Published:Updated:

கன்னத்தில் அறைந்தார்... கார் வாங்கிக் கொடுத்தார்!

சின்னராசு முத்தப்பா

கன்னத்தில் அறைந்தார்... கார் வாங்கிக் கொடுத்தார்!

சின்னராசு முத்தப்பா

Published:Updated:

நாட்டியப் பேரொளி பத்மினிக்கு உறுதுணையாகவும் உற்ற தோழியாகவும் இருந்து வந்தவர் பிரசன்னா ரவீந்திரன். மறைந்த தொழிலதிபர் அரிராம் சேட்டின் புதல்வியான இவரிடம், எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வார் பத்மினி. பத்மினியின் கடைசி கால வாழ்க்கை பற்றி அறிய பிரசன்னா ரவீந்திரனைச் சந்தித்தோம். பத்மினியுடன் பழகிய சந்தோஷமான தருணங்களை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

''பத்மினி அம்மா எங்கள் ஊர் முக்கூடலில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திய காலத்தில் இருந்தே என் தந்தை மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். அதனால், என்னிடமும் பாசத்துடன் பழகி வந்தார். நானும் அவருக்கு ஆதரவாக இருந்து வந்தேன்.

என்னதான் அமெரிக்காவில் அவர் வாழ்ந்திருந்தாலும், சென்னை வாழ்க்கைதான் மிகவும் பிடித்ததாகச் சொல்வார். இதற்கு உணவு முக்கிய காரணம். அவருக்கு இங்குள்ள அசைவ சாப்பாடுதான். 'ஆப்பமும் மட்டன் குருமாவும் சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது’ என்று என்னிடம் சொல்வார். உடனே நான் தயார்செய்து கொடுப்பேன். எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன், ராஜ சுலோசனா, பாலாஜி, ராதாரவி, ராஜேஷ் போன்ற நடிகர், நடிகைகள் அவர் வீட்டுக்கு மரியாதை நிமித்தமாக வந்து போவார்கள். பாலாஜி வீட்டுச் சாப்பாட்டை விரும்பிச் சாப்பிடுவார். எனவே, அம்மாவைப் பார்க்க வருகிற போதெல்லாம், பெரிய டிபன் கேரியருடன்தான் பாலாஜி வருவார். அவரைப் பார்த்ததும், 'என்ன சிங்கப்பூர் மைனரே... எப்படி இருக்கீங்க?’ என்றுதான் அம்மா குறும்போடு விசாரிப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்மினி அம்மா விரும்பிச் சாப்பிடும் பழம் மங்குஸ்தான். இது குற்றாலத்தில் விளைவதால், அங்கிருந்து வரவழைத்துக் கொடுப்பேன். அதுபோல அவருக்கு ஜாதிமல்லி மிகவும் பிடிக்கும். வெளியே போகும்போதெல்லாம் தலை நிறைய ஜாதிமல்லி வைத்துக்கொண்டு போவார்.

கன்னத்தில் அறைந்தார்...   கார் வாங்கிக் கொடுத்தார்!

ஒரு சமயம் கடற்கரைச் சாலையில் நான் அவருக்காக கார் ஓட்டிச் செல்லும்போது, சிவாஜி சிலையைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது நடிகர் திலகம் பற்றி ஒரு சுவையான செய்தி சொன்னார்.

' 'எதிர்பாராதது’ படப்பிடிப்பில் ஒரு காட்சி. எனக்குக் கல்யாணமானது தெரியாமல் பழைய காதலன் சிவாஜி என்னைக் கட்டிப்பிடிக்க முயற்சி செய்வார். அந்தக் கட்டத்தில் ஆத்திரமடைந்து, அவரது கன்னத்தில் நான் ஓங்கி அறைய வேண்டும். இந்தக் காட்சி தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, சிவாஜி என்னை உண்மையிலேயே அறையச் சொன்னார். நானும் அவரது கன்னத்தில் 'பளார் பளார்’ என பலமாக அடித்துவிட்டேன். இதன் விளைவாக அவரது கன்னம் வீங்கி, இரண்டு நாட்கள் அவரால் படப்பிடிப்புக்கு வரமுடியவில்லை. அவரது வீட்டுக்குச் சென்று, நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தேன். ஆனாலும், அவர் என்மீது கோபப்பட வில்லை. அதற்குப் பிராயச்சித்தமாக அவருக்கு ஒரு புது ஃபியட் கார் வாங்கிக் கொடுத்தேன்!’ என்றார்.

'உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு’ என்றேன் நான்.

'இது என்ன பெரிய மனசு? நானாவது சிவாஜியை அடித்ததற்குப் பரிகாரமாக கார் வாங்கிக் கொடுத்தேன். ஆனால், உங்க அப்பா அரிராம் சேட், கலைஞர்களைக் கௌரவிப்பதற்காகவே சிவாஜிக்கும் தியாகராஜ பாக வதருக்கும் அன்புப் பரிசாக ஜீப், ஃபியட் கார்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறாரே! எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்துக் காகப் பயன்படுத்திய ஃபர்கோ - சொகுசு வேன் உங்க அப்பா தந்ததுதான், தெரியுமா?’ என்று சொல்லி என்னை மலைக்க வைத்தார் பத்மினி.

நான் நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்த ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.

'நீங்களும் சிவாஜியும் ஏராளமான படங்களில் ஜோடி சேர்ந்து, அனைவரையும் கவர்ந்திருக்கிறீர்கள். உங்கள் இருவரிடையே காதல் மலர்ந்து கல்யாணம் செய்கிற ஆசையெல்லாம் ஏற்பட்டதா?’

அதற்கு பத்மினி அம்மா என்ன சொன்னார் தெரியுமா?

'சிவாஜி என்னோடு நடிக்கும்போதெல்லாம், 'பப்பி... நீ ரொம்ப அழகா இருக்கிறே. நீ ஒரு இன்டெலெக்சுவல் லேடி’ என்று சொல்வார். இந்த வார்த்தைகளில் இருந்து அவரது மனநிலையைத் தெரிந்துகொண்டேன். இந்தக் கேள்வி கேட்ட நீயும் ஒரு இன்டெலெக்சுவல் லேடிதான்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

அவருக்கு யார் அழைப்பிதழ் கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆசைப்படுவார். மும்பையில் இருந்து இந்தி நடிகர் ராஜ்கபூரின் பேரன் கல்யாணத்துக்கு அழைப்பு வந்தது. அந்தச் சமயம் நான் வெளியூரில் இருந்ததால், அவரை மும்பை அழைத்துச் செல்ல ஆள் இல்லாமல் போயிற்று. சூர்யா- ஜோதிகா திருமணத்தில் பரிசு வழங்குவதற்காக ஆறாயிரம் ரூபாயில் ஒரு வெள்ளி தம்ளர் வாங்கினார். அப்போது நானும் அவருடன் சென்றேன்.

சென்னையில் பழைய சினிமா படங்களையும் பாடல் காட்சிகளையும் திரையிட்டுப் பார்த்து மகிழ்வதற்காக 'வின்டேஜ் ஹெரிட்டேஜ்’ என்கிற அமைப்பு இருக்கிறது. அதில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு படத்தை போட்டுக் காட்டுவார்கள். ஒரு சமயம் நடந்த 'ஆடல் காணீரோ’ என்கிற நிகழ்ச்சியில், பத்மினியின் திரைப்பட நடனக் காட்சிகளைத் தொகுத்து வெளியிட்டனர். சிறப்பு விருந்தினராக பத்மினி கலந்துகொண்டார். அப்போது அவர், 'தில்லானா மோகனாம்பாள் பாடல் காட்சியைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் இருந்தேன். அதை ஏன் விட்டுவிட்டீர்கள்?’ என்று அதன் அமைப்பாளரிடம் வருத்தத்துடன் கேட்டார்.

கன்னத்தில் அறைந்தார்...   கார் வாங்கிக் கொடுத்தார்!

