Published:Updated:

மாணவியாக... நடிகையாக... அரசியல்வாதியாக எம்.ஜி.ஆருடன் பயணித்த லதா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-22

மாணவியாக... நடிகையாக... அரசியல்வாதியாக எம்.ஜி.ஆருடன் பயணித்த லதா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-22
மாணவியாக... நடிகையாக... அரசியல்வாதியாக எம்.ஜி.ஆருடன் பயணித்த லதா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-22

மாணவியாக... நடிகையாக... அரசியல்வாதியாக எம்.ஜி.ஆருடன் பயணித்த லதா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-22

அ.தி.மு.க வளர்ச்சிக்கு உதவிய லதா

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான நாயகியாக சரோஜாதேவி, ஜெயலலிதாவுக்குப் பின்பு நடித்தவர் லதா. எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற லதாவை எம்.ஜி ஆர் தன் கட்சி வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் நாளன்று அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். ஆனால் அதற்கு முன்பே 1970 ல் லதாவுடன் அவர் உலகம் சுற்றும் வாலிபனுக்கான வெளிநாட்டுப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்துவிட்டார். 1970ல் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் படப்பிடிப்புக்காகப் புறப்பட்டுச் சென்ற எம்.ஜி.ஆர் தன் குழுவில் தன்னுடன் தன் மனைவி ஜானகி அம்மையார் சினிமா நடிகைகள் லதா, மஞ்சுளா மற்றும் சந்திரகலா ஆகியோருடன் நடன இயக்குநர் புலியூர் சரோஜாவையும் அழைத்துச் சென்றார்.  இவர்களில் ரிக்‌ஷாக்காரன் படம் வெளிவந்த பின்பு மஞ்சுளா தன்னுடைய ஐந்து வருட ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். ஆனால் லதா அவ்வாறு வெளியேறவில்லை.

யார் இந்த லதா?

லதா பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு விழாவில் நாட்டியம் ஆடினார். அந்தப் புகைப்படங்களை ஆர்.எஸ்.மனோகர் எம்.ஜி.ஆரிடம் கொண்டுவந்து காட்டினார். அப்போது எம்.ஜி.ஆர் புதுப்படம் ஒன்றுக்கு கதாநாயகி தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தப்பெண் நடிக்குமா என்று விசாரித்துச் சொல்லுங்கள் என்றார். ஆர்.எஸ்.மனோகர் லதாவின் வீட்டுக்குச் சென்றார். அவரது தாயார் லீலா ராணி அங்கிருந்தார். லீலா ராணியின் அக்காள் கமலா இந்தி தெலுங்குப் படங்களில் நடித்தவர். மனோகர் லதா அம்மாவிடம் விரிவாகப் பேசினார். ஆனாலும், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. லதாவின் தந்தை ராமனாதபுரத்து ராஜா ராஜேஸ்வர சண்முக சேதுபதி ஆவார். அவர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். எனவே, லதாவின் அம்மா தன் மகளை நடிக்க அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மனோகர் அருகில் இருந்த லதாவைக் கவனித்தார். லதாவுக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை புரிந்துகொண்டார். உடனே ‘‘சரி அம்மா, நீங்கள் பாப்பாவுடன் வந்து ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் பார்த்துச் சொல்லிவிடுங்கள்’’ என்றார். 

