Published:Updated:

‘படத்துல ஏதோ ஒண்ண காணோம்!’ - ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
‘படத்துல ஏதோ ஒண்ண காணோம்!’ - ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ விமர்சனம்
‘படத்துல ஏதோ ஒண்ண காணோம்!’ - ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ விமர்சனம்

தான் ஒருதலையாகக் காதலிக்கும் பெண்ணின் தொலைந்துபோன செருப்பைத் தேடிக்கண்டுபிடித்துக் கொடுக்கும் ஹீரோவின் பயணமே 'என் ஆளோட செருப்பக் காணோம்.'

ஏரியாவில் இருக்கும் இளசுகளுக்கெல்லாம் சந்தியாவை (ஆனந்தி) ஃபாலோ பண்ணுவதுதான் முழுநேர வேலை. அதில் ரெமோ ரவியும் (யோகி பாபு) ஒருவர். ரெமோ ரவி சந்தியாவை சைட் அடிக்கச் செல்லும்போது அல்லக்கையாக ஹீரோ கிருஷ்ணாவை (தமிழ்) ஒரு நாள் அழைத்துச் செல்கிறார். சந்தியாவைப் பார்க்கும் ஹீரோ, ரெமோ ரவியை விஞ்சும் அளவுக்கு ஹீரோயின் மீது காதல் கொள்கிறார். இந்த நிலையில் தன் அப்பா (ஜெயப்பிரகாஷ்) வாங்கிக்கொடுத்த செருப்பை ஹீரோயின் தவறவிட, அதே நேரத்தில் சிரியாவில் இன்ஜினீயர் வேலைக்குச் சென்றிருக்கும் ஜெயப்பிரகாஷை தீவிரவாதிகள் கடத்திவிடுகின்றனர். 

ஹீரோவின் அம்மா வெத்தலையில் மை போட்டுக் குறி சொல்வதில் எக்ஸ்பெர்ட். ஹீரோயின் அப்பா சிரியாவில் கடத்தப்பட்ட பின் அவர் உயிருடன் இருக்கிறாரா, அவர் எப்போது மீண்டு வருவார் என இவரிடம் குறி கேட்க... தொலைந்துபோன உன் செருப்பைப் பார்த்துவிட்டால் அப்பா வந்துவிடுவார் எனச் சொல்லி ஆறுதல் செய்கிறார். ஹீரோவின் அம்மா சொன்னவுடன் தவறவிட்ட செருப்பைத் தேடி அலைகிறார் சந்தியா. தான் காதலிக்கும் சந்தியா கஷ்டப்படக் கூடாது என்பதற்காகச் செருப்பைத் தேடும் பணியில் குதிக்கிறார் ஹீரோ. அவர் செருப்பைக் கண்டுப்பிடித்தாரா ஹீரோயினின் அப்பா என்ன ஆனார், ஹீரோயினிடம் ஹீரோ தன் காதலைச் சொன்னாரா என நீளும் கேள்விகளுக்கான பதிலை, காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெகன்நாத். 

விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜெகன், 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களுக்குப் பிறகு நான்காவதாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 'பசங்க' படத்தில் பக்கோடா பாண்டியாகவும் 'கோலி சோடா' படத்தில் சித்தப்பாவாகவும் நம் மனதில் ஆழமாகப் பதிந்த பாண்டியை (இந்தப் படத்திலிருந்து தனது பெயரை தமிழ் என மாற்றியுள்ளார்) ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கும் இயக்குநர் ஜெகனின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும்.  

தலைப்பிலேயே படத்தின் கதையைச் சொல்லிவிட்ட இயக்குநர், திரைக்கதையை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல இடையிடையே சில கிளைக் கதைகளைச் சேர்த்திருக்கிறார். தவிர, ஒவ்வொரு கிளை கதைக்கும் பிரபலமான முகம் இருக்க வேண்டும் என்றும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், நடிகர்கள் தேர்வில் கவனமாக இருந்த இயக்குநர், திரைக்கதையையும் இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாம். கே.எஸ்.ரவிகுமார், லிவிங்ஸ்டன் - `சுப்ரமணியபுரம்’ சித்தன், யோகி பாபு, சிங்கம் புலி, பால சரவணன் எனப் படத்தில் இருக்கும் பல போர்ஷன்களில் யோகிபாபுவுக்கான காட்சிகள் மட்டும்தான் திரைக்கதையில் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. இதில் இருந்த சுவாரஸ்யம் படம் முழுக்க இருந்திருந்தால், இன்னும் அழுத்தமான கவனம் கிடைத்திருக்கும். 

