Published:Updated:

ரஜினி - கமல் நட்பு தொடர்கிறதா - ஒரு நட்பலசல்

ரஜினி - கமல் நட்பு தொடர்கிறதா - ஒரு நட்பலசல்
ரஜினி - கமல் நட்பு தொடர்கிறதா - ஒரு நட்பலசல்

ஆந்திராவில் சினிமா, அரசியல் இரண்டிலும் கோலோச்சியவர் என்.டி.ராமாராவ். அவர் பெயரிலான விருதுகளை அந்த மாநில அரசு ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான அந்த விருதை  ரஜினி, கமல் இருவருக்கும் தரப்போவதாக அறிவித்திருக்கிறார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. தமிழ்த் திரைப்பட துறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவரும் ரஜினி - கமல் இருவருடைய நட்பு, 1975-ல் வெளிவந்த 'அபூர்வராகங்கள்' படத்தில் தொடங்கியது. 

பிறகு இருவரும் 'அவர்கள்', ’நினைத்தாலே இனிக்கும்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற பல படங்களில் இணைந்து நடித்தனர். சிங்கப்பூரில் 'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்புக்காகச் சென்றபோது 'இனிமேல் இணைந்து நடிப்பதில்லை, தனித்தனி படங்களில் ஹீரோவாக நடிப்பது' என்று முடிவெடுத்தனர். அது இன்றுவரை தொடர்கிறது. தேவரின் 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசன் ஹீரோ. அப்போது ரஜினி தேவரிடம் உரிமையாக சண்டை போட்டு அதில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதுபோலவே ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தில் குருநாதர் கே.பாலசந்தரின் படத்தில் வக்கில் கேரக்டரில் கெளரவ தோற்றத்தில் நடித்தார் கமல். 

ரஜினி, கமல் இரு தரப்பு ரசிகர்களுக்கும் கடும்போட்டி நிலவிய காலம் அது. கமல் நடித்த 'புன்னகை மன்னன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் 100-வதுநாள் விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆடிட்டோரியம் முழுக்க கமலின் தீவிர ரசிகர்கள். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக ரஜினியை அழைத்து இருந்ததைப் பார்த்து கமல் ரசிகர்கள் மத்தியில் குழப்பம். 'புன்னகை மன்னன்' விழாவில் ரஜினி மைக்கை பிடித்தார். 'இந்தப் படத்தில் கமல் நடித்திருக்கும் சார்லி சாப்ளின் கேரக்டரில் நடிப்பதற்கு உலகத்தில் ஒரு நடிகனும் பிறக்கவில்லை' என்று மனம்திறந்து பாராட்ட, கமல் ரசிகர்கள் தன்னிலை மறந்து நீண்டநேரம் கைதட்டி மகிழ்ந்தனர். 

தமிழ்நாட்டு அரசியல் பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் 'படையப்பா' படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சிக்குக் கமலை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார், ரஜினி. இறுதியில்  பேசிய கமல், 'சினிமா விழாவைத் தாண்டி விரைவில் பெரிய பெரிய மேடைகளைக் காணப்போகிறார் ரஜினி. அங்கே வந்தும் அவரை நான் வாழ்த்துவேன்' என்று பேசியபோது ரஜினி ரசிகர்களின் கரவொலி விண்ணைத்தொட்டது என்றால் மிகையில்லை. 

திரைப்படத் துறையில் கமல் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமலை வாழ்த்திப் பேசினார் ரஜினி. அப்போது, ' நான் 'அவர்கள்' படத்தில் நடித்தபோது அடிக்கடி சிகரெட் பிடிப்பதற்காக வெளியே சென்றுவிடுவேன். ஒருமுறை அப்படி செல்லும்போது 'டேய் ரஜினி எங்க சிகரெட் பிடிக்கப் போறியா, போடா உள்ளேபோய் கமல் நடிக்கிறதை பாருடா' என்று பாலசந்தர் சார் சொன்னார். நான் கமலின் நடிப்பைப் பார்த்து பார்த்து வளர்ந்தவன்' என்று கமலுக்குப் புகழாராம் சூட்டினார். 

பாரதிராஜா இயக்கிய முதல்படமான ' 16 வயதினிலே' படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி 40 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடந்தது. அப்போது மைக்கில் பேசவந்த கமல், 'எனக்கும், ரஜினிக்கும் இடையில் எத்தனையோ இடைத்தரகர்கள் இருந்தும், எங்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. அதற்குக் காரணம் நான் அவர்மீது கொண்டிருக்கும் அன்பு, அதுபோலவே அவரும் என்னுடன் அவ்விதம் அன்பு கொண்டுள்ளார் என்பதே உண்மை' என்று தங்கள் நட்பின் மகத்துவத்தை விளக்கினார்.

கிட்டத்தட்ட இந்த அரைநூற்றாண்டாகத் தொடரும் இந்த நட்பை பதம்பார்க்க எத்தனையோ பேர் முயன்றும் அது முடியவில்லை என்பதே உண்மை. இந்தச் சூழலில் தமிழகத்தில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற சூழலில் இருவரும் அரசியலுக்கு  வரவுள்ளனர். கமல் ஏற்கெனவே களத்தில் இறங்கி அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில் கமல் பேசியதை வைத்து, 'ரஜினி -கமல் உறவு அவ்வளவுதான்' என்று ஆளாளுக்கு ஆரூடம் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து நடந்த சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் முன்பு பேசிய கமலுக்குப் பதில் சொல்வதுபோல் ரஜினி சில விஷயங்களைப் பேச சினிமா, அரசியல் ஏரியாவில் இன்னும் பரபரப்பு பற்றிக்கொண்டது. 

இனி இருவரும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே மாட்டார்கள், பேசிக்கொள்ள மாட்டார்கள்’ என்றனர். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் என்.டி.ராமாராவ் விருதிற்காக ரஜினிக்குக் கமல் வாழ்த்துத் தெரிவிக்க, ரஜினியும் பதிலுக்கு கமலுக்கு 'Thankyou Kamal... I wish you the same !!! Congratulations!.' சொல்லி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதன்மூலம் 'ரஜினி -கமலுக்கு இடையில் மனஸ்தாபம்' என்று சிலர் சொல்லிவரும் கூற்றை இருவரும் பொய்யாக்கி இருக்கிறார்கள். இதோ வரும் ஜனவரி 6ம் தேதி நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நடக்க உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியைக் காண இருவரும் சேர்ந்தே மலேசியா போகிறார்கள் என்கிறது நடிகர் சங்கம். 

எந்தப் புறச் சூழலிலும் இருவரும் தங்களுக்குள் பேசி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல், தங்களுக்கிடையில் இடைத்தரகர்களை அனுமதிக்காமல் இருக்கும் இந்தக் குணம் அடுத்த தலைமுறை நடிகர்கள், கலைஞர்கள் பின்பற்றவேண்டிய உயர்ந்த குணம். 

இதே நட்பு நீண்டகாலம் தொடர வாழ்த்துகள்.