Published:Updated:

“பக்கத்துலேயே பொண்ணை வெச்சுக்கிட்டு ஒருவருஷம் வரன் தேடினோம்!” - ‘வீட்ல விசேஷங்க’ நிர்மலா பெரியசாமி #VikatanExclusive

“பக்கத்துலேயே பொண்ணை வெச்சுக்கிட்டு ஒருவருஷம் வரன் தேடினோம்!” - ‘வீட்ல விசேஷங்க’ நிர்மலா பெரியசாமி #VikatanExclusive
“பக்கத்துலேயே பொண்ணை வெச்சுக்கிட்டு ஒருவருஷம் வரன் தேடினோம்!” - ‘வீட்ல விசேஷங்க’ நிர்மலா பெரியசாமி #VikatanExclusive

திமுக நட்சத்திரப் பேச்சாளராக வலம் வருபவர் நிர்மலா பெரியசாமி. ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்ற 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் முதல் தொகுப்பாளர் இவர்தான். 'வணக்கம்' என்கிற இவருடைய உச்சரிப்பு பலருக்கும் பரிட்சயம். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைவுக்குப் பிறகு மெளனம் காத்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தன் ஒரே மகனான விக்னேஷின் திருமணத்தை நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கோலாகலமாக நடத்தியிருக்கிறார். அவரிடம் பேசியப்போது, 

“உங்கள் மகனின் திருமணத்துக்கு அதிமுகவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்களே..?''

“ஆமாம். என் ஒரே மகனான விக்னேஷ்க்குக் கடந்த சில வருடங்களாகப் பெண் தேடிக் கொண்டிருந்தேன். நல்ல இடத்தில் அமைந்ததால கடந்த செப்டம்பரில் திருமண ஏற்பாட்டைச் செய்தோம். எங்களுக்குச் சொந்த ஊர் கரூர். பெண் வீட்டாருக்குச் சொந்த ஊர் ராசிபுரம் என்பதால ராசிபுரத்தில் உள்ள 'ஶ்ரீராசி மஹாலில்' திருமணத்தை வைத்திருந்தோம். புது மண்டபம் அது. என் மகனுடைய திருமணம்தான், அங்கு நடந்த மூன்றாவது திருமணம். இந்தத் திருமணத்துக்கு முதல்வர் எடப்பாடி அவர்களின் மனைவி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் அண்ணன், கோகுல இந்திரா, தனியரசு, கே.பி.எம், மைத்ரேயன், செம்மலை, தங்கமணி, சரோஜா, மாஃபா பாண்டியராஜன், பி.ஆர்.சுந்தரம் எனப் பலர் கலந்துக்கிட்டாங்க. முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலரும் இதில் கலந்துக்கிட்டாங்க. உண்மையில் சொல்லப் போனால் என்னால் பல பேரைக் கூப்பிட முடியல. அந்த அளவுக்கு நேரமும் கிடைக்கல. நிறையப் பேரை அழைக்க முடியலையேங்கிற வருத்தம் இருக்கத்தான் செய்யுது''. 

''மகன், மருமகள் பற்றி''

''மகன் விக்னேஷ் எம்.எஸ், எம்.பி.ஏ பண்ணிட்டு தனியே பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். மருமக செளமியா நாச்சி. படிப்புல டாப்பர். சார்ட்டட் அக்கவுன்டன்டான அவங்க, உலக வங்கியில வேலைப் பார்க்கிறாங்க. எங்களுடைய சொந்த ஊரில் நாங்களும் அவங்களும் பக்கத்துப் பக்கத்து வீடு. அதே மாதிரி சென்னையிலேயும் அவங்க வீடு திருவான்மியூர். எங்க வீடு இருக்கிறது அடையார். தங்கமான மருமக பக்கத்துலேயே இருந்தும் கண்டுபிடிக்க ஒருவருஷம் ஆகியிருக்கு எங்களுக்கு''. 

''சமீபகாலமாக உங்களை டி.வி, பேட்டிகளில் பார்க்க முடிவில்லையே''

''எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களுக்கான வேலைகளைத் தொடர்ந்து பார்த்துட்டு வரேன். இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில் காத்துட்டு இருக்கோம். எங்க வேலைகளை எப்போதும்போல பார்த்துட்டுத்தான் இருக்கோம்''. 

''அதிமுக கட்சியில இருக்கிற உங்களுக்கு ஜெயா டி.வியில் செய்தி வாசிப்பதற்கான வாய்ப்பு வரலையா?''