படம் பார்க்கும்போது, சோர்ந்துபோய் மொபைல் போனை எடுக்கும்போதெல்லாம், யோகிபாபுவின் காட்சிகள் மட்டும்தான் நம்மைக் கவனிக்கச் சொல்கிறது. 'மெடிக்கல் மிராக்கில்' என டாக்டர் சொல்லும்போது, ‘நீங்க டாக்டரானதா...’ எனக் கேட்பதில் தொடங்கி, ‘லவ் ஃபெயிலியர் ஆனவன் எல்லாம் எங்க போறான்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் இப்போ வீட்டுக்குத்தான் போறேன்’ எனக் காதல் தோல்வியை ஜஸ்ட் லைக் தட் எனக் கடப்பது வரை... யோகிபாபு வரும் அத்தனை காட்சிகளும் சிரிப்புக்கு கியாரன்டி. 

தமிழ், ஹீரோவாக நடிக்கும் முதல் படம். அவருக்கு முக்கியமான வேடம் அளிக்கப்பட்டிருக்கும் படமும்கூட. அவரும் முடிந்தவரைக்கு தனது வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால், கதையில் அழுத்தம் இல்லாததால் அவர் அழும் காட்சியிலும் தன் காதலிக்காகக் கசிந்து உருகும் காட்சியிலும் பார்வையாளர்களால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. படம் முழுக்க ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தினாலும், அடுத்தடுத்த படங்களில் இன்னும் மெனக்கெட்டால் தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகனாகத் தமிழ் இருப்பார் என்பது தெரிகிறது. 

வளரும் நடிகர்களோடு நடித்துக்கொண்டிருக்கும் ஆனந்தி, இந்தக் கதையை நம்பிக் களமிறங்கியிருப்பதற்கு வாழ்த்துகள். ஆனால், அப்பாவைத் தீவிரவாதிகள் கடத்தியபோதும், வீடியோவில் மிரட்டப்படுவதைப் பார்க்கும்போதும், தனக்காக ஒருவன் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்கிறான் என்பதை உணரும்போதும் எவ்வளவு கலவையான உணர்வுகளைக் காட்டியிருக்கலாம். ஆனால், அதற்கான உணர்வுகளை முழுக்க ரசிகர்களுக்குக் கடத்தாமல், மேம்போக்காக நடித்திருக்கிறார்.  

ஒளிப்பதிவு குறை சொல்லும் அளவுக்கு இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மழை பெய்கிறது, ஒவ்வொரு ஃப்ரேமும் கலர்ஃபுல்லாக, அவ்வளவு அழகாக இருக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் அதிகம் மெனக்கெட்டிருக்கலாம்.  

ஹீரோயினின் செருப்பைக் கண்டுபிடிக்க ஹீரோ அவ்வளவு கஷ்டப்பட்டாலும், எதனால் இவருக்கு ஹீரோயின் மீது காதல் வருகிறது என்பதை சரியாகச் சொல்லவில்லை. செருப்பைக் கண்டுப்பிடித்துக் கொடுத்தால் தன் அப்பா வந்துவிடுவார் என நினைக்கும் ஹீரோயினின் மன ஆறுதலுக்காக செருப்பைத் தேடி ஹீரோ கஷ்டப்பட்டார் என்று எடுத்துக்கொண்டாலும், அப்பா - மகள் பாசத்தைக் காட்டும் அழுத்தமான காட்சிகளும் படத்தில் இல்லை. இவையெல்லாம் இருந்திருந்தால், 'என் ஆளோட செருப்பக் காணோம்' புது அனுபவம் கொடுத்திருக்கும்.