அவரது மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது நான் அவரிடம் கேள்விகள் கேட்பேன்.

'அம்மா, நீங்கள் எத்தனையோ பொது நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் நடனம் ஆடியிருக்கிறீர்கள். உங்களது மறக்க முடியாத நாட்டிய நிகழ்ச்சிகள் பற்றிச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்...

'3.9.1951 அன்று, உங்கள் அப்பாவின் திரு மணத்தில், ரொம்ப சின்ன வயதிலேயே என் சகோதரிகள் லலிதா, ராகினியுடன் நான் நடனம் ஆடியதை என்றுமே மறக்க மாட்டேன். அதுதான் எங்களின் முதல் நிகழ்ச்சி!

சினிமாவில் ஏராளமான நடனக் காட்சிகளில் ஆடி இருந்தாலும் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் உள்ள போட்டி நடனமான 'கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண் டாடுதே...’ பாடல் காட்சியும், 'தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் உள்ள 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...’ 'நலம்தானா... நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா...’ போன்ற நடனங்களையும் மறக்க முடியுமா?’ என்றார்.

அவருக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர் ஆகியோரைச் சந்தித்துப் பேசவேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதை அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒருமுறை கோட்டைக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்தார்.

'உங்களுக்கு அந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது! இன்னும் நீங்க அழகாகத்தான் இருக்கிறீர்கள். உங்களைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்று சொல்லி, அவரது கைகளைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறார் முதல்வர். அவரது அன்பான உபசரிப்பு தனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்ததாகச் சொன்னார் பத்மினி அம்மா.

ஒருநாள், நான் அவரோடு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். அன்று அவர் கறுப்பு நிற உடையில் இருந்தார். நான் அவருக்கு சிவப்பு நிறத்தில் சேலையும் ஜாக் கெட்டும் வாங்கிக்கொண்டுபோய் அணியச் செய்து அழகுபார்த்தேன். அதே உடையில் விதவிதமாக அவருடன் சேர்ந்து போட்டோஸ் எடுத்துக்கொண்டேன். இது அவர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த சம்பவம். இதுதான் அவருக்குக் கடைசி போட்டோஸாக அமைந்தது.

2006-ம் ஆண்டு, கருணாநிதி முதல்வர் ஆனார். அவருக்கு சினிமா கலைஞர்கள் எல்லாரும் சேர்ந்து நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாகப் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவுக்கு நான்தான் பத்மினி அம்மாவை அழைத்துச் சென்றேன். விழா மேடையில் இருந்தவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பாதியிலேயே திரும்பிவிட்டோம். வீடு வந்து சேர்ந்ததும், 'டாக்டரிடம் போகலாமா?’ என்று கேட்டேன். 'உடம்புக்கு ஒன்றுமில்லை. வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார். அதற்கடுத்த மூன்றாவது நாளில், நான் ஹைதராபாத்தில் என் மகள் வீட்டில் இருந்தபோது, 'பத்மினி காலமானார்’ என்ற துக்கச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அவர் ஆசைப்பட்ட சென்னை வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. லேட்டஸ்ட் மாடலில் ஒரு கார் வாங்க வேண்டும் என்று பத்மினி அம்மா கேட்டிருந்தார். நானும் எனது கணவரும் ஒரு வாரத்துக்குள் அவருக்குப் பிடித்த காரை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்து இருந்தோம். அதற்குள் காலதேவன் அவரை அழைத்துக் கொண்டுவிட்டான்.

இன்னொரு சோகமான சம்பவமும் நடந் தது. அவர் சென்னையில் குடியேறுவதற்காக, அமெரிக்காவில் உபயோகித்த வீட்டுச் சாமான்களை எல்லாம் சரக்குக் கப்பலில் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பொருள்கள் எல்லாம் அவர் மறைந்த மறுநாள்தான் சென்னை வந்து சேர்ந்தன'' என்று உருக்கமுடன் சொன்னார் பிரசன்னா ரவீந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism