Published:Updated:

வித்யாபாலன் ஆடியன்ஸுக்குச் சொல்லும், ஹ்ஹ்ஹல்ல்லோ..! - ‘துமாரி சுலூ’ படம் எப்படி?

வித்யாபாலன் ஆடியன்ஸுக்குச் சொல்லும், ஹ்ஹ்ஹல்ல்லோ..! - ‘துமாரி சுலூ’ படம் எப்படி?
வித்யாபாலன் ஆடியன்ஸுக்குச் சொல்லும், ஹ்ஹ்ஹல்ல்லோ..! - ‘துமாரி சுலூ’ படம் எப்படி?

வித்யாபாலன் ஆடியன்ஸுக்குச் சொல்லும், ஹ்ஹ்ஹல்ல்லோ..! - ‘துமாரி சுலூ’ படம் எப்படி?

"என்னது ப்ரைஸா குக்கர் கொடுக்கறீங்களா... உங்க ரேடியோல குக்கருக்குப் பதில் டிவி கேட்டா குடுப்பாங்களா... இல்லன்னா டிவி ப்ரைஸ் குடுக்குற மாதிரி ஏதாவது போட்டி இருக்கா" எனக் கீரை ஆய்ந்து கொண்டே கேட்கும்படியானவள் சுலோச்சனா. கணவரை வேலைக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்புவதற்கான நேர நிரலில் சுழன்றுகொண்டிருக்கும் சுலூவுக்கு, ஆர்.ஜே வேலை கிடைத்தால், அதுவும் நைட் ஷிஃப்ட்டில். 

பாம்பேயில் தன்னுடைய மகன் மற்றும் கணவருடன் ஹவுஸ் வொய்ஃபாக வாழ்ந்து வருகிறார் சுலு என்கிற சுலோச்சனா (வித்யா பாலன்). வீட்டில் மூன்றாவது பெண். மூன்று முறை முயன்றும் 12 ஆவது ஃபெயில். இதற்காக அடிக்கடி குடும்ப நிகழ்வுகளில் அவமானப்படுத்தப்படுகிறார். இதனாலேயே தன்னை வெற்றியாளராக அடையாளப்படுத்திக் கொள்வதில் தீவிரமாக இயங்குவார் சுலூ. மியூசிகல் சேர், லெமன் இன் த ஸ்பூன், லதா மங்கேஷ்கர் சோகப் பாடல் போட்டி என அவரின் வெற்றி வரலாற்றுக்குப் பெரியது, சின்னது என வித்தியாசமெல்லாம் கிடையாது. அப்படியான ஒரு வெற்றி வேட்டைக்காகத்தான் `வாவ் எஃப்.எம்' நடத்திய போட்டியில் கலந்து கொண்டு பிரஷர் குக்கர் பரிசு ஜெயிப்பார். இங்கே இன்னொரு விஷயம், சுலூவிற்கு இது அது என இல்லை பல விஷயங்கள் செய்ய விருப்பம். ஒருமுறை கணவருடன் காரில் செல்லும் போது "நாம டாக்ஸி பிசினஸ் தொடங்குவோமா... சுலோச்சனா டாக்ஸி சர்வீஸ், பேரு எப்படி இருக்கு" எனக் கேட்கும் டைப்.

குக்கர் வாங்க ரேடியோ ஸ்டேஷன் செல்பவருக்கு உதிக்கிறது ஆர்.ஜே ஆசை. கூடவே அது நிறைவேறவும் செய்கிறது. ஆனால், வேலை நேரமும், வேலையின் தன்மையும் வேறு. இரவில் போன் செய்பவர்களிடம், ஹஸ்கி + செக்ஸி வாய்ஸில் உரையாட வேண்டும் (ஸ்பாய்லர் கிடையாது, இந்த மேட்டர் டிரெய்லரிலேயே சொல்லப்பட்டதுதான்). முதல் ஷோவுக்கே வருகிறது கணவர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து எதிர்ப்பு. மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ். அஷோக் என்கிற அடையாளத்தை தாண்டி வர நினைக்கும் சுலுவின் நிலை என்ன ஆகிறது என்பதைச் சொல்கிறது `துமாரி சுலு'.