எம்.ஜி.ஆரை சந்தித்த லதா

மறுநாள் எம்.ஜி.ஆரின் அலுவலகத்தில் (இப்போதைய எம்.ஜி.ஆர் நினைவில்லம்) லதா தன் அம்மாவுடன் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தார். எம்.ஜி.ஆர் லதாவின் அம்மாவிடம் ‘உங்க குடும்பத்தைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். சினிமாவில் உங்கள் மகள் நடிக்கிறதால உங்களுக்கு எந்தப் பாதிப்போ பிரச்னையோ வராது. உங்க பொண்ணுக்கு ஆர்வம் இருந்தா நான் அவளை பெரிய ஸ்டார் ஆக்குறேன்’’ என்றார். அவரிடமும் லதாவின் அம்மா ‘‘என் பொண்ணு படிக்கணும்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘‘இப்ப நீங்கள் ஒப்புக்கொள்ளுங்க. நாங்க உங்களுக்கு என்ன மரியாதை குடுக்கணுமோ அதைக் குடுப்போம் எந்த கௌரவ குறைவும் உங்களுக்கு வராது’’ என்றார்.  உடனே லதா மிகவும் ஆர்வமாக ‘’நான் நடிக்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆர் தாம் சொன்னபடி கடைசி வரை தன் சொல்லைக் காப்பாற்றினார். எனவே இன்றும் லதா எம்.ஜி.ஆரை தன் வாழ்வில் மனித ரூபத்தில் வந்த தெய்வம் என்று போற்றிப் புகழ்கிறார். மேலும், இக்கட்டுரைக்காக நான் அவரிடம் பேசியபோது அவரை தன் mentor  என்று மகிழ்ச்சியுடன்  குறிப்பிட்டார்.

அந்தப் பதினைந்து வயதில் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எது நல்லது எது கெட்டது என்று சொல்லிக்கொடுத்து தனக்குப் பயிற்சியளித்ததையும்  நன்றியோடு லதா தெரிவித்தார். எம்.ஜி.ஆர் 1970ல் வெளிநாட்டு படப்பிடிப்புக்குப் போகும்போது லதாவை அவர் அம்மா இல்லாமல் தனியாகத்தான் அழைத்துப்போனார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் லதா மஞ்சுளா மற்றும் சந்திரகலா ஆகியோரின் பெற்றோரிடம்தான் இந்த மூவரையும் தன்சொந்தக் குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றார். எல்லா நாடுகளிலும் இந்த மூவரையும் ஒரே அறையில் தங்க வைத்து அவர்களுக்கு வீட்டு ஏக்கம் வராமலும் அவர்கள் தம்மோடு நட்போடு பழகும்படியும் எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டார்.

ஐந்து வருட ஒப்பந்தம் 

எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு லதாவும் அவர் அம்மாவும் வீடு திரும்பிய பின்பு எம்.ஜி.ஆர் லதாவை ஐந்து வருடம் ஒப்பந்தம் செய்தார். எதற்கு இந்த ஒப்பந்தம் என்று கேட்டபோது எம்.ஜி.ஆர் ‘’ நான் பல நடிகைகளுக்கு நடிப்பும் நடனமும் சொல்லிக்கொடுத்து வளர்த்துவிடுகிறேன். அவர்கள் பிரபலமானவுடன் அவர்கள் கால்ஷீட்டுக்காக நான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பிரச்னை வராமலிருக்கவே இந்த ஒப்பந்தம்’’ என்றார். பின்பு உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு லதாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார். 

சினிமாவுக்காக லதாவுக்குப் பயிற்சியளித்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடிக்க லதா ஒப்பந்தம் ஆனதும் அவரை ரிக்‌ஷாக்காரன் படப்பிடிப்புக்கு வரவழைத்து படப்பிடிப்பு எப்படி நடக்கிறதென்று பார்க்க வைத்தார். சினிமாவுக்கேற்றபடி நடிக்கவும் வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிபாவத்துடன் பேசவும் சினிமா டான்ஸ் ஆடவும் தினமும் லதாவுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே பரத நாட்டியம் படித்திருந்தவர் என்பதால் அவருக்கு முக பாவம் காட்டுவதிலும் ஸ்டைலாக ஆடுவதிலும் சிரமம் ஏதுமில்லை. வெகு சீக்கிரம் அனைத்துப் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றார்.

பொம்பள சிரிச்சா போச்சு


 

ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் லதாவை மிகவும் மதித்துப் போற்றிய எம்.ஜி.ஆர் அவரைப் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். ஒரு முறை செட்டில் நாகேஷ் ஏதோ ஜோக் சொல்ல அங்கு அவர் அருகே உட்கார்ந்திருந்த லதா சத்தம் போட்டுச் சிரித்தார். இதை பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர் லதாவை அழைத்து ‘’பெண்கள் எங்கிருந்தாலும் சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாது; ஆண்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கக் கூடாது; அடக்கமாக இருந்தால்தான் அழகு. உன் குடும்பத்து மரியாதையை நீ அப்படிக் காப்பாற்ற வேண்டும்’ என்றார். அவர் அன்று சொன்னதை தன் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்ட லதா அதன் பிறகு யாரும் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சத்தம் போட்டுச் சிரிப்பதோ பேசுவதோ கிடையாது. 

நடிப்பு என்றாலும் இப்படியா?

எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு லதா மற்ற நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் அவர் குடித்துவிட்டு முன்னாள் காதலரோடு பாடுவது போல ஒரு காட்சி. பாட்டு சூப்பர் ஹிட். நானா நானா யாரோ தானா மெள்ள மெள்ள மாறினேனா...  என்ற பாடல். எம்.ஜி.ஆரிடம் இருந்த ஒரு நாள் லதாவுக்கு அழைப்பு வந்தது. ‘’என்னதான் நடிப்பு என்றாலும் இப்படியா ஒரு பெண் நடிப்பது. இனி இந்த மாதிரி ரோல் எல்லாம் செய்யாதே” என்று எம்.ஜி.ஆர் லதாவைக் கண்டித்தார். லதாவுக்கும் தான் செய்தது தவறு என்று பட்டது சரியென்று ஒப்புக்கொண்டார். இதை பின்பு அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் லதா மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார். லதாவின் பெயர் கெட்டுவிடக்கூடாது அவரது குடும்பப் பெருமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் அக்கரை கொண்டிருந்தார். 

12 படங்களில் எம்.ஜி.ஆரும் லதாவும் 


 

ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தபோது எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இருந்ததால் படங்களில் திமுக கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான வசனங்களைப் பேசி பாட்டுகளைப் பாடி நடித்தார். ஆனால், லதா மட்டுமே அதிமுக வளர்ச்சிக்குத் தேவையான காட்சி நடனம் வசனம் போன்றவற்றில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். எம்.ஜி.ஆரும் லதாவும் ஜோடியாக உலகம் சுற்றும் வாலிபன் (11-05-1973); நேற்று இன்று நாளை (12-07-74); உரிமைக்குரல் (7-11-74); சிரித்து வாழ வேண்டும் (31-11-74); நினைத்ததை முடிப்பவன் (9-5-75); நாளை நமதே (4-7-75); பல்லாண்டு வாழ்க (31-10-75); நீதிக்குத் தலைவணங்கு (19-3-76); உழைக்கும் கரங்கள் (23-5-76); நவரத்தினம் (5-3-77); மீனவ நண்பன் (15-8-77); மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (14-1-78) ஆகிய 12 படங்களில் நடித்திருந்தனர். பல படங்கள் தயாரிப்பில் இருந்தன. அவற்றில் அண்ணா நீ என் தெய்வம் படத்துக்கு எடுத்திருந்த இரண்டு பாடல்கள் பாக்யராஜ் நடித்து வெளிவந்த அவசரப் போலீஸ் 100 படத்தில் இடம்பெற்றன. 

அதிமுக ஆதரவு காட்சிகளில் லதா 

எம்.ஜி.ஆர் புதுக்கட்சியான அதிமுகவை தொடங்கிய பின்பு தன் படங்களில் தன் ரசிகைகள் சார்பாக லதா திமுகவினருக்குப் பதிலடி கொடுக்கும்படியான காட்சிகளை அமைத்தார். உரிமைக்குரல் படத்தில் வரும்

 ‘’ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா - ஒரு 
ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களேன் 
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா?’’ 