''ஏன் வரலை. அம்மா கூப்பிட்டே சொல்லியிருக்காங்க. சன் டி.வியில் இருந்துவெளியேறியதைக் கேள்விப்பட்டதும் 2004-ம் ஆண்டு அம்மாவே ஒரு முறை தலைமைச் செயலகத்துக்குக் கூப்பிட்டு என்கிட்ட ஒருமணி நேரம் பேசினாங்க. 'அரசியலுக்கு வர ஆர்வம் இருக்கா...  ஜெயா டி.வியில செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்துக்கிறீங்களா'னு கேட்டாங்க. அப்போ உடனடியாக என்னால எந்தப் பதிலையும் சொல்ல முடியல. அப்படியே அவங்களைப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன். 'ஒண்ணும் அவசரம் இல்லை. நன்றாக யோசிச்சிட்டுச் சொல்லுங்க'னு சொல்லி அனுப்பினாங்க. அதற்குப் பிறகு நான் ஜெயா டி.விக்கு செய்தி வாசிப்பாளராக வரேன்னு என்னை அழைச்சுட்டுப் போனவர்கிட்ட சொல்லி அனுப்பினேன். அந்தச் செய்தி அம்மா காதுக்குப் போகலை போல''. 

''இவ்வளவு தீவிரமாக அதிமுகவில் இருக்கக் காரணம்?''

''அம்மாதான். வேற எந்தக் காரணமும் இல்லை. நான் வணக்கம் சொல்றது அம்மாவுக்குப் பிடிக்குமாம். என்னைக் கடைசி வரை 'வணக்கம்' என்கிற வார்த்தையை வைத்தே ஞாபகம் வெச்சிருந்தாங்க. முதல்ல அவங்களைச் சந்திச்சப்போ 'வாட் ஈஸ் யுவர் ஆம்பிஷன்'னு கேட்டாங்க. மீடியாவை நான் பொழுதுபோக்காக வெச்சிருந்தேன். அதுதான் வாழ்க்கைன்னு நான் நினைச்சது இல்ல. அதனால டக்குனு பதில் சொல்ல முடியல. ஆனால், இப்போ அரசியலை தீவிரமாக எடுத்திருக்கேன் என்பதே உண்மை. என்ன ஒண்ணு அம்மா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். எல்லாரும் நினைக்கிறதைவிட அப்படியொரு வித்தியாசமானவங்க அம்மா. சின்ன ஜோக் சொன்னாகூட அவ்ளோ ஹேப்பியா சிரிப்பாங்க. பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவங்க. இப்படி ஒரு மர்ம மரணம் அவங்களுக்கு வந்திருக்கக் கூடாது. அவங்க மரணம் எனக்குத் தனிப்பட்ட இழப்பு''. 

''சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் உங்களின் பங்களிப்பு எப்படியிருந்தது?''

“ ‘சொல்வதெல்லம் உண்மை’ நிகழ்ச்சி பண்ணப்போ, நான் நிகழ்ச்சியில என்னகேட்டாலும் நடக்கும். இந்த அளவுக்கு நிகழ்ச்சி ரீச் ஆகிடுச்சான்னு சந்தோஷமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். பத்து வருஷம், பதினொரு வருஷமா சொல்லி, எழுதித் தீராத குப்பை பிரச்னை என் ஷோ மூலமா உடனடியா தீர்ந்தது. சிலருக்கு சஸ்பென்ஷன்கூட  நடந்திருக்கு. இப்படி நிகழ்ச்சியில நாங்க விவாதிக்கிற விஷயத்துக்கான தீர்வு உடனே அரசாங்கம் காதுக்குப் போச்சு. அப்புறம்தான் தெரிஞ்சது நான் நடத்தின அந்த நிகழ்ச்சியை அம்மா ரெகுலரா பார்ப்பாங்களாம். அதோட விளைவுதான் உடனடித் தீர்வு என்று பின்னாடி தெரிஞ்சுகிட்டேன். பலநேரம் அதிமுக கட்சிக் காரங்க பண்ண தவறுகளுக்கும் ஆக்‌ஷன் எடுக்கச் சொல்லியிருக்காங்க. ஒரு நிகழ்ச்சியின்போது போலீஸ் உள்ள வந்தப்போக்கூட 'நீங்க ஏன் மீடியாவுக்குள்ளப் போனீங்க'னு எச்சரிச்சாங்களாம். அதிமுக கட்சி பெண்களுக்குக் கொடுக்கிற பாதுகாப்பு மாதிரி வேற எந்தக் கட்சியிலும் இருக்கான்னு எனக்குத் தெரியல.'' என்றார்.