படத்தில் மிகப்பெரிய ப்ளஸ் வித்யா பாலன்தான். `கஹானி 2'வில் நன்றாக நடித்திருந்தும், நழுவ விட்ட வெற்றியை இதில் அடைந்திருக்கிறார். படத்தில் வித்யா செய்யும் குறும்பு அத்தனைக்கும் பகுத் படா கைதட்டல்ஸ். எதிர் வீட்டில் இருக்கும் ஏர் ஹோஸ்டர்ஸைப் பார்த்துவிட்டு, அவர்கள் போல கண்ணாடி முன் பாவனை செய்வதில் தொடங்கி, கணவரை டீல் செய்யும் விதம், "என்னோட மனைவி பேர் கூட சுலோச்சனாதான்" என்று பேசும் அழைப்பாளரை நெகிழச் செய்வது எனப் பல இடங்களில் பின்னி எடுத்திருக்கிறார். ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அமர்ந்து காய்கறி நறுக்குவது, புதிதாக தெரிந்துகொண்ட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்திப் பார்ப்பது, பேசிக்கொண்டே இருப்பது, கொஞ்சம் இன்னோசன்ஸ் என்று வித்யா பாலனின் நடிப்பில் பல இடங்களில் அம்மாவை நினைவுப்படுத்துகிறார்.

பெரிய அளவில் மேக் அப் ஏதும் இல்லாமல், வித்யா பாலனின் அந்த யுனீக் வாய்ஸும், சிரிப்பும் அத்தனை இயல்பாக ஸ்க்ரீனில் தெரிகிறது. ஸ்ரீதேவி, ஹேமாமாலினி போல நடித்துக்காட்டும் சீன்களில் தன்னுடைய க்யூட் எக்ஸ்ப்ரஷன்களால் ஹார்ட்ஸை அள்ளுகிறார். படத்தில் கவரும் இன்னொருவர் இருக்கிறார். வித்யாவின் கணவராக நடித்திருக்கும் மனவ் குணால். வித்யா பாலன் ரேடியோவில் பேசுவதைக் கேட்டு வருத்தப்படுவது, கோபப்படுவது, ஏற்றுக்கொள்வது என எல்லா இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். கூடவே நேஹா தூபியா, ட்வின் சிஸ்டர்ஸாக வந்து குடைச்சல் கொடுக்கும் சிந்து, சீமா, சிறுவன் அபிஷேக் ஷர்மா எனப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் நடிப்பும் சூப்பர்.

வீட்டில் இருக்கும் ஹவுஸ் வொய்ஃப்களுடைய வீட்டு வேலைகளை, சாலையில் இளைஞர்கள் `பார்கொர்' சாகசங்களுடன் இணைத்து ஃபராட்டா பாடலை காட்சிப்படுத்தியிருப்பது செம்ம. `ஹவா ஹவாயி' பாடல் ரீ-மிக்ஸ் மற்றும் படத்தின் பல சென்டிமென்ட் காட்சிகளில் ஒலிக்கும் கரண் குல்கர்னியின் பின்னணி இசையும் நன்று. சிம்பிள் கதையை அழகாக வழங்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் திவாரி. படம் எந்த இடையூறும் இல்லாமல் செம ஜாலியாக பயணிக்கக் காரணம் மிக எளிமையான கதை. க்ளைமாக்ஸுக்கு முன்னால் கொஞ்சம் போரடிக்கக் காரணமும் அதுவே. படத்தின் முடிவில் இருக்கும் க்ளிஷே, அத்தனை நேரம் இயல்பாக காரண காரியங்களோடு நகர்ந்த கதைக்கு வைத்திருக்கும் திருஷ்டிப் பொட்டு, மைனஸும் கூட.

ஆனால், வித்யா பாலன் தன் நடிப்பு மூலம் ஆடியன்ஸுக்குச் சொல்லும், `ஹ்ஹ்ஹல்ல்ல்லோ' இஸ் சிம்ப்ளி வாவ்!

அடுத்த கட்டுரைக்கு