என்ற பாடல் பெண்களுக்கு ஆண்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலை கொடுத்தது. வசனங்களிலும் லதா உழைக்கும் கரங்கள்; மீனவ நண்பன்; நவரத்தினம்; மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் வில்லன் தரப்பினரை எதிர்த்துப் பேசும் வசனங்கள் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவினரை எதிர்த்துப் பேசும் வசனங்களாகவே அமைந்தன. 

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் கவிஞராக எம்.ஜி.ஆரும் அவரது மாணவியாக லதாவும் வருவார்கள். அப்போது பி.எஸ்.வீரப்பா ‘’மாணவியா தாலி கட்டாத மனைவியா’’ என்று கேட்கும்போது அதற்கு சரியான பதிலடி கொடுப்பார் 
பல்லாண்டு வாழ்க படத்தில் கெட்டவர்கள் ஐவரையும் திருத்தும் பணியில் எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு லதா உறுதுணையாக இருப்பார். அவர்கள் தாமாக போய் குடிக்கவில்லை எதிராளிகள் தான் ஏமாற்றிக் குடிக்கவைத்துவிட்டனர் என்பதை அந்த ஐவரின் சார்பாக எம்.ஜி.ஆரிடம் எடுத்துச்சொல்லி அவர்கள் இனி குடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையை எம்.ஜி.ஆருக்கு ஏற்படுத்துவார். வில்லன்களை பற்றி லதா பேசும் வசனங்கள் திமுகவினரை குறித்தே எழுதப்பட்டிருக்கும்.

அதிமுக ஆரம்பித்த பின்பு வந்த எம்.ஜி.ஆர் படங்களில் லதா பேசும் ஒவ்வொரு வசனமும் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் பேச வேண்டிய வீர வசனமாகவே அமைந்தது. இவ்வசனங்கள் பெண்கள் மத்தியில் அதிமுக ஆதரவு பெருக பெரும்பங்காற்றின. வீட்டில் கணவன் திமுகவுக்கோ அல்லது பெரியவர்கள் காங்கிரஸுக்கோ ஓட்டு போடும்படி சொன்னால் பெண்கள் அவர்களை எதிர்த்து வாதிட்டனர். இந்த இரு கட்சிகளும் சரியில்லை அதிமுக மட்டுமே நல்லாட்சி நடத்தும் என்று பெண்கள் பகிரங்கமாகக் கூறினர். இதற்கு உறுதுணையாக இருந்தது லதாவின் கதாபாத்திரங்களும் அவர் படங்களில் பேசிய வசனங்களும் ஆகும். (வசனங்களையும் பாட்டு வரிகளையும் இன்னும் எடுத்துக்காட்டு தந்து விளக்கினால் இத்தொடர் மிகவும் நீண்டுவிடும்).

லதாவை அரசியலுக்கு அழைத்த எம்.ஜி.ஆர்

அதிமுக கட்சியில் பெண் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட போது மூன்றாவது உறுப்பினராக சேர்க்கப்பட்டவர் லதா. எனவே அவர் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். அவருக்கு 20, 22 வயதிருக்கும் போது எம்.ஜி.ஆர் அவரை தீவிர அரசியலில் ஈடுபடும்படி அழைத்தார். ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக்க விரும்பினார். லதா இதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் கூட அவருக்கு இடம் கிடைத்திருக்கும். அவரது அரசியல் வாரிசாக உருவாக்கப்பட்டு இராமநாதபுரத்து ராஜாவின் மகள் தமிழ்நாட்டின் முதல்வராகி இருப்பார். ஆனால் லதாதான் பல மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதாலும்தான் சிறு பெண் என்பதாலும் அரசியல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

