரசியல்வாதியையோ அவன் போட்டான்னா... கண்டிப்பா போடுவான். அப்போ நீங்க இதுக்கு என்ன வழின்னு சொல்லுவீங்க..." எனச் சிடுசிடுப்பதும், மனைவியிடம் "என் தங்கப் பாப்பால்ல" எனக் கொஞ்சுவதும், வில்லன் கும்பலை வெளுத்து எடுப்பதும் எனப் படத்தின் கமர்ஷியல் எலிமென்ட் எல்லாவற்றையும் தனது நடிப்பில் நிறைவாகச் செய்திருக்கிறார். உண்மைச் சம்பவம் என்பதால் இயல்பான சம்பவங்களுடனே பயணிக்கும் படத்தில் சினிமாவுக்கான சலிப்பும் சேர்ப்பது கார்த்தி-ரகுல் இடையிலான ரொமான்ஸ்தான். 

ரகுல் ப்ரீத் சிங் வழக்கமான கதாநாயகி ரோலுக்கு என்ன உழைப்பு கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டு ‘கோமா’வுக்குச் செல்கிறார். கார்த்தியின் உதவியாளராக வரும் போஸ் வெங்கட்டின் நடிப்பு கவனிக்கவைக்கிறது. (ஆனால், அண்ணனுக்கு ‘சிங்கம்’ படத்தில் செய்ததை டெபுடேஷனில் இங்கு வந்து தம்பிக்குச் செய்கிறார்!). ஓம்கார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிமன்யூ சிங் மிரட்டல்! 

Theeran

படத்தில் வில்லன் கூட்டத்தைக் காண்பிக்கும்போதெல்லாம் ஒலிக்கும் ஜிப்ரானின் பின்னணி இசை த்ரில் ஏற்றுகிறது.  குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் அந்த 20 நிமிடக் காட்சிகள் அட்டகாசம். ஆவணக்காப்பகம், ரகுல், கார்த்தியின் வீடு, 500 ரூபாய் செல்போன், ஸ்டீல் டார்ச் லைட்டு, டைப் ரைட்டர் என ப்ரீ-இன்டர்நெட் எபிசோட் மற்றும் புழுதி நிறைந்த வட மாநிலச் சந்தைகள், குக்கிராமங்கள் என்று தன் ‘ஷார்ப் ஒர்க்’ மூலம் சபாஷ் போடச் செய்கிறார் கலை இயக்குநர் கதிர். திலீப் சுப்பராயணின் ஸ்டன்ட் வடிவமைப்பு கொள்ளைக் காட்சிகளைத் தத்ரூபமாக்கக் காட்டியிருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் தொடங்கும் விசாரணை அப்படியே வட இந்தியாவிற்குப் பயணித்து, சென்னையில் வந்து முடிவது வரை முழுப் பயணத்துக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு. படத்தில் சில பின் கதைகளை விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளாக காட்டியிருந்த ஐடியாவும், அதன் தரமும் மிகச் சிறப்பு. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை சொல்லியிருந்த விதம் நன்று. தீரனின் பர்சனல் மற்றும் புரொஃபஷன் என இரு அத்தியாயங்களாகப் பிரித்து கதை நகர்த்தியிருந்த விதம் புதிது என்றாலும், அதை இன்னும் கச்சிதமாக இணைத்திருக்கலாம். `சதுரங்க வேட்டை'யில் வசனங்களில் புகுந்து விளையாடிய வினோத், இதில் வசனங்களில் கொஞ்சம் கறார் காட்டியிருக்கிறார். இருந்தாலும், "புத்திசாலித்தனம் பல மக்களை முட்டாளாக்கத்தான் பயன்பட்டிருக்கு", "போலீஸ் கண்களை அதிகமாவும், கையைக் கம்மியாவும், வாயை ரொம்பவும் கம்மியாவும் பயன்படுத்தணும்" என சில வசனங்கள் நச். 

பிரிட்டிஷ்காரர்களால் வரையறுக்கபட்ட குற்றப்பரம்பரைகள், அவர்களின் இன்றைய வழித்தோன்றல்கள், ஓநாய் வழிபாடும், வேட்டை முறையும், செய்வது குற்றம் என்றே தெரியாமல் அத்தனை மூர்க்கமாகக் கொலைகளை நிகழ்த்தும் கூட்டம், அதற்கான பின்னணி என எடுத்துக்கொண்ட நிஜ சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் கதைகளை ஆரய்ச்சி செய்து அதைப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கூடவே, படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் தவிர்த்து, காவல் துறை சார்ந்த டீட்டெய்லிங், க்ரைம் சீன், ‘கைது செய்யப்படும் மறியல்காரர்களுக்கான உணவு, தண்ணீர் போன்றவற்றிற்காக வருடத்திற்கு 2, 3 லட்சம் ஆகும் செலவை அரசாங்கம் கவனிக்காமலிருக்கிறது; அந்தச் செலவீனங்கள் லஞ்சம் மற்றும் மாமூல்கள் மூலமே அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது என்ற உண்மை நிலவரத்தைப் போட்டுடைத்தது எனக் குற்றம் - காவல் இரண்டுக்குமான பின்புலங்கள் நுட்பமாகப் படத்தில் காட்டப்பட்டிருக்கின்றன. முக்கியமாக... கண்டம் விட்டு கண்டம் தாண்டும், நினைத்தவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளும் சூப்பர் போலீஸாகக் காட்டாமல், 'சார் ஓட முடியலை சார்' என சுருண்டு விழும், அடி வாங்கும் நார்மல் போலீஸாக எல்லாரையும் காட்டியிருப்பதற்காகவே பாராட்டலாம். 

 

 

இந்தியா முழுக்கவே தொடர்ச்சியாக ஆதிவாசிகளும் பூர்வகுடிகளும் காட்டுமிராண்டிகள் கொள்ளையர்கள் என்கிற முத்திரை குத்தப்பட்டுத்தான் தங்கள் வாழ்விடங்களிலிருந்து அரசுகளாலும் கார்ப்பரேட்களாலும் விரட்டப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக குற்றப்பரம்பரை சட்டத்தால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு Habitual Offenders Act, 1952 மூலமாக இந்திய அரசாலும் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட ஒரு தலித் சமூகத்தை மோசமான காட்டுமிராண்டிகளாக சித்திரித்து இருப்பதை தவிர்த்திருக்கலாம். தொடர்ச்சியாக என்கவுன்டர்களுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிற காலகட்டத்தில், ஒரு குற்றத்துக்கு என்கவுன்டர்தான் தீர்ப்பு என்பதை நியாயப்படுத்துவது ஏனோ..!

இதெல்லாம் ஒருபக்கமிருக்க ஒரே படத்தில் போலீஸின் துப்பறியும் திறனையும், மூர்க்கக் குற்றவாளிகளின் தொழில் நுட்பத்தையும் கச்சிதமான கலவையில் பரபரப்பாக படமாக்கியிருக்கும் வினோத்... நிச்சயம் நீங்கள் ‘பேகுனாஹ்’ (இந்தியில் அப்பாவி) இல்லை. செம சேட்டை வித்தைக்காரன்!

தீரன்

’சிறுத்தை’ போலீஸைத் தாண்டி வசீகரித்த வகையில் கார்த்திக்கும், ‘சதுரங்க வேட்டை’ டச்சிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில் ஈர்த்திருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கும்... இது ஆஸம் அத்தியாயம்..! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்