 சகுந்தலா நாட்டிய நாடகமும் அதிமுக வளர்ச்சி நிதியும்

அதிமுக வளர்ச்சிக்காக எம்ஜி ஆர் லதாவைக் கொண்டு சகுந்தலை நாட்டிய நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார். மதுரை, திருச்சி, கோவை, பவானி ஆகிய ஊர்களில் இந்நிகழ்ச்சி நடத்தி 35 லட்ச ரூபாய் கட்சிக்கு நிதி திரட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் அதிமுகவின் முக்கிய விழாக்களில் லதாவின் நாட்டிய நிகழ்ச்சி இடம்பெறச் செய்தார். லதாவும் எம்.ஜி.ஆர் சொன்னபடி கேட்டு நடந்தார். இதனால் பல முக்கியஸ்தர்கள் தன்னைச் சந்திக்க வந்தபோது லதா தன்னுடன் இருப்பது எம்.ஜி.ஆருக்கு இயல்பானதாகவே தோன்றியது. தொந்தரவாகத் தோன்றவில்லை. குறுக்கே பேசுவது குதர்க்கமாகப் பேசுவது போன்ற குணங்கள் லதாவிடம் இல்லை. எனவே பலரது பேட்டிகளில் ‘’அந்த நேரம் லதா அங்கிருந்தார். எம்.ஜி.ஆர் லதாவிடம் இப்படிச் சொன்னார்’’என்ற க்ராஸ் ரெஃபெரன்சுகளில் லதா இருந்ததை அறிகிறோம். லதா எம்.ஜி.ஆரை பேட்டி கண்டு பத்திரிகையில் வெளியிட்டார். இதற்கு முன்பு ஜெயலலிதா இவ்வாறு எம்.ஜி.ஆரை ஒரு பேட்டி எடுத்திருந்தார்.
 
எம்.ஜி.ஆருக்கு உடனிருந்து உதவிய லதா

வெளிநாட்டுப் பயணங்களில் பிரமுகர் சந்திப்புகளில் எம்.ஜி.ஆர் தம் கட்சிக்கொள்கையை தமிழில் விளக்கும்போது லதா அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வார். பணிவான பேச்சும் இனிய குரலும் லதாவுக்கு ப்ளஸ் பாயின்ட்டாக இருந்தது. எனவே எம்.ஜி.ஆருக்கு ஒரு தனிச் செயலாளர் போல லதா உடனிருந்து உதவினார். லதாவும் ஜெயலலிதாவைப் போல ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நன்றாகப் பேசும் திறமை பெற்றிருந்தார். மேலும் எம்.ஜி.ஆருக்கு அவர் எந்தவிதத்திலும் தொல்லைதரவில்லை. ஜெயலலிதாவே வேண்டாம் எனக் கருதிய ஆர்.எம்.வீரப்பன் போன்ற மூத்தவர்கள் லதாவின் பணிவையும் பண்பையும் மெச்சி ஏற்றுக்கொண்டனர்.

எம்.ஜி.ஆர் இறந்த பின்பு ஜெயலலிதா சிலரைக் கட்சியை விட்டு வெளியேற்றிய போது திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர் அதிமுக என்று ஒரு தனிக்கட்சி தொடங்கினார். அதில் லதாவை அவர் முக்கியமானவராக இணைத்துக்கொண்டார். அன்று முதல் லதா நேரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். திருநாவுக்கரசர் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்தார். பிறகு பாரதிய ஜனதா கட்சிக்குத் தாவினார். அதன் பின்பு இப்போது காங்கிரஸில் மாநிலத் தலைவராக இருக்கிறார். ஆனால் லதா இப்படிக் கட்சி மாறவில்லை. அதிமுக கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்து தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அரசியல் ஆசானாகவும் இருந்து அதற்குரிய நுட்பங்களைப் புரியவைத்த எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்துவருகிறார். 

உயிரைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்

ஒரு முறை எம்.ஜி.ஆரும் லதாவும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த போது சில அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்த லதாவை எம்.ஜி.ஆர் தன் அருகில் வரும்படி அழைத்தார். லதாவும் பட்டென்று வந்துவிட்டார். திடீரென்று லதாவின் தலைமீது தொங்கிக்கொண்டிருந்த சர விளக்கு ஒன்று அறுந்து விழுந்தது. லதா அங்கே நின்றிருந்தால் அவ்விளக்கு அவர் தலை மீது விழுந்து அவர் உயிரைப் போக்கியிருக்கும். ‘’இன்று நான் உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது எம்.ஜி.ஆரால் எனக்குக் கிடைத்த பாக்கியம்’’ என்று லதா நன்றியோடு நினைவுகூர்கிறார். (இது போன்று எம்.ஜி.ஆர் உயிர் காத்த நிகழ்ச்சிகளை சரோஜாதேவி நம்பியார் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் மனோகர் பி.எஸ்.வீரப்பா எனப் பலரும் தமது பேட்டியில் கூறியிருக்கின்றனர்)

பனிமலையில் லதாவைத் தூக்கிச்சென்ற எம்.ஜி.ஆர்

ராஜஸ்தானில் அடிமைப்பெண் படப்பிடிப்பின் போது பாலைவனத்துச் சுடுமணலில் நடக்கவியலாமல் தவித்த ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் தன் கைகளால் குழந்தையைப் போல தூக்கிச் சென்றார் என்பது பலரும் அறிந்த செய்தி. அதைப்போல எம்.ஜி.ஆர் சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. பனிமலையின் அழகை கண்டு ரசிக்க லதா கிளம்பியபோது தமிழ்நாட்டுப் பண்பாட்டுப்படி அழகாக புடைவை உடுத்தியிருந்தார். காரை விட்டு கீழே இறங்கியபோது காலில் செருப்பு போட்டிருந்தார். சிறிது தூரம் எம்.ஜி.ஆருடன் நடந்து சென்றார். கால் பனிக்குள் புதைந்தது ஓரடியை வைத்தால் அடுத்த அடியை எடுத்து வைக்க இயலவில்லை. என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர் லதாவை அப்படியே தூக்கியபடி அரைமணி நேரம் நடந்து சென்று பனிமலையின் அழகைக் காட்டிவிட்டு பின்பு காரில் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டு தான் மட்டும் தனியாகப் பனிமலையில் ஏறிச்சென்று சுற்றிப் பார்த்தார். 

லதா இந்த சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘’ அவர் புகழின் உச்சியில் இருந்த நேரம். ஒரு நடிகைதானே என்று என்னை ஒதுக்கவில்லை. மனித நேயம் என்ன என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். 

தினமும் மருத்துவமனைக்கு வந்த எம்.ஜி.ஆர்

லதா திருமணமாகி சிங்கப்பூர் சென்ற பிறகு அவரது அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் போனதால் சென்னைக்கு வந்தார். அப்போது மரியாதை நிமித்தமாக எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றார். எம்.ஜி.ஆர், ’அம்மா நல்லா இருக்காங்களா’ என்று கேட்டபோது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் விஷயத்தை சொன்னார் லதா. ‘’ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை.  நீ முதலில் எனக்குச் சொல்லியிருக்க வேண்டாமா’’ என்று உரிமையோடு கடிந்துகொண்டார். இதுதான் எம்.ஜி.ஆர் என்று அவரை பாராட்டும் லதா அவர் தன்னோடு பழகியவர்களை உண்மையாக நேசிப்பார் என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறார். தினமும் எம்.ஜி.ஆர் லதாவின் அம்மாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். தன்னை நம்பி சினிமாவில் நடிக்க தன் பெண் லதாவை ஒப்படைத்தாரே அந்த நல்ல குணத்துக்காக அவர் மருத்துவமனையில் இருந்த பத்து நாளும் சென்று பார்த்தார். கோடையில் குளிர் தருவாக வந்த லதா எம்.ஜி.ஆர் வாழ்வில் ஒரு முக்கியப் புள்ளி ஆவார்.

அடுத்த கட்டுரைக்கு